அசோகராக மாற விரும்பும் மஹிந்தர்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்கும்படி கோரி இரு பிரதான வேட்பாளர்களின் தரப்புகளில் இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தொடர்ந்து வலை வீசப்பட்டு வருகின்றது.

அரசுத் தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நேரடியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனுடன் பேசியிருக்கின்றார். அதைத் தொடர்ந்து தமிழ்க் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் 22 எம்.பிக்களுடனும் பேசுவதற் கான அழைப்பு அரசுத் தரப்பின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவினால் சம்பந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிகள் சம்பந்தப்பட்ட கூட்டமைப்பு எம்.பிக்க ளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனவாம்.

வன்னி யுத்தம் தமிழ்மக்கள் மீது மிக மூர்க்கமாகக் கட்ட விழ்த்து விடப்பட்டபோது, தனது மக்களோடு கடை சிவரை இருந்த குற்றத்துக்காக இன்றும் இன்னும் தடுப்புக்காவலில் வாடுகின்றார் தமிழ்க் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் கனகரத்தினம். அரசுக் கூட்டமைப்பின் பேச்சுக்கான அழைப்பு தமிழ்க் கூட்டமைப்பில் இவருக்கும் சேர்த்துதான் விடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

இதேசமயம், தமிழ்க் கூட்டமைப்பின் மற்றொரு முக்கிய பிரமுகரான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பியுடனும் அரசுத் தரப்பில் மிக முக்கிய நபர் ஒருவர் ஆதரவு கோரிப் பேச்சு நடத்தியிருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி யிருக்கின்றது. அவர் வேறு யாருமல்லர். அரசுக்குள், ஜனாதிபதிக்கு அடுத்து, அதிகளவில் அரசியல் செல்வாக்குடையவராக இருப்பவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் இளைய சகோதரருமான பஸில் ராஜபக்ஷதான்.

அந்தப் பேச்சுகளின்போது பஸில் ராஜபக்ஷ குறிப்பிட்ட ஒரு முக்கிய விடயம் பற்றிய தகவல் கசிந்திருக்கின்றது.

"கலிங்கத்துப் போரின் பின்னர் மனம் மாறி சாந்தி, சமாதானம், சமரசம் ஆகியவற்றை வலியுறுத்திய அசோக மன்னன் போல் மிளிரவே உன்னத தலைவராக உயரவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்புகின்றார். இந்தத் தேர்தலில் வென்று அதன்மூலம் தமிழர்களுக்கு உரியதைத் தாமே வழங்கி செய்து காட்ட ஜனாதிபதி ராஜ பக்ஷ விரும்புகிறார். அதற்கு வாய்ப்பளியுங்கள்!" என்ற சாரப்பட ஜனாதிபதியின் சகோதரர் இந்தச் சந்திப் பின்போது குறிப்பிட்டார் எனக் கூறப்படுகின்றது.

அசோக மன்னன் போல மாறி, நீதி செய்வதற்கு இலங் கையின் ஆட்சிப்பீடம் தயார் என்பதை இலகுவாக நம்பு வதற்குத் தமிழர்கள் ஒன்றும் வெறும் முட்டாள்கள் அல்லர். என்றாலும், இலங்கை இனப்பிரச்சினையில் நம்பி, நம்பி ஏமாந்தமைதான் தமிழரின் பட்டறிவு என்பதும் மறக்கற் பாலதல்ல.

எனினும், அசோக சக்கரவர்த்தியாக மாற ஆசைப்படும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவரை அந்த உன்னத நிலை மைக்கு உயர்த்த எத்தனிக்கும் "சாணக்கியரான" அவரது சகோதரர் பஸில் ராஜபக்ஷவுக்கும் தமிழர் தரப்பிலிருந்து சில விடயங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது தவிர்க்கமுடியாத கட்டாயமாகின்றது.

இந்துவாக இருந்த அசோக மன்னன் கலிங்கத்துப் போரில் ஏற்பட்ட அழிவுகளையும், நாசங்களையும் கண்டு மனம் வெதும்பினான். அந்த யுத்தத்தில் வெற்றி சூடிய போதிலும் போர் ஏற்படுத்திய பேரழிவுகள் அவன் மனதைக் குடைந்தன. அதனால் சஞ்சலப்பட்ட அவனுக்கு பௌத்த துறவிகள் நீதி, நியாயத்தை எடுத்துரைத்தனர். நற்போதனைகளைச் செய்தனர். அமைதி, சமாதானம், சமரசம் பற்றி விவரித்தனர். அதனால் மனம் மட்டுமல்லாமல், மதமும் மாறினான் அசோக மன்னன். "தேவநம்பிய" என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு மனிதருக்கு மட்டு மல்லாமல் பிற உயிரினங்களுக்கும் கூடத் தீங்கு விளை விக்காமல், சகலரையும் சமமாக நேசிக்கும் உன்ன தமான உயர் பண்பியல்பு வாழ்வை வகுத்துக்கொண் டான். அவன் தன் ஆட்சியில் சிறைக்கூடங்களை வெறுத்தான். யாரையும் தண்டிக்காமல் அன்பால் மனம் மாற்றும் வித்தையை நாடினான்.

இத்தகைய உயர்ந்த நிலைமை குறித்து சிந்திப்பதற்கு ராஜபக்ஷ சகோதரர்களுக்கு அருகதை தகுதி உண்டா என்பதுதான் இங்கு பிரதான கேள்வி.

யுத்தத்தின் பேரழிவுகளைக் கண்டு யுத்த வெற்றியின் பின்னரும் கூட மனம் வெதும்பி, மனம் புழுங்கி, மனம் சஞ்சலித்து அவதியுற்ற அசோக மன்னன் எங்கே? யுத்த வெற்றியின் இறுமாப்பில் மார்தட்டியபடி ஒரு தமிழ ரைக்கூட, அப்பாவியைக்கூட, தமது இராணுவம் இந்த யுத் தத்தில் கொல்லவேயில்லை என்று தமது மனச்சாட்சிக்கே பொய்யுரைத்தபடி, கதை விடும் இந்த ஆட்சித் தலைமை எங்கே? யுத்தத்தின் பேரழிவை மனதார ஒப்புக்கொள்ளாமல், அசோக மன்னனாக மாறுவதுபற்றிப் பேசுவது வெறும் பம்மாத்தாகத்தான் இருக்கமுடியும்!
மனம் திருந்தித் தம்மை புனித பௌத்தனாக மாற்றிக் கொண்ட அசோக சக்கரவர்த்தி எங்கே?

பௌத்தர்களாகத் தம்மைக் கற்பிதம் பண்ணிக்கொண்டே போர்வெறியோடு தமிழர் தாயகம் மீது தீவிர யுத்தத்தைத் தொடுத்த தமிழர் களின் பேரழிவு பற்றிய செய்திகளுக்கு மத்தியிலும் யுத்தத் தைத் தீவிரப்படுத்தி வன்னியை வீழ்த்த சந்நதம் கொண்டு நின்ற இந்த ஆட்சித் தலைமை எங்கே.....?

மனம் திருந்தி, சிறைக்கூடங்களையே இல்லாதொழித்த அசோக மன்னன் எங்கே? அவசரகாலச் சட்ட விதிகளின் கீழும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும் பல்லாயிரம் பேரைத் தடுப்புக்காவலில் நீண்ட பல வருடங்களாக இன்னும் வைத்திருக்கும் இந்த ஆட்சிப்பீடம் எங்கே?

பிற உயிரினங்களையும் தன் போல நேசிக்கும் பௌத்தத்தின் உன்னதம் கண்டு, அதன் வழி சென்று தன்னை உயர்த்திக்கொண்டான் அசோக மன்னன். பௌத்த நெறியைப் பின்பற்றுபவர்களாகக் காட்டிக்கொண்டு, அது போதிக்கும் உயர்ந்த விழுமியங்களை தத்துவங்களை உன்னதங்களை உயர் சீலங்களை புறக்கணித்தபடி, அடக்குமுறை ஆட்சி செய்வது அதனின்றும் வேறானது. இரண்டையும் ஒப்பிட்டு நோக்குவதே பெரும் பாவம்தான்!
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment