பொன்சேகாவின் க(õ)ரணம்

முல்லைத்தீவு இறுதிச் சமரின்போது வெள்ளைக்கொடி ஏந்தி சரணடையத் தயாராக வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனும், புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் இன்னும் சில புலிகளின் தலைவர்களும் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்குமாறு களத் தள பதிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத் தபாய ராஜபக்ஷவே உத்தரவிட்டார் என்றும் சாரப்படும் விதத்தில், முன்னாள் இராணுவத் தளபதி யும், எதிர்க்கட்சிகள் தரப்பின் தற்போதைய ஜனாதிபதித் தேர் தலின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா கூறினார் என வெளியான கருத்துகளை அடுத்து ஏற்பட்ட பரபரப்பும், சூடும், அவ்விடயங்களை மறுத்து அடுத்த நாள் பொன்சேகா வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து அப்படியே அடங்கிப் போயின.

விடுதலைப் புலிகள் மீதான யுத்த வெற்றியை முன்னிறுத்தி இப்போது தென்னிலங்கையில் நடத்தப்படும் அரசியல் சூதாட்டக் களத்தில், இந்த விவகாரம் மிக முக்கிய அம்சமாக வெளிப்பட்டு, ஜெனரல் பென்சேகாவின் மறுப்போடு இப்போது தணிந்துபோயிருக்கின்றது. இது இப்படியே நிரந்தரமாக அடங்கிப்போகுமா என்பதுதான் கேள்வி.

"த சண்டே லீடர்" ஆங்கில வார இதழுக்கு ஜெனரல் பொன்சேகா தெரிவித்த தகவல் எனக் குறிப்பிட்டு அந்த வார இதழின் முன்பக்கத் தலைப்புச் செய்தியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவ்விடயம் வெளியானமையை அடுத்து அன்று காலை முதலே இவ்விவகாரம் பெரும் சர்ச்சைக்குரியதாக உருவெடுத்துப் பல தரப்பிலும் பரபரப்பாகப் பேசப்படும் விடயமாயிற்று.

ஆனால், அவ்வளவு முக்கிய விடயம் குறித்து அதுவும், இப்போது ஜனாதிபதித் தேர்தல் இவ்வளவு சூடு பிடித்து, அது தென்னிலங்கையின் சரித்திரப் போராட்டக் களமாகியிருக்கையில் அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே எதிர்த்து எதிரணியின் பிரதான வேட்பாளராகக் களமிறங்குகின்ற சரத் பொன்சேகா, அந்த விடயத் துக்கு ஒன்றரை நாள் கழித்து, பார்த்திருந்துவிட்டு, திங்கட்கிழமை பிற்பகலில் சாவகாசமாக மறுப்புத் தெரிவிக்க முற்பட்டமை ஏன், இத்தாமதத்தின் பின்னணி என்ன என்ற கேள்விகள் பலத்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளன.அதுவும்

* ஜெனரல் சரத் பொன்சேகா "த சண்டே லீடர்" இதழுக்குத் தெரிவித்த கருத்துத் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பொலிஸார் அவரை விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அரசுத் தரப்பு எடுத்துள்ளதாகச் செய்தி வெளியான பின்னர்

* இவ்விடயத்தில் பொன்சேகாவுக்கு எதிரான சட்ட நடவடிக்கை தொடர்பில் அரசுத் தலைமை சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற முடிவு செய்துள்ளது என்ற தகவல் கசிந்த பின்னர்

* இவ்விடயம் மூலம், இதுவரை இராணுவத்துக்குக் கிடைத்த யுத்த வெற்றி, இப்போது காட்டிக் கொடுப்புக்கு உள்ளாகி விட்டது என்ற சாரப்பட தற்போதைய இராணுவத் தளபதி பகிரங்கமாகவே சீறியதைத் தொடர்ந்து

* "த சண்டே லீடர்" பேட்டியின்படி, அப்போதைய இராணுவத் தளபதி பொன்சேகாவை மீறி, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமுனைத் தளபதிகளைத் தாமே நேரடியாக உத்தரவு பிறப்பித்து வழி நடத்தியிருக்கின்றார் என்றும், அச்சமயம் இராணுவத் தளபதி பொன் சேகா யுத்த நடவடிக்கைகளின் முக்கிய விடயங்களில் இருந்து தள்ளிவைக்கப்பட்டிருந்தார் என்றும் ஜெனரல் பொன்சேகாவே ஒப்புக்கொள்வது வெளிப்படுவதால், தற்போதைய யுத்த வெற்றிகளுக்கு கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்பு, பொன்சேகா அல்லர் என்பதை பொன்சேகாவே ஏற்றுக்கொள்ளுகின்றார் என்று, அந்தச் செய்தி தொடர்பான கருத்துநிலை தென்னிலங்கையில் உருவாகிவருவது குறித்து எச்சரிக்கையும் ஆலோசனையும் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டமையை அடுத்து

யுத்த களத்தில் நடந்தவற்றுக்கெல்லாம் இராணுவத் தளபதி என்ற முறையில் நானே பொறுப்பு எனக் கூறி, யுத்த களத்தில் வெள்ளைக் கொடியோடு எவரும் சரணடைய முன்வரவில்லை எனத் தெரிவித்து "பல்டி" அடித்துவிட்டார் பொன்சேகா.

தென்னிலங்கை அரசியலில் தேர்தலில் வெற்றி பெறு வதற்காகத் தான் மெல்ல கசியவிட்ட தகவல், விஸ்வரூபம் எடுத்து, "பூமராங்" ஆகத் திரும்பி சர்வதேசப் போர்க் குற்ற விசாரணைப் பூதமாகத் தென்னிலங்கையையே திருப்பித் தாக்கும் சாத்தியம் தென்பட்டதும், தென்னிலங்கைப் பேரினவாதத்துக்கே அதனால் ஆபத்துவரும் என்று கருதி, அதனைக் காப்பாற்ற அரசியல் வேறுபாடுகளை மறந்து, வழமை போலப் பேரினவாதத் தலைவர்கள் வரிசையில் தாமும் ஒருவர் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில், ஜெனரல் பொன்சேகாவும் இப்படி நடந்து கொண்டாரோ என்ற கருத்து தமிழர்கள் மத்தியில் இயல்பாகவே எழுகின்றது.

"நீர் இந்த விடயங்களை அம்பலப்படுத்த முற்பட்டால், உம்முடன் சம்பந்தப்பட்ட பல பிரதான துரும்புச் சீட்டுகளை நாம் தூக்கி அடித்து, வெளிப்படுத்த வேண்டிவரும்" என்ற சாரப்பட, இறுதி யுத்த கால நடவடிக்கைகளின் உள் வீட்டு இரகசியங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளால் பொன்சேகாவுக்கு எச்சரிக்கைப் பாணியில் நினைவூட்டப்பட்டது எனவும், அதை அடுத்தே இந்த அதிரடிப் பின்வாங்கல் என்றும் சில மட்டங்களில் தகவல் கசிகின்றது.

அது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஆனால், "த சண்டே லீடர்" பேட்டி தொடர்பாக ஒன்றரை நாள் தாமதம் காட்டி பொன்சேகா விடுத்த மறுப்பு, தேர்தலில் தென்னிலங்கைச் சிங்கள வாக்குகளைத் தக்க வைக்கவும், சத்தியத்துக்காக சிங்களத் தலைமைக்கு எதிராக உண்மையைக் காட்டிக் கொடுக்கும் ஆளல்லன் தான் என்பதை சிங்கள மக்களுக்கு நிரூபிக்கவும் அவர் எடுத்த நடவடிக்கைகளாகவே தமிழர்களால் கருதப்படும்.
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment