இன்று நத்தார் தினம். சமாதானத்தின் தேவன் அவதரித்த நன்னாள். உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தைக் கொண்டாடுகிறார்கள். விடுதலையின்றித் தவிக்கும் மனுக்குலத்தின் ஆத்ம விடுதலைக்காகத் தம்மையே மரணத்துக்கு ஒப்புக் கொடுக்க வந்த கிறிஸ்து பிறந்த தினம்தான் இன்று.சமாதானத்துக்காக மானுட அமைதிக்காக தன் சொல்லாலும், செயலாலும், ஜீவனாலும் நற்பணி புரிந்த ஆண்டவர் அதற்காகவே தமது உயிரையும், உடலையும் கூட அர்ப்பணித்தார் என்பதே அவரது வாழ்வு காட்டும் சிறப்பாகும். ஆனால், இன்று சமாதானம் பூமியில் இருக்கின்றதா? எமது நாட்டில் இருக்கின்றதா? பூமியானது பாவத்தில் ஆழ்ந்துவிட்டது. இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தான் உட்பட உலகின் பல நாடுகளில் சமாதானம் இன்னும் எட்டாத தூரத்தில் இருக்கிறது.
போர் ஓய்ந்தபோதும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. எனவே நிரந்தரத் தீர்வொன்று காணப்படவேண்டியது அவசியம் என்று யாழ்.ஆயர் அதிமேதகு தோமஸ் சவுந்தரநாயகம் கூறியிருப்பது இன்றைய நாளில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய தாகும்.
போரின் பயனாக நடந்த பிரச்சினைகள் இன்னும் முழுதும் தீர்க்கப்படவில்லை. இடம்பெயர்ந்த மக்களின் அவலநிலை இன்னும் முடியவில்லை. அவர்கள் தம் இல்லங்களுக்கும் நிலபுலங்களுக்கும் திரும்பி நாளாந்த வாழ்வை மேற்கொள்ளும்போதுதான் அவர்கள் நிம்மதி அடைவார்கள்.
நாளாந்தம் அசுரவேகத்தில் ஏறிவரும் விலைவாசிகளும் அதனால் ஏற்படும் சிரமங் களும் பரந்து நிற்கும் வறுமையும், வாழ்வதற்குத் தகுந்த இல்லிடமற்ற நிலைமையும், வேலைவாய்ப்பு இன்றிய நிலையும் இன்று மக்களை வாட்டி நிற்கின்றன. இவற்றுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது அரசினுடையதும் ஏனைய உதவி நிறுவனங்களினதும் கடமை யாகும் என்று ஆயர் கூறுவதை அரசியல்வாதி களும், தொண்டு நிறுவனங்களும் மனதில் இருத்தவேண்டியது அவசியம்.
இறைமகன் இயேசு காட்டிய சமாதான வழியில் மற்ற மனிதர்களையும், இனத்தையும் தம்மைப்போல் மாண்புடன் மதிக்கின்ற வகையில் செயற்படுகின்ற மேலான மனப்பாங்கும் மனப்பக்குவமும் இல்லாதவரை, எமது இலங்கைத் தீவின் தலைவர்களுக்கு வராத வரையில், தேவன் காட்டிய சமாதான வாழ்வு எமக்குக் கிட்டப்போவதில்லை.
இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்த போர் ஓய்ந்த காலத்தின் முதலாவது நத்தாராக, யேசு பிரானின் பிறப்பு நாளாக இன்றைய அமைகிறது. அதனால் சமூகத்துக்கு ஆண்டவர் சமாதானத்தைக் கொண்டுவந்த இந்நாளில், சமாதானம் குறித்த அவாவும், வேண்டுதலும் மக்கள் மனங்களில் என்றும் இல்லாதவாறு மேலோங்கி நிற்கின்றன.
நாட்டில் அரசுத் தலைவரைத் தெரிவு செய்யும் காலமும் இவ்வேளை வந்துள்ளதால், தமிழர்கள் தமக்குரிய ஜனநாயக உரிமைகளை, தமது பிறப்புரிமைகளைப் பிசகின்றிப் பெறு வதற்கு வாய்ப்புக் கிடைக்க வழிதிறக்குமோ என்ற கேள்வியும் உயர்ந்து நிற்கிறது.
அதனை நிர்ணயிக்க வேண்டிய, முடிவு செய்யவேண்டிய பெரும் பொறுப்பும் சிங்கள மக்களைவிட தமிழர்கள் நமக்கே வந்துசேரும் புறச்சூழல் ஒன்று என்றுமில்லாதவாறு ""புதி தாகச்'' சேர்ந்துள்ளது. இதனைப் புத்திக்கூர்மையுடன் தக்கவாறு பயன்படுத்துவதற்கு, சமாதானப் பிரபுவான யேசு பிறந்த இந்நாளில் மனதிற்கொண்டு செயற்படுவோமாக.
0 கருத்துரைகள் :
Post a Comment