தமிழீழம் தமிழருக்கு உரித்துடையதா? ஒரு குறுக்கு வெட்டு முகப்பார்வை

"வரலாற்றை அறியாதவன் சமூகம் அழிந்துவிடும்"
-கவிஞர் இக்பால்-


ஒரு உடமையின்பால் உரிமை கொண்டாடுகையில் அவ்வுடமையின் உரிமைத்துவம் சார்பான அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தல் அவசியம். இது யாவற்றுக்கும் பொருத்தமாகும். அதாவது,

இலங்கையில் உள்ள தமிழர் வாழ்விடமான தமிழீழ பிரதேசம் உண்மையிலே தமிழ்மக்களுக்கு உரித்துடையதா? உரித்துடமை உள்ளதென்றால் அதற்கான ஆவணங்கள் (குறைந்த பட்சமாவது) ஒப்புவிக்கப்படுமா? அல்லது, 'தமிழீழம் தமிழரின் தாயகம்' என முன்னோரிலிருந்து இந்நாளிலுள்ளவர் வரைக்கும் கூறப்படும் வாய்ப்பாடு என்பதால் அது தமிழரின் தாயகமாகிவிடுமா? அல்லது,

எமக்கான போரியல் குழுமங்கள் போரிட்டதால் அது நியாயமாகத்தான் இருக்கும் என குத்து மதிப்பில் ஏற்றுக்கொண்டோமா? இப் பேர் போன்ற வினாக்களுக்கு எம்மில் பெரும்பாலானோர், குறிப்பாக இன்றைய இளம் சமுதாயத்தினர் விடை கண்டறிதல் வேண்டும். இதன் நியாயப்பாடுகளை குறைந்த பட்சமாவது அறிந்திருக்கும் பட்சத்தில்தான் துணிந்து எமது உரிமைத்துவத்தை சர்வதேசத்திடமோ அல்லது, ஏன் தமிழரோடு முரண்படும் சிங்கள மக்களுக்கு அதிலும் சிங்கள புத்தி ஜீவிகளுக்கு (அரசியல் வாதிகளல்ல) வரலாற்று ஆவணங்களோடு நிரூபிக்கும் பட்சத்தில் சிங்கள மக்களின் நியாயவாதிகள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. எமது தமிழீழத்திற்கான போராட்டத்தை அறிவியல் பூர்வமாக வெளிப்படுத்துவதில் தான் 'தமிழீழ போராட்டம்' வெற்றி பெற வாய்ப்புண்டு.

இதையே கருக்கோளாகக் கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உரையின் பல இடங்களில் போராட்டம் வேறுவடிவம் பெறவேண்டும் என்றும், போராட்டம் புலம்பெயர் மக்களிடையே விடப்படுகிறதென்று கூறியதும் கவனிக்கத்தக்கது.

'போராட்டம் வேறுவடிவம்' என்பது தற்போது ஆயுதப் போராட்டத்திற்கு சாத்தியமில்லை. (எதிர்காலத்தில் முனைப்புப் பெறாது என்று அர்த்தம் கொள்ளலாகாது) ஆகவே, அதுவானது அறிவியல் சார்ந்த ஜனநாயகப் போராட்டம் என்றே பொருள் கொள்ள வேண்டும். அடுத்ததானது,

'போராட்டமானது புலம் பெயர் மக்களிடையே விடப்படுகின்ற' தென்பது புலம்பெயர் மக்கள் ஆயுதங்கள் சுமந்து தமிழீழ மீட்புக்காக ஈழம் செல்ல வேண்டும் என கருத்துக் கொள்ள முடியாது. அதுவானது,

சர்வதேச அமைப்புக்களின் சிந்தைக்கு எட்டும் படியாக எமது போராட்ட நியாயங்களை தர்க்க ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும் சாத்வீக முறையில் எடுத்தியம்பி நியாயப்படுத்தலே ஆகும். இந்த இரு விடயங்களிலும் புலம் பெயர் மக்கள் மிகத்தெளிவாக இருக்கவேண்டும். இவற்றில் வெற்றி காண்பதே நோக்காக கொள்ள வேண்டும்.

இதற்கான காரணம் யாதெனில்,
தமிழீழ தாயகத்தின் மக்கள், விலங்குகளுக்குப் பயந்து சூழ்நிலையின் கைதிகளாக மௌனித்து கிடக்கிறார்கள். அவர்களால் வாய்திறந்து நியாயம் சொல்ல, சுதந்திரமும் வலிமையுமற்று வாழ்கிறார்கள்.

இதற்கான பெரும் கடமை யாதெனில் மேதகு பிரபாகரன் அவர்களால் சுட்டி உரைக்கப்பட்ட (மேற்கூறிய) இந்த எடுகோள்களை, கருத்தியல் இலட்சியமாக கொண்டு எம் பணிகளை தொடரவேண்டும்.

தமிழீழம் சார்பான தரவுகளில் நியாயப்பாடு தென்படுதல் அவசியமாகும். அந்தத் தரவுகளாவன, கருத்தியல் இலட்சியத்திற்கு அறிவியல்பூர்வமாக அமைதல் வேண்டும். அதனால், தமிழீழ உரிமைத்துவம் சம்பந்தமான தரவுகளை அறிந்த புத்திஜீவிகள் எழுத்துருவில் வெளிக்கொணரவேண்டும். அதில் நியாயங்கள் நிறுவப்படல் வேண்டும். அதற்காக, நம்பமுடியாத, யதார்த்தத்திற்கு ஒவ்வாத அற்புத சக்திகளைக்காட்டும் புராண இதிகாசங்களூடாக நியாயங்களை நிறுவ முற்படலாகாது. அவை தோற்றுப்போய்விடலாம். அத்தோல்வியானது என்றுமே 'எழும்பமுடியாத' தோல்வியாகக் கூட அமைந்துவிடலாம் என்பதில் கவனம்கொள்ளல் அவசியம். ஆதலால், தமிழீழம் சார்ந்த ஒரு 'எள்ளுப்பொரி' தகவலை தருவது பொருத்தமாக அமையும் என எண்ணுகிறேன்.

றொபேட் நொக்ஸ்(Robert Knox) கண்ட கைலாய வன்னியன்.

மேலைநாட்டவர்கள் இலங்கையின் மீது மோகம் கொள்ள பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்களாக அறியப்படுவது வளங்களும், வணிகமும் எனலாம். இதற்கு தேவையான மூலங்கள் கடலும், கங்கை சார்ந்த நிலமும், ஏற்றுமதி இறக்குமதி வணிகத்திற்கான துறைமுகங்களுமாகும்.

இவை அதிகமாகக் காணப்பட்ட இடங்கள் தமிழரின் தாயகப்பிரதேசங்களே ஆகும். குறிப்பாக, ஆசியக்கண்டத்தின் திறவுகோல் என அழைக்கப்படும் இயற்கை துறைமுகமான திருக்கோணமலை மேலைத்தேய நாட்டவர்களின் கண்களில் பன்னெடும் காலமாக குத்தி நின்றது. இத்துறைமுகமானது வணிகத்திற்கும், எதிரிகளுடன் போர் செய்யவும் வசதிகள் கொண்டதாக அமைந்திருந்தது. துறைமுக வளத்திலே 'மாதோட்டம்' துறைமுகமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த இரு துறைமுகங்களையும் தாலமி(PTOLEMY) என்னும் கிரேக்க நாட்டு புவியியல் அறிஞர்(ஏறத்தாள1870 ம் ஆண்டுகளுக்கு முன்) தனது வரைபடம் மூலம் தமிழர் வாழும் இடங்களென(தாமிரிகே DAMIRIKE) சுட்டிக்காட்டியுள்ளார்.(உலக வரைபடத்தை முதல் வரைந்த அறிஞர் தாலமி ஆவார். அவரின் பார்வையில் இலங்கையில் அப்போது இருந்த தமிழர் பகுதிகள் காட்டப்படுகின்றன. அதை பிறிதொரு அத்தியாயத்தில் காண்போம்)

தமிழர் தாயகமான திருக்கோணமலையின் எழிலுக்கும் வளத்திற்குமாக பல பேரரசுகள் போரிட்டு மடிந்தன. இன்றைய யுத்தங்கள் கூட திருக்கோணமலையை அடிப்படையாக கொண்டு நடைபெறுகின்றதென்பது உண்மை. அதனால் தான் தமிழீழ தாயக தலைநகர் திருக்கோணமலை என என்றும் மனதில் பதித்துக்கொண்ட காவல் தெய்வங்களை இக்கணம் நினைவு கூருதல் பொருத்தமுடையதாகும். அந்த வழியிலே இலங்கையை தம்வசப்படுத்த முயன்ற மேலைத்தேய நாடுகளுடன் கண்டிய மன்னன் முரண்பட்டுக் கொண்டான்.

1660௦ ம் ஆண்டிலே மிகப்பெரிய போர்வீரனாக இருந்த றொபேட் நொக்ஸ் என்னும் ஆங்கிலேயனை திருக்கோணமலையில் மூதூர் என அழைக்கப்படும் கொட்டியாபுரத்திலே கண்டிய மன்னன் சிறைப்பிடித்தான்.(அக்காலத்தில் கொட்டியாபுரப்பற்று வன்னிமை கண்டிய மன்னனின் மேலாட்சியை ஏற்றிருந்தது)சிறைப்பிடித்த நொக்சை கண்டிய மன்னன் 19 வருடங்கள் சிறைக்கைதியாக வைத்திருந்தான். (இன்னும் கூட மூதூரில் உள்ள பிரதான வீதிக்கு நொக்ஸ் வீதியென பெயருண்டு என்பது குறிப்பிடத்தக்கது) சிறையிலிருந்த நொக்ஸ் தருணம் கண்டு(1710) தப்பியோடினான். தப்பியோடும் வழியில் அனுராதபுரத்தை அடைந்த அவர், அங்கு சிங்கள மொழி பேசும் ஒருவர் கூட அங்கு இல்லாததது கண்டு திகைப்படைந்துள்ளார். அங்கு ஆட்சித்தலைவராக இருந்தவர் தமிழர் என அறிந்து அவரின் உதவியுடன் அனுராதபுரத்திலிருந்து புறப்பட்டு அருவியாற்றுக்கரையோரமாக காட்டுப்பகுதியினூடாக வந்து மன்னாரை குறுக்கறுத்து வன்னிப்பெருநிலப்பரப்பினுள் வந்தடைந்தார். அக்காலத்தில் வன்னியை ஆட்சிசெய்த கைலாய வன்னியனின் ஆட்சியைக் கண்டு வியந்து நின்றார். கண்டி மன்னனுக்கோ, ஒல்லாந்தருக்கோ திறை(வரி) செலுத்தாது தன்னாட்சி கொண்ட சுதந்திர அரசை அமைத்து நேர்த்தியாக ஆண்டுவந்த கைலாய வன்னியனின் பெருமையைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.

இதுபற்றி விபரமாக தனது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கைத் தீவின் படத்தையும் நொக்ஸ் வரைந்துள்ளார். அப்படத்தில் 'கைலாய வன்னியனின் நாடு' (CEYLOT WANNEA) எனக்காட்டி யாழ்ப்பாண குடா நாட்டுக்கு தெற்கே உள்ள வன்னிப்பகுதியையும், கிழக்கு கரையோரமாக உள்ள வன்னிமைகளையும் தமிழ் ஆட்சித் தலைவனாகிய கைலாய வன்னியனின் ஆட்சியின் கீழ் இருந்தமையை குறிப்பாகக் காட்டியுள்ளார்.
இத்தரவுகளிலிருந்து பண்டைய காலம் முதல் தமிழருக்கான தாயகம் தனியே இருந்ததென்ற உண்மையோடு ஒப்புக்கொண்டாக வேண்டி உள்ளதை உணர்தல் வேண்டும்.

ஒல்லாந்தரும் தமிழரின் ஆட்சியும்

கைலாய வன்னியன், அடங்கா அரசுரிமை கொண்டு ஒல்லாந்தரின் ஆதிக்கத்தினுள் அகப்படாமல் வீரத்துடன் ஆட்சிசெய்தான்.(இதனால் தான் அடங்காப்பற்று என பெயர் வந்ததோ?) இலங்கையிலே இனவழி நாட்டினங்கள் இரண்டு உள்ளதென ஒல்லாந்தர் ஒப்புக்கொண்டிருந்தனர். மொழி மட்டுமல்ல வாழ்வுமுறை, பண்பாடு, அரசு, ஆட்சிமுறைகளில் இருந்து இரு இனங்களும் வேறுபட்டிருந்தன. இதனை மையப்படுத்தி ஆட்சிமுறைகளையும் தத்தமது இறைமை மாறாமல் அமைத்திருந்தனர்.

இலங்கையின் கரையோரங்களை தளமாகக் கொண்டு ஆறு ஆட்சி மாவட்டங்களை ஒல்லாந்தர் அமைத்திருந்தனர்.(கிறிஸ்துவுக்கு முன் 161 ம் ஆண்டில் அனுராத புரத்தை தலைநகராக கொண்டு இலங்கைத்தீவு முழுவதையும் ஆட்சி செய்த எல்லாள மன்னனின் ஆட்சி அமைப்புமுறையை தழுவியே ஒல்லாந்தர் இலங்கையின் ஆட்சி அமைப்பு முறையை யாத்திருந்தனர்)

* கொழும்பு ஆட்சி மாவட்டம்
* புத்தளம் ஆட்சி மாவட்டம்.
* யாழ்ப்பாண ஆட்சிமாவட்டம்.
* திருக்கோணமலை ஆட்சி மாவட்டம்
* மட்டக்களப்பு ஆட்சி மாவட்டம்
* காலி ஆட்சி மாவட்டம்

இந்த ஆட்சி மாவட்டத்தின் தலைவர்களை கொழும்பில் இணைத்து தன்னாட்சி அதிகாரங்களை ஆளுனரூடாக வழங்கியிருந்தனர்.
நிர்வாகத்துடன் நீதியும் பேணுவதன் பொருட்டு மூன்று நீதி மாவட்ட பிரிவுகளாக(Judicial District) ஒல்லாந்தர் ஏற்படுத்தி இருந்தனர்.
1)கொழும்பு ஆட்சி மாவட்டம், புத்தளம் ஆட்சி மாவட்டம் இரண்டும் இணைந்து கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியது.

2)யாழ்ப்பாண ஆட்சி மாவட்டமும், திருக்கோணமலை ஆட்சி மாவட்டமும் இணைந்து யாழ்ப்பாணத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியது.(வடகிழக்கு இணைந்து)

3)காலி ஆட்சி மாவட்டம் தனி நீதிப்பிரிவாக காலியை தலைமையகமாகக் கொண்டு இயங்கியது.

இதிலிருந்து தமிழருக்கும் சிங்களவருக்குமாக தனித்தனி நீதிப்பிரிவுகள் அமைந்திருந்தமையை அவதானித்தல் அவசியமாகும்.
தனித்தனி இரு இனங்களுக்குமான வேறுபட்ட ஆட்சிமுறைகளை அமைத்து நிருவாகம் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், கற்பிட்டி ஆட்சி மாவட்டங்களுக்கு தமிழரின் பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மாறாமல் ஒன்றித்து போகக் கூடியவாறு ஆட்சி அமைக்கப்பட்டிருந்தது.
ஜோஹன்சு சைமன்சு என்ற ஒல்லாந்து ஆளுநர் (கி.பி. 1703) யாழ்ப்பாண மக்களின் வழமைகள், பண்பாடுகள், மதம் என்பன தனித்துவமானது என அறிந்து அவற்றை தொகுத்து 'தேசவழமை' என பெயரிட்டு அதற்கமைய நீதி செலுத்தியமை ஒரு வரலாற்றுக் குறிப்பாகும்.
மேற்கூறிய வரலாற்றை மீள் நினைவுக்குட்படுத்திப் பார்க்கையில் 'தமிழருக்கான தாயகம்' இலங்கைத்தீவிலே இருந்திருக்கின்றதென்பது ஆதாரங்களுடன் உள்ளது.

இதனை உற்று நோக்குகையில், தமிழருக்கான தாயகத்தைக் கோருவது என்னவோ புதிதாக முளைத்த விடயமல்ல. பரம்பரை பரம்பரையாக எம் முன்னோர்களின் முதுச சொத்தான எமது வாழ்விடங்களை தந்துவிடுங்கள் எனவும், மாற்றாருக்கு அதில் உரிமையில்லை என நீதியாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்துவதே ஆகும்.
தமிழர் தம் தாயக பூமியில் தன்னாட்சி அமைத்து சுதந்திரமாக வாழ நினைப்பதில் தவறொன்றுமில்லை.

'தமிழர் தாயகம்' ஆக்கிரமிப்புக்குட்பட்டு பறிக்கப்படும் போது அதனை உரிமைத்துவம் கொண்ட மக்கள் தடுக்க முற்படுவதை உரிமைப்போராட்டமென்பதா? அல்லது பயங்கரவாதம் என்பதா?
நேர்மையாக, நீதியாக, தர்ம அடிப்படையில் சர்வதேசம் நடுநிலமையாக இதனை நோக்கி நீதி வழங்கவேண்டும். இதையே காலம் காலமாக ஈழத்தமிழ்மக்கள் கேட்டு நிற்கிறார்கள்- மறுக்கப்படுவதனால் போரிட்டு வருகிறார்கள்.











சுவிசிலிருந்து
கனகசபை தேவகடாட்சம்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

2 கருத்துரைகள் :

  1. There seems to be so many such articles. But the Sinhalese do not seem to accept these claims or truths. They say that the Tamils conquered this country and chased them away from the North. Any article must definitely refute those claims with sufficient proof in the first instance.

    I have read a book that claimed that the Tamils ruled the entire country.

    ReplyDelete
  2. I totally appreciate your comment and I need more collective information regarding about our Homeland Sri Lanka. I will be thankful if you send me more details and the Historical books (Names of the Books) what you read and mentioned about above matter. Do not hesitate to contact me on following e-mail. info@thanall.com
    Thank You
    Thevakadatcham

    ReplyDelete