இலங்கைத் தீவின் உயர் சட்டமான அரசமைப்பை, அந்த அரசமைப்பைப் போற்றிப் பாதுகாத்துப் பேணுவேன் என்று உறுதி கூறி, சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்ற ஜனாதிபதி, அதனை அப்பட்டமாக மீறினாலும் கூட, அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க முடியாத வக்கற்ற நிலையிலேயே அந்த அரசமைப்பு விதிகளும் ஏற்பாடுகளும் அமைந்திருக்கின்றன என்பதுதான் உண்மை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற பதவிக்கு இலங்கையின் அரசமைப்பு வழங்கியிருக்கும் கட்டுமட்டில்லாத அதிகாரம் அதனைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றது. சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்ற இலங்கையின் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா இந்த விடயத்தை கொழும்பில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவின் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு "நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு அப்பால் ...." என்ற தலைப்பில் பிரதான உரை நிகழ்த்துகையிலேயே முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, தற்போதைய ஜனாதிபதியின் அரசமைப்பு மீறல் போக்கைப் பட்டியலிட்டார். ஆனால், அப்படிப் பட்டியலிடுவதில் கூட, இன ரீதியான ஓரவஞ்சனை பாகுபாடு பிரதிபலித்தமையைக் காணமுடிந்ததுதான் கவலைக்குரிய விடயமாகும்.
நாட்டின் பல்வேறு அமைப்புகளும் அரசியல், நிர்வாகத் தலையீடின்றி சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் செயற்பட வழிசெய்யும் விதத்தில், அவற்றின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு சுயாதீனக் குழுக்களை அமைக்க வழிசெய்யும் வகையில் 2001 இல் அரசமைப்புக்கான 17 ஆவது திருத்தம் சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கத்துடன் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் திருத்தத்தின் பெறுபேறாக அரசமைப்பின் ஏழாவது அலகின் பிரகாரம் இவ்விடயத்துக்காக அரசமைப்புக் கவுன்ஸில் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். அதற்கான உறுப்பினர்களின் பெயர்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்புகளினாலும் பிரேரிக்கப்பட்ட பின்னரும் அந்த அரசமைப்புக் கவுன்ஸிலை ஸ்தாபித்துச் செயற்படுத்தி, அந்த விடயங்களை அதனிடம் ஒப்படைக்கத் தவறியதோடு, அதன்மூலம் அந்த அதிகாரங்கள் அனைத்தையும் ஜனாதிபதியே தன்வசம் தொடர்ந்து வைத்திருந்து பிரயோகிப்பதன் வாயிலாக தமது இந்த ஆட்சிக்காலம் முழுவதும் அரசமைப்பை மீறிச் செயற்பட்டு வருகின்றார் இந்த ஜனாதிபதி எனக் குற்றம் சுமத்துகிறார் முன்னாள் பிரதம நீதி யரசர் சரத் என்.சில்வா.
சரத் என்.சில்வா பிரதம நீதியரசராக இருந்த சமயத்தில், இவ்விடயத்தை ஒட்டித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைப் பரிசீலனைக்கு எடுத்த அவரது தலைமையிலான உயர் நீதிமன்ற ஆயம், வழமைக்கு மாறாக, இந்த வழக்கில் ஜனாதிபதிக்கு எதிராக அழைப்பாணை விடுக்கும் அளவுக்கு (ஜனாதிபதியின் செயலாளருக்கு அந்த அழைப்பாணையை அனுப்பும் நிலை மைக்கு) சென்றது. ஆனால் ஜனாதிபதியை, அந்த உயர் நீதிமன்ற ஆயத்தால் வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. அரசமைப்புக் கவுன்ஸிலை ஸ்தாபிக்காமல், அதன்மூலம் அரசமைப்பு ஏற்பாடுகளை மீறி வரும் ஜனாதிபதியை உரிய வழிக்குக் கொண்டுவரவோ, திருத்தி சட்ட வழிப்படுத்தவோ, அரசமைப்பை மீறித் தான்தோன்றித்தனமாகச் செயற் படுகின்றமையைத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ உயர் நீதி மன்றால் முடியவில்லை. அதற்குப் பதிலாகத் தமது பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர்,இப்போது எதிர்க்கட்சிகள் சார்பிலான ஒரு நிகழ்ச்சியில் வந்து அப்போக்குக்காக விசனம் தெரிவிக்க மட்டுமே முன்னாள் பிரதம நீதியரசரால் முடிந்திருக்கின்றது.
"பொதுச் சேவை ஆணைக்குழுவை நிறுவாமல் அரசமைப்பின் 9 ஆம் அலகை ஜனாதிபதி மீறியுள்ளார். தேர்தல்கள் நெருங்கும் சமயத்தில், அரச பொதுச் சேவைகள் மீது அமைச்சரவைக்கு உள்ள அதிகாரங்களை அமைச்சரவைத் தீர்மானம் ஒன்றின் மூலம் பறித்துத் தாம் எடுத்துக் கொண்டதன் மூலம் பொதுச் சேவைகளின் சுயாதீன இயக்கத்தைக் கட்டுப்படுத்தி ஜனாதிபதி தனது அதிகாரத்தைத் தம்மிஷ்டத்துக்கு விரிவுபடுத்தியிருக்கின்றார்.
தேர்தல்கள் தொடர்பான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவத் தவறியதன் மூலம் அரசமைப்பின் 14 ஆவது அலகை மீறியுள்ள தோடு, சுயாதீனத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் அவதானத்தின் கீழ் தேர்தல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் வேண்டும் என்றே தடுத்துத் தவறிழைத்துள்ளார். பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றின் சில நீதியரசர்கள், பொலிஸ் மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், நாடாளுமன்றின் செயலாளர் நாயகம் போன்ற உயர் பதவிகளுக்கு அரசமைப்பின் 41பி, 41ஸி ஆகிய பிரிவுகளுக்கு மாறாக அவர் நியமனம் வழங்கியுள்ளார்." என்று தற்போதைய ஜனாதிபதியின் அத்துமீறல்களை அவர் பட்டியலிடுகின்றார்.
நல்லது. அரசமைப்பை மீறும் இத்தகைய செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு அனுபவம் மிக்க முன்னாள் பிரதம நீதியரசர் தகுந்தவர்தான்.
ஆனால், 2001 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அரச மைப்பின் 17 ஆவது திருத்த ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம், நிறைவேற்று அதிகார ஜனாதி பதியான மஹிந்த ராஜபக்ஷ கடந்த 4 ஆண்டுகளாக மேற் கொள்ளும் அரசமைப்பு மீறல்களைப் பட்டியலிடுகின்ற முன்னாள் பிரதம நீதியரசரும், எதிரணியினரும், இருபத்தி யொரு ஆண்டுகளுக்கு முன்னர் அரசமைப்பின் திருத்தமாக நிறைவேற்றப்பட்டு, கடந்த ஐந்து ஜனாதிபதிகளால் நிறைவேற்றப்படாமல் நடைமுறைப்படுத்தப்படாமல் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டு வரும் அரசமைப்பு அத்து மீறலான பதின்மூன்றாவது திருத்தத்தைச் செயற்படுத்தத் தவறிய விடயத்தை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, இலங்கை ஆட்சிப் பீடத்தை இதுவரை ஆட்சியில் இருந்த ஐந்து ஜனாதிபதிகளையும் குற்றம் சுமத்தப் பின்னடிப்பது ஏன்?
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டு, பாகுபாடு காட்டப்பட்டு, ஓரவஞ்சனைக்கு உட்பட்ட தரப்பு, அந்த அரசமைப்புத் திருத்தம் நடைமுறைப் படுத்தப்படு வதன் மூலம் அதிகாரப் பரவலாக்கத்தைப் பெற்றுத் தேறப் போகும் சிறுபான்மையினரான தமிழர்கள் என்பதாலா?
0 கருத்துரைகள் :
Post a Comment