1978ஆம் ஆண்டின் அரசமைப்பு மூலம் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையால் இந்த நாட்டுக்குக் கிட்டியது ஆபத்தும் அழிவுமே. சிறுபான்மைச் சமூகங்களுக்கும் அது பேரழிவையே தந்து நிற்கின்றது.
இரு முக்கிய சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்கள் இந்த விடயத்தை ஒருமித்த குரலில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். ஒருவர் இலங்கைத் தமிழர்களின் மூத்த தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன். மற்றவர் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப்ஹக்கீம்.
பொருத்தமான நிகழ்வு ஒன்றில் வைத்துத்தான் இந்தக் கருத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். அதுவும் பொருத்தமான சமயத்தில். அதுமட்டுமல்ல, இக்கருத்தைக் கூறியவர்கள்கூட, இந்தத் தருணத்தில் இதைக்கூற மிகவும் பொருத்தமானவர்கள் என்பதுதான் கவனிக்கத்தக்கதாகும்.
1978ஆம் ஆண்டின் அரசமைப்பை இலங்கை அரசியலின் "கிழட்டு நரி' என்று கருதப்படுகின்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கொண்டுவந்து அதன்மூலம் நிறைவேற்று அதிகாரத்தைத் தாம் சுவீகரித்துக்கொண்டபோது அதற்கு அவருக்குப் பக்கபலமாகவும் துணையாகவும் இருந்தவர்களுள் முக்கியமானவர் லலித் அத்துலத்முதலி.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழ் அதிகாரத்தின் உச்சிக்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சென்றபோது அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திச் செல்வாக்குப் பெற்றவர்களுள் பிரதானமானவர் லலித் அத்துலத்முதலியே. ஜெயவர்த்தனா அரசின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவும், பந்தோபஸ்து அமைச்சராகவும் இருந்தவர் அவர்.
அதேசமயம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் கெடுதியை விரைந்து புரிந்து கொண்டவரும் அவரே. அதுதான் எண்பதுகளின் கடைசியில் தொடங்கிசொற்ப ஆண்டுகள் எனினும்தாம் படுகொலை செய்யப்படும் வரை தமது இறுதி மூச்சுவரை இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை அடியோடு ஒழிக்கச் சூளுரைத்து அதற்காகப் பாடுபட்டார் லலித் அத்துலத்முதலி.
அந்த லலித் அத்துலத்முதலியின் நினைவை ஒட்டிக் கொழும்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பங்கு கொண்டு பேசுகையிலேயே இக்கருத்தைநிறைவேற்று அதிகார ஆட்சி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரதான சிறுபான்மை இனங்களின் முக்கிய தலைவர்கள் இருவரும் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.
தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் ஏழு வாரங்களில் தேர்தல். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை அடியோடு ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையே இந்தத் தேர்தலின் பிரதான சர்ச்சையாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காரணத்தினால் இவ்விடயத்தை இப்போது கிளப்பியிருப்பது பொருத்தமானது என்பது தெளிவு.
அடுத்தது இப்பிரச்சினையை இவ்விடயத்தை கிளப்பியிருக்கும் இரா.சம்பந்தனும் ரவூப் ஹக்கீமும் இதற்கு மிகமிகப் பொருத்தமானவர்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கிய அம்சமாகும்.
தற்போது நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் இருவரே. ஒருவர் அரசுத் தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. மற்றவர் எதிரணியினரின் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகா.
இந்த இருவரில் ஒருவரான தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் இன்னொரு தடவை அதிகாரத்தை ருசி பார்க்கும் ஆசையுடன் புறப்பட்டிருக்கின்றார்.
எதிரணிப் பொது வேட்பாளரான ஜெனரல் சரத்பொன் சேகாவோ அடுத்த ஆறுமாத காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஆட்சி முறைமையை ஒழிக்கும் திட்டத்துடன் களமிறங்கியிருக்கின்றார்.
இத்தேர்தலில் இவர்களின் வெற்றிதோல்வியைப் பொறுத்துத்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமை தொடர்வதும் தடைப்படுவதும் தங்கியுள்ளது என்று கூறுவதும் மிகையாகாது.
ஆனால், இன்றைய களநிலைவரப்படி பார்த்தால், இந்த இருவரில் யார் அதிகாரத்துக்கு வருவார்கள்தேர்தலில் வெல்வார்கள் என்பது தமிழர், முஸ்லிம்கள் ஆகிய சிறு பான்மையினரின் கைகளில்தான் தங்கியிருக்கின்றது என்பது வெளிப்படை. மஹிந்தரா, பொன்சேகாவா என்பதில் பெரும்பான்மை இனம்பௌத்த சிங்களப் பேரினவாதம் பிளவுபட்டுக் கிடக்கின்றது.
இவர்களில் யாரைத் தெரிவு செய்வது என்பதில் சிறுபான்மை இனங்கள் ஒன்றுபட்டு ஒரு முடிவை எடுக்குமானால், அதுவே முடிவாகவும், தேர்தல் தீர்ப்பாகவும் அமையும் என்பதே நோக்கர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. இந்தப் பின்புலத்திலேயே, மேற்படி லலித் நினைவுதின நிகழ்வில் தமிழர்களின் தலைவர் இரா.சம்பந்தனும், முஸ்லிம் களின் தலைவர் ரவூப் ஹக்கீமும் வெளியிட்ட கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மிக முக்கியமான நிகழ்வில் மிகமுக்கியமான நேரத்தில், மிக முதன்மைமிக்கத் தலைவர்கள் வெளியிட்ட மிக முக்கிய மான கருத்து நிலைப்பாடு இது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையால் நாட்டுக்கும் சிறுபான்மை இனங்களுக்கும் பேரழிவு ஏற்பட்டது என்று இந்தத் தலைவர்கள் தாங்கள் கூறும் மிகப் பிரதான கருத்தைத் தங்கள் கவனத்துக்குள்ளும் கணிப்புக்குள்ளும் சரிவர உள்வாங்கியிருப்பார்களாயின், இந்தப் பிரச்சினை யிலிருந்து தாங்கள் தங்கள் இனங்களை மட்டுமல்ல, முழு இலங்கையையுமே அவர்களால் மீட்டுக்காட்ட முடியும் என நம்புகிறோம். தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வரலாற்றுப் பொறுப்பை சரித்திர ரீதியான கடப்பாட்டை அவர்கள் சரிவர நிறைவு செய்யவேண்டும் எனத் தமிழ்ப் பேசும் சமூகத்தின் சார்பில் வேண்டுகிறோம்.
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துரைகள் :
Post a Comment