தமிழ்மக்களை திசைமாற்ற முனையும் தீய சக்திகள்!!

இப்போதய காலமானது தமிழ்மக்களை பொறுத்தவரையில் மிகவும் நெருக்கடி மிகுந்த காலமாகவே கருதப்படுகிறது. விடுதலைப்புலிகளின் பின்னடைவின் பின்னர் யார் வழிகாட்டுவதென்பது தெரிந்துகொள்ள முடியாதுள்ளது. இந்த நிலையில் யாரை நம்புவது? யாரை நம்பாமல் இருப்பது? தமிழ்மக்கள் அனைவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பவற்றில் தெளிவின்மையே காணப்படுகிறது.

இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நிற்பவர்களோ ஏராளம்! 'சாத்தான் வேதமோதுவது' போல பலர் தமிழ்மக்கள் மத்தியில் வலம் வருகிறார்கள். இதிலே தமிழ்மக்கள் எதிர் நோக்கும் மிகப் பெரிய போர் என்னவென்றால் இவற்றையெல்லாம் பாகுபடுத்தி இனம்காணுவதே ஆகும். இவ்வேளைதான் ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும் பகுத்தறிவுக்கு வேலை கொடுத்தாக வேண்டும். இதிலே நிதானம் தவறும் பட்சத்தில் இத்தனை காலம் போராடிவந்த 'தேசியம்' அடிபட்டு சுக்குநூறாகி விடும்.

தமிழ்மக்களின் நெருக்கடியை மிக உச்சத்திற்குக் கொண்டுவந்திருப்பது எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலாகும். இதிலே யாரை ஆதரிக்கவேண்டும்? யாரை ஆதரிக்க கூடாது? யார் முதல் எதிரி? இப்படியான பல கேள்விகள் தமிழ்மக்களை குழப்பி எடுக்கின்றது. இத்தனைக்கும் ஆலோசனைகூறி வழி காட்டுவதற்கு எவருக்கு உரிமையுண்டு? என்பதுதான் பிரதான கேள்வியாகும். இதற்கான பதிலை கண்டறிந்து கொண்டால் யாவும் சுலபமாகிவிடும்.

ஆழ் கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு மிதக்கும் ஒரு சிறு கட்டை தென்பட்டால் அதுவே அவனின் உயிர்காக்கும் தெய்வமாகும் என்பது போல, இன்றைய நிலையில், 'விலை போகா தலைமை' கற்றுக்கொடுத்த பாடத்திற்கமைய துடுப்பாக கருதவேண்டியது தமிழ் தேசிய கூட்டமைப்பைத்தான் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அதிலும், பிழை சரிகளுக்கப்பால் இன்று வரை மகிந்தவின் வலையில் சிக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை வழிகாட்டிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய தேவை சுயநிர்ணயத்தையும் தாயக தன்னாட்சியையும் நேசிக்கும் ஒவ்வொரு தமிழ்மக்களுக்கும் உண்டு.

சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், விதிவிலக்குகள் ஒருபோதும் எடுத்துக்காட்டுகளாக அமைய மாட்டாது.
ஒன்றுமட்டும் நிச்சயமாகக் கூறலாம், இலங்கை அரசின் எந்த ஆசை வார்த்தைகளுக்குமோ, மிரட்டலுக்குமோ எச்சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அசைந்துவிடாது என உறுதியாக நம்பலாம். ஏனெனில், அசையக்கூடிய எத்தனையோ இடங்களை கூட்டமைப்பினர் தாண்டி வந்துவிட்டனர். கடந்தவைகளை விட இனி கடக்க இருப்பவை சுலபமானது.

இவைகளிடையே, தமிழ்விரோத சக்திகள்(சாத்தான்) வேதமோத புறப்பட்டிருப்பதை அவதானிக்க வேண்டும். தமிழ்மக்களுக்கு துரும்பாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது சேறு பூசி தமிழ்மக்கள் மத்தியில் இருந்து அகற்றிவிட்டால் இலங்கை அரசு கண்ட பல கால கனவு நனவாகி விடும் என 'தமிழர் விரோதிகள்' எண்ணுகின்றார்கள். அதற்கான ஊதுகுழலாக ஊடகங்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதில் மக்கள் மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் இரா. சம்பந்தனுக்கு சேறுபூச முற்பட்ட செய்திகளை ஊடகங்கள் மூலம் அறியக் கூடியதாக இருந்தது.அவர் வெளியிட்ட கருத்தானது எங்கே, எச்சந்தர்ப்பத்திலே வெளியிடப்பட்டதென்ற ஆதாரம் எதுவும் இல்லாமல் மொட்டையாக அவர்மேல் சேறு பூசியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. புலிகளின் தலைமைகளிடம் தனது கருத்துக்களை முன்வைப்பதற்கு சம்பந்தனுக்கான ஆணையும் உரிமையும் உள்ளது. அதைப் புலிகள் நிராகரித்திருக்கலாம் அதில் நியாயமும் இருக்கலாம். ஆனால் சொல்லவதற்கு உரிமை இருந்ததை மறுக்க முடியாது.

தன்னிட்சையாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக சம்பந்தன் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. இதற்காக எதிர்வரும் காலங்களில் மக்களால் தூக்கி எறியப்படுவார் என்று தீர்க்கதரிசனம் கூறும் ஊடகங்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், திருக்கோணமலை மக்கள் மிக நிதானமாக அரசியல் முடிவுகளை எடுத்து வந்தார்கள் என்பது வரலாறு. இந்த அரசியல் அலைகளில் அடித்துச் செல்லாதவாறு மிகத்தெளிவாக மக்கள் இருக்கின்றார்கள். இதைப்பற்றி ஊடகங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

'அவல் கிடைத்துவிட்டது' என்பதற்காக சுயநல நோக்கங்களுக்காக ஊடகங்கள் செய்தி வெளியிடுவது முறையாகாது. அதன் பின் விளைவுகள் யாது? செய்தியால் யார் யாருக்கு நன்மை? இன்றைய நிலையில் தமிழ் மக்களிடையே எப்படியான தாக்கத்தை கொடுக்கும்? என்பவை பற்றி தெளிவாக தூர நோக்குடனும், தேசிய கடமைப்பாட்டுடனும் சிந்திக்க வேண்டிய தேவை ஊடகங்களுக்கு நிறையவே உண்டு. அதற்காக உண்மையை மறைக்க வேண்டுமென்பதல்ல! அதில் மெய்ப்பொருள் காணவேண்டும் என்பது தான் அறிவாகும்.

ஒரு மனிதனுக்கு சுயமாக சிந்திக்க, கருத்து வழங்க பூரண சுதந்திரமுண்டு. அது ஒருவரின் தனிக்கருத்தாகும். அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதுவே, ஒரு ஸ்தாபனத்தின் அல்லது ஒரு அமைப்பின் கருத்தாக மாற்றுவதற்கு திணித்தாலோ, முயன்றாலோ அதுபற்றி சிலாசிப்பதற்கு ஜனநாயகரீதியாக எவருக்கும் உரிமையுண்டு. அதுபோல என்றோ நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைப்பற்றி செயலாளர் நாயகம் சம்பந்தன் கூறிய கருத்தை காலம் கடந்தபின் அரங்கேற்ற நினைப்பது எதோ ஒரு பின்னணியைக் கொண்டதாக இருப்பதை உணரலாம். கூட்டமைப்பை உடைத்துவிட்டால் தமிழரின் ஒற்றுமையை மேலும் உடைத்துவிடலாம் என பகீரதப்பிரயத்தனம் செய்துகொண்டிருக்கும் 'மகிந்த கொம்பனிக்கு' துணைபோகாமல் ஒவ்வொருவரும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு தரவு, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 'வாழ்தலுக்கான அரசியல்' செய்யவில்லை என்பதை உணர வேண்டும். பல பெரிய கல்விமான்களையும், தொழிலதிபர்களையும் பெரும்பான்மையாக உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் வெறுமனே 'சோற்றுக்கு' வந்தவர்கள் அல்ல. மற்றவர்கள் போல் சொகுசு வாழ்வில் தங்களையும் மாற்றியிருந்திருக்கலாம்.

G.L. பீரீஸ் தொடங்கி S.P. திசாநாயக்கா வரையில் அரசின் வயிற்றினுள் கரைந்துவிட்ட நிலையில் எவருடைய அச்சுறுத்தலுமின்றிய இந்த நிலையில் இதுவரை அரசுடன் தம்மை கரைத்துக்கொள்ளாது, தமிழ்மக்களின் நலன்கருதியே ஜனாதிபதித் தேர்தல் பற்றிய முடிவு அமையும் என்று மிகத்தெளிவாக கூறிநிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது சேறுபூச எந்தத்தமிழ் மகனும் எண்ணக்கூடாது.

உதாரணத்துக்கு, சுயநலத்திற்காக அரசுக்கு விலைபோய் இன்று தமிழ்மக்கள் மத்தியில் மதிப்போடு உலாவரும் 'அரை அவியல்' கல்விமான்களும், மழைக்குக் கூட பாடசாலையில் ஒதுங்காத அரசியல் கனவான்கள் மத்தியில், அனுபவத்திலும், அறிவிலும், அகவையிலும் முதிர்ந்த நிலையில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் பலரில் ஒருவரான இரா. சம்பந்தன் அரசுபக்கம் வருவதாக சிறு சமிக்ஞை கொடுத்திருந்தால் 'மகிந்த கொம்பனிக்கு' எப்படி இருந்திருக்கும் என ஒருகணம் சிந்தித்தால் உண்மை விளங்கும். துணை ஜனாதிபதி பதவி கிடைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

'ஒருவன் எது செய்கின்றான்' என்று பார்ப்பதை விட எத்தனை வசதிகள் கிடைத்தபோதும் சுயநலம் கருதாது எதைச் செய்யாமல் இருக்கிறான் என்பதைத்தான் முக்கியமாக அவதானிக்க வேண்டும். அதுவே, தமிழ்மக்களுக்காக தம்மை பல விதத்திலும் அர்ப்பணித்து நிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தீர்மானம் எடுக்கும் வரை பொறுத்திருக்க வேண்டியது தமிழ்மக்களின் கடமையாகும். அது நல்ல முடிவாக அமையும். இவற்றிக்கிடையே, அவர்கள் பற்றிய அவதூறுக்கோ, சந்தேகத்திற்கிடமான பார்வைகளுக்கோ தமிழ்மக்கள் இடம் கொடுக்கலாகாது. இதில் தெளிவாக இருந்தால் 'மகிந்த கொம்பனிக்கு' மட்டுமல்ல ' உடனிருந்தே கொல்லும்' துரோகிகளுக்கும் இது சாவு மணியாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,ஒற்றுமையே பலம்,வாழ்க தமிழ்

கனகசபை தேவகடாட்சம்
திருக்கோணமலை
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment