இலங்கைத்தீவு சுதந்திரமடைந்து அறுபத்தியொரு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் அங்கு வாழும் சிறுபான்மையினங்களுக்கான உரிமைகளை வழங்க சிங்கள பெரும்பான்மை இனம் மறுப்பதால் நீண்டகாலமாக இனப்பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்த இன முரண்பாட்டின் விளைவாக சிறுபான்மையினங்கள் முக்கியமாக தமிழ் மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று வரைக்கும் 1,50,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், காணாமலும் போயுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் அங்கவீனர்களாகியுள்ளனர். பலர் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர். பல சிறுவர்கள் பெற்றோரினை இழந்து அநாதை விடுதிகளில் வாழ்கின்றனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இருப்பிடங்களும், இயற்கை வளங்களும் உருக்குலைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கைச்சட்டங்கள் தமிழ்மக்கள் மீது மனித உரிமை மீறல்களை ஊக்குவிப்பதற்கு வழிவகுத்துள்ளனவே தவிர அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்கவில்லை.
ஓர் இறைமையுள்ள நாட்டில் வாழும் மனிதன் அல்லது ஒரு இனம் அந்நாட்டில் கௌரவமாக, அரசியல் உரிமையுடன் வாழ்வதற்குரிய அடிப்படை உரிமைகளை வழங்குவது அந்நாட்டின் கடமை. அவ்வாறில்லாமல் அவர்களது வாழ்வியல் உரிமை மறுக்கப்படுமானால், மறுக்கப்பட்ட தங்களது உரிமையை பெற்றுக்கொள்ள முயலும்போது, அவர்களின் உரிமைகளை வழங்க மறுத்து மிக மோசமான முறையில் அம்மக்கள் அழிக்கப்படுவதை தடுக்க இரண்டாம் உலகமகாயுத்தத்தின் பின்னர் 1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் வாயிலாக இன அழிப்பிற்கு எதிராக உருவாக்கப்பட்ட மனித உரிமைச்சாசனம் ஜெனிவா ஒப்பந்தம் என அழைக்கப்படுகின்றது.
இலங்கை இந்த மனித உரிமை சாசனத்தில் கையெழுத்திட்டபோதும், பல தசாப்தங்களாக இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்டு வந்த பல மனித உரிமை மீறல்களை ஜ.நா வெறுமனே சம்பிரதாயத்திற்காகக் கண்டித்து, மனித உரிமை மீறல் சாசனத்தை பின்பற்றுமாறு இலங்கை அரசிற்கு அறிவுரை வழங்கியதேயன்றி, சிறிலங்கா அரசால் நடாத்தப்பட்ட இனஅழிப்பு விடயங்கள் தொடர்பில் சிறுபான்மையினங்களை பாதுகாக்க ஜ.நா உட்பட சர்வதேச நாடுகள் எவ்வித முயற்சியினையும் மேற்கொள்ளவில்லை. அதேவேளை பல நாடுகளில் ஜ.நா சபை தலையிட்டு இன அழிப்புக்கு எதிராக தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
இறுதியாக வன்னியில் நடந்த இன அழிப்பு விடயத்தை இலங்கையின் பாரிய மனித உரிமை மீறல் சம்பவமாக ஜ.நா உட்பட மேற்குலகங்கள் கவனத்தில் எடுத்ததானது 'சேடமிழுப்பவனுக்கு தண்ணீர் கொடுப்பதை போலவே' கருதவேண்டியுள்ளது. என்றாலும் அந்த மனித உரிமை மீறல் விடயமும் பிராந்திய இராணுவ, பொருளாதார நலன்களுக்குள் அமுங்கிப்போய்விடுமா? என்ற பயத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.வன்னிப்பகுதியில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது சிறிலங்காவின் இராணுவத்தாக்குதல்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்தி செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது அமெரிக்கா. மேலும் மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதலை நடாத்த வேண்டாம் என இலங்கை அரசை எச்சரித்தது. யாருடைய கருத்தையும் செவிமடுக்காத இலங்கை அரசாங்கம் கொத்துக்குண்டுகள், நச்சுவாயுக்கள் உட்பட போரில் தடைசெய்யப்பட்ட பல ஆயுதங்களை பயன்படுத்தி மிகப்பாரிய மனிதபேரழிவை நடாத்தி முடித்தது. மேற்குறிப்பிட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் வழங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
போர் முடிந்தவுடன் அமெரிக்காவும் மேற்கத்தேய நாடுகளும் ஒன்றிணைந்து இலங்கை அரசின் திட்டமிட்ட மனிதப்படுகொலைக்கு எதிராக, ஜ.நா மனித உரிமைச்சபையில் கொண்டு வந்த சர்வதேச மனித உரிமை மீறல் குற்ற விசாரணைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இந்தியாவின் பரிபூரண எதிர்ப்பினால் தோல்வியில் முடிந்தது. குறிப்பாக இந்தியா பல நாடுகளின் ஆதரவை திரட்டி இலங்கைக்குச் சார்பாகச் செயற்பட்டது. ஏனெனில் மனித உரிமை மீறல் விடயம் விசாரணைக்குட்பட்டால் இலங்கை அரசுக்கு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கியது தொடர்பில் இந்தியாவின் மீதும் குற்றச்சாட்டு எழும் வாய்ப்புள்ளது. அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் நிகழும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்தியா அவ்வாறு செயற்பட்டது.
1987ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ஜெ.ஆர். ஜெயவர்த்தனா மேற்குலகம் சார்ந்த அரசியல் போக்கை கடைப்பிடித்தார். இலங்கையிலிருந்து தனது பிடி தளர்ந்து போவதை உணர்ந்த இந்தியா, தனது பிடியை நிலைநிறுத்த முற்பட்டது. அந்த காலப்பகுதியில் 1987ம் ஆண்டு, இலங்கை இராணுவம் வடமராட்சி பிரதேசத்தின் மீது 'ஒப்பிறேசன் லிபறேசன்' என பெயரிட்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. இதன் போது பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இச்சமயத்தில் எல்லாம் 'பொதுமக்கள் போரில் அநியாயமாக கொல்லப்படுகின்றார்கள். பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை நிறுத்த வேண்டும்'; என இந்தியா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இந்த சமயத்தில் இந்தியா, வடமராட்சியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக 150 படகுகளில்; நிவாரணங்களை அனுப்பியது. அவற்றை இலங்கை அரசு தனது கடற்பரப்பில் தடுத்ததுடன் 'தனது இறைமையை மீறும் செயல்'; என தெரிவித்தது. அப்படகுகளை திரும்பப் பெற்ற இந்தியா, விமானங்கள் மூலம் உணவுப் பொட்டலங்களை இடம்பெயர் முகாம்களில் போட்டு இலங்கையின் இறைமையைப் பற்றிப் பொருட்படுத்தாது செயற்பட்டு இலங்கையை அச்சுறுத்தியது. அதைத் தொடர்ந்து இந்தியா ஈழத்தமிழர்களிற்கு ஒரு தீர்வை பெற்றுத்தருவதாக, ஈழத்தமிழர் சார்பில் முழுப்பொறுப்பையும் ஏற்று இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை செய்துகொண்டது. ஆனால் அந்த ஒப்பந்தம் தமிழரின் அரசியல் உரிமைகளுக்கான எவ்வித உத்தரவாதத்தையும் பெற்றுத் தரவில்லை. அரசியல் அதிகாரமற்ற தீர்வு திட்டத்;தினை ஈழத்தமிழர்களின் மீது திணித்ததனால் இந்தியா - விடுதலைப்புலிகளக்கு இடையிலான போர் வெடித்தது.
இந்த முரண்பாட்டின் ஆரம்பத்தில் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் இயங்கிய பத்திரிக்கைகளையும், வானொலிகளையும் தடைசெய்து தனது முதலாவது மனித உரிமை மீறலை பதிவு செய்தது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தது. மிக முக்கியமாக வியட்நாமில் நடைபெற்ற 'மைலாய்' படுகொலைக்கு ஒப்பானதாக சொல்லப்படும் வல்வைப்படுகொலை (இந்திய மைலாய்ப் படுகொலை), யாழ்வைத்தியசாலைப் படுகொலை, மட்டக்களப்பு பொதுச்சந்தைப் படுகொலை, சாவகச்சேரி சந்தைப் படுகொலை சம்பவம் போன்றவற்றுடன்; கொக்குவில் பொற்பதியில் பல பொதுமக்களை நடுவீதியில் படுக்கவைத்து இராணுவ டாங்கியை அவர்களின் மேல் ஏற்றி படுகொலை செய்ததும், பல கொடுமையான பாலியல் வல்லுறவுகளையும் செய்தது வரலாறு.
அதுமட்டுமில்லாமல் தற்போது இறுதியாக நடந்த போரில் கூடுதலான இராணுவத்தளபாடங்களையும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் வழங்கிய இந்தியா, ஒரு வகையில் இதுவரை காலமும் இலங்கைத் தமிழ் மக்களின் மீது நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை அரசுக்கு அடுத்தபடியாக தமிழ்மக்களை அழித்த பெருமை இந்தியாவையே சாரும்.
தமிழகத் தமிழர்களின் பல தியாகப் போராட்டங்களைப் பற்றி கவலைப்படாமல் குறிப்பாக முத்துக்குமார் மற்றும் அவரைப்போல பலர் தங்களை தீக்கு ஆகுதியாக்கி போரை நிறுத்த கோரிய போதும் இலங்கையின் இறையாண்மையில் தலையிட முடியாது என கூறி ஒதுங்கிக்கொண்டு, இலங்கை அரசை ஊக்குவித்த இந்திய காங்கிரஸ் அரசை ஈழத்தமிழர்களும் உலகத்தமிழர்களும் மறந்து விடமாட்டார்கள்.
தனது பிராந்திய நலனை கருத்தில் கொண்டு இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா விரும்புகின்றது. ஆனால் இலங்கை சீனா சார்ந்த போக்கையும் கடைப்பிடிக்கின்றது. இந்த சூழலில் தமிழ்மக்களின் விடயத்தை விடவும் தனது பிராந்திய நலன் தொடர்பான கரிசனையில், இலங்கையின் போக்கிற்குச் சார்பாகச் செயற்படுவதனூடாக இலங்கையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கின்றது. சிறை அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களை கையாள்வது தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களும் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டன. அத்துடன் பல சர்வதேச நாடுகளும் இலங்கை மீது அழுத்தத்தை பிரயோகித்துக் கொண்டிருந்தன. இந்த சமயத்தில் இந்தியா தனது காங்கிரஸ் கூட்டணித் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி சிறை அகதி முகாம்களின் பராமரிப்பு தொடர்பில் இலங்கைக்கு சார்பான அறிக்கையை வெளியிட்டது. இது போன்று தொடர்ந்து இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க, இலங்கைக்கு ஏற்படும் சர்வதேச அழுத்தங்கள், உள்ளுரில் ஏற்படும் அழுத்தங்கள் போன்றவற்றிலிருந்து இலங்கையைக் காப்பாற்றிக்கொண்டு வருகின்றது இந்தியா. எனவே இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையில் சீனா நிலைபெறுவதை தடுப்பதற்காகவும் மூதலீட்டிற்கான வாய்ப்பைப் பெறுவதற்காகவுமே தமிழர்களின் அழிவைப்பற்றிக்கூட கவலைப்படாமல் இலங்கைக்குச் சார்பாக செயற்படுகின்றது.தற்போதைய சிறிலங்கா ஜனாதிபதித் தேர்லில் போரை நடாத்திய பிரதம கர்த்தாக்கள் இருவரும் எதிரெதிரே போட்டியிடுகின்றனர். 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பதைப்போல இரு வேட்பாளர்களிற்கிடையே உள்ள போட்டியானது இந்த போர்க்குற்றங்களைச் சிறிது சிறிதாக வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றது. ஜ.நா மற்றும் சர்வதேசத்தின் தொடர்புடன் சரணடைய வந்த போராளிகளைக் கொன்ற விவகாரத்தில் ஜ.நா விளக்கம் கோரியிருப்பதும், சனல்-04 வெளியிட்ட காணொளி ஆவணத்தை அமெரிக்கா உறுதிப்படுத்தியிருப்பது போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணங்களாகும். என்றாலும் மீண்டும் இவ்விவகாரம் மனித உரிமைச்சபையில்; குற்ற விசாரணைத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் இந்தியாவின் பிராந்திய நலன் என்ற விடயம் எந்த வகையில் தாக்கத்தைச் செலுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேவேளை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது பிராந்திய நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் முரண்பாட்டு அணுகுமுறையைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில்; மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றமும் இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டையும் வைத்து அவதானிக்கும் போது பிராந்திய நலன்களுக்குள் ஈழத்தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் விடயம் அமுங்கிப்போய்விடுமா? என்ற ஐயப்பாட்டையும் தோற்றுவித்துள்ளது. என்றாலும் ஜரோப்பிய நாடுகளும் ஜ.நா மனித உரிமை செயலகமும் சர்வதேச பத்திரிக்கைகளும் மனித உரிமை மீறல் விடயம் தொடர்பில் ஒரே போக்கைக் கொண்டுள்ளது சற்று ஆறுதலைத்தருகின்ற விடயம்.
இதனால், மனித உரிமை மீறல் விடயத்தை கையில் எடுத்து நீதி கேட்பதே இலங்கையின் உண்மை முகத்ததைக் காட்டுவதற்காக ஈழத்தமிழர் முன்னால் தற்போது இருக்கும் ஒரேயொரு தலையாக கடமை. இந்த போர்க்குற்றமும், மனிதப்பேரவலமும் வெளிக்கொணரப்படுமானால் தமிழ்மக்களின் உரிமைப்போராட்டம் சர்வதேசத்தில் நியாயப்படுத்தப்படும். இந்த ஒரு வாய்ப்பிற்காக தமிழ்மக்கள் முன்னிலைப்படுத்த வேண்டிய மனித உரிமை விடயங்களை பட்டியலிட்டு ஒரு முனைப்பில் செயற்படவேண்டும். அவற்றில் முக்கியமாக
• சிறை அகதி முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களின் விடுதலையும் மீள்குடியமர்வும்
• படுகொலைகள் மீதான சர்வதேச நீதி விசாரணைகள்
• உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கும் மக்கள், போர் நிறைவடைந்ததாக இலங்கை அரசு அறிவித்துள்ளதால் அவர்களை மீளகுடியேற அனுமதித்தல் (உதாரணமாக யாழ்குடா நாட்டில் வலிகாமம் வடக்கு, திருக்கோணமலையில் சம்பூர் பிரதேசம்)
• விடுதலைப்புலிகள் என்ற போர்வையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 11,000க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்தல்
• தமிழ்மக்களின் பூர்வீக நிலப்பகுதியில் நடைபெறும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படுதல்.
• தமிழ்மக்களின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை அரச பதவிகளில் இருந்து அப்புறப்படுத்தல்
• சிறுபான்மையினங்கள் மீதான மனித உரிமை மீறலை ஊக்குவிக்கும் சட்டமூலங்களை நீக்குதல்
• மக்களின் சுதந்திர நடமாட்டம்
டென்மார்க் கோப்பன்கேகனில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் ஏற்பட்;ட மனிதப்பேரழிவும் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் பற்றிய புகைப்படக் கண்காட்சி, பிரித்தானியாவில் தமிழீழ மாணவர்களால் நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல் மீதான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், சிறையகதி முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் முகாமில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், இலங்கைத்தீவில் முப்பத்திமூன்று வருடகாலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை சம்பவங்களின் தொகுப்பு புத்தகம் இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டது போன்றன கடந்த வாரத்தில் இலங்கையின் மனித உரிமை மீறலை வெளிப்படுத்த நடாத்தப்பட்ட குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஆகும்.
இப்படிப்பட்ட புறநிலையில்; புலம்பெயர்தமிழர்களும் குறிப்பாக தமிழக உணர்வாளர்களையும் ஒன்றிணைத்து ஒழுங்கமைக்கப்பட்ட செயற்திட்டத்தினூடாக மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டங்களும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். மீண்டும் ஜ.நா மனித உரிமை சபையில் இலங்கை மனித உரிமை மீறல் விடயம் விசாரணைக்கு வரும்போது இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவளிக்க முடியாத அரசியல் சூழலை இந்தியாவில் ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது.
தமிழ்மக்கள் மீதான மனித உரிமை மீறலை வெளிக்கொண்டுவருவதுடன் மனித பேரவலத்திற்குக் காரணமானவர்கள் மீது சர்வதேச நீதி விசாரணை நடைபெற்றுக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சர்வதேச சமூகத்தின் முன் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். எமது மக்களின் மனித அழிவுகளை வெளிப்படுத்த வாய்ப்பாக உள்ள தற்போதைய சூழலில் சிறப்பாக செயற்படவேண்டியது அவசியமானதாகும். எனவே புலம்பெயர் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் எத்தனையோ கஷ்டங்களையும், சுமைகளையும தாங்கி பல தியாகங்களைச் செய்து விட்டீர்கள் அதேபோல் தமிழக மக்களும் பல போராட்டங்களையும் தியாகங்களையும் செய்து விட்டனர். மீண்டும் ஒருமுறை சகலரும் ஒன்று சேர்ந்து தொடர் விழிப்புணர்வுப் போராட்டங்களைச் செய்து, அழிந்த தமிழினத்திற்கு நீதி கிடைப்பதற்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும் வாய்ப்பாக உள்ள இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்த உறுதி எடுத்து உள்ளத்தால் இணைவோம்.
It is not only the violations of human rights but also corruption, injusdtice, discrimination and oppression that is happening within the country has to be exposed. It will do good to the entire country inclusive of the Tamils and the poor Sinhalese who are also in the same boat as the Tamils. In this way it will become a joint effort of the oppressed people who are being discriminated by the ruling clas - The Rich Sinhalese who are misguiding the poor Sinhalese.
ReplyDeleteSo let us join hands with the oppressed and discriminated Sinhalese and fight for th rights of everyone. For this purpose we will have to support Dr. Wickramabahu at the forthcoming Presidential election and cast our second vote in favour of Fonseka and thus register our protest against the two leading candidates and by favouring Fonseka we can help to remove Rajapakshe as Presdent.