ஒரு இனத்திற்கெதிரான யுத்தத்தை மேற்கொண்ட மஹிந்த அரசு, இனத்தின் அடையாளத்தை சிதைத்துக்கொண்டிருக்கும் வேளையில் திறந்த முட்கம்பிச் சிறைக்குள் சூழ்நிலையின் கைதிகளாக இருக்கும் மக்களை தமக்கு சாமரம் வீசும்படி கேட்டுக்கொள்வதில் விந்தை ஒன்றுமில்லை.
'அகத்தினழகு முகத்தில் தெரியும்' என்பதைப்போல ஜனாதிபதி மஹிந்த சகிதம் விமல் வீரவன்ச பரிவாரங்களின் முகங்களின் வழிந்து நிற்கும் வெற்றிக்களிப்பினை காட்சிப் படங்களிலிருந்து காணக்கூடியதாக இருக்கின்றது. கொன்றொழித்த தமிழ்மக்களை கொண்டே தனக்கு 'முதல் மரியாதை' பெறப்படுவதை மானமுள்ள தமிழர்களின் மனதில் மாறாத வடுவாக இருக்கும். அதேபோல் 'முதல் மரியாதை' கொடுக்கின்ற எம்மவர் மீதும் மானமுள்ள தமிழர் காறியுமிழ வேண்டும் போலும் இருக்கும்.
இவற்றையெல்லாம் மேலெழுந்த வாரியாக நோக்கும் போது 'எம்மினத்தை அழித்தவனுக்கு எம்மினமே கெளரவம் கொடுக்கின்றது' என்ற இயல்பான முடிவுக்கு நாம் வரலாம். இந்த நிகழ்வினை மூட்டை கட்டி வைத்துவிட்டு, கீழுள்ள காட்சிப்படத்தை ஒருமுறை உன்னிப்பாக பார்ப்போம். கீழே வாருங்கள்.
ஆராத்தி எடுக்கும் நிலையில் மஹிந்த பரிவாரங்களின் முகங்களில் வெற்றிக்களிப்பு தாண்டவம் ஆடுகின்றது என்பது உண்மைதான். அதே வேளை எம்மினப்பெண்கள் முகங்களில் ஆராத்தி தீயைவிட 'வேள்வித்தீ' எரிவதை எம்மால் காண முடிகிறதல்லவா?
மங்கள ஆராத்தியின் போது மலர்ந்திருக்க வேண்டிய எம்குலப்பெண்களின் வதனங்கள், மாறாக எதிர்காலத்தில் இனவாதசிங்களத்திற்கு எதிராக சுட்டெரிக்கும் தீயை மூட்டவிருப்பது எமக்கு கட்டியம் கூறி நிற்பது புலப்படுகின்றதல்லவா?
இது விருப்பின்றிய அமங்கல ஆராத்தி. பொறுத்திருப்போம் பொங்கும் நாள் கண்டு
இலங்கையிலிருந்து
மலையூர் பண்ணாகத்தான்
0 கருத்துரைகள் :
Post a Comment