ஈழத்தமிழரின் அரசியல் இருப்பை நிலைநிறுத்தும் நிகழ்ச்சி நிரல் எது?


தமிழ்மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒரேவழி எனக் கருதிய ஆயுதப்போராட்டம், நவீன சர்வதேச அரசியல் சித்தாந்தத்திற்குள் மிதிபட்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மூன்று வருடங்களை அண்மிக்கின்றது. இந்தப் பின்னடைவைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தொய்வு நிலையிலிருந்து மீண்டெழுந்து, தமது சமூக அரசியல் விடுதலைக்கான இருப்பை உலக வெளியில் நிலைநிறுத்தவும் தமிழீழத் தனியரசு என்னும் இலட்சியத்தை அடையவும் பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளின் நலன்கள் சார்ந்து பயணிப்பது என்ற பரிமாணத்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சர்வதேச அரசியல் சூழலைக் கையாளுவதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெறலாம் என்ற இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டியதொன்றே. அங்கீகாரத்தைப் பெறுவதற்கான சர்வதேசப் போக்கைப் புரிந்து கொள்ளாமைதான் ஆயுதப் போராட்டத்தின் பின்னடைவிற்கான காரணங்களில் ஒன்று என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால், தற்போதைய சூழலில் அதற்கான முயற்சிகளைச் செய்வது காலத்தின் கட்டாயம்.
மறுபுறம், தமது நலன்களிற்காக, உள்நாட்டுப் பிரச்சனை என்ற எல்லையைக் கடந்து சர்வதேசப் பிரச்சினை என்ற வரையறுக்குள் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனையை மேற்குலகம் பார்ப்பதனால், இதில் கிடைக்கும் அரசியல் செயற்பாட்டு வெளியில் ஈழத்தமிழர்கள் தமது சமூக அரசியல் இருப்பிற்கான கருத்தியல் தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். அத்துடன் இதற்கு நீண்ட காலம் எடுப்பினும், மேற்குலக சக்திகளின் அங்கீகாரத்தைப் பெறுவதனூடாக ஈழத்தமிழினம் தனித்துவமான பண்புகளைக் கொண்ட தேசிய இனம், அதனால் தம்மை தாமே ஆளும் உரிமையுள்ளது என்பதை ஜனநாயக ரீதியில், மேற்குலகத்தின் கதவுகளைத்தட்டி, எமக்கான நியாயத்தை பெறுவதற்கான ஒருவழி என்பது புரிதலுக்குரியது.
சிறிலங்காவை மையப்படுத்திய வல்லரசுகளின் முரண்பாடு, சிறிலங்கா அரசின் பேரினவாத அரசியல், போர்க்குற்றம், இனப்படுகொலை போன்ற விடயங்களை சாதகமாக நகர்த்தி, சர்வதேச நலன்களுடன் சமப்படுவதன் மூலம் தமிழீழ தனியரசுக்கான அடைவுப்பாதை சாத்தியமானது என்பதுதான் இக்கோட்பாட்டில் முன்வைக்கப்படுகின்ற எடுகோள். நியாயமான எதிர்பார்ப்புக்களுடன் முன்வைக்கப்பட்டாலும், உள்ளார்ந்த அனுமானங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, அதை ஒரு மயக்கக் கோட்பாடாகவே கருதவேண்டியுள்ளது.
ஒரு மயக்கக் கோட்பாடு என்ற சொல்லுக்குள் வைத்து வியாக்கியானப்படுத்துவதை, தற்போது மிகவும் நம்பிக்கையுடன் முன்னெடுக்கப்படும் அந்த முயற்சியை பலவீனப்படுத்துவதாக கருதக்கூடாது. மாறாக, கோட்பாட்டின் அடிப்படைக் காரணிகளின் சந்தர்ப்பவாதத் தன்மையைத் தெளிவுபடுத்துவதற்கான முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும். புவிசார் அரசியல் போட்டிகளை மையப்படுத்தி, சர்வதேச நலன்களுடனும் நிலைப்பாடுகளுடனும் ஈழத்தமிழ்மக்களின் நலன்களையும் நிலைப்பாடுகளையும் பொருந்தச் செய்யும் போது, அது தமிழ்மக்களின் அரசியல் விடுதலையைப் பெறுவதற்கான வாசலைத் திறந்துவிடும் அல்லது வழிசமைக்கும் என்ற கோட்பாட்டின் மீதான மயக்கத்தை பற்றிய கருத்துப்பகிர்வை செய்வதே கட்டுரையின் பிரதான நோக்கம்.
ஒரு நாட்டின் நலன் என்பது ஒருபோதும் நீதிக்கும் தர்மத்திற்கும் கட்டுப்பட்டது அல்ல. சுயநலம், சுயலாபத்தின் அடித்தளத்தில் உருவாகும் நாட்டின் நலனானது அதிகாரப் பலம், பொருளாதார பலம் என்பவற்றை வலுப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றது. இது காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும், தேவைக்கு ஏற்ப கொள்கைகளை உருவாக்கும். இங்கு மனிதாபிமனம், மனிதநேயம் என்ற எந்த அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் இடமில்லை. எனவே மேற்குலக நலனுடன் தமிழர் நலன்களைப் பொருத்துதல் என்பதன் உள்ளார்த்தமான அர்த்தம் பொருந்தச் செய்தல் என்பதல்ல. மாறாக மேற்குலகம் தனது தேவைகளிற்கேற்ப தமிழர் நலன்களைப் பயன்படுத்துதல் என்பதே வெளிப்படையுண்மை.
இலங்கைத்தீவில் மேற்குலக நலன்களுக்கப்பால் பிராந்திய வல்லரசுகளின் நலன்களும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. பிராந்திய வல்லாதிக்க சக்தியான இந்தியா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஆசிய வல்லாதிக்க சத்தியான சீனாவின் மேலாதிக்கத்தைத் தடுப்பதில் அதிக அக்கறையுடன் செயற்படுகின்றது. சீனாவின் அதிவிரைவான இராணுவப் பொருளாதார வளர்ச்சி இந்தியாவை அச்சம் கொள்ளச் செய்கின்றது. அதேவேளை இலங்கைத்தீவும் சீனாவின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டால் சீனாவின் முற்றுகைக்குள் இந்தியா அகப்பட்டுவிடும் அபாயம் உள்ளது என்ற காரணத்திற்காக இலங்கைத்தீவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முனைகின்றது. மறுபுறம் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக தனது சர்வதேச செயற்பாடுகளை மேற்கொள்ளும் சீனாவை கையாளவேண்டிய தேவை மேற்குலகத்திற்கு இருக்கின்றது. இவற்றின் வெளிப்பாடே இந்திய அமெரிக்கா அரசுகளின் நெருக்கமாகும்.
சிறிலங்கா அரசாங்கம் நீண்டகாலமாக மிகத் தெளிவாகவே சர்வதேச நலன்களைக் கையாண்டு வருகின்றது. இலங்கைத்தீவு சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே அரசியல் ராஜதந்திரத்தில் பல இடங்களில் நாம் தோற்றுள்ளோம் என்பது வெளிப்படையானது. எமது கைகளை வைத்தே எம்மைக் குத்தும் செயற்பாடுகளை வரலாற்று ரீதியாக சிங்களம் செய்துவந்துள்ளது.
சிங்கள அரசின் பேரினவாத அரசியல் தலைமைகள், சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவத்தை கருவியாக்கி, புவிசார் போட்டி அரசியலை உருவாக்கி, அதனூடகத் தமது அரசியல் அடைவுகளைப் பெற்றுள்ளன, பெற்று வருகின்றன என்பதுதான் யதார்த்தம். இறுதிப்போரின் போது உலக ஆதிக்கப் போட்டியாளர்களையும் மற்றும் பிராந்திய ஆதிக்கப் போட்டியாளர்களையும் தளத்திற்கு எடுத்து, அவர்களைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகளை பின்னடைவிற்குள்ளாக்கியது வரை சிங்களத்தின் அரசியல் சாணக்கியம் வலுவானது.
விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதற்காக இந்திய அரசுடன் கைகோர்த்த சிங்கள அரசு, தற்போது இந்தியாவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சியை நாசுக்காகச் செய்து கொண்டு வருகின்றது. எண்பதுகளில், சிறிலங்காவைத் தனது பிடிக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடன் ஈழத்தமிழர் விடுதலை இயக்கங்களை வளர்த்த இந்தியா, மீண்டும் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்ற அனுமானம் காரணமாகவே தனது பாதுகாப்புச் செலவீனத்தைப் பலமடங்கு அதிகரித்துள்ளது. அண்மையில் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது சிறிலங்கா ஜனாதிபதி அவர்கள் 'வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளை முறியடிக்கவே பாதுகாப்புச் செலவீனம் அதிகரிப்பட்டுள்ளது' என்ற கூற்றின் மூலம் இதனை நிரூபித்துள்ளார்.
இங்கேதான் முக்கியமான கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது. பிறநாடுகளின் நலன்களுடனான சமப்படுத்தலில்தான் ஈழத்தமிழ்மக்களின் அரசியல் விடுதலைக்கான அங்கீகாரம் அல்லது இருப்பு இருக்குமாயின், மேற்குலகின் நலன்களுடன் சிங்களத்தின் நலன் ஒத்துப்போனால், ஈழத்தமிழர்களின் நலன்கள் தொடர்பாக மேற்குலம் என்ன நிலைப்பாடு எடுக்கும்? மேற்குலகம் தமிழர்களின் நலன்களுடன் மட்டுந்தான் ஒத்திசைந்து போகும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒருவேளை மேற்குலகம் நலன்களுடன் தமிழர் நலன்களை ஒத்துப்போக வைக்க முடியாமல் போனால், தமிழர் விடுதலைக்கான எதிர்காலம் என்ன?
இத்தகைய ஒரு நிலையில், இலங்கைத்தீவு தொடர்பில் ஏற்பட்டிருக்கும் வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டி ஈழத்தமிழருக்கு சாதகமாக அமையும். அதன் மூலம் தீர்வை எட்டமுடியும். அதுவரை எமது கொள்கை உறுதிப்பாட்டைத் தக்கவைத்திருந்தால் போதும் என்பது கற்பிதங்களாகவே அமையலாம். ஏனெனில் இவைகள் எல்லாம் அனுமானங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டவை. நிச்சயமாக நடைபெறும் என்பதற்கான உத்தரவாதங்கள் எதுவும் இல்லை.
ஈழத்தமிழர் அரசியல் இருப்பை நிலைநிறுத்தும் ஒரே கோட்பாடாக இதை முன்வைப்பது ஆபத்தானது. இந்தக் கோட்பாட்டைப் பலவீனப்படுத்தும் பல புறக்காரணிகள் இருக்கின்றன. எனவே இது இப்படித்தான் நடைபெறும் என முடிவாக்கி விடவும் முடியாது. அனுமானங்களில் ஏற்படும் மாற்றங்கள் முடிவிலும் தாக்கத்தைப் பிரதிபலிக்கும்.
ரைம் சஞ்சிகையின் இணையத்தில் Jyoti Thottam எழுதியுள்ள கட்டுரையில் 'ஆசியாவின் மிகப்பெரிய நாடுகளான சீனா மற்றும் இந்தியாவுடன் நெருக்கத்தைக் கொண்டுள்ள சிறிலங்காவுடன் இராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைப் பயன்படுத்துவது பெறுமதியாக இருக்குமா? என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது. அதாவது மேற்குலக கோட்பாட்டை முற்றுமுழுதாகப் பிரயோகிக்கும் போது மனித உரிமைகள் என்ற பதம் அதன் தார்மீக சக்தியை இழந்து விடுகின்றது என்பதைத் தற்போது சிறிலங்காவில் இடம்பெற்ற சம்பவங்களிலிருந்து கற்றுக்கொள்ள முடிகின்றது' மேலும் 'மேற்குலகத்தால் தலைமை தாங்கப்படும் இராஜதந்திர அழுத்தங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் என்பன பர்மா போன்ற நாடுகளில் மட்டுமே வெற்றியளிக்க முடியும் ஆனால் இவ்வாறான உத்திகள், புதிய ஆசிய நூற்றாண்டில் நீண்டகால வெற்றியைத் தராது' என குறிப்பிட்டுள்ளார்.
உலக வெளியில் தமிழர்களின் இருப்பை நிலைநிறுத்தவும், தமிழீழ தனியரசின் அங்கீகார இலக்கை அடைவதற்கும் சர்வதேச நலன்களுடன் தமிழர் நலன்களை சமப்படுத்துவதற்கான வாசலைத்திறக்கும் செயற்பாடுகள் மிக அவசியமானவை. சர்வதேசத்தில் கிடைக்கின்ற அரசியல் வெளியை வைத்து அதற்கான செயற்பாடுகள், ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களுக்கான முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டியது எமது கடமை என்பதை மீண்டும் ஒரு முறை கட்டுரை வலியுறுத்துகின்றது.
அதேவேளை இது தமிழீழ தனியரசை நோக்கிய செயற்பாடுகளில் ஒன்றே தவிர, தனியரசை அடைவதற்கான ஒற்றைக் கோட்பாடு அல்ல. சர்வதேச நலன்களின் சமப்படுத்தலிலோ கொள்கையை மட்டும் தக்கவைத்துக் கொண்டிருப்பதிலோ எமது இருப்பு தங்கிவிடாது. அவை மட்டுந்தான் தமிழ்மக்களிற்கான ஒரே அரசியல் பாதை என வரைவிலக்கணப்படுத்தி, அதற்காக எமது விடுதலையை மேற்குலகத்திடம் கையாள விட்டுவிட்டு தீர்வு கிடைக்கும் என்ற ஒரே நம்பிக்கையில் பயணிப்பதோ நம்பிக்கையுடனிருப்பதோ பொருத்தமானதா?
இதற்கு அப்பால் பேரம்பேசும் ஆற்றலை வளர்ப்பதற்கான எமக்கான கூட்டிணைவுச் செயற்பாடுகளை பல்வேறு பாதைகளில் முன்னெடுக்க வேண்டும். அரசியல் இருப்பை தனித்துவமாக நிலைநிறுத்த புலம்பெயர்தேசம் ஒன்றிணைய வேண்டும். குறிப்பாக பல்துறை ஆற்றலுள்ள எமது இளைஞர் சமூகத்தின் தேசப்பற்று மிக்க, தியாக உணர்வுள்ள, செயற்பாட்டுத் தன்மையுள்ள, புலமைசார் கூட்டிணைவு கொண்ட பலமான 'புலம்பெயர் தமிழ்ச் சமூகம்' உருவாக்கப்பட வேண்டும்.
அவ்வாறு உருவாகும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை அரசியல், பொருளாதார, புலமைசார், கருத்தாழுகை உள்ள பல பரிணாமங்களைக் கொண்டமைந்த இனமாக கட்டியெழுப்பும் போது உருவாகும் பலம் எதிர்காலத்தில் மேற்குலகங்களின் நலத்தை தன்னுடன் சமப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் இது தலைமுறைக்கான போராட்டம், ஈழத்தமிழ்மக்களின் இருப்புத் தொடர்பான போராட்டம். நாம் தோல்வி மனப்பான்மையில் துவண்டுவிடப் போகின்றோமா? அல்லது எமது வேதனைகளையும் போராட்டத்தையும் தியாகங்களையும் இனத்தின் கௌரவத்தையும் மனதில் நிறுத்தி, அந்த உயர்ந்த இலட்சியத்தை நோக்கிச் செயற்படப் போகின்றோமா? என்ற கேள்விகளிலிருந்து தான் விடுதலைக்கான அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதற்கான விடை காணப்படவேண்டும்.
புலம்பெயர் தேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டியவை
அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டும், பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்டும், சமூக அடிப்படையில் குழப்பநிலையிலும் உள்ள தாயகத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக கடமை புலம்பெயர் மக்களிடமே பெரியளவில் தங்கி உள்ளது. யூத இனத்தின் வரலாறு எமக்கு முன் வழிகாட்டலையும் நம்பிக்கையையும் தந்திருக்கின்றது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களிற்கு மேலாக விடுதலை நோக்கிய செயற்பாடுகள் வேகம் இழந்துள்ளதுடன், சோர்வுத்தன்மை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இவற்றிலிருந்து விடுபட்டு, நாம் பலம்பொருந்திய இனமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாத்திரத்தை ஏற்று சரியாகச் செயற்பட வேண்டும். புலம்பெயர்தேசத்தில் முக்கியமாக முன்னெடுக்கப்பட வேண்டியவை.
  • அரசியல் ரீதியாகப் பலம் பெறுதல்: சர்வதேச நாடுகள் எங்கும் பரந்து வாழும் தமிழினம் அந்தந்த நாட்டு அரசியலில் பங்குபெறுவதன் மூலம் எமக்கான இடத்தையும் பங்கையும் ஓரளவிற்காவது பெற்றுக் கொள்ளலாம். கால அடிப்படையில் நிச்சயம் எமக்கான பலமாக அமையும்.
  • பொருளாதார ரீதியாகப் பலம் பெறுதல்: பல்வேறு மட்டத்திலான முதலீடுகளும் மூலதனத் திரட்டல்களும் எங்களுக்கான பலத்தை அதிகரிக்கும். தாயகத்தில் சிறிலங்கா அரசின் காணிப்பறிப்புக்கள் குடியேற்றங்களைத் தடுப்பதற்கும் எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் எமது பொருளாதார பலம்தான் அடிப்படை.
  • சிறிலங்காவைப் பலவீனப்படுத்தல்: பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சிறிலங்காவைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் புலம்பெயர்தேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் பிராந்தியப் போட்டிகளைச் சாதகமாக்கி தெளிவாக நகரும் சிங்களத்திற்கு தற்போது இருக்கும் ஒரே பிரச்சினை புலம்பெயர் தேசத்தில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளை எவ்வாறு எதிர்கொள்ளலாம் அல்லது சீர்குலைக்கலாம் என்பதுதான்.

  • தாயகத்தைப் பொருளாதார பலப்படுத்தல்: தாயகத்தில் கொடிய போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சீர்படுத்த வேண்டிய பொறுப்பு புலம்பெயர் சமூகத்திடமே உள்ளது. சிங்களத்தின் பெறிமுறைக்குள் சிக்காமல் குறிப்பாக சிங்களத்தின் நிழல்களில் உலாவும் நிறுவனங்களின் பிடிக்குள் சிக்காமல் தனிநபராகவே அன்றி சிறு அமைப்புக்களாகவோ இணைந்து செயற்பட வேண்டும். மேலாக, வாழ்வாதாரம் என்ற எல்லைக்கு அப்பால் தாயகத்தின் பொருண்மிய மேம்பாடு என்ற இலக்கில் செயற்பாடுகளை நகர்த்த வேண்டும்.

இச்செயற்பாடுகள் குறிப்பிட்டளவில் முன்னெடுக்கப்பட்டாலும் இதை மேலும் வலுவாக முன்னெடுக்க வேண்டும்.

தாயகத்தில் ஈழவிடுதலையின் கனதியையும், கொள்கை ரீதியான உறுதிப்பாட்டையும் சிங்களத்தின் செயற்பாடுகளே கொதிநிலையில் எப்போதும் வைத்துக் கொண்டிருக்கும். அதேநேரத்தில் பேரவலத்தின் பின் அந்தச் சமூகத்தை அரசியல், பொருளாதார ரீதியாக தக்கவைக்கும் செயற்பாடுகளைச் செய்யவேண்டிய பெரும் பொறுப்பு தாயகத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்போரிடம் தங்கியுள்ளது. தாயகத்துச் சமூகம் பொருளாதாரத்தில் வலுப்பெற்று நிலைபெற வேண்டும். போரின் விளைவால் அனைத்தையும் இழந்து ஏதிலிகளாக நிற்கும் மக்களின் வாழ்வை வலுப்பெற வைத்தலே இருப்பிற்கான அடிப்படை. விடுலைக்காகப் போராடிய இனம் நாளை சிங்கள முதலாளிகளிடம் சம்பள உயர்விற்காகப் போராடும் நிலையை உருவாக்காமல், சிங்களத்திடம் கையேந்தாமல் பார்க்கவேண்டிய முக்கிய பொறுப்பு தாயகத்து அரசியல் தலைமைகளிற்கு உண்டு, கைகொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு புலம்பெயர் சமூகத்திற்குண்டு.
அதேவேளை, முஸ்லிம் சமூகத்துடன் சரியான இணக்கப்பாட்டை வளர்க்க வேண்டும். சிங்களப் பெருந்தேசியவாதம் தமிழ்சமூகத்தை மட்டுமல்ல முஸ்லிம் சமூகத்தையும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளைச் செய்கின்றது. எனவே தமிழ் பேசும் மக்கள் தாயகத்தில் வலுப்பெற வேண்டும்.
'யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தாப்போர்' எனவே அரசியல் தலைமைகள் கனவான் அரசியற் போக்கை விடுத்து, தமக்கான போரை சரிவர நடாத்திச் செல்ல வேண்டும். செயற்பாட்டு இடைவெளி குறைவு என்பது புரிதலுக்குரியது. அதற்கான இடைவெளிகள் ஏற்படுத்தப்படவேண்டும். அதற்காக முயற்சிக்க வேண்டும், இது இலகுவான பணியல்ல. இந்தக் கடுமையான பணியை நிறைவேற்றும் போது தான் எமக்கான இருப்பு இலங்கைத்தீவில் தக்கவைக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ளும் போது கடினங்கள் பெரிதாக தெரியாது.
சுருக்கமாக, முள்ளிவாய்க்கால் பின்னடைவிலிருந்து புதிய பரிமாணங்களில் கட்டியெழுப்பப்பட வேண்டிய விடுதலைப் பயணத்தின் முக்கிய பணியாக, புலம்பெயர் தேசத்தில் அங்கீகாரத்திற்கும் நிலைப்படுத்தலுக்குமான நடவடிக்கைகளும் அதேவேளை தாயகத்தில் எம்மை சகலவழிகளிலும் தக்கவைக்கும் நடவடிக்கைகளும் முஸ்லிம் சமூகத்துடனான இணக்கப்பாட்டைப் பேணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும். இவற்றினூடாகவே இலங்கைத்தீவில் இருக்கும் தமிழ்பேசும்மக்களின் இருப்பு பூமிப்பந்தில் பேணப்படும்.
2006 ம் ஆண்டு, தலைவர் 300 ஸ்பாட்டன்ஸ் (300 Spartans) என்னும் ஆங்கிலப்படத்தைப் பார்க்கும்படி கூறியிருந்தார். அந்தப்படத்தின் கதைச்சுருக்கும், ஒரு சிறிய வீரம்மிக்க இனம் பேரரசுக்கு அடிமையாக இருக்க வேண்டும் அல்லது போராடி விடுதலை பெறவேண்டும். ஒப்பீட்டளவில் சிறிய இனம் பேரரசுடன் யுத்தத்தில் ஈடுபட்டால் அழிக்கப்படுவோம் என்பது நிச்சயமாக இருந்தபோதும், தமது தியாகம், அடுத்த சந்ததிக்கு விடுதலைக்காகப் போராடும் உந்துசக்தியையும் வீரத்தையும் கொடுக்கும் என்பதை கருத்திற் கொண்டு, முந்நூறு வீரர்களுடன் தமது நாட்டில் எதிரி உட்புகும் பாதையில் வீரஞ்செறிந்த போரை நடாத்தி மடிந்தார்கள். அந்த இனத்தின் சந்ததி தனது முன்னோர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் மனதிற்கொண்டு, நீண்ட காலம் சோர்வின்றி தன்னம்பிக்கையுடன் பாடுபாட்டு நாட்டை விடுதலை அடையச் செய்தார்கள். இதிலிருந்து தலைவர் சொல்ல வந்த செய்தியைப் புரிந்துகொள்வோம்.
தற்போதைய நவீன உலக ஒழுங்கில் எமக்கான அரசியல் விடுதலைக்கான உத்தியை வகுத்து, சர்வதேச ஜனநாயக மரபுகளைப் பேணி, அனைத்துலக ஆதரவைப் பெறுவதற்கான இராஜதந்திர முயற்சிகளை செய்யும் அதேவேளை ஈழத்தமிழர்களிற்கான தனித்துவமான பலத்தையும் கட்டியெழுப்பப்பட வேண்டும். எமக்காக வீரமரணமடைந்த நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களையும் கொல்லப்பட்ட பல லட்சக்கணக்கான மக்களையும் நினைவில் நிறுத்தி எமக்கான விடுதலையை வென்றெடுக்கத் தொடர்ந்து நம்பிக்கையுடன் பாடுபடுவோம்.
ஒலி வடிவம்

12/20/2011
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment