தமிழ் தேசத்திற்குள்ள இறைமையின் அடிப்படையில் தனித்தேசமாக இலங்கைத்தீவில் வாழ அனுமதிக்க வேண்டும்

இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் இடம் பெற்ற அவசர காலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் சிங்களதேசம் தமிழ் தேசத்திற்குள்ள இறைமையின் அடிப்படையில் அவர்கள் தனித்தேசமாக தங்களை தாங்களே ஆள அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதுடன் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

மேலும் யுத்தம் முடிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யுத்தம் முடிக்கப்பட்டு 6 மாதங்களின் பின்னரும் தொடரும் இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு என்பது தொடர்ந்தும் தமிழ் மக்களை பாதிப்புறச் செய்வதாகவே உள்ளது குறிப்பாக வன்னியில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட 350000 திற்கும் அதிகமான மக்கள் மீண்டும் அவர்களுடய ஊர்களிலே சென்று சுதந்திரமாக குடியமர முடியாதபடி இந்த அவசரகாலச்சட்டம் தடையாக இருக்கின்றது. இராணுவம் இல்லது அரசாங்கம் விரும்புகின்ற இடங்களுக்கு மட்டும் அந்த மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ9 வீதிக்கு கிழக்குப் பக்கமும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் பகுதிகளிலும் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் பெருமளவான பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயங்களாகவே காணப்படுகின்றது. பெருமளவான நிலங்கள் பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்காகவும் கையகப்படுத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இன்னமும் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. அந்த மக்கள் மீளக் குடியமர எந்தவித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக அனுமதிக்கப்படல் வேண்டும்.


கடந்த காலத்தில் யுத்தம் நடைபெற்றபொழுதிலும் சரி அல்லது அதற்குப் பின்னரும் சரி விடுதலைப் புலிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்

இன்னமும் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மிகுந்த மன உழைச்சலுடனும் அடிப்படை வசதிகள் இன்றியும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக சொந்த இடங்களில் சென்று குடியமர அனுமதிக்கப்படல் வேண்டும். முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வெறுமனே நடமாட்ட சுநத்திரம் மட்டும் வழங்கப்பட்டால் போதாது அவர்கள் விரும்பிய இடங்களில் சென்று தாம் விரும்புவது போன்று குடியமர அனுதிக்கப்படல் வேண்டும்

அடுத்த ஐனாதிபதி தெரிவு சம்பந்தமான போட்டியிலே நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் அழிக்கப்பட்ட அவலத்திற்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வு பற்றிய எந்தக் கரிசனையும் யாருக்கும் இல்லை.

இன்று முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தெருவிலே விடப்பட்டவர்கள் போன்றே விடப்பட்டுள்ளனர். அந்த மக்கள் தாம் முகாம்களில் இருந்து வெளியேறிச் செல்ல வேண்டும் என்பதற்காக தமது உறவினர்களின் உதவியுடன் முகாம்களில் இருந்து வெளியேறிச் சென்றிருந்தாலும் கூட அவர்கள் வெளியேறிச் சென்று தங்கியியுள்ள இடங்களில் ஒரு வேளை உணவு உண்பதற்கு கூட வசதியில்லாமல் குந்தியிருப்பதற்கு இடமில்லாமல் அவலப்படுகின்றனர்.

அழிக்ப்பட்ட மக்களுக்கு முழுமையான நஸ்ட ஈடு வழங்கப்படல் வேண்டும் வீடுகளை இழந்த மக்கள் மீண்டும் தமது வீடுகளை கட்டிக் கொள்வதற்கும் இழந்த சொத்துக்களை மீண்டும் பெற்றுக் கொள்வாற்கு ஏற்ற வகையில் முழுமையான நட்ட ஈடு வழங்கப்படல் வேண்டும் இது உடனடியான தேவையாக உள்ளது.

இன்று போர் முடிந்த பின்னர் இலங்கையில் இருந்த எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது போலவும் கடந்த 33 வருடங்களாக மட்டுமே இலங்கையில் பிரச்சினை இருந்து வந்தது என்பது போலவும் 33 வருடங்களாக இருந்து வந்த பிரச்சினையை தீர்த்துள்ளதன் மூலம் இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டது போலவும் கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஐனநாயகத்தினை ஏற்படுத்தப் போவதாகவம் சிவில் நிருவாகத்தினை ஏற்படுத்தப் போவதாகவும் கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழ் மக்களுடய இனப்பிரச்சினை என்பது வெறும் 33 வருடப் பிரச்சினை அல்ல அது புலிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினையும் அல்ல அது 48 ம் ஆண்டில் இருந்து எழுந்த பிரச்சினை அதற்கு முன்னிருந்து 1833ல் ஆங்கிலேயர்களால் தமிழ் இராச்சியம் சிங்கள இராச்சியத்துடன் இணைக்கப்ட்டதன் மூலம் எழுந்த பிரச்சினை. 1948 ம் ஆண்டில் இருந்து 75 ம் ஆண்டுவரை தந்தை செல்வா அவர்கள் ஸ்ரீலங்கா என்ற நாட்டிற்குள்ளே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அரசியல் உரிமைகளை பெற்று வாழ்வதற்கான முழு முயற்சிகளையம் மேற்கொண்டார். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் 1975ம் ஆண்டிலே ஓர் தெளிவான உரையை ஆற்றிவிட்டுச் சென்றார்.

இந்நிலையில் நாங்களும் கூறுகின்றோம் நீங்கள் யுத்தத்தினை முடித்திருந்தாலும் கூட தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை. எங்களுடய அரசியல் பிரச்சினைக்கான தீர்வு என்பது எங்களது தனித் தேசம் என்பது அங்கீகரிக்கப்படுவதன் ஊடாகவே மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அதாவது தமிழர்கள் ஓர் தனித்துவமான ஒரு தேசம் எங்களுக்கு இறைமை உள்ளது எங்களுக்குள்ள இறைமையின் அடிப்படையில் எங்களை நாங்களே ஆளுவதற்கான முழு உரிமையும் எங்களுக்கு உண்டு. எங்களது இறைமை பறிக்கப்பட்டு எங்கள் மீது உங்களது இறைமை திணிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தமிழ் மக்களின் பூரணமான சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பதன் மூலம் எங்களது அரசியல் உரிமைகளை நீங்கள் அங்கீகரிக்க முயல்வது தான் எதிர்காலத்தில் இலங்கைத்தீவில் அமைதி நிலவுவதற்கான ஒரே வழியாக இருக்கும்

மாறாக சீனாவினுடய இராணுவ உதவிகளுடன் வடகிழக்கில் இராணுவ முகாம்களை அமைத்து தமிழ் தேசத்தினை ஓர் சிங்கள பிரதேசமாக மாற்ற முயல்வதன் மூலம் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை நசுக்கி விடுவதற்கோ அல்லது சிங்கள தீவாக மாற்றி விடுவதற்கோ நீங்கள் முயற்சி செய்தால் அது ஒரு பொழுதும் வெற்றியளிக்காது.

ஏனெனில் இன்று நீங்கள் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்றால் அது கொடுரமான முறையில் முடிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்திலே கிட்டத்தட்ட 60000 திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் உள்ளது இது நடைபெற்றமைக்கு காரணம் இந்தப் பிராந்தியத்திலே தமது ஆதிக்கத்தினை நிலை நிறுத்துவதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் உதவிதான் இவ்வாறன கொடூரமான முடிவுக்கு வாய்ப்பாக அமைந்தது.

ஆனால் தொடர்ந்தும் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைகளை கொடுக்க மறுத்து சீனாவின் உதவிகளோடு தமிழர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை நீங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்தால் அதே பிராந்திய சக்திகள் மீண்டும் இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி இலங்கைத்தீவில் மீண்டும் ஓர் பிரச்சினையை உண்டு பண்ண முயல்வார்கள் இந்த யதார்த்தத்தினை புரிந்து கொண்டு தமிழ் மக்களாகிய எங்களுக்கு தரவேண்டி உரிமைகளை எங்களுடய தேசம் என்ற அடிப்படையில் எங்களுக்கு தந்து இந்த தீவிலே தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சந்தோசமாக வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்கு நீங்கள் முன்வரவேண்டும்.

நீண்டகால இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக எங்களது தமிழ் தேசம் தனித் தேசமாக அங்கீகரிக்ப்பட்டு எங்களது இறையாண்மையின் அடிப்படையில் நாங்கள் எங்களை ஆட்சி செய்வதற்கான உரிமை எங்களுக்கு வழங்கப்படல் வேண்டும் என்று அவரது உரையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் கஜேந்திரன் எம்.பி
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment