இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?

கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன.
இதேவேளை, மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தும், ஏறக்குறைய ஐந்து இலட்சம் பேர் வெளிநாடுகளிலும் தஞ்சம் கோரியுள்ளனர்.
இவ்வேளையில், பல நாடுகளின் உதவியுடன் நடந்து முடிந்தது இலங்கையின் ஈவிரக்கமற்ற முள்ளிவாய்க்கால் நடவடிக்கை. இதனால் ஏற்பட்ட தாக்கங்கள், மாற்றங்கள், ஏமாற்றங்களை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லையென நம்புகின்றேன்.

இம் முள்ளிவாய்க்கால் நடவடிக்கை, இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்கள் முன்கூட்டி நடத்தவதற்கு வழிவகுத்தது மட்டுமல்லாது, இவ் நடவடிக்கைக்கு ஆணை பிறப்பித்தவரும், அதை நிறைவேற்றியவரும், தேர்தலில் போட்டியிட்டு, இறுதியில் ஆணை பிறப்பித்தவரான இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றி கொண்டுள்ளார்.

வெற்றி தோல்விக்கான ஆய்வுகள் ஒருபுறமிருக்க, ஏற்கனவே கடந்த நான்கு ஆண்டுகளாக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் மேலும் ஏழு ஆண்டுகள் பதவியில் இருக்க சட்டபூர்வமாக தகுதியுடையவராகியுள்ளார்.

சர்வதேச முள்ளிவாய்க்கால்

இந்த வகையில் சர்வதேச ரீதியாக ஜனநாயக நாடுகளில் வாழும் தமிழீழ மக்கள் மீது இலங்கை அரசினால் மேற்கொள்ளவிருக்கும் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை பற்றி ஆராய்வது மிக அவசியம்.

இதுவொரு இரகசியமான விடயமோ, திட்டமோ அல்ல! வன்னி மக்கள் மீதான முள்ளிவாய்க்கால் நடவடிக்கைகள் என்று முடிவடைந்ததோ, அன்றிலிருந்து இலங்கையின் ஜனாதிபதி முதல் பிரதமர், அமைச்சர்கள், அரசின் முக்கிய பேச்சாளர்கள் வரை, எதிர்காலத்தில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமென கங்கணம் கட்டியுள்ளனர்.

இலங்கை அரசு வெளிப்படையாகக் கூறிவரும் இவ் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கையில் இவர்கள் வெற்றி கொள்வார்களா? அல்லது தோல்வியை தழுவிக்கொள்வார்களா? என்பது, சர்வதேச ரீதியான ஜனநாயக அரசாங்கங்களில் மட்டுமல்ல, புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் நடவடிக்கைகளிலும் தங்கியுள்ளது. இதற்கு இராஜதந்திர ரீதியான அணுகுமுறை மிகவும் அவசியம்.

இராஜதந்திரம்

முதலில் இராஜதந்திம் என்றால் என்ன? மதிநுட்பத்துடன் கூடிய விட்டுக்கொடுப்பு, பரிமாற்றம் ஆகியவற்றுடன் உணர்ச்சி வசமற்ற அணுகுமுறை. இராஜதந்திர அணுகுமுறையை மேற்கொள்ளும் போது, மிக நீண்ட எதிர்காலத்தை மனதில் கொள்வார்கள்.

இவ் இராஜதந்திர அணுகுமுறையினால் இலங்கை அரசு சர்வதேச ரீதியாக ஏற்கனவே பல அரசாங்கங்களை அணுகி, நல்ல பயனை அடைந்து வருகின்றது. ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எந்த அரசின் தயவுமின்றி, எமக்குள்ளேயே தொடர்ந்து வீராப்பு பேசுவது எதிர்காலத்தில் எந்த வகையிலும் ஆக்க பூர்வமாகாது.

முதலில், புலம்பெயர் வாழ் மக்கள் இலங்கை அரசின் சர்வதேச ரீதியான சூழ்ச்சி வலைகளை, சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்து அவற்றுக்கு பரிகாரம் காண்பதற்கு யாரை அணுக வேண்டும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

இலங்கையின் திட்டம்

இலங்கை அரசு நடாத்தவிருக்கும் சர்வதேச ரீதியான கபடத்தனமான திட்டங்களை கொண்ட சர்வதேச முள்ளிவாய்கால் நடவடிக்கையை நாம் மிகச் சுலபமாக கணிப்பிடலாம்.

முதலாவதாக - இலங்கையில் தாம் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள், மனிதபிமான குறைபாடுகள், அரசியல் செயல் திட்டங்களுக்கு எதிராக புலம்பெயர் நாடுகளில் குரல் கொடுப்போரை ஒரு சட்ட வலையினுள் அகப்பட்ட வைக்கும் திட்டத்தை கொண்டுள்ளனர்.

அதாவது மேற்குறிப்பிட்ட வேலைத் திட்டங்களில் ஈடுபடுவோர், சட்டங்களில் தவறி நடப்பதாக கூறி, உண்மைக்கு புறம்பான தகவல்களை, இலங்கை அரசே உற்பத்தி செய்து, குறிப்பிட்ட நாடுகளின் அரசாங்கங்களிடம் சமர்பித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தூண்டுவது.

இரண்டவதாக - சர்வதேச ரீதியாக மனித உரிமை, மனிதபிமான, அரசியல் செயற்பாடுளை மேற்கொள்ளும் புலம்பெயர்வாழ் தமிழர் மீது, இலங்கை அரசுடன் இணைந்து இயங்கும் தமிழ் கூலிப்படைகளினால் வன்முறைகளை மேற்கொள்ளுமாறு தூண்டுவது.

இத்திட்டத்திற்கு உடந்தையாக செயற்படுவதற்கென, ஏற்கனவே பல நாடுகளுக்கு சிறீலங்காவின் இராணுவ உயர் அதிகாரிகள், தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மூன்றவதாக - ஏற்கனவே இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் அமைச்சர்கள், உயர் பாதுகாப்பு அதிகாரிகள், அரசியல் புள்ளிகள் போன்றோரை - தற்போதைய இலங்கை அரசுடன் அதிருப்தியடைந்தவர்கள் போல் பாசாங்கு செய்து, இயலுமானால் இந் நபர்கள் தமது பதவிகளை போலியாக ராஜினாமா செய்வதன் மூலம், புலம் பெயர்ந்தோரின் செயற்பாடுகளுக்குள் இலகுவாக நுளைந்து, அவற்றை அழிப்பது போன்ற பல திட்டங்களை கொண்டுள்ளார்கள்;.

மனித உரிமை, மனிதாபிமான, அரசியல் செயற்பாட்டாளர்கள்

இவ்விதமான பல சூழ்ச்சி வலைகளை இலங்கை அரசு கொண்டிருக்கும் வேளையில், புலம் பெயர் வாழ் மனித உரிமை, மனிதாபிமான, அரசியல் செயற்பாடுகளின் நடவடிக்கை எப்படியாக இருக்க முடியும்?

முதலாவதாக - புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தாம் வாழும் நடுகளின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். விசேடமாக ஊடாகத்துறையில் சம்பந்தப்பட்டோர், ஜனநாயக நாடுகளில் உள்ள எழுத்துச் சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தால, பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம்.

இராண்டவதாக - மேல் குறிப்பிட்ட வேலை திட்டங்களில் ஈடுபடுவோர், தாம் வாழும் நாடுகளில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடன் (மனித உரிமை, மனிதாபிமானம், சமய அமைப்புக்கள்) நெருங்கிய நட்பை ஏற்படுத்தி கொள்வதுடன், அந் நாடுகளில் உள்ள கல்விமான்கள, அரசியல் கட்சிகளுடன் நெருங்கி வேலை செய்யலாம்.

அத்துடன் தாம் வாழும் நாடுகளின் வெளிநாட்டு பணிப்பாளர், அதிகாரிகளுடன் நட்பை வளர்த்து கொள்ள வேண்டும். முடியுமானால் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரச தலைவர்களுடனும் நட்பை தேடிக் கொள்ளாலாம்.

இதேவேளை, திடீரென ஏற்படும் சந்தேகத்துக்குரிய நபர்களின் தொடர்பில், நடவடிக்கையில் மிக அவதானமாக இருக்கவேண்டும்!

காரணம் தற்போதைய காலகட்டத்தில், 'எந்தப் புற்றில் எந்த பாம்பு உள்ளது" என்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாதுள்ளது. ஆகையால் மேற் கூறப்பட்ட விடயங்கள் போன்ற வேறு பல எதிர்பாராத விடயங்களில், புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் அவதனமாக இருக்க தவறும் பட்சத்தில், இலங்கை திட்டமிடும் சர்வதேச முள்ளிவாய்க்கால் நடவடிக்கை மிக இலகுவாக நிறைவேறும்.

கை கட்டி வேடிக்கை பார்க்க முடியுமா?

இன்றைய காலகட்டத்தில் இலங்கை தீவின் வடக்கு கிழக்கில் வாழ்பவர்களாக இருந்தாலென்னா, புலம்பெயர் வாழ் தமிழர்களாக இருந்தாலென்ன, சகலரும் கடந்த முன்று தசாப்த யுத்தத்தினால் ஏதோ ஒரு விதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உடன்பிறப்புக்களை இழந்துள்ளனர், சிலர் உறவினர்களை இழந்துள்ளனர், யாவரும் சொத்துக்களை இழந்து சிலர் மன நோயாளிகளாகவும் உள்ளனர்.

இவ் இன அழிப்பை கைகட்டி வேடிக்கை பார்க்க விரும்பாத புலம்பெயர் மக்கள், சர்வதேச ரீதியாக நியாயம் கேட்கும் ஓவ்வொரு தடவையும், இலங்கை அரசு மிக இலகுவாக இவர்கள் செயற்பாடுகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி தமிழ் மக்களை தனிமை கொள்ளச் செய்கிறார்கள்.

உலகின் முக்கிய புள்ளிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், ஐ.நா மனித உரிமையாளர் ஆகியோர், இலங்கை நாடத்தி முடித்துள்ள போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டுமென கூறும் இவ்வேளையில், இலங்கை இவ் வேண்டுகோளை மறுத்து வருகிறது. இவற்றிற்கு இலங்கை அரசினுடைய பொருளதார அரசியல் கொள்கை மட்டும் காரணியாக இல்லாது, சில நாடுகளின் முக்கிய புள்ளிகளுடனான இவர்களது தனிப்பட்ட நட்பும் காரணியாக அமைகிறது.

அப்படியானல் தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியாக அழிந்து போக வேண்டியது தானா?

இவ்வேளையில் சர்வதேச ரீதியாக இலங்கை அரசு ஏற்றுக் கொண்ட சர்வதேச சட்டங்களை மீறுகிறார்களென்று சுட்டி காட்டுவது, குரல் கொடுப்பது ஒவ்வொரு மனித உரிமைச் செயற்பட்டாளர், மனித நேய பணிப்பாளரின் முக்கிய கடமையாகும். இச் செயற்பாடுகளை யாரும், சட்ட ஒழுங்கை மீறுவதாக குற்றம் சுமத்த முடியாது!

ச. வி. கிருபாகரன்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment