'தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேசவேண்டும்' இந்த கூற்றின் மூலம் சித்தார்த்தன் என்ன சொல்ல வருகிறார்? இலங்கையின் சரித்திரம் அவருக்கு மறந்துபோய்விட்டது என்று சொல்லுகிறாரா? அல்லது இதற்கு முதல் தமிழர் தலைமைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தவில்லை என்று சொல்கிறாரா? சித்தார்த்தனின் தந்தையாரும் ஒரு அரசியல்வாதி. அவர் சித்தார்த்தனுக்கு, நடந்து முடிந்த யுத்தத்திற்கு முன்னர் தமிழர் தரப்பு எப்படியெல்லாம் சிங்களத் தலைமைகளோடு சிறுபான்மை இனத்தினுடைய பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடாத்தினார்கள், சிங்களத் தலைமைகள் எப்படியான தீர்வுகளை சிறுபான்மை மக்களுக்கு வழங்கினார்கள் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பார் என்று நிச்சயமாக நம்புகின்றோம்.
தமிழர்களும், தமிழர் தலைமைகளும் காலம் காலமாக சிங்களத் தலைமைகளோடு பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டுதான் வந்திருக்கிறது. தற்போதைய இளைய தலைமுறையினருக்கு இந்த விடயங்கள் தெரிந்திருக்குமோ என்னவோ இது சித்தார்த்தனுக்கு நிட்சயமாக தெரிந்திருக்கும். தெரிந்திருந்தாலும் சிங்களத்தின் ஏமாற்று வித்தையை
இன்னுமொருமுறை அவருக்கு ஞாபகப் படுத்தும் முகமாக கீழே தருகிறோம்.
*1957 இல் பண்டா - செல்வா ஒப்பந்தம் பிரதேச சபை.
*1965 இல் டட்லி - செல்வா ஒப்பந்தம் மாவட்ட சபை.
*1970 இல் தமிழ் கட்சிகள் கூட்டுச் சேர்ந்து ஒரு தன்னாட்சி அதிகாரம்கொண்ட தமிழ்-முஸ்லீம் மாநிலமும் மூன்று தன்னாட்சி அதிகாரம் கொண்ட சிங்கள மாநிலங்களும் இந்த பிரச்சினைக்கு தீர்வாக முன்மொழியப்பட்டது.
*1979 இல் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு மாவட்ட அபிவிருத்திச் சபை உருவாக்கத்திற்கு மேற்பார்வைக்கு நியமிக்கப்பட்டது (இது தமிழர்களின் அபிலாசைகளை முற்று முழுதாக தீர்ப்பதாக அமையவில்லை)
*1983 இல் அனைத்துக் கட்சி தீர்மானம்.
*1985 இல் திம்பு பேச்சுவார்த்தை.
*1986 இல் இந்திய அரசால் தீர்வு யோசனையாக முன்மொழியப்பட்ட 'வடகிழக்கு மாகாணசபை'.
*1987 இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் வடகிழக்கு மாகாணசபையுடன் கூடியது.
*1989 -1990 இல் பிரேமதாசா-விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை.
*1992 -1993 இல் பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு தீர்வுக்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
*1995 இல் திருத்தச் சட்டமூல பிரேரணை முன்மொழிவு (இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டு பின் புத்தபிக்குகளாலும் சிங்கள அடிப்படை வாதக்கட்சிகளாலும் நிராகரிக்கப்பட்டது)
*2003 இல் உள்ளக தன்னாட்சி அதிகாரம் முன்மொழிவு (விடுதலைப்புலிகளால் முன்மொழியப்பட்டு பின் இலங்கை அரசாலும் கடும்போக்கு சிங்கள கட்சிகளாலும் நிராகரிக்கப்பட்டது)
*2005 இல் சுனாமிக் கட்டமைப்பை ஏற்படுத்தி வடகிழக்கு மக்களுக்கு உதவி வழங்க முயற்சி. (சர்வதேசத்தால் முன்மொழியப்பட்டு பின் இலங்கை உயர்நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டது)
*2000 த்திலிருந்து 2006 வரை விடுதலைப்புலிகளும் சிங்கள அரசாங்கங்களும் பல தடவைகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ரணில் - புலிகள், சந்திரிகா - புலிகள், மகிந்தா - புலிகள் என்று உலகின் பல இடங்களிலும்(தாய்லாந்து, ஜப்பான், நோர்வே, சுவிட்சர்லாந்து) பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன.
*2007 இல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மாநாடு கூடி தீர்வுத் திட்டத்தை முன்வைத்தல்.(இதற்கு JVP, JHU, UNP போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுமென்றே அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைக்கப்படாது புறம்தள்ளி வைக்கப்பட்டது)
*2010௦ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தமிழர் விவகாரம் சம்பந்தமாக கோரிக்கைகளை முன்வைத்து பேசியபோது அவை முற்றாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நிராகரிக்கப்பட்டது.
அரசுடன் இணைந்திருக்கும் இந்த தமிழ் குழுக்கள் ஒரேமாதிரியான சிந்தனையுடன் தமது பிற்பாட்டைப் பாடுகிறார்கள் என்பதை இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழருக்கான இறைமையையும் சுதந்திரத்தையும் சிங்களம் காலம் காலமாக வழங்க மறுப்பதை நன்றாகவே தெரிந்திருந்தும் ஏன் இப்படியான ஒரு அர்த்தமற்ற வேண்டுகோள்களை தமிழர்களுக்கும், தமிழர் தலைமைகளுக்கும் முன்வைக்கிறார்களோ தெரியவில்லை? எப்பொழுது இவர்கள் தமிழ்மக்களை மையப்படுத்தி சிந்தித்து தாம் இணைந்திருக்கும் அரசுகளுக்கு பாடம் புகட்டி தமிழர்களுக்கான ஒரு தீர்வைப் பெற்றுத் தரப்போகிறார்களோ???
உடுவில் மென்டிஸ்
0 கருத்துரைகள் :
Post a Comment