போரின் பேரழிவுகளாலும் தொடர்ந்து முகம் கொடுத்த அடக்குமுறைகளாலும் துவண்டு போய்க் கிடக்கின்றது தமிழினம்.நொந்து, நொடித்துப் போய் சருகாகிக் கிடக்கும் தமிழினத்தை நோண்டிப் பார்க்கும் சுரண்டிப் பார்க்கும் கைங்கரியத்தில் தங்களைத் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பெருமிதத் தோடு கூறிக் கொள்பவர்களும் கூட ஈடுபடுகின்றமை மிகுந்த வேதனைக்குரியதாகும்.
இனி என்ன என்பது தெரியாமல் எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கையில் தமிழினம் இன்று துவண்டு கிடக்கின்றது.தமது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டாதா? அதற்கான மார்க்கம் என்ன? என்பவை தெரியாமல் தமிழ்மக்கள் மட்டுமல்லாமல், அவர்களின் தலைமைகளே தடுமாறி நிற்கின்றன.
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி நிற்கும் ஒற்றையாட்சி என்ற அரசியல் கட்டமைப்புக்குள் தமக்கு நியாயமான தீர்வு தங்களது நீதியான அபிலாஷைகளை நிறைவு செய்யும் அதிகாரப் பகிர்வு சாத்தியமானதல்ல என்பதே தமிழர்களின் ஒரே நிலைப்பாடாகும்.
தமிழர் தரப்பின் பங்குபற்றுதலின்றி, முற்று முழுதாகத் தென்னிலங்கை அரசியல் தலைமையின் மேலாதிக்கச் சிந்தனையின் வடிவமாகக் கொண்டு வரப்பட்டு 1972இல் தமிழர்களின் தலைமீதும் சேர்த்து வல்வந்தமாகத் திணிக்கப்பட்டதே தற்போதைய இந்த ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பாகும். அது இத்தேசத்தில் கடந்த 37 ஆண்டுகளாகத் தொடர்கின்றது.
தென்னிலங்கைப் பெரும்பான்மை இனத்தவரின் மேலாண்மை அதிகாரத்தை வலுப்படுத்தி, சிறுபான்மையினர் மீது அந்தச் செல்வாக்கை அழுத்தமாக உறுதிப்படுத்தி நிற்கும் இந்த ஒற்றையாட்சி என்ற கட்டில் இருந்து தளையில் இருந்து வெளிப்படாமல் தமக்கு நீதி கிடைக்காது என்பதே பெரும்பாலான தமிழர் தலைவர்களின் தெளிவான கருத்தாகவும், உறுதியான நிலைப்பாடாகவும் இருக்கின்றது.
ஆனால் தமது அடுத்த ஏழாண்டுகளுக்கான ஆட்சியைத் தேர்தல் பெருவெற்றி மூலம் உறுதிப்படுத்தியிருக்கும் நாட்டின் அரச தலைவரோ, அதற்கு இம்மியளவு இடங்கொடுத்து இணங்குபவராக இல்லை; ஒற்றையாட்சி என்ற மேலாதிக்கக் சிந்தனையை விட்டுக்கொடுப்பவராக இல்லை.
அவருக்குத் தென்னிலங்கையில் உள்ள அரசியல் நெருக்கடிகள் அதற்குக் காரணமாக இருக்கலாம். அதற்கு இப்போது இணங்குவது இன்றைய நிலையில் அவருக்குத் தேர்தல் பாதிப்புகளைத் தருவதாகவும் இருக்கக்கூடும்.
எனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தமிழர்களின் பிரதிநிதிகளாக வரக்கூடிய தரப்புகளுடன் இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய தமது கலந்துரையாடல்களை அவர் ஆரம்பிக்கும்போது அந்தப் பேச்சு மேசையில் பிரதான விடயமாக ஆராயப்படப் போகின்ற அம்சம் இந்த ஒற்றையாட்சி என்ற தளையில் இருந்து விடுபட்டு எவ்வாறு முன் நகர்வது என்பதாகத்தான் இருக்கும் என்பதை இப்போதே இலகுவாக ஊகித்து விட முடியும்.
தமிழர்களின் முக்கிய கருத்தாக இருக்கும் இத்தகைய ஒற்றையாட்சி முறைமை என்ற பிரச்சினையை சில தமிழ்ப் பிரமுகர்கள் கொழும்பைத் தளமாகக் கொண்ட வசதியான பிரமுகர்கள் தமது நோண்டல்களுக்கு வளமாகப் பயன் படுத்தியிருக்கின்றமைதான் வேதனைக்குரியது.
தமிழ்ப் பிரமுகர் தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரனைத் தலைவராகக் கொண்டு கொழும்பில் தேசிய ஒற்றுமைப் பாட்டுச் சம்மேளனம் என்ற அமைப்பு இயங்குவதாகக் கூறப்படுகின்றது. கடந்த மே மாதம் புலிகள் மீதான இலங்கை அரசின் இராணுவ வெற்றியை அடுத்தே இந்த அமைப்பின் செயற்பாடு சூடு பிடித்ததாக வும் தெரிவிக்கப்படுகின்றது. முற்றிலும் தமிழ்ப் பிரமுகர்களைக் கொண்ட இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் தாங்கள் ஐக்கிய இலங்கையை வலுவாக ஆதரித்து நிற்பவர்கள் என்பதைக் காட்டவோ என்னவோ தமது அமைப்புக்கு தேசிய ஒருமைப்பாட்டைப் பெயராக வைத்துக் கொண்டனர். அது இங்கு பிரச்சினையல்ல. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெருவெற்றியீட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷவை பல்லாண்டு, பல்லாண்டு நோயற்ற வாழ்வு வாழ வாழ்த்தி அவர்கள் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் பெரிய விளம்பரங்களைக் கொடுத் திருக்கின்றார்கள். அதுவும் கூட பிரச்சினையல்ல. ஜனாதிபதியை வாழ்த்துபவர்களாக அந்த விளம்பரம் மூலம் தங்களைத் தங்களது அமைப்பின் பெயருக்கு அப்பால் தலைவர், செயலாளர், உபதலைவர், காப்பாளர், பொருளாளர், உறுப்பினர்கள் என்ற பதவி நிலை களோடு பெயர் குறிப்பிடுவதன் மூலம் அந்த இருப்பத்தியேழு பிரமுகர்களும் ஏதோ ஒரு கருத்து நிலைப்பாட்டை வெளிப்படுத்த பகிரங்கப்படுத்த முன்வந்தமையிலும் நாம் குற்றம் காண விழைவில்லை. அப்படித் தங்களை அடையாளப்படுத்தி மகிழ்வதன் மூலம் கிட்டக்கூடிய பெறுபேறு பலன் விளைவு அவர்களுக்குரியதாகவே இருந்து விட்டுப் போகட்டும்.
ஆனால் அந்த விளம்பரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூற்றாக அவர்கள் மெச்சி வெளிப்படுத்திய வாசகம்தான் பொதுவாகத் தமிழர்களின் மனதை நோகடிக்க வைப்பதாகும்."தனித்து ஒற்றையாட்சி கொண்ட இலங்கைக்குள் சகல மக்களுக்கும் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலைமையை ஏற்படுத்தும்' ஜனாதிபதியின் கூற்றை அவர்கள் மெச்சி, மேற்கோள்காட்டி, போற்றியிருக்கின்றார்கள்.
வெற்றி பெற்ற ஜனாதிபதியைப் பாராட்டுங்கள். வாழ்த்துங்கள். உங்கள் பெயரைப் போட்டு வாழ்த்திப் புளகாங்கிதம் அடையுங்கள். அதன் பயனையும் சம்பாதியுங்கள். அது உங்கள் விருப்பம். நாம் அதைத் தவறு என்று கூறவோ விமர்சிக்கவோ முன்வரவில்லை. அது உங்கள் சுதந்திரம்.
ஆனால், அதற்காக "ஒற்றையாட்சிக்குள்தான் எதுவும்' என்ற கொழும்பு ஆட்சிப் பீடத்தின் மேலாதிக்கப் பிடிக்கு சாமரம் வீசி, சேவகம் பண்ணி, சாதகம் பெற முயலாதீர்கள். "ஒற்றையாட்சி' என்ற மேலாதிக்கப் பிடிக்கு, அரசியல் சாராத தமிழ்ப் பிரமுகர்களாக உங்களைக் காட்டிக் கொண்டு காரியம் பண்ணும் நீங்களே அங்கீகாரம் வழங்க எத்தனிப்பது தமிழரைப் பொறுத்தவரை, தம் கண்ணைத் தாமே குத்திக் கொள்வது போன்றதாகும். சம்பந்தப்பட்டோருக்குப் புரிந்தால் சரி!
0 கருத்துரைகள் :
Post a Comment