அரசும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்

இலங்கை மக்களின் நினைவாற்றலைப் படுமோசமாகக் குறைத்து மதிப்பிடுபவர்கள் என்றால் அது எமது அரசியல்வாதிகளைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது. மக்களுக்கு இருக்கக்கூடிய விவேகத்தை நிந்தனை செய்வதிலும் அவர்கள் ஒருவித வக்கிரமான திருப்தியை அடைகிறார்கள் போலத் தோன்றுகிறது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று நாளைய தினத்துடன் சரியாக இருவாரங்கள் பூர்த்தியாகப் போகின்றன. இருவாரங்களுக்கு முன்னர் மக்கள் மத்தியில் தாங்கள் பேசிய விடயங்களுக்கு முற்றிலும் முரணாகத் தற்போது பேசுவதில் அரசியல்வாதிகள் வெட்கப்படுவதாகவும் இல்லை. மக்களை மந்தைகள் போன்று நினைத்து திமிர்த்தனமான அவமதிப்புடன் அவர்கள் பேச ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிக் கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்த ஆதரவை அரசாங்கத்தரப்பினர் சிங்கள மக்களுக்கு எவ்வாறு திரித்துக்கூறி பிரசாரங்களை மேற்கொண்டார்கள் என்பதை முழு உலகமும் அறியும். ஜெனரல் பொன்சேகா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுடன் இரகசிய உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டிருந்ததாகவும் ஜெனரல் தேர்தலில் வெற்றி பெற்று, அந்த உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலையெடுக்கக்கூடிய சூழ்நிலை தோன்றும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட அரசாங்கத்தரப்பினர் கூறினர். இனக்குரோதத்தை மேலும் தூண்டுபவையாக அந்தப் பிரசாரங்கள் அமைந்திருந்தன. விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து தென்னிலங்கையின் எந்தவொரு அரசியல் கட்சியுமே முன்னெடுக்கக்கூடிய செயற்பாடுகள் நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தைத் தோற்றுவிக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன என்ற செய்தியே அரசாங்கத்தரப்பினரால் சிங்கள மக்களுக்கு விடுக்கப்பட்டது. இறுதிக் கட்டப் பிரசாரத்தில் "இல்லாத உடன் படிக்கையொன்றையே%27 அரசாங்கத் தரப்பினர் பிரதான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

ஆனால், இப்போது அரசாங்கம் அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நேசக்கரம் நீட்டும் விசித்திரத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்துக்கு அரசாங்கத்தின் சார்பில் பதிலளித்து கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்ததன் மூலமாக இழைத்த தவறைப் பொதுத் தேர்தலில் திருத்திக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கேட்டுக்கொண்ட அவர் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க விரும்பினால் அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என்றும் கூறினார். அதேவேளை, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன, வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து பணியாற்றக்காத்திருப்பதாகவும் ஆனால், அவர்களின் எந்தவொரு நிபந்தனைக்கும் அரசாங்கம் அடிபணியமாட்டாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

போரின் முடிவுக்குப் பின்னரான கால கட்டத்தில் தேசிய நல்லிணக்கத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கிலான உருப்படியான அரசியல் செயன்முறைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் காட்டாமல் இருந்துவரும் அக்கறை தொடர்பில் தங்களுக்கு இருக்கின்ற விரக்தியையும் வேதனையையும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் தெளிவாக வெளிக்காட்டியிருந்தார்கள், ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைச் சமூகங்கள் வாக்களித்தமுறை நாடு இனரீதியாக துருவமயப்பட்டிருக்கிறது என்பதை பிரகாசமாக உணர்த்திநிற்கிறது. தேர்தலில்சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்கள் பொதுவில் வெளிக்காட்டியிருக்கும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் அரசியல் அபிலாசைகளை மதிக்கும் வகையில் நல்லிணக்கப்போக்கை ஜனாதிபதி ராஜபக்ஷவும் அரசாங்கமும் கடைப்பிடிக்கத் தயாராக வேண்டும் என்பதே நியாயபூர்வமாகச் சிந்திப்பவர்களின் எதிர்பார்ப்பாகும்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசாங்கம் தற்போது நீட்ட ஆரம்பித்திருக்கும் நேசக்கரம் அத்தகைய நல்லிணக்க உணர்வின் அடிப்படையிலானதா என்ற கேள்வி தவிர்க்க இயலாமல் எழுகிறது. இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை சிறுபான்மை இன மக்கள் அங்கீகரிக்கவில்லை. அத்துடன் அரசாங்கம் சிறுபான்மை இனங்களின் நலன்களில் அக்கறை இல்லாதது என்ற தோற்றப்பாட்டையே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியுலகிற்குக் கொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய தோற்றப் பாட்டை அகற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தின் விளைவாகத்தான் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நேசக்கரம் நீட்டுகிறதா? அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின்போது தங்களால் சிங்கள மக்களுக்குக் கூறப்பட்ட விடயங்கள் பொய்யானவை என்பதை அரசாங்கத் தலைவர்கள் ஏற்றக் கொள்கிறார்களா? இணக்கப்போக்கை வெளிக்காட்டும் எந்தவொரு அழைப்பையும் அவதூறு செய்யும் நோக்குடையவையாக இந்தக் கேள்விகளைக் கருத வேண்டியதில்லை. இணக்கப்போக்கிற்கான சமிக்ஞை தேர்தல்களை மனதிற் கொண்டதாகவோ அல்லது உலகிற்கு ஒரு மாயையை காட்டுவதாகவோ இல்லாமல் போரின் காயங்களை குணப்படுத்துவதற்கான இதய சுத்தியான நோக்கத்துடன் அமைய வேண்டியதே முக்கியமானதாகும்.

தினக்குரல்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment