ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு

ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்ட டாக்டர் பி.ராமசாமி மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில்,

இலங்கைத் தமிழர்களின் துயர நிலையை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி நிவாரணம் பெற்றுத் தர தமிழக அரசு தவறி விட்டது. எனவே கோவை உலக செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

'உலகம் எங்கும் பரந்து கிடக்கும் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. உலக அளவில் உள்ள தமிழர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழின பாதுகாப்புக்காக உலக அளவில் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முதல்படிதான் இந்த மாநாடு.

தமிழ் இனத்தின் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தனிநாடு என்னும் தாகம் இன்னும் தணியவில்லை. தமிழர்களுக்கு என தனிநாடு ஒன்று வேண்டும். அது தனி ஈழமாக அமையும்.

ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். தமிழர்களுக்கு தனித்துவம் வாய்ந்த தலைவர்கள் தேவை என்றார்.

நிகழ்ச்சியில் புலவர் புலமைப்பித்தன், மலேசிய நாட்டு எம்.பி குணசேகரன், மலேசிய எம்.எல்.ஏ.க்கள் சிவநேசன், குணா, ரவி, சிம்மாதிரி, கணபதிராவ், வசந்தகுமார், தொழில் அதிபர் அருணாச்சலம், தமிழ் அறிஞர் பொன்னுரங்கம் உள்பட பலர் பேசினர்.

மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

தமிழக அரசு தவறி விட்டது - ராமசாமி

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பி.ராமசாமி கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் நிலையை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி அவர்களின் உயிரைக் காக்கவோ, துயரத்தைத் துடைக்கவோ தமிழக அரசு போதிய நடவடிக்கையை எடுக்கவில்லை.இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காக்க தமிழக அரசு தவறி விட்டது.

கடந்த ஆண்டு நடந்த வெளிநாட்டு இந்தியர் மாநாட்டின்போது பாலஸ்தீனியர்கள் குறித்து பெரிதும் கவலைப்பட்டுப் பேசினார் பிரதமர் மன்மோகன் சிங். ஆனால் ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து அவர் ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.

தற்போதைய தேவை உலக அரங்கில் தமிழர்களின் குரல் உரத்து ஒலிக்க ஒரு வலிமையான அமைப்புதான். மலேசியா, சிங்கப்பூர், கனடா, மொரீஷியஸ் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் தமிழர்கள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் ஒருங்கிணைந்து உரத்துக் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார் ராமசாமி.

ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த வெளிநாட்டு இந்தியர் மாநாட்டையும் ராமசாமி புறக்கணித்தார் என்பது நினைவிருக்கலாம். ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்காத, தட்டிக் கேட்காத இந்திய அரசின் செயலைக் கண்டித்து மாநாட்டைப் புறக்கணிப்பதாக அப்போது அவர் கூறியிருந்தார்.
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment