இலங்கைத் தீவில் மீண்டும் ஒரு திருக்கூத்து அரங்கேறப் போகின்றது. ஜனநாயகம், தேர்தல், வாக்களிப்பு என்ற பல பெயர்களில் அமைந்த திருவிழாதான் அது.ஜனாதிபதித் தேர்தல் திருவிழா என்ற நாடகம் பூர்த்தியாகி விட்ட நிலையில் இனிமேல் அரங்கேறப் போவது பொதுத் தேர்தல் நாடகமே.
ஜனாதிபதித் தேர்தலும், அதையொட்டி நடந்த பிரசார முறைகளும், அது நடந்தேறிய விதமும், தேர்தல் பெறுபேறுகளும் இலங்கைத் தீவுமக்களையே பேச்சு மூச்சற்றவர்களாக்கி, அதிர்ச்சியில் உறையவைத்து, மௌனியாக்கி நிற்கையில், அது போன்ற இன்னொரு தெருக்கூத்துக்கு ஒத்திகை பார்க்கும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.
தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவடைகின்றது. ஏப்ரல் புதுவருடத்துக்கு முன்னர் புதிய அரசு பதவியேற்கக் கூடியதாக அடுத்த பொதுத் தேர்தலை நடத்தி முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. அதற்கு ஏற்ற வகையில் தற்போதைய நாடாளுமன்றம் இந்த வாரத்தில் கலைக்கப்படக்கூடும் என எதிர்வு கூறப்படுகின்றது.
நாட்டின் பொதுத் தேர்தல் என்பது அந்த நாட்டின் சட்டமியற்றும் உயர் சபைக்கு மக்களின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் ஓர் உயர்ந்தபட்ச மேன்மையான நிகழ்வாகக் கருதப்பட வேண்டும். ஆனால் மக்களின் உண்மையான உள்ளக் கருத்தை வெளிப்படுத்தும் நீதியான ஜனநாயக நிகழ்வாக அது அரங்கேறுமா என்ற பலத்த சந்தேகமே மக்கள் மனதை இப்போது பெரும் அவநம்பிக்கையாக நிரப்பி நிற்கின்றது.
மிக அண்மைக்காலத்தில் நடந்து முடிந்த பல்வேறு தேர்தல்கள் எப்படியெல்லாம் அரங்கேறின என்பது தொடர்பான மக்களின் பட்டறிவே இத்தகைய விசன எண்ணத்தை அவர்கள் மனதில் தோற்றுவித்திருக்கின்றது என்பது பொய்யல்ல.
இனி நடக்கப்போகும் பொதுத் தேர்தலாவது நீதி, நியாய மான முறையில் ஜனநாயகப் பண்பியல்புகளையும், கருத்துக் கூறுவது தொடர்பான அடிப்படை விழுமியங்களையும் மதிக்கும் விதத்தில் முறையாக நடத்தப்பட்டாலும் கூட, அத் தேர்தல் மூலம் தெரிவாகும் நாடாளுமன்றம் அந்த ஜனநாயகப் பண்பியல்பைப் போற்றும் வகையில் செயற்படுமா என்பது குறித்து நாட்டு மக்களுக்குத் தீர்க்க முடியாத பலத்த சந்தேகம் இருப்பதை இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும்.
அத்தகைய நிலைமையைத் தற்போது காலாவதியாகும் இந்த நாடாளுமன்றம் நாட்டு மக்கள் மத்தியில் ஆழமாக விதைத்து விட்டுச் செல்கின்றமையும் மறுக்க முடியாத உண் மையாகும்.
2004 ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அரும் பொட்டில் ஆட்சியை அமைத்த அரசுத் தரப்பு, சபையின் சபாநாயகர் பதவியைக்கூட ஒரு வாக்கு வித்தியாசத்தில் எதிரணி யிடம் பறிகொடுத்து, அல்லாடும் நிலைமையே ஆரம்பத்தில் இருந்தது.
ஆனால் பின்னர் நிலைமை என்னவாயிற்று?
எதிரணிக் கட்சியிலிருந்த எம்.பிக்களில் பெரும் எண்ணிக் கையானோரை அமைச்சுப் பதவியைக்காட்டி ஆளும் பக்கத்துக்கு இழுக்கும் "அநாகரிக ஜனநாயகமே' இப்போதைய நாடாளுமன்றின் ஒரே பெருமை என்று கூறும் அளவுக்கு இங்கு ஜனநாயகத்தின் மகத்துவம் கேவலமாகும் நிலைக்குக் கெட்டுப் போனது.
மக்களையே சந்திக்காமல் எதிரணியின் தேசியப் பட்டியல் எம்.பி. பதவியைக் காலையில் ஏற்றவர், மாலையில் அரசுப் பக்கம் "பல்டி' அடித்து அமைச்சர் பதவியையோ, பிரதி அமைச்சர் பதவியையோ அதற்குக் "கைம்மாறாக' பெற்றுக் கொள்ளும் முறைகேடு கூட இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சர்வ சாதாரணம் என்பது இப்போதுதான் நிலைநாட்டப் பட்டது.
அமைச்சர் பதவிகளுக்காக அரசியலில் "சோரம்' போன கூட்டம் ஒன்றை உற்பவிக்கும் புதிய ஜனநாயகப் போக்கு இந்தத் தேசத்தில் இப்போது வலுவாகக் கட்டமைந்துள்ளது. இதனால்தான் "கின்னஸ்' புத்தகத்தில் பதியும் உலக சாதனை போல அரசுத் தரப்பின் 95 வீதமான எம்.பிக்களுக்கு அமைச்சர்கள், பிரதி அமைச்சர் பதவிகளை வழங்கி "மெகா' அமைச்சர்கள் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பெருமையை இலங்கைத் தீவு சுவீகரித்துக் கொண்டது.
நிறைவேற்று அதிகாரத்தின் குயுக்தித் தனத்தால், நாட்டின் சட்டமியற்றும் உயர் தகைமை கொண்ட நாடாளுமன்றம் இவ்வாறு கடைகெட்டுப் போகும் விதத்தில் ஜனநாயக விரோதக் கேவலம் அரங்கேறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும், அதிகாரமும், தகுதியும், தகைமையும் நீதித்துறைக்கே உள்ளது என மக்கள் எதிர்பார்த்து நம்பியிருந்தனர். ஆனால் அரசியல் போக்குகளின் திசையில் இழுபட்ட நீதித்துறையோ இத்தகைய ஜனநாயக குளறுபடிகள் இலகுவாக அரங்கேற வழிவிடும் விதத்தில் சட்ட வியாக்கியானம் செய்து விலகி நின்றதால் இந்த ஜனநாயக முறைமை மீதே ஆட்சிப் போக்கு மீதே மக்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பின்புலத்தில்
நீதி, நேர்மையான மக்களின் உண்மையான மன நிலைப்பாட்டைப் பிரதிபலித்து வெளிப்படுத்துகின்ற நியாயமான தேர்தல் ஒன்று நீதியான முறையில் நடத்தப்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இன்னும் பிறக்கவில்லை.
அத்தகைய தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் நியாயமான நாடாளுமன்றம் ஒன்று உருவானாலும் அது ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் நீதி,நியாயமாகச் செயற்படும் என்ற நம்பிக்கையும் மக்களுக்கு இன்னும் ஏற்படவேயில்லை. அதுதான் உண்மை.
கடந்த கால அரசியல் பட்டறிவு அனுபவம் அத்தகைய அவநம்பிக்கை எண்ணத்தையே மக்கள் மனதில் ஆழ விதைத்து நிற்கின்றது.
0 கருத்துரைகள் :
Post a Comment