கலைஞரின் குடுமி சும்மா ஆடாது!

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மீண்டும் ஒரு தடவை சத்தமிட்டு இவ்விடயத்தில் தமது இருப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி.இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை அரசு தவறுமானால் அதை தி.மு.க. வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இராது என மிரட்டல் விட்டிருக்கின்றார் அவர்.இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு விவகாரம்தான். இனிமேல் இதையும் விட மேலும் தீவிரமாக அவர் எகிறிக் குதிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கொடூர யுத்தம் கட்டவிழ்ந்து, பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் அநியாயமாகக் கொன்றொழிக்கப்பட்ட போதே அதைத் தடுக்கவக்கற்றவராக இருந்துகொண்டு பல்வேறு அரசியல் திருகுதாள நாடகங்களை வெற்றிகரமாக அரங்கேற்றிய பெரும் கலைஞர் அவர்.

தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூண்டோடு இராஜிநாமாச் செய்வர் என்ற மிரட்டல் நாடாகத்தோடு தொடங்கி, மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம், புதுடில்லி அரசை எச்சரிக்கும் விதத்தில் அனைத்துக் கட்சிக் குழுவினருடனும் புதுடில்லி படையெடுப்பு (விஜயம்), உப்புச்சப்பற்ற வகையில் தமிழக சட்டசபையில் பிரயோசனமற்ற தீர்மானங்கள், "ஐயகோ! தமிழினம் அழிகின்றதே!' என்னும் சாரப்பட அழுது வடியும் அறிக்கைகள் என்று தொடர்ந்து, கடைசியாக சுமார் நான்கு மணி நேரம் நடத்திய சாகும்வரையான(?) உண்ணாவிரதப் போராட்டம் வரை இந்த நாடகங்களின் வரிசை நீண்டது.

இறுதியாக, ஈழத் தமிழருக்கான தமது சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை சில மணி நேரம் கூட நீடிக்கமுடியாத அவர் ஈழத்தில் யுத்தநிறுத்தம் வந்துவிட்டதாக அறிவித்துவிட்டு தமது உண்ணாவிரதக் கதையை முடித்துக் கொண்டமைதான் மிக மோசமான ஈழத் துரோக நடவடிக்கையாகும்.

அவரது அந்த யுத்த நிறுத்தப் பிரகடனம் பற்றிய அறிவிப்பின் பின்னர்தான் வன்னியில் மக்கள் பேரழிவு மிக உச்சத்தை எட்டியது. அந்த அழிவுகள் பற்றிய சர்வதேசத்தின் கவனத்தைத் திசை திருப்பி, தவறாக வழி நடத்தும் விதத்தில் கருணாநிதியின் அந்த அறிவிப்பு அமைந்தது. தமது அரசியல் சுயலாபச் செயற்பாட்டுக்காக, ஈழத் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டிருந்த கொடூர யுத்தம் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை அந்த இக்கட்டான சமயத்தில் இவ்வாறு தவறான திசைக்குத் திருப்பிவிட்டு "யுத்தம் நின்றுவிட்டது, தமிழர்கள் அழிவு தடுத்து நிறுத் தப்பட்டுவிட்டது' என்ற தவறான கருத்தியலை சர்வதேசத்துக்கும் ஏற்படுத்தி வரலாற்றுத் துரோகமிழைத்தவர் கருணாநிதி என்பதை உலகத் தமிழினம் மறக்காது.
கடந்த மே மாதத்தில் நடந்த இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, தனது பெரும்பான்மைக்கு தி.மு.க. போன்ற தோழமைக் கட்சிகளின் தயவில் தங்கியிருந்தது. அந்தச் சமயத்தில் கூட ஈழத் தமிழினத்துக்காக மத்திய அரசைக் கொண்டு ஆக்கபூர்வமாக எதையுமே செய்ய வைப்பதற்கு லாயக்கற்றவராகவே கருணாநிதி இருந்தார். அச்சமயம் இலங்கையில் நடந்த யுத்தம் தொடர்பில் ஈழத் தமிழருக்கு ஆதரவாகச் செயற்படவைக்க அல்ல குறைந்த பட்சம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படாமல் மத்திய அரசைத் தடுக்கக் கூட அவரால் இயலாமல் போயிற்று.

இப்போது கடந்த மே மாதத்துடன் இந்திய அரசியல் நிலைமை இன்னும் மாறிவிட்டது.புதுடில்லியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, தனது கூட் டணிக் கட்சியான தி.மு.க. போன்றவற்றின் உதவியோ, தயவோ இன்றியே தனித்து தன் சொந்தக்காலில் உறுதியாக ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட்டது.

ஆனால், மறுபுறமாகத் தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியின் பெரும்பான்மைப்பலம் இல்லாத தி.மு.க. அரசோ, தனது ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்குத் தொடர்ந்தும் காங்கிரஸ் கட்சியின் தயவில் ஆதரவில் தங்கிநிற்க வேண்டிய கட்டாயம்.

இந்த நிலையால் ஈழத் தமிழர் விடயத்தில் கலைஞர் கருணாநிதியின் கூத்தெல்லாம் வெறுமனே இலங்கை அரசுக்கு எதிராக மட்டுமே இருக்கமுடியும். மத்தியில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் அரசுடன் முட்டுப்படாமல் தான் அவர் எதையும் செய்யமுடியும்.சரி. இவ்வளவு நீண்ட மௌனத்துக்குப் பின்னர் மீண்டும் இப்போது ஏன் கொழும்பு அரசு மீது காட்டமாகப் பாயமுயன்றிருக்கின்றார் கலைஞர்? சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். அதே கதைதான் இங்கும்!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நல்லுறவு மீண்டும் அரும்ப மலர தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. அத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டால் மறுபுறத்தில் தமது தி.மு.க. அரசியல் நடத்துவதற்குப் பொருத்தமான கோஷங்கள் அரசியல் சர்ச்சைகள் அக்கட்சிக்குத் தேவை. அத்தகைய ஒன்று ஈழத் தமிழர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கும் விவகாரம். அதனால் முற்கூட்டியே களத்தைத் தயார் படுத்துகின்றார் பழுத்த அரசியல் நடிகரான கலைஞர் கருணாநிதி. அவ்வளவுதான்!
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete