இலங்கையின் அரசியலில் எதிர்க்கட்சி எப்போதும் எதிரிக்கட்சி


இலங்கை அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சியாக அங்கம் வகித்துவரும் கட்சி இதுவரைக்கும் இப்படியான ஒரு அழிப்புக்குள் உட்பட்டதே இல்லையெனலாம். பாராளுமன்றத்திலே அரசுக்கு எதிராக வாய்திறப்பதற்கு ஒரு கட்சி இருக்கக்கூடாது என்ற அராஜகப்போக்கு விஸ்தரிக்கப்பட்டு மக்கள் வரை வந்தடைந்துள்ளது. இருப்பினும், சிங்கள மக்கள் பலவிதமான கட்சிகளாக பிளந்திருந்த போதிலும் 'தமிழனுக்கு உரிமை கொடுக்கக்கூடாது' என்ற நிலைப்பாட்டில் ஒருகட்சியாக நிற்பார்கள் என்பது வரலாறு சொல்லிவந்த உண்மையாகும்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை பொருத்தமற்றது என பலவழிகளுக்கூடாக சித்தரித்தும், அதை சாட்டாக வைத்துக் கொண்டு அமைச்சர் பதவியைக் காட்டி அரசுக்கு தாவ வைத்தும் முற்றாக அழிப்பதற்கான முஸ்தீபுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்டதென்பதை மறந்துவிடக்கூடாது. இதற்கு மேலும் வலுக்கூட்டுவதாக யுத்த வெற்றியும் அதிபர் மகிந்தாவுக்கு சாதக மாயிற்று.

'கீரைக்கடைக்கு ஒரு எதிர்க்கடை வேண்டும்' என்பதுபோல யுத்த வெற்றியில் சரத் பொன்சேகாவுக்கு அதிக பங்குள்ளதென காட்டி ஐக்கியதேசியக் கட்சி அவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியது. சரத் பொன்சேகாவைப் பொறுத்தமட்டில் யுத்தத்தில் கண்ட வெற்றியும், அதையே அரசியல் மயப்படுத்தப்படும் பொழுது அதிலும் இலகுவாக வெற்றிகண்டுவிடலாமெனக் கொண்ட தன்னம்பிக்கையும் அவருக்கு மேலும் வலுச் சேர்த்தது. சிங்கள மக்கள் யுத்தவெற்றியின் சார்பாக மகிந்தா - சரத் இருவரையும் ஆரம்பத்தில் சமமாகவே பார்த்திருந்தார்கள். காலம் செல்லச் செல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு சரத்திற்கு கிடைத்த பொழுது பிரச்சாரம் திசைமாறத் தொடங்கியது. யுத்தத்திற்கு கட்டளையிட்டவனா? யுத்தத்தை நடாத்தியவனா? என்றாய் ஒப்பீட்டு அடிப்படையிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாய்வும் சரத்திற்கு சார்பாக இருக்கவில்லை. (தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்ந்திருந்து சத்துருவைத் தாக்கியதென்பது, அதாவது சரத் பொன்சேகாவை தற்போதைய நிலைக்குத் தள்ளியது பிறிதொரு தொடர்கதையின் ஆரம்பமாகும். எது எப்படியோ தமிழ்மக்கள் எதிர்பார்த்தது போல இரண்டாம் பொது எதிரியை 'உள்ளேபோட்ட' பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாணக்கியத்தையே சாரும்.)

மகிந்தாவுக்கு வாக்குப்பண்ணிய சிங்கள மக்கள் பொன்சேகாவுக்கு எதிராக வாக்குப்பண்ணியதாக மகிந்தா கருதிக்கொண்டது, பாரிய விளைவை ஏற்படுத்தப் போகிறது. இந்த இடத்திலிருந்துதான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்தா சரிவானது ஆரம்பமாகப் போகின்றதெனலாம். சரத் பொன்சேகாவின் கைது, மகிந்தாவுக்கு வாக்குப் பண்ணிய ஆதரவாளர்களுக்கு கூட ஒருவித தேசிய சினத்தை ஏற்படுத்தி உள்ளதை புரியக்கூடியதாக உள்ளது. மகிந்தா ஜனாதிபதியாக வரவேண்டுமென சிங்கள மக்கள் எண்ணுவது ஒருபுறம். பொன்சேகாவின் தேசியம் சார்ந்த அவரது பெயருக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடாதென சிங்கள மக்கள் எண்ணுவது மறுபுறம். ஆகவே பொன்சேகாவின் அவமானம் ஒட்டு மொத்தமாக தமக்கேற்பட்ட அவமானமாக சிங்கள மக்கள் எண்ணுகின்றனர்.

சரத் பொன்சேகா தற்பொழுது விடுதலை செய்யப்படுவாராயின், அதுவானது ஐக்கியதேசியக் கட்சியின் (எதிரிக் கட்சி) எதிர்க் கோஷத்திற்கு பயந்து அரசு விடுதலை செய்ததாக அமையும். குறிப்பாக கோத்தபாய ராஜபக்ச விட்ட சரத் பொன்சேகாவிற்கெதிரான பல அறிக்கைகள் பொய்யானதாகிவிடும். அத்தோடு அரசுக்கு கௌரவப் பிரச்சினையாக கூட மாறிவிட வாய்ப்புண்டு. பொதுத் தேர்தலுக்கு பின்னர் விடுதலை செய்யப்படுவாராயின் சர்வதேச மட்டத்தில் அரசுக்கு மேலும் அபகீர்த்தி ஏற்பட இடமுண்டு. இந்த நிலைகளில் அரசு 'ஆப்பிழுத்த குரங்கு' போல் ஆகிவிடும்.

ஆகவே, ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து எதிர்வரும் பொதுத் தேர்தல், கள்ள வாக்குகள் உட்பட அரசின் பல குட்டுக்கள் அம்பலமாகும் மேடையாக அமையலாம். அதுவே அரசுக்கு பின்னடைவான சாத்தியத்தை ஏற்படுத்த ஏதுவாக அமைவதால் சிலவேளைகளில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு பொதுத்தேர்தலை ஒத்திப் போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. எதையும் பொறுத்திருந்து பார்த்து ரசிப்போம்.

மல்லைகையூரான்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment