கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையும், அவர் கைது செய்யப்பட்டிருக்கின்ற முறைமையும் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
அதுவும், கடந்த தேர்தலில் அவரை அதிகளவில் ஆதரித்த வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இந்தக் கைதின் போக்கு ஆழமான மனவுணர்வுகளைத் தட்டி விட்டிருக்கின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மையே.
இந்தச் சமயத்திலே, இலங்கைத் தமிழரின் பிரச்சினையை ஒட்டி சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஒரு கருத்தரங்கில் நீதியரசர் ஸி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் சாராம்சம் நினைவுக்கு வருகின்றது.
விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ நடவடிக்கை மூலம் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்த பின்னணியில் "சமாதானமும் சகவாழ்வும்' என்ற தலைப்பில் பல்வேறு மதப் பெரியார்களும் அந்தக் கருத் தரங்கில் தமது உரைகளை முன்வைத்தனர். இந்து சமயப் பின்புலத்திலே தமது கருத்தை முன்வைத்த நீதியரசர் விக்னேஸ்வரன் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"எத்துணை மிருகத்தனமாக மனிதர்களை அழிப்பினும், மனிதனின் உள்ளத்தே கிளர்ந்து எழும் விடுதலை வேட்கையை நீதிக்கான வேட்கையை அத்தகைய செயல்களால் அணைத்துவிட முடியாது. லட்சக் கணக்கில் யூதர்கள் அழிக்கப்பட்ட போதிலும் இன்று உலகில் வலுவான மக்கள் கூட்டமாக அவர்கள் உள்ளனர். தமது நியாயமான சட்டபூர்வமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மக்களை அழிப்பதும் ஒழிப்பதும் அதிகார மட்டத்தினரின் கொள்கையாக இருக்குமிடத்து அவர்களின் தீய கர்ம வினைப் பயன் தொடரும் என்பது இந்துமத நம்பிக்கை. வாளெடுத்தவன், வாளினாலேயே அழிவான் என்பது நம்ப முடியாதது அல்ல.
வன்செயலை நாடியோர் தம்மிலும் வல்லமை படைத்த வன்செயலினால் தாம் வெளியேற்றப்பட்டமையைப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. இதனிலும் அதிகப்படியான மிகவும் நவீனத்துவம் வாய்ந்த வன்செயல்களில் ஈடுபட்டு, அப்பாவிகளுக்கு எதிராக மிகக் கொடூரமாகச் செயற்பட்டவர்கள் இதே பாடத்தைப் படிக்க எத்தனை காலம் செல்லும்? முன்னைய காலத்திலும் இவ்வாறு நிகழ்ந்தமையைக் காண்கிறோம். நாம் விதைத்ததை நாம் அறுவடை செய்வோம் என்பதை அனைத்து சமயங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.'' என்றார் நீதியரசர் விக்னேஸ்வரன்.
ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு தாக்கத்துக்கும் ஒரு மறுதாக்கம் இருக்கும். சில சமயங்களில் காலம் சற்றுப் பிந்தும். அவ்வளவுதான். இப்போது நடைபெறும் சம்பவங்களுக்கும் உரிய விளைவுகள் கிடைத்தே தீரும். இழைக்கும் தவறுகளுக்காகப் பாடங்களைப் படித்தே தீர வேண்டும். அது உலக நியதி.
தமக்காகத் தேர்தலில் வேலைசெய்த முன்னாள் படை அதிகாரிகள், உதவியாளர்கள் கைதுசெய்யப்பட்டமையை ஒட்டி அவர்களது உறவினர்களை நேற்று முன்தினம் ஜெனரல் பொன்சேகா சந்தித்திருக்கின்றார். அவர்கள் மத்தியில் உரையாற்றியபோது தேவைப்பட்டால் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தாம் தயார் என அவர் அங்கு கூறினார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேசமயம், தமது நிலைப்பாடு தொடர்பில் உரிய சத்தியக்கடதாசிகளைத் தயார்பண்ணி பாதுகாப்பான தரப்புகளுக்கு அனுப்பிவிட்டே தாம் பார்த்திருக்கின்றார் என்றும், தமக்கு ஏதும் நேர்ந்தாலும் உண்மைகள் வெளி வரும் என்றும் சில நாட்களுக்கு முன்னர் ஜெனரல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவரது அலுவலகம் வல்வந்தமாக சோதனையிடப்பட்டிருக்கின்றது. அங்கிருந்த கணினிகள், தஸ்தாவேஜுக்கள், ஆவணங்கள் அள்ளிச் செல்லப்பட்டி ருக்கின்றன. இந்தப் பின்னணியிலேயே அவரும் நேற்றுமுன்தினம் இரவு அள்ளிச் செல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு எதிராக இராணுவச் சட்டம் பாயும் என அறிவிக்கப்பட் டிருக்கின்றது.
அதாவது, அவர் இனி அண்மைக்காலத்தில் வெளியே வருவதற்கோ அல்லது சர்வதேசத் தரப்புகளைச் சந்திப்பதற்கோ வாய்ப்பில்லை என்பது தெளிவாகப் புலனாகின்றது. இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது இக் கைது, அதன் பின்னணி, பொன்சேகா மீது சுமத்தப்படக் கூடிய குற்றச்சாட்டுகள், அவருக்கு ஏற்படக்கூடிய கதி எல்லாமே ஓரளவு ஊகிக்கத் தக்கவையே.
இலங்கை விவகாரத்தில் நடந்த கொடூரங்கள் பற்றிய உண்மை வெளிவரவேண்டும் என்றால், இவ்விடயத்தில் சர்வதேசத்தின் ஈடுபாடும், பங்குபற்றலும், அழுத்தமும் மிக வலுவாக, வலிமையாக அவசியமானவை. உண்மையைக் கண்டறிவதற்கான வாய்ப்பும், சூழலும், சந்தர்ப்பமும் பொன்சேகா இங்கு நடத்தப்படும் முறைமை மூலம் நன்கு கனிந்தும் வந்திருக்கின்றன.
இதுவரை காலமும் உண்மைகளைக் கண்டறிவதற்கான வாசலைத் தேடினார்கள். இப்போது வாசல் புலப்பட்டு விட்டது. இனி, வாசல் கதவைத் திறக்கவேண்டியதுதான் மிச்சம். அதற்கான திறப்பைப் பெறும் வழி சர்வதேசத்துக்குத்தான் தெரியும். அதனால்தான் அந்தச் சாவியைப் பெறமுடியும்.
உரிய முறையில் செயற்பட்டு சந்தர்ப்பத்தை சர்வ தேசம் பயன்படுத்திக்கொள்ளுமா? அல்லது வழமை போல அறிக்கைகள், கண்டனங்கள், பயனற்ற பிரேரணை முஸ்தீபுகள் என்பவற்றோடு அடங்கி வாய்ப்பைக் கோட் டைவிடுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். வேறு வழி யில்லை.
0 கருத்துரைகள் :
Post a Comment