தீர்வு எனும் கானல் நீர்!


இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் "மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது"; "பழைய குருடி கதவைத் திறவடி!" என்ற கதை ஆரம்பமாகிவிட்டது.
இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பிரதான தரப்புகளில் ஒன்றான தமிழர் இனம், இச்சர்ச்சைக்குத் தீர்வாக சில விடயங்களை அடிப்படைகளாக எதிர்பார்க்கின்றது. தமிழர்களின் நீதி, நியாயமான அபிலாஷைகளை உள்வாங்கி உணர்ந்து கொள்வதின் ஊடாக மட்டுமே அவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

தமது இனத்தின் தனித்துவமான பண்பியல் கோலங்களை கலாசார விழுமியங்களை மொழியியல் சிறப்புகளை பாரம்பரிய தாயகப் பிரதேசங்களை பேணித் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அரசியல் கட்டமைப்பு ஒன்று தங்களுக்குத் தேவை என்பதே அவர்களின் மாற்ற முடியாத வேணவா.

எந்தத் தீர்வும் இந்த வரையறைக்குள் அமைந்து, இவ்விடயத்தில் தமது இனத்தின் அடிப்படை எதிர்பார்ப்பை நிறைவு செய்தால் மட்டுமே அது ஏற்கத்தக்கதாக இருக்கும் என்பது தமிழர் களின் ஒரே நிலைப்பாடு.

ஆனால் தமிழர்களின் உரிமைகளுக்காக ஆயுத வழியில் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அந்த இயக்கத்தோடு சேர்ந்து செயற்பட்ட தமிழ்த் தரப்புகளையும் இராணுவ ரீதியில் அடக்கி, ஒடுக்கி, அழிப்பதில் வெற்றி கண்டு விட்டமையால், தமிழர்களின் அபிலாஷைகளும், வேணவாவும், எதிர்பார்ப்பு நம்பிக்கையும் தகர்த்தழிக்கப்பட்டுவிட்டன, இனி நாம் பிச்சையாகப் போடுவதை மட்டுமே தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தென்னிலங்கை கருதிக்கொள்ளக் கூடாது.

எனினும், தென்னிலங்கை அரசியல் தலைமை அப்படித் தான் கருதுவது போல விடயங்கள் அரங்கேறுவதுதான் துரதிஷ்டவசமானதாகும்.

விடுதலைப் புலிகளை வெற்றிகரமாகத் தோற்கடித்தாயிற்று என்று பிரகடனப்படுத்தி, இலங்கை அரசு மார்தட்டிய பின்னர் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில், தென்னிலங்கையில் அதிஉச்ச பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று நாட்டின் பெரும் அரசியல் சக்தியாக ஏக சக்தியாக விஸ்வரூபம் எடுத்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

இத்தகைய பெரும் ஜனநாயகப் பலத்தோடு ஆட்சிக்கு மீண்டும் வரும் வாய்ப்பை சந்தர்ப்பத்தை அருகதையை பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதைப் பலமாக வைத் துக்கொண்டு இலங்கை இனப்பிரச்சினைக்கு நியாயத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எத்தனங்களை தாராள மனப்பான்மையோடும், சிறுபான்மையினரை அரவணைக்கும் தாராண்மைச் சிறப்போடும் முன்னெடுப்பார் என்று எதிர்பார்த்தால், அவரோ அதற்கு நேர்மாறான போக்கில் தாம் பயணிக்க விரும்புகின்றார் என்பதையே கோடிகாட்ட எத்தனிக்கின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்த வரையில் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றி, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி என்ற இரண்டுமே பெரும் இமாலய சாதனைகளாகும். இத்தகைய பெரு வெற்றிகளின் மிதப்பில் நின்றுகொண்டு அவர் ஆற்றக்கூடிய சுதந்திர தின உரையில், நாட்டைத் தீராத பிணக்குக்குள் ஆழ்த்தி, ஓயாது பேரழிவுகளைத் தந்து நிற்கும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நியாயமான வழிமுறைகளை அவர் கோடிகாட்டுவார் என எதிர்பார்த்திருந்த தமிழருக்கு ஏமாற்றம் மட்டுமல்ல, அதையும் தாண்டி அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றது என்பதை இங்கு பதிவு செய்தேயாக வேண்டும்.

தமது ஒருமித்த தாயகத்தை தென்னிலங்கை ஆட்சிப் பீடம் நீதித்துறையோடு சேர்ந்து திட்டமிட்ட காய்நகர்த்தல் மூலம் வடக்காகவும், கிழக்காகவும் துண்டாடி நிற்கின்றது என்ற பெரு விசனத்தில் ஏற்கனவே மூழ்கிக் கிடக்கின்றது தமிழினம்.

தமது பாரம்பரிய நிலப் பிரதேசத்தை ஐக்கியமாக எப்படி மீளப்பெறுவது என்று தெரியாமல் தமிழர்கள் துடியாய்த் துடித்து, வேதனையில் மூழ்கி, அவலப்பட்டுக்கொண்டிருக்க, அந்த மாகாணங்களைக் கூட மேலும் கிராமங்கள் வரை துண்டு போடுவது குறித்து ஜனாதிபதி சிந்திக்க முற்பட்டிருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட தமிழ் இனத்துக்கு நியாயம் செய்யும் நோக்கோடு முன்வைக்கப்படவிருக்கும் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான திட்டத்தில் அதிகாரப் பரவலாக்கல் அலகு, வடக்கு, கிழக்கு எனத் தமிழர் தாயகம் துண்டுபட்டு கிடக்கும் விதத்தில் வழங்கப்படுமா, அல்லது ஒட்டுமொத்த ஐக்கிய தமிழர் தாயகத்துக்கும் வழங்கப்படுமா என்றெல்லாம் தமிழ்த் தலைவர்கள் சிந்தித்துக்கொண்டிருக்க, இப்போது புதுக்கதை புரூடா விட்டிருக்கின்றார் ஜனாதிபதி. அதுவும், நாட்டின் சுதந்திர தினச் செய்தியில். சர்வதேசத் தரப்புகளின் இராஜதந்திரிகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு இந்த விடயத்தை அவர் அவிழ்த்து விட்டிருக்கின்றார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழர் தாயகத் துக்கு அதிகாரப் பரவலாக்கலா, அல்லது இரு தனித்தனி மாகாணங்களுக்குத் தனித்தனி அதிகாரப் பரவலாக்கலா என்பது குறித்து சர்ச்சை இங்கு நடந்துகொண்டிருக்க, அதையெல்லாம் புறம் ஒதுக்கிவிட்டு மாவட்டங்கள், நகரங்கள் எல்லாம் தாண்டி, கிராமங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதைப் பற்றிப் பேசுகின்றார் ஜனாதிபதி.

இனப்பிரச்சினைக்கு நியாயத் தீர்வு காண்பதற்கான நீதியான பாதையில் அரசுத் தலைமை பயணிக்கத் தயாரில்லை தான் விரும்பும், உப்புச்சப்பற்ற அரைகுறைத் திட்டம் ஒன்றைத் தீர்வு என்ற பெயரில், ஏற்கனவே நொந்து நொடித்துப் பலவீனப் பட்டுப்போயிருக்கும் தமிழினத்தின் மீது பலவந்தமாகத் திணித்து, தமிழினத்தின் நியாயமான எதிர்பார்ப்பை நீர்த்துப் போய்விட வைப்பதிலேயே அரசுத் தலைமை குறியாய் இருக்கின்றது. இதனையே ஜனாதிபதியின் தற்போதைய கருத்து மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. அண்ணாச்சி நீங்க தோத்துட்டீங்க ...இனிமே அவனுங்க போடுற பிச்சையை எடுத்துகிட்டு கம்னு இருக்கோணும்..
    புரியுதா?

    ReplyDelete