தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமை!


ஈழத்தமிழ்மக்களின் அரசியல் நிலை மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது.


ஒருமுனையில், தமிழ்த்தேசியத்தைப் பற்றுறுதியுடன் வரிந்துகொண்டுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்மக்களின் அரசியல் இருப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றது.

எதிர்முனையில் தென்னிலங்கை சிங்களத்துடன் கைகோர்த்து தமிழ்த்தேசியத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் சில சக்திகளும், தமிழ்க்கட்சிகளும் முற்பட்டு நிற்கின்றனர்.

ஆயுதப்போராட்டப் பின்னடைவில் ஏற்பட்ட வலுவிழப்பிலும், தனி சிங்கள தேசியக் கோட்பாட்டு சதிகளிலும் மாண்டு போகாமல், தமிழ்த்தேசியத்தின் இருப்பை நிலைநாட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது என்பதே ஒவ்வொரு தமிழனதும் முதல் எதிர்பார்ப்பு.

இலங்கைத்தீவைத் தனது முழுமையான ஆதிக்கத்திற்குள் கொண்டுவரும் நோக்கில் செயற்பட்டு வருகின்ற பௌத்தசிங்கள பேரினவாதஅரசு, தற்போது சிங்கள மயமாக்கலுக்கான செயற்பாடுகளை மிக வேகமாக முன்னெடுத்துச் செல்கின்றது.

தமிழ்த்தேசிய அரசியல் இருப்பை இல்லாதொழித்தல், இனக்கலப்பைச் செய்வதன் மூலம் இனத்தின் அடையாளங்களை சிதைத்தல், சிங்கள குடியேற்றங்களை விஸ்தரிப்பதனூடாக தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்ற எண்ணக்கருவை இல்லாமல் செய்தல், தமிழர்களின் வளங்களையும் முதலீடுகளையும் சூறையாடுதல் என தென்னிலங்கை தனக்கு சாதகமான நிகழ்ச்சி நிரலை விரைவாகவும் பாரியளவிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அத்தகைய நிகழ்சித்திட்டங்கள் சிலவற்றில் தமிழர்கள் என்ற அடையாளத்தை தமது அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் சுயநல அரசியல்வாதிகளும்; விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர்கள் சிலரும் பௌத்த சிங்கள பேரினவாதிகளுடன் இறுக்கமாக கைகோர்த்து அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்புடையதாகச் செல்கின்றனர்.

இவர்களைப் பகடைக்காயகப் பயன்படுத்தி புனர்வாழ்வின் பெயரால் புலம்பெயர் தமிழ்மக்களின் உதவியை பெறுவது சிங்களத்தின் நோக்கங்களில் ஒன்று.

அதற்கு மேலாக, புலம்பெயர் தமிழ்மக்களின் அரசியல் முன்னெடுப்பை திசை திருப்பி குழப்புவதே பிரதான நோக்கம். இதன் மூலம், தமது பலத்தை தமிழர் தாயகத்தில் வலுவாக்குவாக்கி, தமிழ்த்தேசியம் சார்ந்த கட்சிகளை வலுவிழக்கச் செய்வது மட்டுமல்லாமல் தமிழ்த்தேசியம் நோக்கிய ஒருங்கிணைவை ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கும் தனது திட்டத்தை செயற்படுத்துவதில் அதீத தீவிரம் காட்டிவருகின்றது.

இதற்காக, இறுதியாக நடந்தபோரில் ஏதிலிகளாக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, நீண்டகால யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கும் தற்போது மிகவும் அவசியமாக செய்யப்படவேண்டிய ‘புனர்வாழ்வு’ என்ற விடயம் துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்படுகின்றது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பல்வகைப்பட்ட கருத்துருவாக்கங்களுக்கு மத்தியிலும் பெரும்பான்மை இடங்களில் தமிழ்த்தேசியத்தை கோட்பாடாகக் கொண்ட தமிழ்;த்தேசியக் கூட்டமைப்பை தமிழ்மக்கள் வெற்றிபெற வைத்ததினூடாக தமக்கு தேசியத்தின்பால் உள்ள உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியில் நகர்வதாக உணரப்படுவது மிகுந்த மன வேதனை அளிக்கின்றது. இதன்காரணமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கான மக்கள் ஆதரவுத்தளம் குறைந்துவிடுமோ என்ற ஐயம் எழுகின்றது. சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலை எதிர்கொண்டு செயற்படுவது நிச்சயமாக கடினமான காரியமாக இருந்தாலும் ‘முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை’ என்பது போல தமிழ்த் தேசியத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்தைக் கவனத்திலெடுத்து, அதைப்பாதுகாப்பதற்குப் பொருத்தமான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது அவசியமானது.

தமிழ்தேசியத்தை வலுப்படுத்துவதற்கான அரசியற் செயற்பாடுகளை தாயகத்திலும் சர்வதேச ரீதியாகவும் ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்கின்ற அதேவேளை, தமிழ்மக்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டங்களையும் இணையாக முன்னெடுக்கவேண்டியது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைபின் இன்றைய பிரதான கடமை.

பாதிக்கப்பட்ட தமிழ்மக்களிற்கு உதவிகளை வழங்க புலம்பெயர் தமிழ்மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஆனால் அது சரியாக மக்களை சென்றடையக்கூடிய வழிமுறை எது என்பதே அவர்களிடம் எழுகின்ற முதல் கேள்வி. இதை முன்னெடுப்பதற்குரிய அல்லது ஒழுங்குபடுத்தக்கூடிய தகுதியுள்ள அமைப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது காத்திரமான பங்கை வழங்கமுடியும், வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கான புனர்வாழ்வுப் பணிகளை முன்னின்று செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு கூட்டமைப்புக்கு இருக்கின்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் சிற்சில உதவித்திட்டங்கள் ஆங்காங்கே நடைபெறுவது வரவேற்றக்கூடியதாகினும்; புலம்பெயர் தமிழ்மக்களின் உதவிகள் பெரியளவில் கிடைப்பதற்குரிய செயற்றிட்டம் ஒன்றை வகுக்காமை வருந்தத்தக்க விடயமே.

இத்தகைய வினைத்திறனற்ற செயற்பாட்டினால் ஏற்பட்ட இடைவெளியைப் பயன்படுத்தித்தான் புனர்வாழ்வு, அபிவிருத்தி என்பதன் பெயரில் புலம்பெயர் தமிழ்மக்களின் நிதிகளைப் பெற்று சிங்களத்தின் அரசியல் இருப்பை தமிழர் தாயகப்பிரதேசத்தில் பலப்படுத்தும் நோக்குடன் சிங்களமும் அவர்களிடம் மண்டியிட்ட சிலரும் முயற்சிக்கின்றனர்.

இதை புலம்பெயர் மக்கள் தெளிவாகப் புரிந்து செயற்படுவார்கள். எனினும் புலம்பெயர் தமிழ்மக்களின் உதவிகளை மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டியது கூட்டமைப்பிற்குரிய மிக முக்கிய கடமை என்பதை குறிப்பணர்த்துவதும் இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.

பல மாதங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அபிவிருத்தி தொடர்பாக ஒஸ்ரியாவில் நடந்த கலந்துரையடலில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் அவர்களும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டதாக இணையத்தள வாயிலாக அறிய முடிந்தது.

ஆனால்,

அக்கலந்துரையாடல் தீர்மானங்கள் என்ன?

அக்கலந்தரையாடலில் எடுக்கப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழர் தாயகப்பகுதிகளில் என்ன விதமான புனர்வாழ்வு அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன?

கூட்டமைப்பு வினைத்திறனாகச் செயற்பட்டுக்கொண்டிருக்குமாயின் புனர்வாழ்வை மையப்படுத்திய புதிய அமைப்புகள் உருவாக எப்படி வாய்ப்புக்கள் உருவாகின?

கூட்டமைப்பால் இதை ஏன் ஒழுங்குபடுத்தி செயற்படுத்த முடியவில்லை?

என்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாது.

தமிழ்மக்களுக்கு நல்லது செய்யும் நோக்குடன் எத்தனை கலந்துரையாடல்களையும் எங்கும் நடாத்தலாம். ஆனால், இருப்பிடத்தை இழந்து, வாழ்வாதாரத்தை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கும் மக்களுக்கு என்ன செய்யப்பட்டது என்பதே அந்த முயற்சிக்கான பலாபலனாக அமைய வேண்டும்.

இச்செயற்பாடுகளினூடாக மக்களின் எதிர்பார்ப்பை உருவாக்குவதும் பின்னர் அதைக் கிடப்பில் போடுகின்ற பெறுபேறு அற்ற செயல் திட்டமாகத்தான் தமிழரின் புனர்வாழ்வை கூட்டமைப்பு பயன்படுத்துகின்றதா? என்ற ஐயம் ஏற்படாமல் செயற்பட வேண்டியது மிக முக்கியமானது.

இன்றைய காலகட்டத்தில், தமிழ் தேசியத்திற்கான அரசியல் கட்சி என்ற நிலைக்கு அப்பால் தாயகத்தின் புனர்வாழ்வு, பொருண்மிய மேம்பாடு என்ற பரப்பையும் முழுமையாகப் பொறுப்பெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இருக்கின்றது.

இரண்டு பரிமாணங்களையும் கையாள வேண்டிய பொறுப்பு தரப்பட்டிருக்கின்றது. தமிழ்மக்களுக்கான புனர்வாழ்வுச் செயற்பாட்டை கூட்டமைப்பு துரிதமாக ஒழுங்குபடுத்த வேண்டுமாயின் அவசரகாலத்திட்டம், நீண்டகாலத்திட்டம் என இரண்டு வகையாக திட்டமிட்டு செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும்.

ஏனெனில் மக்களுக்கு அவசரமாக செய்யப்படவேண்டிய திட்டங்களே தற்போதைய தேவை. பட்டினியில் இருப்பவனுக்கு உடனயாக தேவையானது முதலில் உணவு. அதை விடுத்து நாங்கள் பெரிய அளவில் செய்வதற்கான சில பொறிமுறைகளை உருவாக்குகின்றோம் என வெட்டிவியாக்கியானங்கள் பேசி காலங்கடத்துவது பொருத்தமானதல்ல.

இதன் முதற்கட்டமாக நிவாரண பொறிமுறையை உடனடியாக உருவாக்கி செயற்படுத்தல் வேண்டும்.

உதாரணமாக

உதவி நிறுவனத்தை அமைத்துதான் புனர்வாழ்வு உதவி பெறமுடியுமாயின் அதை உருவாக்கும் செயன்முறையை தொடங்கிவிட்டு, தற்காலிக ஏற்பாடாக புனர்வாழ்வு செய்ய வேண்டிய கிராமங்களை தெரிவுசெய்து பொதுமக்கள் கொண்ட பிரதான குழுக்களை உருவாக்கி அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கை பதிவு செய்து மக்களுக்கான அத்தியாவசிய உதவியை துரிதமாக வழங்கலாம். மேலும் படிப்படியாக வாழ்வாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான வேலைத்திட்டங்களையும் செயற்படுத்த வேண்டும்.வேலைவாய்ப்பு, தொழில் முயற்சிக்கான வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வீடு போன்ற முதன்மைத்துறைகளை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் தமிழ்மக்களின் அரசியல் ரீதியான பேரம்பேசும் நிலையை உயர்த்தி வைத்திருந்தது. அவர்களின் பின்னடைவிற்கு பின், தமிழ் மக்களின் அரசியல் தீர்வைப் பெறுவதற்காகப் பொருத்தமான வழிமுறையை பரந்துபட்ட கலந்தரையாடல்களினூடாக சகல தமிழ்மக்களின் ஆதரவுடன் முன்னெடுப்பது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் உள்ள முக்கிய சவால்.

நீண்டகாலப் பொறிமுறையைக் கொண்ட சிங்களமயமாக்கல், இனத்தின் அடையாளத்தைச் சிதைத்தல், இனக்கலப்பை செய்தல், குடியேற்றங்களை மேற்கொள்ளுதல், வளங்கள்-மூதலீடுகள் சூறையாடப்படுதல் போன்றவற்றை தடுக்க பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் தமிழ்மக்களின் சுதந்திரம், பாதுகாப்பு, இனத்தின் உரிமைகள் பேணப்படுவதற்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இலங்கைத்தீவில் இனப்படுகொலை, யுத்தக் குற்றச்சாட்டுகள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் போன்ற உரிமை மீறல் விவகாரத்தை அடிப்படையாக கொண்டு தமிழ்மக்கள் தனித்துவமாக தம்மைத்தாமே ஆளும் உரிமையுடன் கூடிய ஒரு அரசியல் தீர்வை பெறுவது தொடர்பான அரசியல் செயற்றிட்டத்தை மேற்கொள்வது மிக அவசியமானது.

இதற்காக புலம்பெயர் தமிழ்மக்களுடனும் வெளிப்படையான கலந்துரையாடலை மேற்கொண்டு அதனூடாக ஒரு ஒருங்கிணைந்த செயற்றிட்டத்தை உருவாக்க வேண்டும். அந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் களமும் புலமும் செயற்பட வேண்டும்.

முக்கியமாக அரசியல் நகர்விற்கான முடிவுகளை எட்டும்போது எதிர்வுகூறலின் அடிப்படையில் முழுமையாகத் தங்கிநிற்காமல், யதார்த்த பூர்வமாகச் சிந்தித்து, தற்போதைய அரசியல் நிலையில் தமிழ்மக்களின் பலம், பலவீனம், அச்சுறுத்தல், வாய்ப்புக்களை மதிப்பீட்டு பொருத்தமான முடிவுகளை எடுத்துச் செயற்படுவதே அரசியல் ரீதியாக தமிழ்மக்களிற்குப் பயனளிக்கும்.

தற்போது சாதாரணமான அரசியல் செயற்பாடுகளை செய்துகொண்டு ‘தேசியம்’ என்ற நிலைப்பாட்டில் தெளிவாக தடம்புரளாமல் செல்கின்றோம், செயற்படுகின்றோம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அதுவே தமக்கான மக்கள் ஆதரவை பெற்றுத்தரும் அல்லது தக்கவைக்க போதுமானதாக இருக்கும் அல்லது வேறு தெரிவின்றி மக்களை எம்மைத்தான் தெரிவு செய்வார்கள் என்ற சிந்தனையில் கூட்டமைப்பு செயற்படக்கூடாது.

துன்புற்றிருக்கும் மக்களுடன் நெருங்கிச் செயற்பட்டு அவர்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்தல் வேண்டும். அப்போதுதான் அந்த மக்களுடனான புரிதல் வலுப்பெறும். அதனூடாக மக்களின் தேவைகள், செய்யவேண்டிய பணிகள் என்பது தொடர்பான எண்ணம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, இது மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய விடயமாக இருக்கும். இச்செயற்பாட்டினூடாக கூட்டமைப்பின் மக்கள் ஆதரவுத்தளத்தை அடிமட்டத்தில் வலுவாக்க வேண்டும்.

அதேவேளை புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழ்ச் தேசியத்தை சிதைக்க நினைத்துச் செயற்படும் சக்திகளை அப்புறப்படுத்துவதற்கான ஒரேவழி. தமிழர் தாயகப்பகுதியில் கூட்டமைப்பு பரந்தளவில் பணியாற்ற வேண்டுமாயின் புதிய தலைமுறை இளைஞர்கள் உள்வாங்கப்பட்டு கட்சியை விரைவாக சீரமைக்க வேண்டும்.

அடிமட்டத்திலிருந்து, அடுத்தகட்ட அரசியலை நகர்த்தக்கூடிய நிலைவரை அங்கத்துவம் தயார்ப்படுத்தப்பட வேண்டும். அஞ்சல் ஓட்டம் போல அடுத்த தலைமுறைகளை உருவாக்க தற்போதிருந்தே செயற்படத் தொடங்கினால் தான் தமிழ்தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட அரசியல் தலைமைகள் உருவாகும். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை சரியாக மக்கள் மத்தியில் நிலைப்படுத்த இதைவிட சிறந்த தருணம் கிடைக்காது.

இதைப்பயன்படுத்தாமல், இந்த இக்கட்டான கட்டத்தில் மக்களுடன் நிற்காமல் தேர்தல் வரும்போது மட்டும் வாக்கு பெறப்போனால் அது எந்தளவிற்கு பயனளிக்கும் என்பதை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான சம்பந்தர் அவர்கள் அறியாதவரல்ல. ஆகையினால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன் இன்றுள்ள முக்கிய பணிகளாக பின்வருவனவற்றை அடையாளம் காணலாம்.

  1. தமிழ்த்தேசியத்தை அடிப்படையாக கொண்ட பல்தரப்பட்ட அரசியல் செயற்பாடுகளையும் கருத்துக்களையும் கொண்டவர்களுடன் முன்னோக்கிய விவாதங்களும் வெளிப்படையான கலந்துரையாடல்களும் கருத்துப்பரிமாற்றங்களும்; செய்யப்பட வேண்டும்.
  2. இதனூடாக ஒரு ‘நிகழ்சி நிரல்’ உருவாக்கி அதனடிப்படையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
  3. இளம் தலைமுறைகளையும் செயலூக்கம் கொண்டவர்களையும் இனங்கண்டு, உள்வாங்கி கட்சியைச் சீரமைப்பதன் மூலம் அரசியல் பணிகளையும் மக்களின் புனர்வாழ்வு பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். .
  4. தமிழ் மக்களுடைய உரிமைக்கான போராட்டத்தை சர்வதேச தளத்தில் வலுவாக முன்னெடுப்பதற்கு ஏதுவாக தாயகமும் புலம்பெயர் சமூகமும் முரண்பாடுகளற்ற பொருத்தமான வழிமுறைகளை கண்டறிந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
  5. இலங்கைத் தீவில் தமிழ்மக்களின் இருப்பையும் செழுமையையும் அரசியல் பண்பாட்டு தனித்துவத்தினையும் பாதுகாக்கக்கூடிய முறையில் ஒருங்கிணைந்த மூலோபாய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
தற்போதைய அரசியல் சூழலில் செயற்றிட்டத்துடன் கூடிய வினைத்திறனான செயற்பாடே தமிழ்த் தேசியத்தை இலங்கைத்தீவில் நிலைநிறுத்துவதற்கும்; தாயகச்சிதைவை தடுப்பதற்கும் உதவும்.

அதேவேளை

தேசியத்தைப் பாதுகாக்க வெகுஐனப் போராட்டங்கள், சர்வதேச ரீதியான கருத்துருவாக்கங்கள், இலங்கைத்தீவிற்குள்ளும் புலம்பெயர் நாடுகளிலும் பரவலாக முன்னெடுக்கப்பட்டாலேயன்றி அரசியல் அடைவு சாத்தியமாகாது. கூட்டமைப்பினர் அறிக்கைகளையும் சிற்சில அரசியல் சந்திப்புக்களையும் முயற்சிகளையும் மட்டும் செய்துகொண்டு காலத்தைக்கழித்தால் தமிழ்த்தேசியம் இலங்கைத்தீவில் காணாமல் போகக்கூடிய வாய்ப்புள்ளது.

தமிழ்மக்களின் உரிமைகளை இலங்கைத்தீவில் உறுதிப்படுத்த பயனுள்ள பொருத்தமான வடிவத்தில் இனவிடுதலைக்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். தற்போதைய நிலையில் கூட்டமைப்பினர் தம்முன்னுள்ள பணிகளை தலை மேற்கொண்டு செயற்படுவார்களா? என்பதை தமிழ்த் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்ட, கூட்டமைப்பிற்கு வாக்களித்த தமிழ்மக்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அபிஷேகா
Share on Google Plus

About அபிஷேகா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment