மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாடு தலைமைகளுக்கு இல்லையா?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்ற கருத்துகள் இதுவரை வெளிநாடுகளில் இருந்து தான் வந்து கொண்டிருந்தன. தமிழர் தமிழர் தரப்பில் இருந்து கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி தவிர, வேறெந்த கட்சியோ அமைப்போ இதுபற்றி ஒருபோதும் வாய் திறந்ததில்லை. ஆனால் இப்போது நிலைமை மாற்றமடையத் தொடங்கியுள்ளது. 

மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்றும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றது உண்மையே என்றும் அடித்துக் கூறியுள்ளார் ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க. ஜேவிபி தலைவரிடம் இருந்து இப்படியொரு கருத்தா என்ற பலரும் சந்தேகம் கொள்ளலாம். அதிசயம் தான், ஆனால் உண்மை. 

சோமவன்ச அமரசிங்க இந்தக் கருத்தை இலங்கையில் வைத்துக் கூறவில்லை. லண்டனில் வைத்து பிபிசியிடம் தான் இவ்வாறு கூறியுள்ளார். சிலவேளைகளில் உள்ளூரில் இவ்வாறு கேள்வி ஏதும் எழுப்பப்பட்டிருந்தால், அதுபற்றி வாய் திறக்க அவர் தயங்கியிருக்கலாம். லண்டனில் என்பதால் துணிச்சலோடு சொல்லியுள்ளார். பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஸ, போரின் இறுதிக்கட்டத்தில் மீறல்கள் சில இடம்பெற்றிருக்கலாம் என்றும், அவ்வாறான மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால் படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இதன்பின்னர் தான் சோமவன்சவுக்குத் துணிச்சல் வந்துள்ளதோ தெரியவில்லை. 

போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை இவ்வளவு காலமும் நிராகரித்து வந்த அரசாங்கம், இப்போது சுருதியை மாற்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளது போலவே, ஜேவிபியும் மாறியுள்ளது. 

போர்க்குற்றங்கள் நிகழ்ந்தது உண்மையே, அதுபற்றி வெளிநாட்டு விசாரணைகள் தேவையில்லை, உள்நாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும், ஆனால் அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்களில் நம்பிக்கையில்லை என்றெல்லாம் முரண்பாடான விடயங்களை சோமவன்ச கூறியுள்ளார். 

போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக அடித்துக் கூறும் அவர், அதுபற்றிய உள்ளக விசாரணை தான் வேண்டும் என்று கூறுவதும், அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்களில் நம்பிக்கையில்லை என்று கூறுவதும் முன்னுக்குப் பின் முரண்பாடானவை. உள்ளக விசாரணை எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும், நீதியான முறையில் பொறுப்புக் கூறுவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பன போன்ற விடயங்களில் தெளிவான கருத்து அவரிடத்தில் இல்லை. 

இந்தக் கட்டத்தில் இன்னொரு விடயத்தை சுட்டிக்காட்டியாக வேண்டும். 
போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்களை சுட்டிக்காட்டி பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறும் சோமவன்ச அமரசிங்க, அந்தப் போருக்குத் தாமும் பொறுப்பாளிகள் என்பதை மறந்து விட்டார். போருக்கு ஆதரவளித்தது சரியே என்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற அவரிடம், போருக்குத் துணை நின்ற தாமும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பாகி விட்டோமே என்ற குற்றஉணர்ச்சி கொஞ்சமாவது இருப்பதாகத் தெரியவில்லை. குற்றமிழைத்த படையினரைத் தண்டிப்பதற்கேற்ற வகையில் தான் இப்போது காய்கள் நகர்த்தப்படுகின்றன. இந்தநிலையில் போர்க்குற்றங்களுக்கு தனியே படையினர் மட்டும் பொறுப்புக் கூறினால் போதுமா என்ற கேள்வி உள்ளது. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் போரை நடத்தினோம் என்று கூறிவந்த அரசாங்கம், இப்போது தான் இழப்புகள் சில ஏற்பட்டிருக்கலாம் என்கிறது. இந்தநிலையில் படையினரை மட்டும் இவற்றுக்குப் பொறுப்பேற்க வைப்பது எந்தளவுக்கு நீதியானது என்பது கேள்விக்குரியது. 

முன்னதாக, போருக்குத் தலைமை தாங்கியது தாமே என்றும், மீறல்கள் இடம்பெற்றிருந்தால் கூட அதற்குப் படையினரைப் படையினரைப் பொறுப்பாளிகளாக்க முடியாது, தாமே பொறுப்பு என்று கூறியவர்கள் யாரும் இப்போது அப்படிக் கூறுவதில்லை. அதேவேளை, படையினரை இராணுவ ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ வழிநடத்தியவர்களுக்கு இந்தக் குற்றங்களில் பொறுப்பு இருக்கிறதா இல்லையா என்பதை உள்நாட்டு விசாரணைகளின் மூலம் ஒருபோதும் கண்டறிய முடியாது. அவ்வாறானதோர் முயற்சியில் இறங்குவது வீண். உயர்மட்ட அதிகாரிகளும், அரசியல் தலைமைகளும் எத்தகைய உள்நாட்டுப் பொறிமுறைகளுக்குள்ளேயும் சிக்கிக் கொள்ளாமல் தப்பி விடுவர். 

பொறுப்புக்கூறுதல் என்ற வரும்போது, தனியே ஆட்சியில் இருந்தவர்களுக்கானது என்று வரையறுக்க முடியாது. ஜேவிபி போன்ற அரசியல் சக்திகள் கூட இந்தப் போர்க்குற்றங்களுக்குப் பதிலளித்தேயாக வேண்டும். ஏனென்றால் ஆயிரக்கணக்கான மக்களைக் காவு கொண்ட இந்தப் போரை, மூட்டிவிட்டதில் ஜேவிபி வகித்த பங்கு கொஞ்சநஞ்சமல்ல. தாமே போரை முன்னின்று நடத்தியதாகவும், புலிகளை அழிப்பதற்குக் காரணமாக இருந்ததாகவும், ஜேவிவி தலைவர்கள் மார்தட்டியதை யாரும் இலகுவில் மறந்திருக்க வாய்ப்பில்லை. இப்படிப்பட்ட நிலையில், அந்தப் போரில் இடம்பெற்ற சம்பவங்களுக்குத் தமக்குப் பொறுப்பில்லை என்று ஜேவிபியால் நழுவிக் கொள்ள முடியாது. 

குற்றங்களை யார் செய்தாலும், அதன் பின்னணியில் யார் இருந்தாலும்- நீதியாகவும் நியாயமாகவும் பொறுப்புக் கூறப்பட்டால் தான், அதனை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும். இதனையே தான் சர்வதேச தரத்துக்கு அமைவான பொறுப்புக்கூறும் முறை என்று அடிக்கடி வெளிநாடுகள் வலியுறுத்துகின்றன. அரசாங்கமோ படையினரைக் கைகாட்டி விட்டுத் தப்பிக் கொள்ள முனைகிறது. ஜேவிபியோ அரசாங்கத்தைக் காட்டிவிட்டுத் தப்பிக்க நினைக்கிறது. இதனால், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் விவகாரத்தின் நியாயத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படலாம். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பொறுப்புக் கூறுவதற்கான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் அமைக்குமா என்ற கேள்வியும் உள்ளது. ஏனென்றால் போரில் வெற்றி பெற்றுத் தந்த படையிரை தண்டிப்பதா என்று தேசியவாத சக்திகள் குரல் எழுப்புவதாகவும் தகவல். இதனால், அரசாங்கத்தினால் போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் கூட அது எந்தளவுக்கு பயனுறுதித்தன்மை கொண்டதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாது. 

ஜேவிபி தலைவர் மனச்சாட்சியின் படி இவ்வாறு கூறுகிறாரா அல்லது அரசியல் நோக்கத்துக்காக அவ்வாறு கூறியுள்ளாரா என்று தெரியவில்லை. ஆனால் போர்க்குற்ற விசாரணைக்கு அவர் ஆதரவளித்துள்ளது முக்கியமானது.அரசாங்கத்தினால் அமைக்கக் கூடிய போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு ஜேவிபி தரப்பில் இருந்து எதிர்ப்புக் கிளம்ப வாய்ப்பில்லை என்பதை இதன் மூலம் உணர முடிகிறது. இது அரசாங்கத்துக்கு ஆறுதல் தரும் செய்தியாக இருக்க முடியாது. ஏனென்றால் சமாதான முயற்சிகளை குழப்புவதற்காக செய்தது போன்ற போராட்டங்களை ஜேவிபி இதற்காக நடத்தப் போவதில்லை. அப்போது ஜேவிபியின் போராட்டங்கள், போரைத் தொடங்குவதற்கு அரசுக்கு உதவியாக அமைந்தது. இப்போது ஜேவிபி போராட்டம் நடத்தாமல் ஒதுங்கிக் கொண்டால், அரசின் மீதான போர்க்குற்ற விசாரணை அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கவே அது இடமளிக்கும்.

நன்றி கட்டுரையாளர்  கபில் இன்போ தமிழ் குழுமம்


Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment