ஒரு சமூகத்தின் நல்லாளுகை தொடர்பாக எழும் சவால்களை எதிர்கொள்ள இறைமை என்கிற கோட்பாட்டை வலுவானதொரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் இறைமை என்பதன் பொருள் என்ன என்பதை விளங்கி, ஒரு சமூகத்தின் ஆளுகை நடைமுறையை எவ்வாறு ஒழுங்கு செய்து கொள்ளமுடியும்?...
அதிலும் குறிப்பாக பல்வேறு ஆளுகை அமைப்புகளுக்கு இடையில் அதிகார பரவலாக்கல் ஒழுங்குகளை எவ்வாறு வகுத்துக் கொள்ள முடியும் என்பதை முடிவு செய்வதில் பலர் தெளிவின்றி உள்ளனர். இறைமையின் பல்வேறு பண்புகளைப் பற்றி அறிந்திருத்தல் இப்பணியினை இலகுவாக அமுல் செய்யத் துணைபுரியும்.
தற்கால அரசியல் விஞ்ஞானத்தில் கூறப்படுகின்ற இறைமைக் கோட்பாடு ஒரு மேலைத்தேயக் கோட்பாடாகும். எமது நீதி நூல்களிலும் இலக்கியங்களிலும் கூறப்படும் இறைமை வேறு பொருள் கொண்டவை. இறைமை என்ற கருத்து சோக்கிரட்டீஸ் காலத்தில் தோன்றி மத்திய கால அரசுகளில் வலுப்பெற்று நவீன காலத்தில் மேலும் விரிவடைந்துள்ளது.
குறிப்பாக பிரித்தானிய அரசனின் அதிகாரங்கள் பிரபுக்களுக்கு பகிரப்படும் போதும், பாராளுமன்றத்தை வந்தடைந்த போதும், பின்னர் பிரஞ்சுப் புரட்சியின் போதும், அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் போதும், அமெரிக்க சுதந்திரத்தின் போதும் இக் கோட்பாடு மேலும் பல விளக்கத்தைப் பெற்றது.
இதில் முக்கியமான விடயம் யாதெனில் இக்கோட்பாடு பேசப்படத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை சகலராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு வரைவிலக்கணத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு வரைவிலக்கணமும் இன்னொன்றைவிட ஏதோ ஒரு வகையில் வேறானதாக அமைந்துள்ளது.
இதற்கான காரணம் இறைமை என்பது ஒவ்வொரு ஆட்சிச் சூழலுக்கும் ஏற்றாற்போல் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருப்பதாகும். வெஸ்பாலிய உடன்படிக்கையில் கருதப்பட்ட இறைமை கோட்பாட்டை விட 14ஆம் லூயி கூறிய “நானே அரசு” என்ற கருத்திலிருந்து பிறக்கும் இறைமைக் கோட்பாடு வித்தியாசமானதாகும்.
அதே போல பிரித்தானியா அரசின் இறைமை பிரஞ்சுப்புரட்சியின் பின்வந்த இறைமைக் கருத்துக்களை விட வித்தியாசமானது. ஐக்கிய அமெரிக்க அரசுகளில் இறைமை என்ற கருத்து ஐரோப்பிய யூனியனில் தற்போது பரிணமித்துள்ள ஒரு இறைமைக்கருத்தைவிட வேறானது.
சர்வதேச சட்டங்களுக்கும் முறைமைகளுக்கும் இணங்கியொழுகும்போது நாடுகளின் இறைமை குடியரசுகளின் கூட்டு ஆட்சியொன்றில் பேசப்படும் இறைமையை விட வித்தியாசமானதாகும்.
இறைமை என்பது குறிப்பிட்ட ஒரு ஆள்புல எல்லைக்குள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு சுதந்திரமாக தனது அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மேலாண்மையான தன்மை என்று கூறலாம். இது அரசியல் அபிலாசைகளின் அடிப்படையில் சட்டத்தினை ஆக்கவும் ஆட்சி செய்யவும் உள்ள ஆற்றலைக் குறிக்கும்.
மக்களின் நலன்களைப் பேணும் அக்கறையுள்ள உண்மையான ஆட்சியைச் செய்வதானால் இந்த இறைமை ஆற்றல் இருத்தல் வேண்டும். இறைமை பூரணமானது, எந்த சட்டங்களாலும் பிரிக்கப்பட முடியாதது, பராதீனப்படுத்த முடியாதது என்பன போன்ற கருத்துகள் முன்னர் இருந்தன.
ஆனால் நவீன காலத்திற்குப் பின்னர் (Post modern) அரசாங்கம் என்ற கருத்திலிருந்து விலகி ஆளுகை (Governance) பற்றிய கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றதோடு இறைமை பற்றிய கருத்துக்களும் மாறிவிட்டன.
சாதாரண மொழியில் கூறுவதானால் வேறு எந்த ஒரு வெளிநாட்டு அரசாங்கத்துக்கும் கட்டுப்படாது பூரணமாகச் செயற்படும் அரசாங்கமாக ஒன்று அமையுமானால் அங்கு வெளிநாட்டு இறைமை (External Sovereignty) உள்ளது என்று பொருளாகின்றது.
ஒருநாட்டின் தலமைத்துவ அதிகாரம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் பகிரப்படும் போது அங்கு பகிரப்பட்ட இறைமை (Shared Sovereignty) உண்டென்று கூறலாம். சமஸ்டி ஆட்சி முறையிலுள்ள பிராந்திய அரசுகள் (Federal system of Government) தேசிய அரசாங்கத்திற்குப் புறம்பான அதிகாரங்களைக் கொண்டிருப்பதால் இதுவும் வேறு ஒரு இறைமையைக் குறிக்கும்.
இதை விட அரசுகளின் கூட்டில் (Confederation) அதாவது அந்த அமைப்பிலிருந்து விலகிச் செல்லும் உரிமையுடன் கூடிய கூட்டு ஆட்சியிலுள்ள அங்கத்துவ நாடுகளில் அல்லது குடியரசுகளில் உள்ள இறைமை இன்னும் வேறானதாகும்.
பொதுவாக உள்ளக இறைமை (Internal Sovereignty) என்பது உள்ளுர் விவகாரங்களைச் செயற்படுத்தும் முறையைக் குறிக்கும். முக்கியமாக உள்நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் உறுதியாக நிலைநாட்ட உள்ளக இறைமை தேவை.
பலமான உள்ளக இறைமை இருந்தால் தான் பல்வேறு சமூகங்களின் மத்தியில் ஒழுங்குகளைப் பேணவும் வெவ்வேறு சமூகக் குழுக்களை கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவும் முடியும். பலமான உள்ளக இறைமை இருந்தால்தான் ஒப்பந்தங்களையும் சட்டங்களையும் அமுல் செய்ய முடியும்.
குழப்பங்களையும் கலகங்களையும் அடக்குவதற்கு நாட்டின் தலைமைத்துவத்திற்கு இது தத்துவம் வழங்குகிறது. உறுதியான உள்ளக இறைமை சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் ஆற்றலாக வெளிப்படும்.
உள்ளுரில் உள்ள பொலிஸ், இராணுவம், துணைப்படைகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம். அவற்றுடன் இணக்கங்கண்ட விடயங்களின்படி அவர்களை இணங்கி, ஒழுக வைப்பதற்கான ஆற்றலாகவும் இந்த உள்ளக இறைமை இருக்கும்.
றெனிக்கி (Renicke, 1998) என்ற அறிஞர் உள்ளக இறைமை என்பது ஒரு சமூகத்தில் பொதுக் கொள்கையை உருவாக்கி அதனை அமுலாக்கி முகாமை செய்வதற்கு அரசாங்கத்திற்கு உள்ள ஆற்றலைக் குறிக்கும் என்று கூறியதோடு ஒரு நாட்டின் உள்ளக இறைமைக்கான அச்சுறுத்தல் என்பது அங்கு பொதுக் கொள்கையை அமுலாக்கி முகாமை செய்வதற்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தலையே கருதும் என்றும் கூறினார்.
பொதுவான இன கலாசார வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சமூகங்கள் சுய நிர்ணய உரிமை கோரி தமக்குரிய ஒரு பிரதேசத்தில் தமது இறைமையை நிறுவமுயலும் சந்தர்ப்பங்களில் (Nation States) அப்பிரதேசத்தில் பூரண இறைமையுள்ள (Absolute Sovereignty) நாடுகளாக இல்லாத வகையில் சுய ஆட்சி பிரதேசங்களாக (Autonomous Areas) மாற முயலும் போது இவ்வுள்ளக இறைமைத் தத்துவம் கூடிய அளவில் உபயோகிக்கப்படுகிறது.
இலங்கையின் இதன் பொருத்தப்பாடு பற்றி சிந்திக்க முடியும். எனினும் உள்ளக இறைமை என்பது பொதுவாக பிரசைகளுக்கும், அரசுக்கும் இடையிலுள்ள உறவைக் குறிப்பதாக இருக்கும். மக்கள் மீது எந்த அளவிற்கு அதிகாரம் அரசாங்கத்துக்கு இருக்கிறது என்ற வினாவிற்கு விடையாக இந்த உள்ளக இறைமையைக் கூறலாம். இது மத்திய அரசுக்கும் பிராந்தியம் அல்லது சமஸ்டி அரசுகள்மீதும் உள்ள மேலாதிக்கத் தன்மையைக் குறிக்கும்.
நவீன காலத்திற்குப் பின் இறைமையின் போக்கு
நவீனகாலத்திற்குப்பின் (Post modern Period) குறிப்பாக 20ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மனித குலத்தில் ஏற்பட்ட அறிவியல், தகவல் தொடர்பு, விஞ்ஞான மாற்றங்கள் அரசியல் சித்தாந்தங்களில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தின. எந்த நாடும் சர்வதேச சட்டங்களுக்கும், முறைமைகட்கும், நியமங்களுக்கும் கட்டுப்பட்டேயாக வேண்டும்.
எனவே இன்றைய இறைமை என்பது பின்னப்பட்ட சர்வதேச இறமையாகிவிட்டது. (Complex Sovereignty) தற்போது அரசாங்கத்தை விட ஆளுகை நடைமுறைக்கே முதலிடம் ஏற்பட்டுள்ளது.
புதிய கருத்துக்களின்படி ஆளுகைக்கு அரசாங்கம் ஏகபோக உரிமை (Monopoly) கொண்டாட முடியாது. ஆளுகையில் தனியார்துறை, சிவில் சமூகம், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியோரும் பங்காளிகளாக ஆகிவிட்டனர்.
புதிய கருத்துக்களின்படி ஆளுகைக்கு அரசாங்கம் ஏகபோக உரிமை (Monopoly) கொண்டாட முடியாது. ஆளுகையில் தனியார்துறை, சிவில் சமூகம், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியோரும் பங்காளிகளாக ஆகிவிட்டனர்.
மத்தியிலுள்ள ஒரு அரசாங்கம் மட்டும்தான் ஆட்சிக்குப் பொறுப்பானது என்று இல்லாமல் அதிகாரங்கள் வேறு படி நிலை ஆளுகை அமைப்புகளுக்கு (Tiers of Governance structures) பகிரப்பட்டுவிட்டன.
புதிய ஆளுகை அமைப்புகளுக்குரிய அதிகாரப்பகிர்வில் அண்மித்த தன்மை (Proximity) சுயாதீனம் (Autonomy) மத்திய அரசாங்கத்தின் ஆகக் குறைந்த தலையீடு (Subsidiarity) என்ற தத்துவங்கள் அடிப்படையாக அமைந்தும் விட்டன. எனவே இறைமை குறுக்காகவும் நெடுக்காகவும் பிரிக்கப்பட்டுவிட்டது என்றும், பராதீனப்படுத்தப்பட்டுவிட்டது என்றும் பகிரப்பட்டுவிட்டது என்றுமே கூறவேண்டும்.
ஆனால் உள்ளக இறைமை என்ற கோட்பாட்டை எவ்வாறு ஒரு வலுவான கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்று நோக்குகையில் வைன் டெலோறியா (Subsidiarity) என்ற அறிஞர் உள்ளக இறைமையானது அமெரிக்க பழங் குடிகளின் சகல வாழ்வியல் கூறுகளிலும் பரந்து நிற்கின்றது என்றும் உதாரணமாக பழங்குடிகள் தமக்கான ஒரு பொலீஸ் படையை வைத்திருக்கவும் மற்றும் தமக்குரிய சிறுவர் நலச் சட்டத்தை ஆக்கி அமுல்படுத்தும் அதிகாரத்தையும் அது அவர்களுக்கு வழங்கி உள்ளது என்கின்றார்.
மேலாதிக்க ஆட்சி முறைகளின் கீழ் சீரழிந்து போகின்ற கலாசாரப் பண்பாட்டு, மனித விழுமியங்களைக் காக்க விளையும் ஒரு சமூகத்திற்கு இக் கோட்பாடு சிறந்த ஒரு கருவியென்றே கூற வேண்டும்.
ரல்ரான் எதிர் மாயாஸ் என்கின்ற வழக்கில் அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளக இறைமைக் கோட்பாட்டின் பிரயோக ரீதியான உபயோகத்தை வெளிக்காட்டுகிறது. இந்த வழக்கானது செறொக்கீ பிரதேச நியாயவாதிகளால் (Cherokee jury) குற்றவாளியெனத் தீர்க்கப்பட்ட ஒரு கொலை வழக்கின் மேன்முறையீடாகும்.
இந்த வழக்கு முதலில் அமெரிக்க நீதி விசாரணைமுறையின்கீழ் உள்ள நியாயவாதிகள் குழுவை விட சிறிய ஒரு குழுவினால் விசாரிக்கப்பட்டிருந்தது. எனினும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் பின்வருமாறு கூறியது. செறொகீ பழங்குடிப் பிரதேசம் தன்னுடைய உள்ளுர் விவகாரங்களில் பாரம்பரியமாக தன்னிடம் எப்போதுமே இருந்த அரசியல் அதிகாரத்தைப் பிரயோகித்துள்ளது.
உண்மையில் அவர்களது இந்த அதிகாரம் அமெரிக்க அரசியல் திட்டம் தயாரிப்பதற்கு முன்பே அவர்களிடம் இருந்துவந்துள்ளது என்றும் கூறியது. இதனுடைய கருத்து யாதெனில் அமொரிக்க பழங்குடிகள் தமது அதிகாரத்தை இவ்வகையில் பிரயோகிக்க முடியும்;. தங்களது உள்ளக இறைமையைப் பாதுகாக்க அவர்களுக்கு உரிமை உண்டு என வைன் டெலோறியா வாதிடுகின்றார்.
எனவே உரிமைகளைப் பாதுகாக்கவிளையும் சமூகங்கள் அவர்களுக்கு மட்டுமேயான அதிகாரங்களை (Prerogative) ஒட்டுமொத்தமாக பாதுகாக்க இந்தத் தத்துவம் உதவி செய்யும். இது அலங்காரமான அதிகாரங்களையன்றி அடிப்படையானதும் விட்டுக்கொடுக்க முடியாததுமான தத்துவங்களைத் தம்மிடம் தக்க வைக்க உதவும் கோட்பாடாகும்.
இது இலங்கை தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வல்லதகவல் ஆகும். இதன் படி இலங்கை தமிழ் நிலத்தில் தேசவழமைச்சட்டம், மட்டக்களப்பின் நிலவும் முக்குவ சட்டம் என்பன என்றும் எவராலும் மாற்றமுடியாத உள்ளக இறைமை கொண்ட சட்டங்கள் என்று கருதமுடியும்.
இலங்கை தமிழர்களது தேசியம், கலை, பண்பாட்டு, சமய நம்பிக்கைகளுடன் இணைந்த வாழ்வியல் இயக்கமும் உள்ளக இறைமை கொண்டவைகளே.
பேராசிரியர். இரா.சிவசந்திரன்
Email:- avsrsiva@gmail.com
0 கருத்துரைகள் :
Post a Comment