பேச்சுவார்த்தைகளின் தோல்வியும் புதிய வழிகளின் அவசியமும்

எமக்கிடையே நாம் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்றால் எதிரிகளிடம் சரணடைய நேரும்   தீர்வுத்திட்டம், பேச்சுவார்த்தை, சமரசம், உடன்பாடு, ஒப்பந்தம்,ஒப்பந்த மீறல், ஒப்பந்தம் கிழித்தெறியப்படல், வட்டமேசை மகாநாடு, தெரிவுக்குழு, மீண்டும் பேச்சுவார்த்தை என இலங்கை அரசியல் அகராதியில் இச்சொற்தொடர்கள் தீர்வின்றி துச்சாதனன் கையில் நீளும் பாஞ்சாலியின் துகிலென நீண்டு செல்கின்றன. பாஞ்சாலியின் துகிலை முடிவிலியாய் நீள வைக்க பார்த்திபன் இருந்தான். ஆனால் ஈழத்தமிழரின் நிலையில் துகில் ஒரு முடிவுப் பொருள். இனியும் நீள அத்துகிலுக்கு இடமிருக்காது எனத் தெரிகிறது.


பிறக்கப்போகும் பன்னிரண்டாம் ஆண்டு ஈழத்தமிழரின் அரசியலில் ஓர் ஆக்க காலம். இதில் விதைக்கப்படுபவைதான் பின்பு அறுவடைக்கு உரியவையாகும். 2002- ம் ஆண்டு ஈழத் தமிழரின் அரசியலில் ஓர் ஆக்க காலம் தோன்றியிருந்தது. ஆனால் அது கனியாக முன்பே கருகிவிட்டது.பத்து ஆண்டுகளின் பின்பு மீண்டும் ஓர் ஆக்க காலம் வருகிறது. இந்த ஆக்க காலத்தைத் தவறவிட்டால் வளம் பொருந்திய, தொன்மை மிக்க,செழிப்பான ஈழத் தமிழ்த் தேசிய இனத்தைப் பூமியில் அழியவிடக்காரணமானோம் என்ற வரலாற்றுப் பழிச்சொல்லுக்கு நாம் அனைவரும் ஆளாக நேரும். நடந்தவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு நடக்க வேண்டியவற்றை திட்டமிட வேண்டிய தவிர்க்கமுடியா அவசரமும்,அவசியமும் எம்முன் எழுந்துள்ளன.தலைவர்களே, அறிஞர்களே, எழுத்தாளர்களே, படைப்பாளிகளே,               ஊடகவியலாளர்களே, மாணவர்களே, மக்களே பேதங்களை மறந்து மறுக்கப்பட முடியாத தமிழ்த் தேசிய உரிமையைக் காக்க, நாம் அனைவரும் ஒன்றுதிரள வேண்டிய வரலாற்றுக் கட்டம் எம்முன் விரிந்து கிடக்கிறது. இந்தக் கட்டம் தவறவிடப்பட்டால் வரலாற்றில் மீண்டும் ஒரு கட்டம் வர இடமிருக்காது.

மூன்றாம் உலகப் போரில் எத்தகைய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென அணு விஞ்ஞானி ஐன்ஸ்ரினிடம் கேள்வி கேட்கப்பட்ட போது 'மூன்றாம் உலகயுத்தத்தில் எத்தகைய ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான்காம் உலக மகா யுத்தத்தின் போது கல்லாயுதங்கள்தான் பயன்படுத்தப்படும் என்பதை என்னால் துணிந்து கூறமுடியும்.' என்று பதிலளித்தார்.அதாவது பன்னிரண்டாம் ஆண்டுக்குரிய வாய்ப்புக்களை பயன்படுத்தத்தவறினால் பின்பு ஈழத் தமிழினம் என்ற ஒரு தேசிய இனம் என்ற சொல்லே   இந்த பூமியிலிருக்க முடியாத நிலைதான் மிஞ்சும். ஆதாவது மூன்றாம் உலக யுத்தத்தின் பின்பு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் எதுவுமே மிஞ்சாது, கற்கள்தான் மிஞ்சும் என்பது போல 2012-ஆம் ஆண்டை சிங்கள இனவாதத்தின் கையில் தஞ்சமடைய விடுவோமானால் தமிழர்கள் தஞ்சமடைய ஒருசாண் நிலமும் இருக்காது. புதைகுழிகளைக் கிளறி எறியும் சிங்கள இனவாதம் தமிழரின் நினைவைக் கூறவல்ல ஒரு கல்லைக்கூட விட்டுவைக்காது என்பதில் சந்தேகமில்லை.


2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை மூலம் எதிரி பெரும் இராணுவ வெற்றியை ஈட்டினார். ஆயினும் இன அழிப்பிற்கான அரசியல் யுத்தத்தில் இன்னும் எதிரி முழு வெற்றியை ஈட்டவில்லை.2012-ஆம் ஆண்டுதான் இந்த அரசியல் யுத்த களத்தின் இறுதிக்காலம்.இதில் வெற்றி ஈட்டுபவருக்கு நிரந்தர வெற்றியும், தோல்வி உறுபவருக்கு நிரந்தரத் தோல்வியுமென வெற்றி தோல்வி தெளிவான இரு பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆதலால் அதிகம் புத்திபூர்வமாகவும்,நிதானமாகவும், திட்டமிட்டும் வெற்றியை நோக்கி நாம் நகர்ந்தாக வேண்டும்.எமது பக்கத்தில் யார் தோல்வி அடைந்தாலும், அது சந்ததிக்குரிய தோல்வியாய், தலைமுறை தலைமுறைகளுக்குரிய தோல்வியாய், தமிழன் என்று சொல்லப்படும் ஒவ்வொருவருக்கும் உரிய தோல்வியாய், அதுவும் மீளமுடியாத தோல்வியாய் அமைந்துவிடும். ஆதலால் ஒவ்வொரு தமிழனும் ஐக்கியப்பட்டுத் தமிழ்த் தேசியத்தைத் தற்காத்து முன்னேற வேண்டிய தவிர்க்க முடியாத வரலாற்று நிர்ப்பந்தக் காலகட்டமாய் இது உள்ளது.சிங்கள இனத்தவரின் பாரம்பரிய வரலாற்று எதிரி இந்தியாவாகும்.




சிங்கள இனத்தவர்கள் இந்திய ஆதிக்க விஸ்தரிப்பிற்கு அஞ்சுகிறார்கள். அவர்களின் பார்வையில் தமிழரை இந்தியாவின் நீட்சியாகவே பார்க்கிறார்கள். எனவே இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான தமது யுத்தத்தை ஈழத் தமிழர்கள் மீது அவர்கள் புரிகிறார்கள்.ஆதலால் இந்தியாவுடன் தொடர்புறும் நிரந்தரமான புவிசார் அமைவிட சூழலில் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனத்தவரின் இன எதிர்ப்புவாதமும் நிரந்தரமானது. எனவே தமிழர்களின் நியாயமான உரிமைகளை சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. மிருகங்களைக் கொல்வது பாவமேயாயினும், தமிழரைக் கொல்வது பாவமில்லை என்ற மகாவம்ச கருத்துருவம் சிங்களவர்கள் மத்தியில் தெளிவாக ஸ்தாபிதம் அடைந்திருக்கிறது. ஆதலாற்தான் எவ்விதமான தயக்கமும்,கூச்சமும் வெட்கமும் இன்றித் தமிழர்களை குழந்தைகள், கற்பிணித்தாய்மார், பெண்கள், வயோதிபர், நோயுற்றோர் என எவ்வித பேதமும் இன்றி இலட்சக் கணக்கில் அழித்தொழிக்க முடிந்ததுடன் அனைத்துவகை தர்மங்களுக்கும் முரணாகத் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யவும் முடிந்துள்ளது. இத்தகைய மனோபாவம் உள்ளவர்களிடம் இருந்து நியாயங்களையோ, அல்லது நீதியான தீர்வுகளையோ ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. எனவே சிங்கள ஆட்சியாளர்கள் முன்வைக்கும் எந்தொரு பேச்சுவார்த்தைக்கும் அற்ப ஆயுளும், அகாலமரணங்களுமே இயல்பானது.அத்துடன் மேலதிகமாக சிங்கள ஆளும் குழாத்தினர் தம்மிடையேயான அரசியல் ஆதிக்கப் போட்டியின் நிமித்தம் தமிழினத்திற்கு எதிராக வக்கிரமான இனவாதத்தையே ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவர்.எனவே சிங்கள ஆட்சியாளர்களால் தமிழரின் உரிமைகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை.இவ்வகையிற்தான் பேச்சுவார்த்தைகளை நாம் நோக்க வேண்டும்.



பேச்சுவார்த்தைகள் பொறுத்து சிங்கள ஆட்சியாளர்களுக்கு அவ்வப்போது ஒரு தெளிவான இலக்கிருக்கும்.அதாவது தம் பதவியைத்தக்கவைப்பதற்கும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும், பேச்சுவார்த்தைகளை ஓர் ஊடகமாக அவர்கள் கையில் எடுப்பதுண்டு. தமது பதவிக்கான உள்நாட்டு, வெளிநாட்டு இடையூறுகள் தணியும் போது பேச்சுவார்த்தைகளை அவர்கள் எவ்வித தயக்கமுமின்றி கைவிட்டுவிடுவர். இறுதியில் தமிழ்த் தலைவர்கள் இலவுகாத்த கிளிகளாய் வெட்கித்துப் போவதுண்டு.தற்போது பேச்சுவார்த்தை தொடர்பாக அரசின் பித்தாலாட்டம் தெளிவாகத் தெரியவந்துள்ள நிலையில் பல்வேறு தமிழ்த் தலைவர்களும் ஒத்தகருத்துக்களை வெளியிட்டுவருவது மகிழ்ச்சிக்குரியது.


திரு இரா.சம்பந்தன், திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு.வி.ஆனந்தசங்கரி போன்ற பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த தமிழ்த் தலைவர்களும், ஏறக்குறைய ஒரேமாதிரியான கருத்துக்களை முன்வைக்கும் நிலை தோன்றியுள்ளமை ஒரு நற்சகுனமாகும்.   கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நிகழ்ந்துவரும் பேச்சுவார்த்தைகளின் போதெல்லாம் சிங்களத் தலைவர்கள் தம்மைத் தற்காத்து பின்பு முன்னேறிய கதைகளே தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளது.பேச்சுவார்த்தைகளில் சிங்களத் தலைவர்கள் தமிழரின் உரிமைகளை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்பது உண்மை. ஆனால் இங்குள்ள ஒரு கேள்வி என்னவெனில் அந்த உண்மையைத் தெரிந்துகொண்ட பின்பும்,பேச்சுவார்த்தைகளில் நாம் ஈடுபடுவதன் மூலம் அடையக் கூடிய தந்திரோபாய ரீதியான அரசியல் அனுகூலங்கள் ஏதாவது உண்டோ என்பதுதான்.பேச்சுவார்த்தைகளின் மூலம் சர்வதேச அரங்கிலும், மக்கள் முன்னிலையிலும் எதிரியை தனிமைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள்   உண்டாயின் அதில் ஓர் அனுகூலம் இருக்கவே செய்யும். ஆனால் துரதிஷ்டவசமாக எதிரியைத் தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக நாம் தனிமைப்படும் ஒரு துயரமான நடைமுறை கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது. ஒரு பேச்சுவார்த்தையின் போது அடையக் கூடிய ராஜதந்திர இலக்குகள் என்ன என்பதை அப்பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள் முன்கூட்டியே தெளிவாக வரையறை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவிடயத்தில் நாம் போதியளவு வீட்டுப் பாடங்களை(Home Works) செய்து கொள்ளும் பாரம்பரியம் இல்லாதவர்களாக இருக்கிறோம். அதேவேளை இத்தகைய Home Works சிங்களத்தரப்பில் எப்போதும் செய்யப்படுவதுண்டு.

இப்போது தமிழ்த் தலைவர்களிடம் காணப்படும் ஒத்தகருத்துப் போக்கை நாம் முதன்மைப் படுத்துவது நல்லதும் அவசியமானதுமாகும். 1986-ம்ஆண்டு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நிகழ்ந்த ஓர்    அரசியல் கருத்தரங்கின் போது பேசிய ஒருவர் பின்வருமாறு கூறினார்.'எங்களுக்கிடையே நாம் விட்டுக்கொடுப்புக்களைச் செய்யத் தயாரில்லை என்றால் எதிரிகளிடம் சரணடையத் தயாராகிறோம் என்பதே அர்த்தம்'.இக்கூற்று என்றும் கவனத்தில் கொள்ளத் தக்கது.'விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை' என்ற தமிழ்ப் பழமொழியைத்   தமிழ்த் தலைவர்கள் புரிந்துகொண்டு தம்மிடையே பொதுநோக்கின் அடிப்படையில் விட்டுக்கொடுப்புக்களைச் செய்யத் தயாராக வேண்டும்.'எதைமாற்ற முடியுமோ அதன் மீது செயற்படு, எதைமாற்ற முடியாதோ அதைப்  புரிந்து வழிநட' என்ற தத்துவாத்த வாக்கியம் இனமேலாதிக்க வாதம் பொறுத்து எமக்கு முக்கியமானது. சிங்கள இனமேலாதிக்க வாதத்தை ஒருபோதும் மாற்றமுடியாது. இந்த அடிப்படையில் நாம் எமக்குள் ஐக்கியப்பட்டு செயற்பட்டாக வேண்டும். அரவணைத்துப் போகும் அரசியல் தலைமைத்துவத்திற்கு நாம் தகுதியாக வேண்டும். எமக்கிடையே வெட்டி அரசியல் நடாத்தி நாம் அனைவருமே வீழ்ந்துள்ளோம். இப்போது ஒருவருடன் ஒருவர் ஒட்டி அரசியல் நடாத்தும் ஒரு புதிய அரசியல்  கலாச்சாரத்திற்கு நாம் தயாராக வேண்டும்.   முன்னுதாரணம் மிக்க தலைவர்களும், முன்னுதாரணம் மிக்க அறிஞர்களும் எமக்கு மிக அவசியமானது. அனைவரையும் அரவணைக்க வல்ல தலைவர்களும்,ஆக்கபூர்வமாக கருத்தை முன்வைக்கும் அறிஞர்களும், அவற்றிற்கான கலாச்சாரமும் எம்மத்தியில் வளரவேண்டும்.  
    
பேச்சுவார்த்தைகள் தோல்வி என்றால் அடுத்தது என்ன என்ற வேலைத்திட்டம் மிகவும் அவசியமானது. எப்போதும், எச்செயலைச்செய்யும் போதும், எதிலும், அடுத்தது என்ன? (What is next?) என்ற திறவுகோல் வார்த்தை அரசியல் தலைவர்களிடம் இருக்கவேண்டும்.இத்திறவு கோல் இன்றி வாழ்வில் எதுவும் இருக்க முடியாது என்கின்றபோது அரசியலில் இத்தகைய திறவுகோல் இல்லாதிருப்பது ஆக்கத்திற்கன்றி அழிவிற்கே கொண்டுபோய் விடும் .தற்போது பேச்சுவார்த்தைகள் தோல்வி என்ற நிலையில் நேரடிப் போராட்ட நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்களும், தமிழ்த் தலைமைகளும் தயாராக வேண்டும். அது அகம், புலம், தமிழகம், சர்வதேச அரங்கமென ஒருங்கிணைந்து விரியவேண்டும். இதில் எதுவும்     தனிமைப்படுத்தப்பட்டு விடக்கூடாது.எம்மை நாம் சற்று நிதானமாக காய்தல் ஒறுத்தல் இன்றி பரிசீலிப்போம். மன்னிக்கவும், 'முப்பது ஆண்டுகளாய் நாம் அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டு தோல்வி அடைந்து விட்டோம்' என்று எழுமாத்திரத்தில் கூறிவருகிறோம். உண்மையில் நாம் முப்பது ஆண்டுகளாய் அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்பதில் ஒருவகைப் பொய் இருக்கிறது. தகவல்களை நேர்மையாகத் தொகுத்துப் பரிசீலிப்போம்.சுதந்திரத்தின் பின்பு தமிழ் மக்களின் உரிமைக்காக நேரடிப்போராட்டத்தில் ஈடுபடும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர் தந்தை    செல்வாதான். 1956ம் ஆண்டு தனிச்சிங்கள மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து    காலிமுகத்திடலில் சில மணித்தியாலம் வரையிலான சப்பாணி அமர்வுப்போராட்டத்தை தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி     நடாத்தியது. இதுவே முதலாவது முக்கிய நேரடிப் போராட்ட  உதாரணமாகும். ஆனால் சில மணித்தியாலங்களுக்குள் இப்போராட்டத்தை அரசு காடையர்களை ஏவி, பொலிசார் முன்னிலையில் கலைத்து விட்டது.பொலிசார் முன்னிலையில் கலைக்கப்பட்டது என்பதை விடவும்,    பொலிசாரின் அனுசரணையுடன் பலாத்காரப் பிரயோகத்தின் மூலம் கலைக்கப்பட்டது என்பதே சரியானதாகும். இத்துடன் போராட்டம் தொடரவில்லை. ஆனால் இவ்வாறு போராட்டத்திற்கு தடை ஏற்படும் போது போராட்டத்தை காந்தி கைவிடுவதோ, இடைநிறுத்துவதோ இல்லை. மாறாக அது இன்னொரு வகையில் முன்னெடுக்கப்படும்.

இந்த 1956-ம் ஆண்டு சம்பவத்தின் பின்பு நிகழ்ந்த முக்கிய போராட்டமாக 1961-ம் ஆண்டு சத்தியாக்கிரகத்தையே குறிப்பிடலாம். இச்சத்தியாக்கிரகப் போராட்டம் தமிழ் மண் எங்கும் தொடர்ச்சியாக   இரண்டு மாதங்கள் நிர்வாகச் செயலகங்களை செயல் இழக்கச் செய்வதில் தொடர்ந்தது. ஆனால் இரண்டு மாதங்களின் பின்பு அரசு இராணுவம்    கொண்டு போராட்டத்தைத் தடைசெய்ததோடு போராட்டம் அப்படியே நின்றுவிட்டது.பின்பு அது தொடரப்படவில்லை. இதன் பின்பு  1965-1970 –ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் டட்லி செனநாயக்கா தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும் ஓர் அங்கமாக இணைந்ததன் மூலம் அனைத்துவகைப் போராட்டங்கையும் இக்காலகட்டத்தில் அது கைவிட்டிருந்தது.1970-ம் ஆண்டின் பின்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான    ஐக்கிய முன்னணி அரசாங்க காலகட்டத்தில் தமிழர் கூட்டணி (TUF) உருவாகி பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியாக (TULF) மாற்றமடைந்த காலகட்டத்தில் தமிழ்த் தலைவர்கள் மத்தியில் ஒரு பெரும் ஐக்கியம் நிலவிய போதிலும், முழுத் தமிழீழ மண்ணும் தழுவிய அகிம்சைப் போராட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. மற்றும் கறுப்புக்  கொடி காட்டல் போன்ற சம்பவங்களும், ஒரளவு அவ்வப்போதைய கடையடைப்பு சம்பவங்களையும் தவிர பாரிய போராட்டங்கள் எதனையும் உதாரணமாகக் காட்டமுடியாது. இக்கால கட்டத்தில் குறிப்பிடக்கூடிய முக்கிய  விடயமாக யாழ்ப்பாணத்தில் மாணவர் பேரவை 1970 டிசம்பரில் நடாத்திய மாபெரும் மாணவர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தைக் குறிப்பிடலாம்.  இப்படியொரு ஊர்வலத்தைத் தானும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி செய்ததில்லை.சிங்கள ஆட்சியாளர்கள் அகிம்சைப் போராட்டத்தை மதிப்பார்கள் என்று  நான் சொல்ல வரவில்லை. ஆனால் அந்த அகிம்சை வழியில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு கொடுக்கக் கூடிய உயர்ந்தபட்ச அரசியல் நெருக்கடியை எமது பழைய தலைமைகள் கொடுக்கவில்லை என்பதையே இங்கு  சுட்டிக்காட்ட விளைகிறேன்.  இப்போதைய நிலையில் அகிம்சைப் போராட்டத்திற்கான உள்நாட்டு,  வெளிநாட்டு, சர்வதேச களங்கள் மிகவும் விரிவாகவும், மிகவும்   சதாகமான நிலைமைகளை கொண்டவையாகவும் உள்ளன. ஆதலால் இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (TNA) அகிம்சை வழியில் இலங்கைத்தீவு தழுவிய  போராட்டங்களை முன்னெடுக்க ஏதுவான வாய்ப்புக்கள் உள்ளன.குறிப்பாகத் தலைநகர் கொழும்பிலும், பொதுவாகத் தமிழ் மண்   எங்கிலும் இத்தகைய போராட்டங்களை அவர்களால் முன்னெடுக்க முடியும்.

இலட்சக் கணக்கான தமிழ் மக்களை பலிகொண்ட இனவாத அரசியலின்   முன்னிலையில் அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஏதுவான சர்வதேசப் பிரபலியமும், சர்வதேச அக்கறையும் இப்போது  ஏற்பட்டிருக்கிறது. எனவே இதனைப் பயன்படுத்தி இப்பின்னணியில்   அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுப்பது இலகுவானது.போராட்டம் என்றால் அது ஒரு தேநீர் விருந்தல்ல. கஷ்டங்களும்,நெருக்கடிகளும், சிறைவாழ்வும், எதிர்பார்க்கப்பட வேண்டியவைதான்.ஆனால் ஆயுதப் போராட்டத்தை நசுக்கியது போல, பயங்கரவாதத்தின்   aqபெயரால் இலச்சக் கணக்கில் மக்களை கொன்று குவித்தது போல,அகிம்சைப் போராட்டத்தில் கொல்ல முடியாது. அதேவேளை தற்போது காணப்படுகின்ற புலம்பெயர் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், மற்றும் இந்திய அரசின் எதிர்கால கேந்திர நோக்கு அமெரிக்காவின் இந்துசமுத்திர நோக்கு என்பவற்றின் பின்னணியில் அகிம்சைப்போராட்டம் சுடர்விட்டுப் பிரகாசிக்கக் கூடியதற்கான வாய்ப்புக்கள்  அதிகமாக உள்ளன. ஒரேவேளையில் அகம், புலம், தமிழகம், சர்வதேசம் என அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கேற்ற வரலாற்று வளர்ச்சியும் எம்முன் விரிந்து கிடக்கிறது.எது இருக்கிறதோ அதை நாம் செம்மையாகப் பயன்படுத்தியாக வேண்டும்.சாரணர் இயக்கத்திற்கு சொல்லிக் கொடுக்கும் ஓர் அகரவரிசைப் பாடம் இருக்கிறது. அதாவது உன்முன் எது இருக்கிறதோ, எது காணப்படுகிறதோ அதைக் கையில் எடுத்துக் கையாள். என்பதே அந்தப் போதனையாகும். அதாவது வீட்டில் தங்கக் குவளையில் பால் குடித்திருக்கலாம், ஆனால்  காட்டில் சேற்றை வடித்து கைக் குழியில் நீர் அருந்த வேண்டி  வரும்போது அதனைத் தெரிவாக்குவது தவிர்க்க முடியாது. இப்போது எம்முன் காணப்படும் அனைத்து வாய்ப்புக்களையும் தெரிவாக்குவோமாக. ஒவ்வொரு உன்னதமான அகிம்சைப் போராட்டமும் எதிரியின் மூக்கு நுனியை  உடைப்பதுடன் அவனது முகத் தோற்றத்தையே சிதைத்துவிடும்.

சண்முகவடிவேல்

Share on Google Plus

About அபிஷேகா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment