எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும் சிங்களம் ?

நம்பிக்கையற்ற சூழலில்நல்லிணக்கம் உருவாகுமா?
நல்லிணக்க முயற்சிகள், தேசிய நல்லிணக்கம் என்ற பதங்கள் இப்போது இலங்கையில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இவையெல்லாம் ஒரு பகுதி மக்களுக்கு அச்சுறுத்துகின்ற விடயங்களாக மாறத் தொடங்கியுள்ளன. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் அதிகாரபூர்வமான வெளியிடப்படாத சூழலில், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்ட அதன் முக்கிய பகுதிகளை வெளியிட்டிருந்தது. யாரும் எங்கும் நிலங்களை வாங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒரு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  அதாவது தேசவழமைச் சட்டத்தின் மூலம் வடக்கில் பாதுகாக்கப்பட்ட நிலம் மீதான தமிழர்களின் உரிமை இப்போது பறிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. யாரும் எங்கும் நிலங்களை வாங்கிக் கொள்வதற்கு அனுமதிக்கும் வகையில் சட்டத்தை கொண்டு வருமாறு ஆணைக்குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. 

போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தான் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

ஜாதிக ஹெல உறுமயவின் தேரர்களும், சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் தான் இந்தக் கருத்தை அண்மைகாலமாக வலியுறுத்தி வந்தனர். இப்போது அவர்களின் வாய்க்கு வெல்லமே கிடைத்து விட்டது.

ஏற்கனவே, வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய பீதியும், அச்சமும் தமிழ்மக்களை துரத்திக் கொண்டிருக்க புதிதாக இப்படியொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது நல்லிணக்க ஆணைக்குழு. யாரும் எங்கும் காணிகளை வாங்கி குடியேற அனுமதிக்கப்பட்டால், நல்லிணக்கம் ஏற்பட்டு விடும் என்று ஆணைக்குழு எப்படித் தான் நம்பியதோ தெரியவில்லை. அவ்வாறாயின் கொழும்பிலோ தெற்கிலோ காலம் காலமாக பிற இனத்தவருடன் இணைந்து வாழ்ந்த தமிழர்கள் மட்டும் இனக்கலவரங்களின் பேரால் கொல்லப்பட்டது ஏன்- அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு, உடமைகள் தீயிட்டு எரிக்கப்பட்டு - வடக்கே துரத்தியடிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

ஒன்றிணைந்து வாழ்தலின் மூலம் மட்டுமே, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விடவோ, ஏற்பட்டு விடவோ மாட்டாது என்ற அம்சம் ஆணைக்குழுவினால் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அதைவிட பல உணர்வுபூர்வமான விடயங்கள் இங்கு கவனத்தில் எடுக்கப்படவில்லை. மொழிப் பிரச்சினையில் தொடங்கிய தமிழர்கள் மீதான அடக்குமுறை பின்னர் இனப்பிரச்சினையாக, நிலப்பிரச்சினையாக, உயிர்ப் பிரச்சினையாக, இருப்புக்கான பிரச்சினையாக பல்வேறு பரிமாணங்களாக உருவெடுத்தது. இதற்கு முக்கியகாரணம் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் தான்.

சிங்களக் குடியேற்றங்களின் மூலம் தமிழரின் இனப்பரம்பலை மாற்றியமைத்து அவர்களின் உரிமைகளைப் படிப்படியாக சுரண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை தான் போருக்கான மூலகாரணங்கள். ஆனால் அந்த உண்மை புரிந்து கொள்ளப்படாமலேயே மீண்டும் மற்றொரு பூத்ததைக் கிளப்பி விடும் வகையில் வடக்கில் யாரும் நிலங்களை வாங்கலாம் என்று சட்டத்தை திருத்துமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலை உருவாகும்போது வடக்கில் உள்ள நிலங்கள் பறிக்கப்படும் போது, இன்னும் இன்னும் மக்கள் மத்தியில் கொதிப்பான சூழலே உருவாகும். இது ஒருபோதும் நல்லிணக்க வாய்ப்புகளை தோற்றுவிக்காது.

சாதாரண சூழலில் இதைச் செய்வது ஒன்றும் சர்ச்சைகளை ஏற்படுத்தாது. நீண்டபோர் ஒன்றுக்கு முகம் கொடுத்து- அதில் தோற்றுவிட்டதான மனோபாவத்துடன் உள்ள மக்கள் மத்தியில் இது நல்லிணக்க வாய்ப்பாக ஒரு போதும் கருதப்படாது. ஒரு இடத்துக்குப் பொருந்தக் கூடிய விவகாரத்தை எல்லா இடங்களிலும் பிரயோகிக்க முடியாது.சமூக, புவியியல், கலாசார, பொருளாதாரச் சூழல்களையும் கவனிக்க வேண்டும். ஆனால் அதையெல்லாம் ஆணைக்குழு கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. அரசாங்கம் எதைச் செய்ய நினைக்கிறதோ அதையே தான் ஆணைக்குழுவும் வழியொழுகியுள்ளது போலுள்ளது.

ஏனென்றால்,

வடக்கில் இப்போது அரச நிர்வாகத்தை சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருகின்றன .

மன்னாரில் சிங்கள அரசஅதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கில் பல்வேறு பிரதேச செயலங்களிலும், உதவிப் பிரதேச செயலர்களாக சிங்கள அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய அரசதுறை நிறுவனங்களிலும் சிங்கள அரசஅதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றன.


மன்னாரில் சிங்களக் குடியேற்றங்களைத் தீவிரப்படுத்தும் ஒரு முயற்சியாகவே, அங்கு சிங்கள அரச அதிபர் ஒருவரை அரசாங்கம் நியமித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வடக்கில் அரச நிர்வாகங்களில் முக்கிய பதவிகளுக்கு சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் போது பல்வேறு பிரச்சினைகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக மொழிப்பிரச்சினையையும், இன ரீதியான சிக்கல்களையும் அது தீவிரப்படுத்தும். போருக்குப் பிந்திய சூழலில் அரசினால் மேற்கொள்ளப்படும் பல நடவடிக்கைகள் பொதுமக்களால் விமர்சிக்கப்படும் நிலையில், அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரி தமிழராக இருப்பதற்கும், சிங்களவராக இருப்பதற்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கும்.

இப்படியான சூழலில் நல்லிணக்க நிலை உருவாவதற்குப் பதிலாக இனவேறுபாடும், காழ்ப்புணர்வுமே அதிகரிக்கும்.அதேவேளை இன்னொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இருந்தவரை சிங்கள அதிகாரிகளை வடக்கில் நியமிக்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. ஏனென்றால், அவசரகாலச்சட்டம் படையினருக்கும் பொலிசாருக்கும் பெருமளவு அதிகாரங்களை வழங்கியிருந்தது. அவர்கள் நினைத்ததே நிர்வாகம் என்ற நிலையில், அவர்கள் மூலமே எல்லாம் நடத்தப்பட்டன. அரசஅதிகாரிகள் வெறும் பொம்மைகளாகவே இருந்தனர். இப்போதும் கூட படையினரின் தலையீடுகள் முற்றாக நீங்கி விடாதபோதும், அவசரகாலச்சட்டம் இல்லாததால் பல காரியங்களை அவர்களால் சட்டரீதியாகச் செய்ய முடியாதுள்ளது. இந்தநிலையில் தான் அரசாங்கம் வடக்கிலுள்ள அரச நிறுவனங்களுக்கு சிங்கள அதிகாரிகளை நியமிக்கத் தொடங்கியுள்ளது. இது தமிழ்மக்கள் தமக்கு எதிரான நடவடிக்கையாக கருதிக் கொள்வதற்கு வாய்ப்பாக இருக்குமே தவிர நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாகக் கருதப்படாது.

முல்லைத்தீவு அரசஅதிபராக இருந்த பத்திநாதனை மொனராகல அரசஅதிபராக மாற்றி விட்டு, மன்னாருக்கு சிங்கள அரசஅதிபர் ஒருவரை நியமித்து விட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே இந்த இடமாற்றம் என்கிறது அரசாங்கம். அவ்வாறாயின் தமிழ்பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாறையிலும், திருகோணமலையிலும், இதுவரை பதவியில் இருந்த சிங்கள அரசஅதிபர்களால், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடிந்ததா?

அல்லது இங்கு ஒரு தமிழ்பேசும் அரசஅதிபர்களை நியமித்து இனிமேலாவது நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளுமா?

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுனர்களாக இருக்கும் சிங்களவர்களான முன்னாள் படைஅதிகாரிகளுக்குப் பதிலாக, படைத்துறை சாராத ஒருவரை ஆளுனராக நியமிக்கத் தான் முடியுமா?

அதையெல்லாம் அரசாங்கம் செய்யத் துணியாது.வடக்கே சிங்கள அதிகாரிகளை நியமிப்பது அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றவேயன்றி மக்களுக்காவோ நல்லிணக்கத்துக்காகவோ அல்ல. வடக்கே செல்லும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அங்குள்ள உண்மை நிலைமையை எல்லா அதிகாரிகளும் இல்லாவிட்டாலும், ஒரு சிலராவது சொல்லி விடுகின்றனர். இதுபோன்ற சங்கடங்களை தவிர்க்க சிங்கள அதிகாரிகளை நியமிப்பது அரசுக்கு சிறந்த தெரிவாக உள்ளது. இதுபோன்ற உண்மைக் காரணங்களை மறைக்கவே நல்லிணக்கம் என்ற பதம் அரசுக்கு கைகொடுக்கிறது. அதேவேளை, தெற்கே பணிக்கு அமர்த்தப்படும் தமிழ் அதிகாரிகள் பெரும்பான்மையினருக்கு எதிராக எதையும் செய்து விடப் போவதில்லை. அதற்கான வாய்ப்போ சூழலோ தேவையோ கிடையாது. தமிழர்களைப் போன்று அவர்களுக்கு இருப்பு சார்ந்த பிரச்சினை கிடையாது. ஆனால் வடக்கில் பணியாற்றும் சிங்கள அதிகாரிகளால் தாம் நினைந்த எதையும் சாதிக்கக் கூடிய சூழல் காணப்படுகிறது. அதேவேளை, அரச நிர்வாகப் பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதான குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்து வருகிறது. இதுவரை தமிழ்ப் பகுதிகளில் பணியாற்றுவதற்காகவேனும் தமிழர்கள் நிர்வாகப் பணிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டனர். இப்போது தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் போது அப்படியொரு தேவை அரசுக்கு இல்லாமல் போய்விடும். இது தமிழர்கள் நிர்வாகப் பதவிகளுக்குத் தெரிவு செய்யப்படும் போக்கில் கடுமையான பாதிப்பை உருவாக்கி விடும். இப்படி ஏராளமான பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்கான வாய்ப்புகளையே அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது,

மூன்று இனங்களும் வாழும் ஒரு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதற்குரிய சூழலை முதலில் உருவாக்க வேண்டும். அதுவே பிரதானமானது.வடக்கில் சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் போது, அவர்களுக்கு தமிழ்மொழியில் பணியாற்றும் ஆற்றல் உள்ளதா என்பதை முதலில் கண்டறிந்திருக்க வேண்டும்.

அரச அதிகாரிகளை மும்மொழிகளிலும் பணியாற்றும் திறன் கொண்டவர்களாக உருவாக்க வேண்டும்- அதையே இன்னமும் செய்யாத அரசாங்கம், நல்லிணக்க முயற்சி என்ற பெயரில் தமிழர்களை அச்சுறுத்தும் முயற்சிகளில் தான் இறங்கியுள்ளது.

தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அதிகாரிகளை நியமித்து விட்டால் நல்லிணக்கம் வந்து விடும் என்று கூறுவது வியப்பானது.அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நல்லிணக்க முயற்சிகள் பல இருக்கும் போது, பிரச்சினையை உருவாக்குகின்ற முயற்சிகளை முன்னெடுப்பது தேவையற்றது. இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு அதிகரிக்கின்ற போது- நம்பிக்கை உருவாகும் போது, இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தமிழ்மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்காத, எந்தவொரு நல்லிணக்க முயற்சியும் கல்லில் நார் உரிப்பதற்கு ஒப்பாகவே இருக்கும். இவை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

நன்றி - கட்டுரையாளர்  சத்ரியன் இன்போ தமிழ் குழுமம்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment