தமிழ், சிங்கள தரப்புக்கள் சர்வதேசத்தை எவ்வாறான மனநிலையில் கையாளப் பார்க்கின்றன?


சர்வதேசமானது தனது நலன்களைப் பேணுவதற்கான ஓர் கருவியாக மட்டும் தமிழ்த் தேசத்தினை பயன்படுத்த முனைகின்ற நிலையில், தமிழ்த் தேசத்தின் நலன்களும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதனைக் கடந்த கட்டுரையில் தெரிவித்திருந்தேன்.
அத்துடன் தமிழ்த் தேசத்திடம் சர்வதேச நலன்களுக்கு எதிராகச் செயற்படும் நோக்கம் காணப்படக்கூடாது எனவும் விளக்கியிருந்தேன்.
மேலும் அப் பத்தியில், இன்றைய இலங்கைத் தீவின் அரசியல் சூழலில், சர்வதேசத்தின் நலன்களும் தமிழ்த் தேசத்தின் நலன்களும் ஒருங்கே அடையத்தக்க ஒரு புள்ளியில் இவ்விரு தரப்பும் சந்தித்தாக வேண்டும் எனவும், தமிழ்த் தேசத்தின் நலன்களும் சர்வதேசத்தின் நலன்களும் ஒருங்கே அடையத்தக்கதான பொது வேலைத்திட்டத்தினை அடையாளப்படுத்துவதே, தமிழ் அரசியல் தலைமைகள் முன்னுள்ள முக்கிய வேலைத்திட்டமாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தேன்.
இவ் விடயங்களைக் கடந்த கட்டுரையில் விளக்கியிருந்த நிலையில், தமிழ்த் தேசத்திற்கும் இலங்கையில் நலன்சார் அடிப்படையில் தலையிடுகின்ற சர்வதேச சமூகத்திற்கும் இடையில், ஒரு பொது வேலைத்திட்டத்தை ஏற்படுத்தப்படுத்துவதாயின், சர்வதேச சமூகம் தொடர்பான அணுகுமுறைகளைக் கருத்தில் கொள்ளும் போது, நாம் இரண்டு முக்கிய விடயங்கள் பற்றி ஆராய வேண்டியுள்ளது.
இதற்காக இப் பத்தியில் சிங்கள தேசியவாதம் சர்வதேசத் தரப்புக்களை (இந்தியா, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு மற்றும் சீனா) எவ்வாறு விளங்கிக் கொண்டுள்ளது என்பதையும், தமிழ்த் தேசியவாதம் சர்வதேசத் தரப்புக்களை எவ்வாறு விளங்கிக்கொண்டுள்ளது என்ற விடயத்தினை ஆராயவேண்டியுள்ளது.
சிங்கள தேசியவாதமும் சர்வதேசமும்
சிங்கள தேசியவாதமானது சிங்கள பௌத்த நிலை நின்றே உலகத்தினை அணுகுகின்றது. இந் நிலையில் சிங்கள தேசம் சர்வதேசத் தரப்புக்களை அணுகும் உண்மைத் தன்மை என்ன என்பதனை நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. சிங்கள தேசம் என்பது உலகில் இலங்கைத் தீவில் மட்டுமே காணப்படுகின்றது. அது தன்னுடைய பாரம்பரியத்தினை உலகில் சுட்டிக்காட்டத்தக்க ஒரேயொரு இடமாக இலங்கைத் தீவே காணப்படுகின்றது.
சிங்களவர்கள் தம்மை வட இந்தியாவில் இருந்து வருகை தந்த ஆரியர்கள் எனவும், அவர்களது வழித்தோன்றல்கள் எனவும் கூறிக்கொண்டாலும், இன்றைய யதார்த்தத்தில் சிங்களவர் என்றொரு இனத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்கள தேசம் என்பது இலங்கைத் தீவு தவிர்ந்த வேறு எந்தவொரு இடத்திலும் இல்லை.
இவற்றின் அடிப்படையிலேயே, தாம் ஒரு சிறிய இனம் எனவும், தமது இனத்திற்கு வலுச்சேர்க்கின்ற வகையில் எந்தவொரு தார்மீக ஆதரவும் பிராந்தியத்தில் இல்லை என்ற உணர்வும் சிங்களவர்களிடத்தில் உள்ளது. இந் நிலைமைகளின் அடிப்படையில் சிங்கள தேசியவாதத்திடம் பாரிய அச்ச உணர்வொன்றும் காணப்படுகின்றது.
சிங்கள இனத்தினைச் சேர்ந்த மிகப் பெரும்பான்மையினர் பௌத்தர்களாகவே உள்ளனர். மகாவம்சமானது சிங்கள பௌத்த மக்களிடத்தில் மிக முக்கியத்துவமுடையதும், அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு பேணிப் பாதுகாக்கப்பட்டும் வரும் வரலாற்று ஏடும் ஆகும். உதாரணமாகக் கூறின் கிறிஸ்தவர்களுக்கு பைபிள் எந்தளவிற்கு முக்கியத்துவமுடையதோ, அந்தளவிற்கு சிங்கள பௌத்தர்களுக்கு மகாவம்சம் முக்கியத்துவமுடையதாகும்.
இவ் மகாவம்ச நூலில், பௌத்த மதத்தினை மிகத் தூய்மையான வகையில் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்ற ஓர் பொறுப்பினை புத்தபெருமான் இலங்கைத் தீவில் உள்ள சிங்களவர்களுக்கு அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக பௌத்த சிங்களவரிடையே வரலாறு பற்றி பதிவு செய்திருப்பதாகக் கூறப்படும் மகாவம்சத்தில், இலங்கைக்குள் பௌத்தம் தூய முறையில் பேணப்படவேண்டும் என புத்தபெருமானால் கூறப்பட்டுள்ளதனை, நாம் சிங்கள தேசத்தினுடைய இன்றைய நடத்தையுடன் ஒப்பிட்டு நோக்கவேண்டியுள்ளது.
இதேவேளை இந்நூலில் கூறப்பட்டுள்ள ஏனைய கருத்துக்களும் சிங்கள மக்களிடையே வேரூன்றியதாகவே உள்ளன என்பதால், அது பற்றியும் பார்வையைச் செலுத்தவேண்டியுள்ளது. இங்கே, ஏனைய கருத்துக்கள் என்பது, மகாவம்சத்தினால் உண்டான தாக்கவிளைவான சிந்தனைப் போக்குகளும், நடவடிக்கைகளுமாகும்.
இந்தவகையில், இலங்கைக்குள் இருக்கக் கூடிய சிங்கள ஆட்சிக்கு, அதாவது சிங்கள அரசர்களுக்கு தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து போர் புரிந்த தமிழ் அரசர்களால் தான் ஆபத்துக்கள் ஏற்பட்டிருந்தது. அடிப்படையில், வரலாற்றில் இந்தியாவிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்கள் தமிழரிடம் இருந்து சிங்களதேசத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகவே பௌத்த சிங்களவர்களுக்கு இன்றுவரை போதிக்கப்பட்டு வருகின்றது. வரலாறு எனக் கூறிக்கொண்டு இவ்விடயங்கள் சிங்களவர்களிடத்தில் புகட்டப்படுவதால், அவை சிங்கள மக்களிடத்தில் ஆழப்பதிந்தவையாகவே உள்ளன.
இப்படியான நிலையில், சிங்களவர்களுக்கு அச்சுறுத்தலாக இந்தியாவில் இருக்கின்ற தமிழர்களே வரலாற்று ரீதியாக இருக்கின்றனர் என கருதுகின்றனர். இதன் ஒரு தொடர்ச்சியாகவே இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசத்தினை சிங்களதேசம் பார்க்கின்றது.
இலங்கைத் தீவில் உள்ள தமிழ் மக்களை, சிங்கள தேசம் தென்னிந்தியாவின் தொடர்ச்சியாகப் பார்க்கின்ற நிலையில், பிராந்தியத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற தமிழர்களால் தான் விழுங்கிக் கொள்ளப்படலாம் எனவும் அது சிந்திக்கின்றது. இது ஓர் கற்பனை கலந்த அச்சமல்ல. மாறாக தமது இருப்பிற்கே பேராபத்தாக மாறிவிடும் என அவர்கள் மனநிலையில் ஆழவேரூன்றியுள்ள ஓர் அச்சமாகும்.
இவ்விடத்தில் தான், சிங்கள பௌத்த தேசியவாதம் இரு முக்கிய தன்மைகளை வெளிப்படுத்துகின்றது. பிராந்தியத்தில் உள்ள தமிழர்களை ஒரு நிரந்தர எதிரியாக சிங்கள தேசம் பார்க்கிறது. அந்தவகையில் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் ஊடாக இந்தியாவை தனது நிரந்தர எதிரியாக சிங்கள தேசம் நோக்குகின்றது. இது முதலாவது விடயமாகும்.
பிராந்தியத்தில் பெரும்பான்மையினராக இருக்கக் கூடிய தமிழர்களின் இன்னுமொரு அங்கமான இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களை மேலுமொரு, நிரந்தர எதிரியாக சிங்கள தேசம் நோக்குகின்றமை இரண்டாவது விடயமாகும். இந்த விடயத்தினை எனது கடந்த பத்திகளில் விரிவாகக் கூறியிருந்தேன்.
இதேவேளை, சிங்கள தேசம் தன்னால் எதிரியாகக் கணிக்கப்படும் தரப்புக்களின் நண்பர்களையும், தனது எதிரியாகக் பார்க்கும் மனநிலையுடனேயே இயங்குகின்றது. இதனை சிங்கள தேசத்திற்குள்ள மேலுமொரு குணாம்சம் என நாம் கோடிட்டுக் காட்டமுடியும்.
அடுத்து, இலங்கைத் தீவின் சிங்கள தேசமானது மேற்குலகினையும் தனது எதிரியாகவே அர்த்தப்படுத்திக் கொள்கின்றது. இவ்வாறாக அர்த்தப்படுத்திக் கொள்வதற்கு விசேடமாக இரண்டு காரணங்களைக் கூறிக்கொள்ள முடியும். அதில் முதலாவது, தாம்( சிங்கள தேசம்) காலனித்துவப் பிடியில் இருந்து விடுபடுவதற்காக, மேற்குலகுக்கு எதிராக சிங்கள மக்களை அணிதிரட்டுவதற்காக சிங்கள தேசியவாதிகளால் பரப்பப்பட்ட சிந்தனை.
அடுத்து, இலங்கைத் தீவானது காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த காலத்தில், தனது எதிரியாகக் கருதும் தமிழ்த்தேசத்திற்கு காலனித்துவ ஆட்சியாளர்கள் விசேட சலுகைகளை அளித்திருந்ததாக சிங்கள தேசம் கருதுவது ஆகும். இவற்றின் அடிப்படையிலேயே, மேற்கினை தனது மூன்றாவது எதிரியாக சிங்கள தேசம் பார்க்கின்றது.
இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில், அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதனைத் தடுப்பதற்காக, மேற்குலகிலிருந்து மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களை கூட, சிங்கள தேசம் மேற்குலகுக்கு எதிராகக் கொண்டிருந்த சிந்தனைகளுக்கு வலுச் சேர்ப்பதாகவும், புத்துயிரளிப்பதாகவுமே உள்ளது என்பதை சிங்கள அடிப்படைவாதிகள் வெளியிட்ட கருத்துக்களிலிருந்து அறியமுடிகிறது. இந்த தருணத்திலேயே, மேற்குலகமானது புலிகளுக்கு சார்பானது என்ற வலுவான கருத்தை சிங்கள தேசியவாதமானது முன்வைத்து வருகிறது.
இதனை இன்னும் விளக்கமாக் கூறுவதானால், மேற்குலகமும் புலிகளும் ஒன்று அல்லது மேற்குலகமென்பது புலிகளின் மறுபக்கம் என்ற கருத்தையே சிங்களத் தேசியவாதம் ஆணித்தரமாக சிங்கள மக்களிடத்தில் உருவாக்கியிருந்தது. இதுவே, இறுதியாக இடம்பெற்ற போரின் போது, போர்நிறுத்தத்தை கோரிய மேற்குலகை, புலிகளை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாக கூறி, மேற்குலகமானது சிங்கள தேசத்தின் எதிரி என்ற கருத்தை சிங்கள் மக்களை ஏற்க வைத்தது.
இவ்வாறான கோணத்தில் பார்க்கையில், சிங்களத் தேசத்தின் இந்தியாவிற்கு எதிரான போக்கும், மேற்குலகிற்கு எதிரான போக்கும் கூர்மையடைந்துள்ளதுடன், ஆழ்மனத்து எதிர்மறைப் பதிவாகவும் புரையோடிப் போயுள்ளது.
எனினும், சிங்களத் தேசத்திடம் காணப்பட்ட இந்தியாவிற்கும், மேற்குலகிற்கும் எதிரான போக்கு, காலாகாலமாக சிங்களத் தேசத்தினை ஆட்சிசெய்தவர்களால் மட்டுப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றது. இவ்வாறு மேல்மட்ட சமூகமும், ஆட்சியாளர்களும் எவ்வாறாக மட்டுப்படுத்தப்பட்டனர் என்று பார்த்தால், அதில் ஒன்று சிங்கள தேசத்தின் பதவியில் இருந்த மேல்மட்ட வர்க்கத்தினர்கள் மேற்குலகிற்குச் சார்பாக இருந்துள்ளனர். இதற்கு, பதவியிலிந்த மேல்மட்ட வர்க்கத்தினரின் மேற்குலக கற்கைநெறிகளும் காரணமாகும். அவ்வாறிருந்த போதும், சிங்கள தேசமானது, மேற்குலகை ஒரு எதிர்ப்புச் சக்தியாகவே பார்த்து வருகிறது.
அதேவேளை, பதவியில் இருந்த மேல்மட்ட வர்க்கத்தினர் உட்பட்ட சிங்கள தேசமானது இந்தியாவுக்கு எதிரான நிரந்தரப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. இது இந்தியா பிரயோகித்த அழுத்தங்களினால் கட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும், தற்போதைய சிறீலங்கா அரசாங்கத்தின் காலத்தில் எல்லை மீறியுள்ளது.
இலங்கைத் தீவின் சிங்களத் தேசத்தினைப் பொறுத்தவரையில், தான் எதிரிகளாகக் கருதிக் கொள்கின்ற தரப்புக்களுக்கு (இந்திய, அமெரிக்கா தலைமையிலான மேற்கு) அப்பாற்பட்ட நாடுகளுடன் விரும்பி சார வேண்டிய தன்மையே உள்ளது. இந்த வகையிலேயே இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நிகரான சக்திமிக்க நாடான சீனாவுடனும், அதன் நட்பு நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. சர்வதேசம் நோக்கிய சிறீலங்காவின் இவ் இராஜதந்திர அணுகுமுறையை வலுப்படுத்துவதாகவே தற்போதைய சிறீலங்காவின் ஆட்சி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியவாதமும் சர்வதேசமும்
தமிழ்த் தேசியவாதத்திடம் எந்தவொரு சர்வதேசத் தரப்பினையும் கொள்கையளவில் எதிரியாகப் பார்க்கின்ற தன்மையில்லை. அதேவேளை அப்படியான கருத்துருவாக்கத்திற்கான நிகழ்ச்சி நிரல்களும் தமிழ்த் தேசியவாதத்திடம் கிடையாது.
தமிழ்த் தேசியவாதமானது, தமிழ்த் தேசியத்தின் நலன்கள் என்ற அடிப்படையில் உலகத்தினை அணுகுகின்றதே தவிர, அது எக்காரணம் கொண்டும் எந்தவொரு சர்வதேசத் தரப்பினையும் ஒரு நிரந்தர எதிரியாகப் பார்த்ததில்லை. இது போன்றே, தன்னை எதிரியாகக் கருதும் சிங்கள தேசத்தினைக் கூட தமிழ்த் தேசம் ஒரு போதும் அழிக்கவேண்டும் எனக்கருதியது இல்லை. மாறாக, சிங்கள தேசம் எம்மை, அதாவது எமது இனத்தினை அழிக்கின்றமையால் தான் சிங்களத் தேசத்தினை தமிழர்கள் எதிரிகளாகப் பார்க்கத் தள்ளப்படுகின்றனர். வேறு எதற்காகவும் சிங்களத் தேசத்துடன் பகைமை பாராட்ட வேண்டிய தேவையோ கருத்தியல் ஆதிக்கமோ தமிழ்த் தேசத்திடம் இல்லை. இத்தன்மையின் தொடர்ச்சியான இயல்பாகவே சர்வதேச மட்டத்தில் உள்ள நாடுகளையும் தமிழ்த் தேசம் பார்க்கின்றது.
சர்வதேச அளவில் தமது நலன்களுக்காகத் தலையிடுகின்ற நாடுகள், தமிழ்த் தேசத்தின் நலன்களுக்கு மாறாக போகின்ற இடத்தில் தான், தமிழ்த் தேசமானது தனது அதிருப்தியினையும் கவலையினையும் வெளிப்படுத்துகின்றது. அதைவிடுத்து, தமிழ்த் தேசம் திட்டமிட்டு யாரையும் எதிரியாகக் கொள்ளவில்லை.
இலங்கைத் தீவில் இருக்கக் கூடிய தமிழ்த் தேசத்துக்கு இயல்பாகவே நம்பிக்கைக்கு உரிய சக்தியாக இந்தியாவே இருக்க முடியும். இவ்வாறு நாம் அடையாளப்படுத்துவதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் இருக்கின்ற தமிழ்நாட்டிற்கும் எமக்கும் இடையிலான பிணைக்கப்பட்ட உறவு நிலையேயாகும்.
இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசத்தினைப் பொறுத்தளவில், அதனுடைய இதயம் தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூற முடியும். நாம் சமயம், மொழி, பண்பாடு காலாச்சாரம் என எல்லாவற்றையும் தமிழகத்துடனான ஓர் பொதுவடிவமாகவே ஏற்றிருக்கின்றோம். இவ்வாறாக நாம் தொப்புள்கொடி உறவினையே தமிழகத்தினுடாக இந்தியாவுடன் கொண்டிருக்கின்றோம்.
இதேபோன்று, மேற்குலகை எடுத்துக் கொண்டால், எதற்காக சிங்கள தேசம் அவர்களை எதிரியாகப் பார்க்கின்றதோ, அதற்கு நேர் எதிராகவே பெரும்பாலான தமிழர்கள் மேல்குலகை நல்லெண்ணத்துடன் நோக்குகின்றனர். அத்துடன், தமிழ்த்தேசத்தின் மக்களில் ஒருபகுதியினர் மேற்குலகிலேயே புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இதனால் கடந்த முப்பது வருடங்களாக எமது புலம்பெயர் மக்கள் மேற்குலகில் தங்கியிருப்பதனால், தமிழ்தேசத்திற்கும் மேற்குலகிற்குமான இடையிலான உறவு வலுவடையும் சந்தர்பங்களே உருவாகியுள்ளன.
பௌத்த சிங்களம் என்ற கருத்தியலானது சர்வதேச நாடுகளை நட்பு நாடுகளென்றும், எதிரி நாடுகளென்றும் வரையறுக்கின்ற தன்மையை கொண்டுள்ளது. ஆனால், தமிழ்தேசியாவாதம் என்ற கருத்தியலில் அவ்வாறான சிந்தனைப் போக்கு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக விடயங்களை சீர்தூக்கி மதிப்பிடுகையில், இயற்கையாகவே தமிழ்த்தேசம் சர்வதேசத் தரப்புக்களுடன் சாரக்கூடிய வாய்ப்புநிலை உள்ளதெனில் அது இந்தியாவுடனும் மேற்குலகுடனுமே ஆகும்.
ஆனாலும், தமிழ்  தலைமைகள் மேற்கொள்ளும் இராஐதந்திர நடவடிக்கைகள் தமிழ் தேசத்தின் நலன் சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர, வெறுமனே உணர்ச்சிபூர்வமாக எடுக்கின்ற முடிவாக இருக்கக் கூடாது. இந்தவகையில், தான் தமிழ்த் தேசம் சர்வதேசத் தரப்புக்களோடு ஓர் ஆழமான நலன்கள் சார்ந்த கலந்துரையாடலுக்குச் செல்லவேண்டும்.
 - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment