2011ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதற்கு ஒருசில நாட்களே உள்ளன. இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு குறித்து அரசாங்கம் 2011ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறி வந்தது நடைமுறைச் சாத்தியமற்றதாகியுள்ளது.
அரசாங்க தரப்புடன் அடுத்தடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்கள் எதுவும் முன்னேற்றம் காணப்படாமலேயே முடிந்து போயுள்ளன. இரண்டு தரப்புமே எந்தவொரு கட்டத்திலேனும் இணக்கப்பாட்டை சந்திக்கக் கூடியளவுக்கு நெருங்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் நடைமுறைச் சாத்தியமற்றவை என்கிறது அரசாங்கம். அதேவேளை இலங்கை அரசாங்கமோ எதையும் விட்டுக் கொடுக்கின்ற நிலைப்பாட்டில் இல்லை என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் மோதுகின்ற களமாகவே பேச்சு மேசை அமைந்துள்ளது. எந்தவொரு பேச்சுக்களையும் இரண்டு விதமாக வகைப்படுத்தலாம்.
முதலாவது வகை, பேச்சுக்களின் மூலம் இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என்ற குறியோடு- வெறியோடு நடத்தப்படுவது. இதன் அச்சாணியே நெகிழ்வுத்தன்மையும் விட்டுக்கொடுப்பும் தான்.
இரண்டாவது வகை, இணக்கப்பாட்டை எட்டக் கூடாது என்ற இலக்குடன்- பொழுதுபோக்கிற்காகவோ கால இழுத்தடிப்புக்காகவோ நடத்தப்படுவது. விட்டுக்கொடாத தன்மையும் வரட்டுப் பிடிவாதமும் தான் இதன் அச்சாணி.
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடத்தப்படும் பேச்சுக்கள் இதில் எந்த வகையைச் சார்ந்திருக்கிறது என்று யாரும் கூற வேண்டியதில்லை.
போர் முடிவுக்கு வந்த போது அரசியல்தீர்வில் அரசாங்கம் கொண்டிருந்த அக்கறை இப்போது அதனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. காலம் போகப்போக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீருவின் மீதுள்ள நாட்டம் குறைந்து போவது போன்ற தோற்றமே தென்படுகிறது.
முன்னதாக அரசியல்தீர்வு, அதிகாரப்பகிர்வு தொடர்பாக அரசாங்கம் கொடுத்த பல வாக்குறுதிகள் இப்போது அதற்கு நினைவில் கூட இல்லாது போய்விட்டது.
கொடுப்பதாக கூறிய வாக்குறுதிகளை இல்லை என்று மறுக்கின்ற அளவுக்குப் போயிருக்கிறது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு விடயம் தெளிவாகி விட்டது. இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படப் போவதில்லை என்பதே அது.
அரசியல்தீர்வு தொடர்பான எந்தத் தீர்மானத்தையும் தெரிவுக்குழு ஊடாகவே எடுப்பது தான் அரசாங்கத்தின் திட்டம். அப்படிச் செய்தால் தன்மீது எந்தப் பழியும் வந்துவிடாது என்று நினைக்கிறது அரசாங்கம்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ பேச்சுக்களில் இணக்கப்பாடு எட்டிய பின்னர் தான் தெரிவுக்குழுவுக்கு வருவோம் என்கிறது. ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் கூட தெரிவுக்குழுவை எதிர்க்கின்றன.
எதிர்க்கட்சிகளின் ஆதரவின்றி தெரிவுக்குழுவை அமைக்க முடியாது. அதேவேளை. தெரிவுக்குழுவை காரணம் காட்டி இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வை இழுத்தடிக்க முடியாது. அதுவரை கூட்டமைப்புடன் பேசியாக வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு உள்ளது.
இந்தக் கட்டத்தில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் மற்றொரு கட்டையைப் போட்டு இறுக்க முனைந்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியாது, காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என்பதே அரசாங்கம் போட்டுள்ள அந்த முட்டுக்கட்டை.
வடக்கு, கிழக்கு இணைப்பும் காணி, பொலிஸ் அதிகாரங்களின் பரவலாக்கமும் அரசியல்தீர்வுக்கு அவசியமானவை என்று தமிழர் தரப்பினால் உறுதியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கட்டத்தில் தான் அரசாங்கம் இவை மூன்றும் நடைமுறைச் சாத்தியமற்றவை என்று கூறிவிட்டது.
வடக்கு கிழக்கை இணைக்க முடியாது என்கிறது அரசாங்கம். ஆனால் அரசாங்கம் நினைத்தால் இதனைச் செய்யலாம்.
ஏற்கனவே தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை உயர்நீதிமன்றம் தான் பிரித்தது. இந்தத் தீர்ப்பை அளித்த முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா, வடக்கு கிழக்கு மாகாணங்களை அரசாங்கத்தினால் மீளவும் இணைக்க முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் அரசாங்கமோ அதற்குத் தயாராக இல்லை.
வடக்கு கிழக்கு இணைப்புக்கு மட்டும் அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களையும் வழங்க முடியாது என்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர், மட்டுப்படுத்தப்பட்டளவு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவற்கு அரசு இணங்கியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியிருந்தார். அரசாங்க ஊடகங்களில் இது தலைப்புச் செய்தியாகவும் பிரசுரமானது.
அப்போது மட்டுப்படுத்தப்பட்டளவு பொலிஸ் அதிகாரங்களை வழங்கத் தயார் என்று கூறிய அரசாங்கம் இப்போது எதையும் வழங்க முடியாது என்கிறது.
இந்தியாவைப் போன்று மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் தனது சொந்தக் கிராமத்துக்கே தன்னால் செல்ல முடியாது போய் விடும் என்கிறார் ஜனாதிபதி.
உத்தரப் பிரதேசத்துக்கு ராகுல்காந்தி சென்ற போது அவரைக் கைது செய்ய மாயாவதி முயன்றாராம். சோனியா காந்தி குஜராத்துக்குச் செல்வதற்கு அந்த மாநில அரசு தடை விதித்ததாம்.
இப்படி சில உதாரணங்களைத் தேடிப் பிடித்து வைத்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
மாகாணங்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் அதிகாரம் தன்னைக் கைது செய்வதற்கே பயன்படுத்தப்படும் என்ற அச்சம் ஜனாதிபதிக்கு இருக்கிறது போலுள்ளது. இதனை அவர் டெக்கன் குரோனிக்கல் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணங்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் அதிகாரம் எந்தளவுக்கு வலுவானது அதன் சட்டவரையறை எதுவரை இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டவர்களால் தான் இந்தக் கதைகளின் உண்மைய உணர முடியும்.
மாகாணங்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கும் போது, நிறைவேற்று அதிகார பலத்துடன் இருக்கின்ற ஜனாதிபதிக்கு இப்படியொரு அச்சம் வந்திருக்க வேண்டியதில்லை.
ஆனால், அவ்வாறான பொலிஸ் அதிகாரம் தன்னைக் கூட கைது செய்யும் அளவுக்கு ஆபத்தானது என்ற கருத்தை ஜனாதிபதி விதைக்க முனைகிறார் என்பது தெளிவாகியுள்ளது. இதன்மூலம் விதண்டாவாதம் தான் வலுப்பெறுகிறது.
காணி அதிகாரங்களைப் பகிர்வது குறித்து அரசு புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
மத்திய மற்றும் மாகாண அரசுகள் அங்கம் வகிக்கும் ஆணைக்குழு ஒன்றின் மூலம் காணி அதிகாரங்களைப் பகிர்வதே அந்த யோசனை. ஆனால் இப்போது அதுவும் கிடையாது என்கிறது அரசாங்கம்.
வடக்கு கிழக்கு இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரப்பகிர்வு இந்த மூன்றுமே நடைமுறைச் சாத்தியமற்றவை என்று அறிவித்து விட்டது அரசாங்கம்.
இவை எல்லாவற்றையும் நீக்கி விட்டுப் பார்த்தால் அரசாங்கம் எத்தகைய தீர்வை- அதிகாரத்தைக் கொடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறது.
சமஸ்டி இல்லை, மாகாணங்களுக்கும் முக்கிய அதிகாரங்கள் எதுவும் இல்லை. இந்தநிலையில், அரசியல்தீர்வு என்று பேசுவதற்கு- அதிகாரப்பகிர்வு என்று பேசுவதற்கு என்ன தான் இருக்கிறது? இப்போதுள்ள மாகாணசபை தான் எஞ்சப் போகிறது. அதற்காக பேச்சு நடத்தி ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் யோசிக்கலாம்.
முன்னதாக, 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும், அதற்கு அப்பால் சென்று தீர்வை வழங்கப் போவதாகவும் அரசாங்கம் கூறியது.
அவ்வாறு 13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு, காணி, பொலிஸ் அதிகாரங்கள் அல்லாத ஒன்றாக இருக்க முடியாது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இப்போது அரசியல்தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்று கருதுவதாகத் தெரியவில்லை. அதிகாரப்பகிர்வு தேவையற்றதென்று உணர்வதாகவே தோன்றுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எப்படியாவது பேச்சுக்களில் இருந்து கழற்றி விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று நினைத்தது. அதன்படி போட்ட கணக்குகள் எல்லாமே தப்பாகி விட்டன.
பேச்சுக்களில் இருந்து விலகி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியே போனால், பழி அவர்கள் மீதே விழும். அரச தரப்பின் இழுத்தடிப்பினால் வெறுத்துப் போய், ஒரு கட்டத்தில் பேச்சுக்களில் இருந்து விலகிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பின்னர் நிலைமையைப் புரிந்து கொண்டு பேசத் தொடங்கியது.
பலசுற்றுப் பேச்சுக்கள் நடந்து விட்டன. இதன்போதெல்லாம் வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை. மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் இல்லை என்றே அரசாங்கம் சொன்னது.
ஆனாலும் அவர்கள் பேச்சுக்களில் இருந்து விலகுவதாக இல்லை. இது அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கிறது.
இதன்மூலம் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் இழுத்துச் செல்ல முனைகிறது அரசாங்கம். ஆனால் கூட்டமைப்பைப் பொறிக்குள் கொண்டு போவதாக எண்ணி அரசாங்கம் தானே பொறி ஒன்றுக்குள் நுழைவதாகவே தோன்றுகிறது.
போர் முடிந்து 30 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால் அரசியல்தீர்வு ஒன்றுக்கான எந்த உருப்படியான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.
அரசியல்தீர்வு இழுபறிப்படுவதை உலக நாடுகள் ஒருபோதும் ஏற்கத் தயாரில்லை. இலங்கை அரசுக்குச் சார்பாக நிற்கின்ற இந்தியா கூட இந்த விடயத்தில் ஒத்துப் போகவில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதியான அதிகாரப்பகிர்வு குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட தீர்வு ஒன்றுக்குச் செல்லுமாறு இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாடு அதைவிட இறுக்கமானது. கனடாவோ உருப்படியான நல்லிணக்க முயற்சிகள் எதையும் இலங்கை அரசு செய்யவில்லை என்று ஏற்கனவே பலமுறை சினந்து விட்டது.
அரசியல்தீர்வு விடயத்தில் இழுதடிப்புச் செய்யப்படுவதை சர்வதேச சமூகம் விரும்பாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறை கூறிக் கொண்டு அரசியல்தீர்வை இழுத்தடிக்கும் அரசாங்கத்தின்ன் உத்தி, தனக்குத்தானே வெட்டும் குழியாகவே அமையும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டது போன்று தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அதிகாரப்பகிர்வை வழங்குவோம் என்ற வாக்குறுதியை அரசினால் காற்றில் பறக்கவிட முடியாது.
அத்தகைய முயற்சி ஒன்றில் அரசாங்கம் ஈடுபடுமேயானால் அது ஆபத்தான பாதையில் மேற்கொள்ளப்படும் பயணமாகவே அமையும்.
நன்றி - கே. சஞ்சயன் தமிழ்மிரர்
0 கருத்துரைகள் :
Post a Comment