'விடுதலை என்னும் பயிருக்கு இடப்பட்ட உரமே மாவீரர்கள்' - கப்டன் வாணன்’


புனித இலட்சியப் பிரவாகத்தில் பயணித்து, தமிழீழக்கனவுடன் வித்தாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரிசையில் துயில்கொள்ளும் ஒருவன் கப்டன் வாணன். தனது கண்முன்னால் தனக்கும் தனது சமூகத்திற்கும் நிகழ்ந்த அவலங்களின் சாட்சியாக, இந்த இழிநிலை வாழ்க்கை எமக்கு வேண்டாம், எமது சந்ததிக்கும் வேண்டாம் என்ற தெளிவில் பரிணமித்தவன். அந்த அவலங்களின் எதிர்வினையாக, விடுதலை ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்துப் பயணித்த போராளி, அதற்காக தன்னை உரமாக்கிய அவனது இருபதாவது நினைவுநாள் இன்று. 

சுதந்திரப் போராட்டத்தின் பங்கெடுப்பு என்பது ஈர்ப்பு, கவர்ச்சியின் சமன்பாடல்ல. அது சமூகம் மீதான அக்கறையின் வெளிப்பாடாக, இனத்தின் மீதான அடக்குமுறைச் சம்பவங்களின் தொடர்வினையாக, பாதிப்பின் வெளிப்பாடாக உருவாகின்றது. அது வாழ்வின் எல்லைவரை தெளிவான பற்றுறுதியையும் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டையும் வழுவாத்தன்மையையும் கொண்டிருக்கும் என்ற யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக, நடைமுறை உதாரணமாக அமைகின்றது கப்டன் வாணனின் வாழ்க்கை வரலாறு. 

வாணன் அசாத்தியமான துணிச்சல்காரனாக இருந்தாலும் மென்மையானவன். எதையாவது செய்து கொண்டிருக்கும் துடிப்பும் குறும்புத்தனமும் அவனிடம் அதிகம். விளையாட்டு, நாடகம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவன். வாணனுடனான இளமைப்பருவத்து நாட்கள் நெஞ்சைவிட்டகலா பதிவுகள் - அம்மாவிற்குத் தெரியாமல் நிகழ்ச்சி பார்க்க சென்று நடு இரவில் திருப்பிவரும்போது, விளாத்திமரத்தைப் பார்த்து அம்மம்மா சொன்ன பேய்க்கதையை நம்பி, உரத்து தேவாரம் பாடிக் கொண்டு வந்தது, வெள்ளத்தில் வாழைக்குத்திகளை ஒன்றாகக் கட்டி |போட்| விட்டு விளையாடியது என அந்த நாட்களின் பசுமையான நினைவுகள் பல. இளமைப்பருவத்து இனிமைகளுடன் பயணித்த காலம். 

எண்பதுகளின் பிற்பகுதியில் உக்கிரமடைந்த தமிழினத்திற்கு எதிரான அடக்குமுறைகளும் கொலை வெறியாட்டங்களும் நாடு முழுவதும் பரவியதைத் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்புக்கள், தாக்குதல்கள் என வாழ்க்கை பதட்டமான கால ஓட்டத்தில் பயணிக்கத் தொடங்கியது. ஈழப்போர் ஒன்றின் இறுதிக்காலப்பகுதி, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் தனது இருப்பை அமைத்துக் கொண்டிருந்தது. மீண்டும் ஆரம்பித்த போர், விமானக் குண்டு வீச்சு, ஆங்காங்கே நேரம் காலமின்றி விழுந்து வெடிக்கும் செல் என அசாதாரண சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தது. வாணனுக்கு அப்போது பதின்நான்கு வயது.

அன்றைய பதற்றமான சூழ்நிலையில், வைத்தியசாலையில் இருந்த அப்பாவின் விடுதியில் பாதுகாப்பின் நிமித்தம் தங்கியிருந்த போது நிகழ்ந்தது அந்தக் கொடூர சம்பவம். அதிலிருந்து மயிரிழையில், பிணங்களுக்குள் பிணமாக தன்னையும் உருமாற்றி ஒரு நாளுக்கு மேல் மரணத்தின் விளிம்பில் வாழ்ந்து தப்பியவன்.  1987ம் வருடம், தீபாவளி தினத்தில், யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்கில் யாழ் கோட்டையிலிருந்த இந்திய இராணுவம் கடுமையான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டது. முன்னேறி வந்த இராணுவம், யாழ் வைத்தியசாலை வளாகத்தின் அலுவலகப் பகுதியை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுக் கொண்டு உள்நுழைந்தது. 

அப்போது அப்பாவுடன் அலுவலக அறையில் நின்று கொண்டிருந்த வாணன், அந்த சம்பவத்தைப்பற்றி கூறுகையில் “ஆமி சுட்டுக்கொண்டு வந்தபோது நான் வாசல்ல தான் நின்டனான். ஆமி சுட்டதில் எனக்கு முன் நின்றவர்கள் இரண்டு பேரும் வெடிபட்டு எனக்குமேல் விழுந்து விட்டினம். நான் அப்படியே அசைவில்லாமல் அவங்களின் உடலுக்கு கீழ விழுந்து கிடந்தன், ஆமி சுட்டது எனக்குப்படேல, கொஞ்ச நேரத்தில் என்ர காலும் விறைச்சுப் போட்டுது, ஆமி வந்து என்ர காலை தனது சூக்காலால் தட்டிப்பார்த்தான், எனக்கு ஒன்டும் தெரியல, நானும் சத்தம் போடாமல் இருந்திட்டன், அதால நான் இறந்திட்டதா நினைச்சு விட்டுட்டுப் போயிட்டான், எனக்கு மேல இறந்து விழுந்தவர்கள் பயங்கரப் பாரம் ஒன்டும் செய்ய முடியாததால அப்படியே இருந்தன், அவர்களில் இருந்து வடிந்த இரத்தம் என்ட உடம்பையும் இரத்தமாக்கியிட்டுது அதோடு பிணங்களுக்கிடையால் ஆமியைப் பார்ப்பன். கிட்ட வரும்போது மூச்சை அடக்கியிருப்பன், அவன் போன பிறகுதான் மூச்செடுப்பன்|. மறுநாள்வரை இப்படித்தான் கழிந்தது. ‘கடைசித்தம்பி காயப்பட்டு தண்ணீர் கேட்க, அப்பா மேசையிலிருந்த தண்ணீரை எடுத்துக் கொடுக்க முற்பட்டபோது, யன்னல்ப்பக்கமிருந்த ஆமிசுட்டு அப்பா செத்ததை பாத்துக்கொண்டிருந்தனான்’.” என்றான்.

மேலும் “உங்களை ஆமி கூட்டிக்கொண்டு போனபோது அம்மா எங்கட பெயரைக் கூப்பிட்டு அழுதுகொண்டு போனது கேட்டது அதனால உங்களையும் ஆமி சுடப்போறாங்களோ! என்ட பயத்தில எழுப்பேல்லை, பிறகு அப்பகுதியில் ஆமியைக் காணவில்லை, வைத்தியசாலை ஊழியர் ஓராளும் காயப்பட்டு எழும்பாமல் எங்களோடயிருந்தார். நாங்கள் இங்கயிருந்து ஓடுவம் என்று முடிவெடுத்து, நானும் தம்பியையும் தூக்கிக் கொண்டு மதில் ஏறிப்பாய்ந்து நல்லூர் கோயிலுக்கு ஓடினான். அதோட அப்பாவின் சட்டைப் பையில இருந்த அம்புலன்ஸ் சாவியையும் நல்லூர் கோயிலில் நின்ற வைத்திய பொறுப்பதிகாரி நச்சினியாக்கினியாரிடம் கொண்டு போய்க் கொடுத்து நடந்ததைக் கூறினேன் என்றான்”. (படுகொலைச் சம்பவத்தை வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும் - வலிகளுடன் தொடரும் இருபத்திநான்காவது தீபாவளித் திருநாள்)

இந்தச்சம்பவம் அவனுக்குள் எழுப்பிய கேள்விகள் பல, ஏதும் அறியாத அப்பாவிகள் மீது நடந்தேறிய கோரக் கொலைத்தாண்டவம் அவனை வெகுவாகப் பாதித்திருந்தது. ஈழத்தமிழர்களின் வரலாற்றைப்பற்றி ஜயாவிடமும் அம்மம்மாவிடமும் கதைப்பான் பல கேள்விகளைக் கேட்பான். எமக்கான விடுதலையின் தேவை, இலங்கைத்தீவின் தமிழர்களின் வரலாறு பற்றி மேலதிகமாக அறிய ஆவல் காட்டினான். தனக்கு ஏற்பட்ட அனுபவம், தமிழர்களின் வரலாறு, அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் என இளம் பிராயத்தில் அவனுக்குள் ஏற்படுத்திய விடுதலைத்தீ ‘சுதந்திர தமிழீழம்’ என்ற விடையாகக் கிடைத்தது. தனது குறிப்பேட்டில் “எமது இனம் பெற்ற சுதந்திரம் பெறுமதி வாய்ந்தது. அதை எதிரியிடம் விட்டுவிடலாமா? கூடாது எமது இனத்தின் சுதந்திரத்தை மீண்டும் பெற்றுவிட இறுதி மூச்சுவரை போராடுவோம்!”என்ற அவனது எழுத்தில் தனது திடத்தைப் பதித்திருந்தான். 

இந்திய இராணுவ காலத்தில் போராளிகளுக்கு உணவு எடுத்துக் கொடுத்தல், இராணுவம் தொடர்பான தகவல்களை வழங்குதல் போன்ற தன்னாலியன்ற பங்களிப்புக்களைச் செய்யத் தொடங்கினான். இவனது செயற்பாடுகளை அறிந்த அம்மா வெளிநாட்டுக்கு அனுப்பும் நோக்கத்துடன் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கிருந்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி மீண்டும் கடலால் நாட்டுக்கு திரும்பி வந்து வீட்டில் நின்றான். 

ஈழப்போர் இரண்டு தொடங்கியதும் தன்னை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டான். ஒருநாள் பயிற்சி முகாமில் எதேச்சையாக ‘மெடிசின்’ கொட்டிலில் அவனைக் கண்டேன். முகாம் அமைக்கும் வேலையின் போது காயம் ஏற்பட்டு, அப்போதுதான் குணமடைந்து வந்திருந்தான். ஒரே பயிற்சி முகாமில் இருவரும் பயிற்சியெடுத்தோம். அவனிடம் “நான் இணைந்திருக்கிறன் தானே நீ போய் வீட்டைப் பார்” என்றேன், மறுத்துவிட்டான். பின்னர் பயிற்சி முடித்து, வேலைத்திட்டங்களுக்காக வேறு இடங்களுக்குச் சென்று விட்டோம்.

தனது பணியினை பலாலி இராணுவமுகாமில் ஆரம்பித்தான், பல சண்டைகளில் பங்குபற்றினான். அவனது சுயமுயற்சியும் சுயதிட்டமிடலும்  சிறந்த தலைமைத்துவத்தைக் கொடுத்தது. முக்கியமாக வேவுப்பணிகளில் திறமையாகச் செயற்பட்டான். எதிரிக்குள் வாழ்வதைக்கூட இலகுவான பணியாகச் செய்தான். அவ்வளவு தூரம் அவன் உளரீதியாக உறுதியான மனநிலை உடையவனாக விளங்கினான். 

1993 ம் ஆண்டு ’களத்தில்’ பத்திரிகையில் வந்த விழுதுகள் கட்டுரையில் இருந்து வாணனைப்பற்றி ...

”வாணன் காவலரண்களில் கடமை புரிகிற வேளைகளில் எதிரிப்படையினரின் நிலைமைகளைச் சென்று கண்காணிப்பான். ஆனால் கத்தி விளிம்பில் நடக்கிற இச்செயலின் ஆபத்து, அவனுக்குப் பெரிதாய்ப்பட்டதில்லை - மகிழ்ச்சியைக் கொடுத்து, உற்சாக ஊக்கியாய் இருந்தது.

03-11-1990 அன்று நடாத்தப்பட்ட மாவிட்டபுரம் சிறீலங்காப்படை மினிமுகாம் தாக்குதலுக்கு முன் வேவு பார்க்கும் பணியினை இவன் ஏற்றிருந்தான். மிகச் சாதுரியமாகச் சென்று தகவல்களைத் திரட்டி ஒன்றும் மீதியின்றி தளபதியிடம் பகிர்ந்தான். மேலதிக உறுதிப்பாட்டிற்காக தளபதியினால் அனுப்பப்பட்ட போராளிகளினால் கொண்டுவரப்பட்ட தகவல்களும் இவனுடையதை ஒத்து அச்சொட்டாகவே இருந்தது. வேவுக்கடமைகளிலும் இவன் ஆளுமை மிளிர்ந்தது.

இத்தாக்குதலுக்காக எதிரியின் நிலைகளை நோக்கி இவன், சகபோராளிகள் ஊர்ந்து முன்னேறி நிலையெடுக்கின்றனர். தளபதியின் கட்டளை பிறக்கின்றது. எதிர்பாராத் தாக்குதலில் எதிர்ப்படையினர் நிலைகுலைந்து போயினர். நிதானிப்பதற்குள்ளாகக் குண்டுபட்டு வீழ்கின்றனர். எறிகணைகள், உலங்குவானூர்திகள் உக்கிரம் கொண்டு எமது நிலைகளைத் தாக்குகின்றன. குண்டு வீச்சு விமானங்கள் எமது முன்னேற்றத்தைத் தடுக்கப் பகீரதப்பிராயத்தனம் செய்கின்றன. ஆயினும் இவர்கள் எதிரிப்படையின் நிலைகளை அழித்தனர். மினிமுகாமைக் கைப்பற்றினர். எதிரிப்படையினர் தமது ஆயுதங்களை வீசிவிட்டு, காயமுற்ற தமது சகாக்களைத் தூக்கிச் சுமந்தவாறு ஓட்டமெடுத்தனர். அவற்றையும் கைப்பற்றி எமது நிலைகளை நோக்கி மீள்கையில், எங்கிருந்தோ வந்ததொரு குண்டு! இவன் உடலைப் பதம்பார்க்கின்றது! குருதியாறு நிலத்தை நனைக்கிறது. இதைப்பற்றி அவனது தினக்குறிப்பு வரிகள் குரலிலேயே நெஞ்சுள் ஒலிக்கிறது! ”தமிழா நீ பிறவி எடுத்தாலும் நீ பிறந்த மண்ணுக்காக ஒரு துளி இரத்தத்தைக் கொடுத்துவிட மறந்திடாதே தமிழா....” 

மாவிட்டபுரம் மினிமுகாமைத் தகர்த்து வீரசாதனை புரிந்தவர்களில் ஒருவரான இவன், தனது விழுப்புண் ஆறமுன்னே அடுத்த சமர்க்களத்திற் குதித்தான். 19-12-90 அன்று கட்டுவனில் சிறிலங்காப் படையினருடனான கடுஞ்சமர், முன்னேற முயல்கின்றனர் எதிரிப்படையினர், தடுத்து நிறுத்துவதில் இவனது துப்பாக்கியும் சுறுசுறுப்பாய்த் துரிதமாய் இயங்கியது. 05-02-92 அன்று நடந்த தச்சன்காடு மினிமுகாம் தாக்குதலிலும் இவனது பங்கு அளப்பரியது.

சகதோழர்கள் மேல் இவன் காட்டுகிற கரிசனை அபாரம். அவர்களை வழிநடத்துகிற ஆற்றலை அவர்களே புகழ்ந்துரைப்பார்கள். இராணுவம் முன்னேறி வந்த ஒரு தடவை, இவனது குழுவைச் சேர்ந்த ஒருவன் அசட்டையாக எழுந்து நின்று அவதானித்தான். இவன் கண்டிப்பும் அன்பும் கலந்த தொனியிற் சொன்னான், ”எவ்வளவு கஸ்டத்திற்கு மத்தியில் ஒவ்வொரு போராளியையும் அண்ணை உருவாக்கி வைச்சிருக்கிறார். நீ என்னெண்டா சும்மா மண்டையைப் போடுகிறன் எண்டு எழும்பி நிக்கிறாய்!” இந்தச் சிறுவயதிலேயே தலைமைத்துவத்திற்கு விசுவாசமிக்கவனாக, ஒவ்வொரு போராளியினதும் பெறுமதி உணர்வாகத் தன்னை நிலைநிறுத்தியிருந்தான். பங்குபற்றிய அனைத்துத் தாக்குதலுமே மிக நிதானத்துடனும், திறமையாகவும் செயற்பட்டு தளபதிகளின், பாராட்டுதலுக்கும், அன்பிற்கும் பாத்திரமாகிவிட்டான்.”

சிறிது காலத்தில் பகுதி இராணுவப்பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். பொறுப்பெடுத்தபின் தனது பகுதிக்குள்ளால் இராணுவத்தை நகரவிடக்கூடாது என்பதற்காக கடுமையாகப் பாடுபட்டான். எப்போதும் எந்த வேளையிலும் ஒவ்வொரு நிலைக்கும் சென்று போராளிகளை ஊக்கப்படுத்தி, அவர்களின் மேல் கரிசனையாக வழிநடாத்தும் ஆற்றல் நல்ல உறவை வளர்த்தது. இராணுவத்தை சும்மாயிருக்க விடக்கூடாது தொடர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருப்பான். ஒருநாள் வாணன் இராணுவத்தி நடமாட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தான். அதேசமயம் சினைப்பர் வைத்திருப்பவர் வெளியில் சென்றுவிட, அந்த ஆயுதத்தைக் கொண்டு சென்று தானே ஒரு சினைப்பர் போராளியாக பதுங்கியிருந்து இரண்டு இராணுவத்தைச் சுட்டுக் கொன்றுவிட்டு வந்தான். 

கூடியளவு தனது செயற்பாடுகளை எதிரிக்கும் தனது காவலரணுக்குமிடையில்தான் வைத்திருந்தான். அநேகமான நேரங்களில் எதிரியை அண்டிய பகுதியிலேயே இவனைச் சந்திக்கலாம் என்பது இராணுவப் பொறுப்பாளர்களின் கருத்து. தனது பகுதிக்குள் இராணுவத்தை நகரவிடாமல் எவ்வாறு தடுக்கலாம் என்பதை சிந்தித்து பதுங்கித்தாக்குதல்களை செய்தல், பொறிவெடிகளை வைத்தல் போன்ற பணிகளை தானே முன்நின்று செய்வான். அப்பகுதியில் கிடைக்கும் பழைய செல்கள் மற்றும் இதர வெடிபொருட்களை தேடியெடுத்து அவற்றை எதிரியின் நகர்விற்குச் சாத்தியமான பகுதிகளில் வைப்பான். 

”24-12-91 இது மிகத் தன்நலக்காரத் தினமோ? இத்துணை புகழ் பூத்த எம் வாணனைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டதே! பாரிய வெடியோசைகள் வலிகாமம் கிழக்கின் தலையில் வெடிகின்றது. அந்தக் காலை இவ்வாறுதான் தொடங்கிற்று! இப்பிரதேசத்து ஈவினைப் பகுதி மண்ணின் இயல்பான செம்மை எம்மவர் குருதியால் மேலும் சிவப்பேறி... மூவர் விதையாகின்றனர். எதிர்பாராத கந்தக வீச்சில் மாசுற்ற எம்சூழற் காற்று இவர்தம் இறுதி மூச்சால் தூய்மை பெறுகின்றது. இந்த மூவரில் ஒருவன்தான் .. வாணன்.

ஓ.... கேட்கிறது உனது ஆத்ம ராகம். அதுதான் உனது குறிப்பேடு

”வீரத்திற்கு வித்திட்ட தமிழா , கோழைக்குக் குடை பிடிக்கலாமா? கூடாது, எமது இழப்புக்கள் இழப்பு அல்ல, விடுதலை என்னும் பயிருக்கு இடப்பட்ட உரமே! எமது இலட்சியம் ஒங்குக”

உனது குறிப்பேடு, வெறும் கையேடல்ல. பின்தொடர்ந்து வரும் இளைய வீரர்களுக்காய், தாயக மக்களுக்காய் நீ எழுதி வைத்த மரண சாசனம். அது புனிதம் மிக்கது. ஏனெனில் உனது புகழுடம்பின் சட்டைப் பையிலிருந்து அதை நாம் எடுத்தபோது அதுவும் குருதியில் குளிப்பாட்டப்பட்டிருந்தது.”  விழுதுகள்

வாழ்ககையின் சில கணங்களின் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லமுடியாது. அது பாசப்பிரிவின் வேதனை, விடுதலைக்கு உரமான போராளியின் பிரிவின் வேதனை, மனதை பிழந்து விடும் அந்தச் செய்தி வந்தது. அங்கே கிடைத்த பழைய செல்லை எடுத்து பொறிவெடியாக்க முயற்சித்தவேளை வெடித்ததில் வாணனும் அவனுடன் இருவரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர் என்பது. தம்பி வீரச்சாவு, உணர்வை உலுங்கிய அந்த நிமிடங்கள். 

சிலமாதங்களுக்கு முன் அப்பாவின் திதியில் இருவரும் சந்தித்ததிற்குப் பின் அவனைக் காணவில்லை. வித்துடலும் பார்க்க முடியாதவாறு சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்தப்போரில் அநியாயமாக அப்பாவையும் விடுதலைக்கு விதையாக தம்பியையும் இழந்திருக்கின்றோம்.

சுதந்திர தமிழீழத்திற்காகப் புறப்பட்ட அவனது கடமை ஒரு வருடத்தில் நிறைவிற்கு வந்துவிட்டது. விடுதலைக்காக நிறைய சாதிக்கும் கனவுடன் கடுமையாக செயற்பட்ட, சாதிப்பான் என எதிர்பார்க்கப்பட்ட, அவனின் விடுதலைமூச்சு நின்றுவிட்டது. அந்த ஆத்மா தனது கனவின் அடைவுவரை அமைதிகொள்ளாது என்பது நினைவிற்குள் வர மனது கனக்கின்றது இதுபோன்று பல்லாயிரக்கணக்கானோரின் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்து வாழும் எத்தனையோ ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் என்பது சுதந்திர விடுதலை மட்டுமே. விடுதலையை நெஞ்சில் சுமந்து வித்தாகிப்போன வாணனுக்கும் மற்றைய இருவருக்கும் சிரம் தாழ்த்திய வீரவணக்கம். 

அபிஷேகா



Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment