தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் மன்னார் ஆயருக்கு எழுதிய பதில் கடிதத்தை ஊடகங்களுக்கு வெளியிடுவேன் என்று கூறியிருந்ததன் சார்பாக சில கருத்துக்கள் வெளிவருவதை தவிர்க்க முடியாது.
இக்கடிதத்தை வேதாகமத்தின் பத்துக் கட்டளைகளுடன் சேர்ந்த பதினோராவது கட்டளையாக நினைப்பதும், இஸ்லாத்தில் நபிமணி அவர்களிடம் கேட்டுக்கொண்ட ‘குதபியா’ உடன்படிக்கை போன்று இரா.சம்பந்தன் நினைத்துக்கொள்ள முற்படுவதும் தெரிகிறது.
இரா.சம்பந்தன் பரிவாரங்கள் ஆயர் குழுவின் கடித்தத்தால் பாதிக்கப்பட்டதும், அவர்களது மனநிலையும் புரிகிறது.
* ‘ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவேன்’ என்று சம்பந்தன் கூறுவது ஒரு மிரட்டல்.
* ஆயரின் கடிதம் சார்பாக அண்மையில் வெளிவந்த ஊடகங்களின் கருத்துப்படி(பாசெல் தமிழ். கொம் இணைய தளத்தில் 18.மார்கழி. 2011 வெளிவந்த) ‘தேசியப் பட்டியல் பா.உ. சுமந்திரன் அவர்களை பா.உ. பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஆயர் குழுவினரில் ஒருவரை நியமிக்க வேண்டும்’ என்பதற்கெதிராக சம்பந்தனின் இக்கடிதம் மக்களை திசை திருப்ப முயல்கிறது.
காலம் காலமாக சம்பந்தன் குழுவினர் விதண்டாவாதங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றி வந்த காலம் மலையேறிவிட்டது. மக்கள் சார்பாக புத்திஜீவிகள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். மக்களுக்கு ஆயரின் கடிதத்தின் மூலம் உண்மைகள் புலப்பட்டுவிடும் என்ற அச்சம் கூட்டமைப்புக் குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் சம்பந்தனின் கடிதத்திலிருந்து இன்னுமொரு விடயம் புரிதலுக்கு வருகிறது.
* ‘தமிழர் தேசியம் சார்பாக அரசாங்கத்தோடு பேசுவது யாவும் தமிழ்மக்களுக்கு சொல்லவேண்டியதில்லை’ என சம்பந்தன் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பது மறைத்து வைத்திருந்த தனது பெரும் அராஜகப்போக்கை ஊடகங்களின் மூலமாக வெளிப்படுத்தியிருப்பது அம்பலத்திற்கு வருகிறது. தமிழ்த்தேசியத்தை நோக்காகக் கொண்டு தம்மை அர்ப்பணித்திருந்த கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை சுயநலத்திற்காக சதிசெய்து வெளியேற்றியதென்ற கருத்து உண்மையாகிறது.
மேலும், தமிழர் வரலாற்றிலே தவறுகள் இழைக்கப்பட்டதும், திருத்தப்பட்டதும் வரலாறு. தவறுகளை உச்சப்படுத்தி எப்படி செயற்படுத்த வேண்டிய நல்ல காரியங்களை தவிர்க்கலாம் என கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது இக்கடிதத்தின் மூலம் புலனாகிறது. அதாவது, ‘ஆயர் மட்டும் கையொப்பமிட்டு ஏனையோர் கையொப்பமிடாமை’ பற்றி பெரிதாக்கி ஆயர் எதோ பெரும் தவறு ஈட்டியதுபோல் குற்றம் கண்டு திசை மாற்ற நினைப்பது விளங்கிக்கொள்ள கூடியதாக இருக்கின்றது. என்ன சாராம்சம் சொல்லப்பட்டதுதான் முக்கியமே தவிர வேறொன்றும் தேவைப்படாது. இதை சம்பந்தன் தனக்கு சாதகமாக்கி உண்மையிலிருந்து நழுவிவிடப் பார்ப்பது புரியமுடியாத ஒன்றல்ல.
மேற்படி கடிதத்தகவல்களின்படி பல உண்மைத்தகவல்கள் வெளிப்படுகின்றது. மக்களை அராஜகத்தினூடாக கட்டிப்போட்டு வைக்கவேண்டுமென்ற ஒரு ஜனநாயக முறைமையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் குழுவினர் மேற்கொள்ளுகின்றனர். விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை இரகசியத் தன்மை பேணப்படவேண்டும் என்பதற்கான தேவை இருந்தது. காரணம் போரியல் சூழலுக்குள் அமைந்திருக்கும் ஒரு அமைப்பு இரகசியத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் இரு கண்களாக போற்றிப் பாதுகாக்க வேண்டும். ஆனால் முழுக்க முழுக்க ஒரு ஜனநாயகம் சார்ந்த அமைப்பு (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) நம்பகத்தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக மக்களுக்கு வெளிப்படைத்தன்மையின்றி மறைக்கப்படுவது எந்த நிலையிலும் பொருத்தமாகாது. அதில் ‘கள்ளம்’ இருப்பதாகவே ஊகிக்க முடிகிறது.
இலங்கை அரசுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிறுவன ரீதியாக பேசப்படும் அனைத்து விடயங்களும் ஒரு சொல்லுப் பிசகின்றி அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தப்படல் வேண்டும். சிங்கள மக்களும் தமிழ்த்தேசியம் சார்பான நியாயப்பாடுகளை உணரும் சந்தர்ப்பத்தில் தமிழ்த்தேசியத்திற்கான உரம் மேலும் அதிகரிக்கும். வெறுமனே ‘இரகசியம்’ என்ற போர்வைக்குள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் குழுவினர் சுத்துமாத்துக்களைச் செய்து, தமிழ்மக்களின் உணர்வுகளை மட்டும் மூலதனமாகக் கொண்டு அரசியல் கதிரையில் நிரந்தரமாக அமர நினைப்பது இனியும் வெற்றிபெறாது. இறுதி அறிவித்தல்களிலும் கூட(மரண அறிவித்தல்) ‘பாராளுமன்ற உறுப்பினர்’ என்று இருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டு செயற்படுவதை நிறுத்திவிட்டு தமிழ்த்தேசியத்தை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து அதில் வெற்றிகண்டால் காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக மக்களின் மனங்களில் பதிந்திருக்க வாய்ப்புண்டு.
மக்கள் உண்மையை நோக்கி விழித்தெழாத பட்சத்தில் இந்த ‘சுத்து மாத்துக் காரர்கள்’ ஆட்சியே கோலோச்சும். மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் கூட்டமைப்பு மாற்றப்படலாகாது. அதன் பா.உ. உறுப்பினர்கள் மாற்றப்படல் வேண்டும். ஆரம்பக் கட்டமாக சுமந்திரன் உட்பட ….. என்ற பட்டியல் நீள வேண்டும். மக்கள் நாம் சுயமாக சிந்திக்கத் தொடங்கும் வரையில்?
மலையூர் பண்ணாகத்தான்
0 கருத்துரைகள் :
Post a Comment