அபிவிருத்தி என்ற போர்வையில்........

தமிழ் மக்களை மீட்பதற்கான யுத்தம் எனக் கூறி தெருவுக்குக் கொண்டு வரப்பட்ட வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் இன்று தெருக்களிலேயே வாழ்கின்றனர். அபிவிருத்தி எனும் போர்வையில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்படுகின்றன. அவர்களது கலாசாரம் சீரழிக்கப்படுகிறது. அவர்களது மொழியறிவும் அழிக்கப்படுகிறது. சுதந்திர வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது. எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனத்துடனேயே தமிழர்களது ஒவ்வொரு நாட்களும் கழிகின்றன. 

ஒரு தீவிலுள்ள இரு தேசிய இனமக்கள் வசிக்கின்ற போதிலும் அவர்கள் தமக்குரிய அரசியலையும் பொருளாதாரத்தையும் வெவ்வேறு அடிப்படையில் கொண்டுள்ளனர். இலங்கை ஒரே நாடு என்பதற்கான சமூக அரசியல் கட்டுமானத்தை நிர்மாணிப்பதற்காகவே 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை புவியியல் ரீதியாக ஒருமைப்பாடு உள்ள நாடு என்றாலும் இத் தீவினுள் சிங்கள, தமிழ்த் தேசிய இனங்களின் மரபு வழித் தாயகத்துடன் கூடிய சுயநிர்ணய உரிமையையும் கொண்டுள்ளனர். இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்று வரை தமிழர் தேசம் பொருளாதார ரீதியில் புறக்கணிக்கப்பட்டு அவர்களின் தனித்துவம் உடைத்தெறியப்படும் வகையில் வரவுசெலவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வந்துள்ளன. 

வரவுசெலவுத் திட்டத்தில் ஒரு தனிநபருக்கான சுகாதாரச் செலவினம் 3583 ரூபாவாகவும் கல்விச் செலவினம் 1610 ரூபாவாகவும் உள்ளபோது பாதுகாப்புச் செலவினம் 11,133 ரூபா என மிக அதிகமாக உள்ளது.

ஆசியாவின் ஆச்சரியமாக இந்த நாட்டை மாற்றுவோம். எல்லா இனமும் இங்கு ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று காட்ட முனையும் அரசு ஏன் இந்த முன்னாள் போராளிகள் மீது பாரபட்சம் காட்டுகிறது. வெளியில் வந்த போராளிகளுக்குவேலையில்லை, இராணுத் தொந்தரவு, நிம்மதியில்லாத வாழ்க்கை தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் இந்த நாட்டில் எப்போது விடிவு கிடைக்கப்போகிறது. சிறையிலுள்ள சரணடைந்த போராளியின் விபரங்களையாவது இந்த ஜனநாயக நாடு வெளியிடுமா? 

வெறும் அபிவிருத்திக் கோஷங்களையும் திறப்பு விழாக்களையும் நடத்துவதால் தமிழினம் நிம்மதியுடன் வாழ்வதாக காட்டமுடியாது என்ற உண்மை உங்களுக்கே இப்பொழுது புலப்படத் தொடங்கியுள்ளது. வெள்ளைக் கொடியோடு வந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இன்று வரை அரசு வெளியிடவில்லை. தமது குடும்பத்தாரால் ஒப்படைக்கப்பட்டு நல்லிணக்க ஆணைக்குழு முன் இவர்களில் பலரும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்கள். விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரனும் மகனும் உள்ளே வந்ததை லங்கா கார்டியன் பத்திரிகை படத்துடன் வெளியிட்டிருந்தது. எழிலன், யோகரத்தினம் யோகி ஆகியோரை அவர்களின் மனைவிமாரே ஒப்படைத்திருந்ததை நல்லிணக்க ஆணைக்குழு முன் கூறியுள்ளனர். விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பான ராஜா தன் மூன்று குழந்தைகளோடு சரணடைந்திருக்கிறார்கள். சோ.தங்கன் வனவளப் பிரிவு சத்தி போன்றோர் குடும்பமாகவே சரணடைந்துள்ளனர். வணபிதா பிரான்சிஸ் அடிகளாருடன் 100 இற்கு மேற்பட்டோர் சரணடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் நிலை என்ன? புதுவை இரத்தினதுரை, இளங்குமரன், அருள்மாஸ்ரர், ரேகா, இளம்பரிதி, பாப்பா இவர்கள் சரணடைந்ததை குடும்பத்தினர் நல்லிணக்க ஆணைக்குழு முன் தெரிவித்துள்ளனர். 

தமிழர்களின் கலாசாரச் சின்னங்கள் அழிக்கப்பட்டு அவர்களின் பூர்வீக மண்ணில் அடையாளமே இல்லாமல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாளனுடன் போரிட்ட துட்டகைமுனு எல்லாளனுக்கு வணக்கம் தெரிவித்து சமாதி கட்டினான். இது அக்கால சிங்கள மக்களின் உயர்ந்த பண்பாட்டைக்காட்டுகின்றது. ஆனால், இன்று போரிலே மடிந்த தங்கள் வீரர்களுக்கு பூ வைக்க முடியாமல் மாவீரர் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்களின் மாவீரர் தினம் கூட கோயில்களில் மணியடித்து பூசை செய்வதற்கு ஆண்டவனுக்கே தடையான நாளாக அறிவிக்கப்படுகிறது. ஒரு இனத்தின் உணர்வுகளைப் புரிந்து வாழ்வியல் உரிமைகளைப் புரிந்து அவர்களின் இனத்துவத்தை மதித்து நடக்காதவரைக்கும் யாரும் நிம்மதி யோடு இந்த மண்ணில் வாழ முடியாது என்ற உண்மை வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

இலங்கை அரசு ஓரின மேலாதிக்கக் கலாசாரத்தை நோக்கி முன்னேறுகிறது. அது நாகரிக உலகம் கண்ட பல்லினக் கலாசாரத்தை நிராகரிக்கிறது. பௌத்தமே இலங்கையின் முதன்மையான மதம் என்ற வார்த்தைக்கூடாக ஓரின மேலாதிக்கத்தை அரசியலாக்கி வன்முறையினால் அது சாதிக்க விரும்புகிறது. இதுவே இலங்கைத்தீவின் பாரிய இரத்தக் களறிக்கான அடிப்படையாய் அமைந்தது. 

இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை ஒரு பக்கச் சார்பான நிலைப்பாடுகள் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு ஒரு பக்கச் சார்பாக அமைந்துள்ளது. இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்ளக ரீதியான தீர்வே பொருத்தமானது என நாங்கள் நம்புகின்றோம். உள்நாட்டு ரீதியாக பல நூற்றாண்டுகளுக்கு மேலாய் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது போனதன் விளைவாகவே இலங்கையின் இனப் பிரச்சினை சர்வதேச பரிமாணம் பெற்றதாக மாறியது. திம்புவில் இருந்து புதுடில்லி ஈறாக ஒஸ்லோ வரை இனப் பிரச்சினை வளர்ந்து சர்வதேச பரிமாணத்தைப் பெற்றது. இதன் பின்பும் இதனை ஓர் உள்நாட்டுத் தீர்விற்குள்ளால் அணுகப்போவதாகக் கூறுவது சுத்த அபத்தமாகும். 

நீண்டகாலமாய் இனப் பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியாக தீர்வுகாணச் சிங்கள ஆட்சியாளர்கள் தவறியதாற்தான் வெளிநாட்டு ரீதியான தீர்வு அவசியப்பட்டது. இதுவரை உள்நாட்டு ரீதியாகத் தீர்வு காணாதவர்கள் இனியும் உள்நாட்டு ரீதியாக தீர்வுகாண்பார்கள் என்று கூறுவதில் அர்த்தமில்லை. இன்று தமிழ் மண் முப்படைகளின் பரிசோதனைக் கூடமாய் காணப்படுகிறது. மேற்படி அனைத்துத் தரப்பினர்களினதும் கரங்களில் தமிழ் மக்கள் பரிசோதனைப் பிராணிகளாய் ஆக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் சுதந்திரமானதும் சுயமானதுமான வளர்ச்சிக்கும் சிந்தனைக்கும் இடமற்ரோராய் ஆக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததைப் போலவே சமாதானத்தை வென்றெடுப்பதும் மிகவும் கடினமான சவால் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ள ஜனாதிபதி சமாதானத்தை ஏற்படுத்த எத்தகைய முயற்சிகளையும் செய்யவில்லை என்ற உண்மையை நாம் நோக்க வேண்டும். 

சாமாதானத் தீர்வை உருவாக்க சிங்கள மக்கள் மத்தியில் எந்ததொரு சிங்களத் தலைவரும் இதுவரை செயற்பட்டதில்லை. மாறாக சிங்கள மக்களை சமாதானத்திற்கு எதிராகவும் தமிழருக்கு எதுராகவும் நஞ்சு ஊட்டிய சிந்தனைகளை வளர்ப்பது சிங்களத் தலைவர்கள் தான் தமிழருக்கு எதிராக வன்மத்தையும் பகை உணர்வையும் சிங்கள மக்களிடம் காலம் காலமாக ஊட்டிவருகின்றனர். மஹிந்த சிந்தனை ஒன்றை முன்வைத்து நிகழ்ந்த முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்கள் முற்றிலும் இனவாத உணர்வு ஊட்டப்பட்டு தமிழருக்கு எதிரான சமாதானத்திற்கு எதிரான சிந்தனை ஊட்டப்பட்டனர். சதந்திரக் கட்சியும், ஜே.வி.பியும் இதில் பெரும்பங்கெடுத்தன. இவ்வாறு சிங்கள மக்களை தமிழருக்கு எதிரான வன்மம் உள்ளவர்களாய் வளர்த்துவிட்டு சமாதானத்தைச் சிங்கள மக்கள் ஏற்கும் நிலையை உருவாக்கக் காலமெடுக்கும் என்று இப்போது கூறுவது மிகவும் வேதனைக் குரிய விடயமாகும். 

இனப் பகைமையையும் தமிழருக்கு எதிரான வன்மத்தையும் சிங்கள மக்களிடம் சிங்களத் தலைவர்கள் தமது தேர்தல் வெற்றிகளுக்காக வளர்த்து விட்டார்கள். பேரினவாதத்தையே தம் தேர்தல் வெற்றிக்கான சர்வரோக நிவாரணியாகக் கொண்டார்கள். சிங்களத் தலைவர்கள் தமது அரசியல் அதிகாரப் போட்டிக்குப் பயன்படுத்திய ஒரு துருப்புச் சீட்டாய் இனவாதம் உள்ளது. தமது சொந்தப் பதவி வேட்டைக்காகத் தமிழர்களைப் பலிக்கடாவாக்குவது சிங்கள அரசியலில் ஒரு முக்கிய வழிமுறையாகும். எப்போதும் சிங்களத் தலைவர்களால் தமிழர்கள் சூதுப் பொருளாய் வைத்துச் சூதாடப்பட்டார்கள். சூதில் எந்தக் கட்சி வென்றாலும் அதில் பாதிக்கப்படுவது சூதுப் பொருளாய்ப் பயன்படுத்தப்பட்ட தமிழர்கள் தான். 

முதலில் சமாதானத்தின் பெயரால் தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள். அப்படியாயின் எங்கே சமாதானம்? சமாதானத்திற்காக மிகப்பெரும் தொகையில் தமிழர்களைக் கொன்றவர்கள் சமாதானத்திற்காக சிங்கள மக்கள் மத்தியில் என்ன செய்திருக்கிறார்கள்? பயங்கரவாதம் தீர்ந்தால் சமாதானத் தீர்வை ஏற்படுத்தலாம் என்று கூறி அதன் பெயரால் பல பத்தாயிரக் கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதன் பின்பு 30 மாதங்கள் கடந்தும் சமாதானத்திற்கான முன்வைப்புகள் எதுவும் இதுவரை நிகழ்ந்ததில்லை. குறைந்த பட்சம் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காக மனம் சமாதானத்தைப் பற்றி அவர்களால் எப்படி யோசிக்க முடியும். 

ஓர் அடிப்படையான கேள்வியை நாம் எழுப்புவோம். ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் 1970 ஆண்டுகளின் பிற்பகுதியில் குறிப்பாக 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையின் பின்புதான் தோன்றின. ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலை அரசியல் 1950 களின் நடுப்பகுதியிலேயே சிங்கள ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. 1956 ஆம் ஆண்டு கல்லோயாக குடியேற்றத் திட்டத்தில் 156 அப்பாவித் தமிழ் விவசாயிகள் சிங்களக் குண்டர்களினால் படுகொலை செய்யப்பட்டனர். அதனைப் பண்டார நாயக்கா அரசாங்கம் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. இத்தகவலை தார்சி வித்தாச்சி என்கிற சிங்கள இனத்தவரான ஆங்கிலப் பத்திரிகையாளர் அவசரகாலம் 58 என்ற தனது நூலில் விபரித்துள்ளார். 1958 ஆம் ஆண்டு கலவரம் தொடக்கம் 1977 ஆம் ஆண்டு ஓகஸ்ட் இனப்படுகொலை கலவரம் ஈறாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காலங்களில் இயக்கங்கள் தோன்றி இருக்கவில்லை. ஆதலால் வன்முறை அரசியலை தொடக்கியவர்கள் சிங்களத் தலைவர்கள்தான்.

அவர்கள் தாம் தொடக்கிய வன்முறைகளின் வழியில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிரான அரசியலை உருவாக்கி உள்ளார்கள். வடக்கு, கிழக்கு இணைப்பு என்று இருந்த ஒரு நிலையைக் கூட நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இரத்துச் செய்தவர்கள் ஜே.வி.பி.இனரும் அரசாங்கக் கட்சியினருமே தவிர மக்கள் அல்ல. ஆனால் இந்தக் கட்சிகளால் உருவாக்கப்பட்ட கருத்தையும் அதற்கான வழக்கையும் மக்கள் ஆதரித்தார்கள். இவ்வாறு மக்களை இந்நிலைக்கு உருவாக்கியது தலைவர்கள் தான். எனவே பிரச்சினை தலைவர்களிடம் தான் உண்டு. மக்களில் பழிபோடுவது பொய்யானது. உண்மையில் தலைவர்கள் சமாதானத்திற்குத் தயாரில்லை. சிங்களவர்கள் அல்லாத ஏனைய இனங்களை எதிர்ப்பது என்பது சிங்களக் கலாசாரமாக உள்ளது. அண்மையில் அநுராதபுரத்தில் பழைமை வாய்ந்த இஸ்லாமியப் பள்ளி,சிங்கள இனத்தவரால் இடித்து நொருக்கப்பட்டுள்ளது. இதற்குப் பரிகாரம் தேடுவதாய் சிங்களத் தலைவர்கள் யாருமில்லை.

சிங்களத் தலைவர்களால் சிங்கள இனவாத மயப்படுத்தப்பட்டுள்ளது மட்டுமன்றி தமிழின எதிர்ப்பு வன்மமும் ஊட்டப்பட்டுள்ளார்கள். பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை கிராமசேவகர் காரியாலயம் தொடக்கம் அமைச்சரவை வரை அனைத்து நிறுவனங்களும் இனவாத வன்ம மயப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வேடிக்கை என்னவெனில், ஏறக்குறைய சிங்கள ஊடகங்கள் அனைத்துமே இனவாத வன்ம மயப்படுத்தப்பட்டுள்ளன. நீருக்குள் இருக்கும் மீனுக்கு நீர்தான் உலகமென்பது போல சிங்கள மக்களுக்கு இனவாதமே வாழ்க்கைச் சூழலாகவும் சிந்தனை மட்டமாகவும் கருத்துலகமாகவும் மாறிவிட்டது. இப்பின்னணியில் சிங்கள மக்கள் சமாதானத் தீர்வை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பாங்கு அற்றவர்களாக உள்ளனர். இவர்களின் இத்தகைய மனப்பாங்கை உருவாக்கியதே சிங்களத் தலைவர்கள்தான். எனவே சிங்கள மக்கள் மீது பழியைப் போட்டு தீர்வைத் தவிர்க்க விரும்புகிறார்களே தவிர தீர்வை உருவாக்க அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் ஒருபோதும் உருவாக்கப் போவதும் இல்லை.

நோபல் பரிசு பெற்ற அமற்ரயா சென் வன்முறையும் இன அடையாளமும் என்ற தலைப்பிலான தனது விரிவுரையில் கூறிய கருத்தொன்று மிகவும் முக்கியமானது. அதாவது, வேறுபாடுகளை அங்கீகரிக்காது விட்டால் சமாதானத்திற்கு இடமில்லை என்பதே அந்தக் கூற்றாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்கள பௌத்த இன அடையாளத்தை மட்டுமே இலங்கைக்கான தனித்துவமான அடையாளமாக சிங்கள ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். ஐ.நா. சபையில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் மனிதவுரிமைகள் என்ற பெயரில் ஒரு நாட்டின் தனித்துவமான கலாசார மற்றும் மத விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையீடு செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று ஜனாதிபதி கூறியுள்ளமை சிங்கள பௌத்த கலாசார அடையாளத்தைத் தவிர வேறு கலாசாரங்களை சர்வதேச சமூகம் நியாயப்படுத்தக் கூடாது என்பதுதான்.

உலகளாவிய நவீனயுக வளர்ச்சியில் உலகின் ஏனைய பாகங்களிலிருந்து இயந்திரங்களையும் கருவிகளையும உபகரணங்களையும் தருவிக்கும் இலங்கை அரசு உலகின் ஏனைய நவீனங்களை உள்வாங்கும் இலங்கை அரசு நவீன ஆயுதங்களையும் மற்றும் இராணுவ தளபாடங்களையும் உலகின் பல பகுதிகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் இலங்கை அரசு நவீன உலகம் கண்ட இனப்பிரச்சினைக்கான நவீன தீர்வை மட்டும் நிராகரிக்கிறது. ஆயுதத்தில் சர்வதேச நவீனத்தை ஏற்கும் இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கான தீர்வில் சர்வதேச நவீனத்தை மறுத்து தலையீடு என ஒதுக்குகிறது. எனவே இங்கு பிரச்சினையை நாம் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள மன அமைப்பில் இனப்பிரச்சினைக்கு சமாதானத்தீர்வு என்ற ஒரு சிந்தனைப் போக்கில்லை. அது ஏற்படும் என்று இனியும் எதிர்பார்க்க முடியாது. 

நாம் வளர்ச்சியடைந்த ஒரு தொன்மையான செழிப்பு நாகரிகத்தின் சொந்தக்காரர்கள்.எங்கள் இனிய தமிழ் மொழியும் கலாசாரமும் எமது மண்ணோடு ஒட்டிய வாழ்க்கை முறையும் சிறப்பான அடையாளங்கள் அடையாளம் இன்றி எவரும் வாழமுடியாது. சிங்களவர்களுக்கு  அவர்களது மொழியும் பண்பாடும் எவ்வளவு முக்கியமோ அதேபோல் எமக்கு எமது மொழியும் பண்பாடும் முக்கியமானது. எமக்கிருக்கும் பெரிய அடையாளம் எமது மொழியும் பண்பாடுமாகும். எமது பண்பாட்டு அடையாளத்துடன் நாம் வாழ விரும்புகிறோம். 

எமது வாழ்வுரிமைகளைப் பறிக்க எமது பண்பாட்டைச் சிதைக்க யாரையும் அனுமதிக்க முடியாது. இனத்தின் பெயரால் ஒடுக்கப்படுவதனால் அந்த இனத்தின் பெயரால் எமதுஉரிமையைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் இனப்பண்பாட்டு அடையாளத்தை மீறுவதை நாம் மிகப்பெரும் மனித உரிமை  மீறல் என்று கூறலாம். பல்லினக் கலசாரம் கொண்ட இன்றைய நவீன உலகின் ஓரினக் கலாசாரச் சிந்தனையைக் கொண்ட சிங்கள இனவாதத்தை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஓரின மேலாதிக்கச் சிந்தனை என்பது ஏனைய இன உரிமைகளை நிராகரிப்பதையும் அவர்களுக்கு எதிரான வன்முறையை உருவாக்குவதையுமே அடிப்படையாகக் கொண்டது. ஆதலால் தமிழ் மக்களின் போராட்டம் என்பது ஒர் இன மேலாதிக்க வன்முறைக்கு எதிரான போராட்டமே ஆகும். இப்போராட்டத்தை நாம் ஜனநாயக வழிமுறைகளிலும் மற்றும் சாத்வீக வழிமுறைகளிலும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முன்னெடுக்க விரும்புகிறோம். 

நாம் எதிர்ப்பது சிங்கள மக்களை அல்ல. ஓரின மேலாதிக்க வன்முறைக் கலாசாரத்தையும் அதை நடைமுறைப்படுத்தும் வன்முறை அரசியலையும் எதிர்க்கின்றோம். நீதியின் பெயராலும் ஜனநாயகத்தின் பெயராலும் ஓரின வன்முறைக் கலாசார அரசியலுக்கு எதிராக உலகம் எம்பக்கம் திரும்பும் நாள் மிகக் தொலைவில் இல்லை. அதாவது ஜனநாயகத்தின் குரலான ஊடகங்களே சிங்கள இனவான மயப்பட்ட நிலையில் தமிழர்களின் உரிமைகளையும் துயரங்களையும் ஒப்புக்கொள்ள மறுக்கும் நிலையில் ஏனைய சிங்கள அரச இயந்திரத்தின் இனவாதத் தன்மையைப் புரிந்து கொள்வதில் கஷ்டம் இருக்காது. வன்னியில் மக்கள் படுகொலைக்கு உள்ளானமையை பற்றி உலகமே குரலெழுப்பும் போது சிங்கள ஊடகங்கள் இதற்கு எதிர்க்கணியமாகச் செயற்படுவதையோ அல்லது மௌனம் காப்பதையோ எப்படிப் புரிந்து கொள்ளமுடியும்? 

இனவாத ஊடகங்கள் கண் திறக்க மறுக்கும் நடைமுறையைக் கொண்டிருக்கும் போது ஏனைய அனைத்து வகைச் சிங்கள அமைப்புகளும் நிறுவனங்களும் கட்டமைப்புகளும் இனவாத மயப்பட்டுச் செயற்படுவதில் வியப்பெதுவும் இல்லை. ஆதலால் தமிழ் மக்களின் பிரச்சினை வெறும் சட்டப்பிரச்சினை மட்டுமல்ல. அதற்கு மேலால் நடைமுறை சார்ந்த மனப்பாங்குச்சார்ந்த பேரினவாத ஒடுக்கு முறையை ஏற்கும் ஒரு கலாசாரம் சார்ந்த பிரச்சினையாகவும் உள்ளது. எனவே இதனை இலகுவில் யாராலும் தீர்க்க முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்து இன்றைய உலக ஒழுங்கிற்கேற்ப மூன்றாம் தரப்பின் முன்னிலையில் பேச்சுகளும் உடன்பாடுகளும் நடைபெற்றாலன்றி அரசியல் தீர்வு என்ற ஒன்று சாத்தியப்படப் போவதில்லை.

நன்றி தினக்குரல் 


Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment