‘சர்வதேச சமூகம்’ என்ற சொல்லாடல் இன்று அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இலங்கை அரசியலில், ஈழத்தமிழர்களின் அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது
அரசியற் பிரச்சினைகள், பொருளாதார நடவடிக்கைகள், மனித உரிமைச் செயற்பாடுகள், ஊடகத்துறை சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றில் ‘சர்வதேச சமூகம்’ என்ற சொல்லாடலை மையப்படுத்தி உரையாடல்கள் நடக்கின்றன. மேலும், சர்வதேச சமூகம் என்ற கருதுகோளுடன் காரியங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேச சமூகத்துக்கு விளக்குதல், சர்வதேச சமூகத்தின் தலையீடு, சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம், சர்வதேச சமூகத்தின் அழுத்தம், சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அல்லது ஆதரவு என்றவாறாக இந்தச் ‘சர்வதேசம்’ என்பதைக் குறித்த செயற்பாடுகளையும் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் பெரும்பாலான இலங்கையர்கள் கொண்டிருக்கின்றனர். அதிலும் தமிழர்கள் இதில் முன்னணி வகிக்கின்றனர். ஆனால், சர்வதேச சமூகம் என்று சொல்லப்படுவதற்கு ஏற்பவோ அல்லது அப்படிக் கருதப்படுவதற்கேற்றவாறாகவோ, உலகிலுள்ள அத்தனை நாடுகளும் அத்தனை தரப்புகளும் ஒரு பிரச்சினையை அங்கீகரிப்பதும் இல்லை. ஒரு விவகாரத்தை ஒருமுகப்பட்டு மறுப்பதும் இல்லை. ஒரு நிலைப்பட்டு ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்துவதோ தடுப்பதோ கூட இல்லை. அல்லது அனைத்துத் தரப்புகளும் ஒரே நிலைப்பாட்டில் எந்தப் பிரச்சினையையும் அணுகுவதுமில்லை. ஆகவே சர்வதேச சமூகம் என்பது பல கூறுகளையுடையது. பல நிலைப்பாடுகளையும் பல போக்குகளையும் பல முகங்களையும் உடையது.
ஐ.நா. போன்ற உலகந்தழுவிய பொது அமைப்புகள் கூட முக்கியமான சந்தர்ப்பங்களில் பொதுமைத்தன்மையோடு செயற்படுவதில்லை. பொதுத் தன்மையோடு செயற்படுவதற்கான சூழல் அங்கே இருப்பதில்லை. மட்டுமல்ல ஒரே நிலைப்பாட்டில் தீர்மானத்தை எடுப்பதற்கு முடியாத நிலையும் அங்கே காணப்படுகிறது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் கொண்டு வரும் தீர்மானங்களை சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தமது வீற்றோ அதிகாரத்தின் மூலமாக நிராகரித்து விடுகின்றன. சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளின் விருப்பங்களுக்கு எதிராக மேற்குலகத்தின் தீர்மானங்கள் அமைகின்றன. இதைவிட அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துக்குச் சார்பாக ஐ.நா செயற்படுகிறது என்றும் தீர்மானங்களை எடுக்கிறது என்றும் அமெரிக்காவின் விருப்பங்களை நிறைவேற்றுவதையே ஐ.நா செயலர் செய்து கொண்டிருக்கிறார் எனவும் பகிரங்கக் குற்றச்சாட்டுகள் ஐ.நாவுக்கெதிராக நீண்டகாலமாகவே சுமத்தப்பட்டு வருகின்றன. அதைப்போல மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் பல நாடுகளை ஐ.நாவில் ரஷ்யாவும் சீனாவும் தங்களுடைய வீற்றோ அதிகாரத்தினால் பாதுகாக்கின்றன என்று சொல்லப்படுவதும் உண்டு. இதைத் தவிர்த்து, மனித உரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றவையும் பக்கச்சார்பாகவே நடந்து கொள்கின்றன என்ற அபிப்பிராயமும் உள்ளது.
இவை மேற்குலகத்தின் மனித உரிமை மீறல்களைக் குறித்து பெருமளவிலும் பேசுவதில்லை. பதிலாக மேற்குலகத்துக்கு எதிரான நாடுகள் மற்றும் பிற நாடுகளிற் செயற்படும் அமைப்புகளின் செயற்பாடுகளில் அளவுக்கதிமான விமர்சனங்களை எழுப்புகின்றன. அங்கே நிலவும் விடயங்களைக் கூர்மையாகப் பட்டியலிடுகின்றன என்றும் கூறப்படுகிறது.
இதற்கு ஆதாரமாக ஈராக், ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், அண்மையில் கியூபா போன்ற நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் செயற்பாடுகளையும் மனித உரிமை மீறல்களையும் இந்த அமைப்புகள் எந்த அளவிற் பட்டியற்படுத்தியுள்ளன? என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள் விமர்சகர்கள்.
ஆகவே சர்வதேச சமூகம் என்பது பொதுவாகவே மேற்குலகத்தை மையப்படுத்தியே பேசப்படுகிறது.
இதற்கேற்றவாறு அவற்றின் ஊடகங்களும் (பி.பி.ஸி, சி.என்.என், சனல் – 04, நியூயோர்க் ரைம்ஸ், வொஸிங்ரன் போஸ்ற், லண்டன் ரைம்ஸ், ……….. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற) மனித உரிமை அமைப்புகளும் உயர்ந்த தொனியில் எழுப்பும் குரலும் பிரகாசமான காட்சிப்படுத்தல்களும் மேற்குலகத்துக்கு இத்தகையதொரு தோற்றத்தைக் கொடுத்துள்ளது.
அதாவது சர்வதேச சமூகம் என்பது மேற்குலகம் மட்டுமே என்ற தோற்றம்.
இதில் ஆபிரிக்கா உள்ளடக்கப்படுவதில்லை. மத்திய கிழக்கு நாடுகள், தூரகிழக்கு நாடுகள், தென்னாசிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றனவும் சேர்த்தியில்லை. ஆகவே, மேற்குலகமே சர்வதேச சமூகம். சர்வதேச சமூகம் என்பது மேற்குலகமே என்ற அளவிலேயே வரையறை செய்யப்பட்டுள்ளது. இன்று உலகத்தை ஆளுகை செய்கின்ற தரப்புகளாக மேற்குலகம் இருப்பதே இதற்குக் காரணம்.
அதனுடைய ஊடகங்களாலும் மனித உரிமைகள் விவகாரம், பால் நிலைச் சமத்துவம், ஜனநாயகத்துக்கான கோரிக்கைகள், ஊடக சுதந்திரம், மதம் மற்றும் அரசியற் கோட்பாடுகள், நீதி மற்றும் சட்ட அமைப்பு, பொருளாதாரச் சிந்தனைகள், உதவித்திட்டங்கள், கடனுதவி, மனிதாபிமான தொண்டு அமைப்புகள் போன்றவற்றாலும் உலகின் பல பகுதிகளிலும் மேற்குலகமே அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறது. அல்லது இவற்றை வைத்து பொது வெளியில் தன்னை நிலைப்படுத்தி வருகிறது.
இதற்கு மாறாக பிற நாடுகளின் அமைப்புகளும் செயற்பாடுகளும் சிந்தனைகளும் பொறிமுறைகளும் ஏனைய நாடுகளில் இருப்பதில்லை. அல்லது அவை மிக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. இலங்கையிற் கூட கடந்த இருபது ஆண்டுகளாக – யுத்தம் உக்கிரமாகத் தலையெடுத்த பின்னான காலப்பகுதியிலிருந்து மேற்கின் கைகளே ஓங்கியிருக்கின்றது.
இலங்கையிற் தொழிற்படும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களிற் தொண்ணூற்றொன்பது வீதமானவையும் மேற்கு நாடுகளைச் சேர்ந்தவையே. பால் நிலை சமத்துவம், ஊடக சுதந்திரத்துக்கான அமைப்புகள், மாற்றுக்கொள்கைகளுக்கான அமைப்புகள், ஜனநாயக மேம்பாட்டுக்கான அமைப்புகள் போன்ற அனைத்துக்கும் இந்த மேற்குலக நாடுகளே அனுசரணைப் பங்களிப்புகளைச் செய்கின்றன.
ஆகவே சர்வதேச சமூகம் என்ற புரிதல் இதனையொட்டி – இந்தப் பின்புலத்தையொட்டியே நிகழ்கிறது.
அவ்வாறு சர்வதேச சமூகம் என்று வரையறை செய்யப்படும் இந்த மேற்குலகத்தின் அபிப்பிராயத்தையும் நிலைப்பாடுகளையும் அணுகுமுறைகளையும் நம்பியே ஈழத்தமிழர் அரசியல், கடந்த இரண்டு தசாப்தங்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த இரண்டு பத்து ஆண்டுகளிலும் நாம் மேற்கூறிய சர்வதேச சமூகம் ஈழத்தமிழருக்கு ஒரு சிறு சந்தர்ப்பத்திற்கூடச் சார்பாகவோ ஆதரவாகவோ செயற்படவில்லை. பதிலாக தமிழரின் ஆயுதந்தாங்கிய அரசியற் போராட்டத்தின் தீவிரத்தைக் குறைத்து அதை ஒரு ஜனநாயக ரீதியான அரசியல் நடவடிக்கையாக மாற்றுவதற்கே மேற்கு முயற்சித்தது. இதற்கான ஆதாரங்கள் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு பக்கத்தில் புலிகளின் மீதான தடையை விதித்துக் கொண்டு மறு பக்கத்தில் புலிகளைப் பேச்சுகளில் ஈடுபட வைக்கும் இரட்டை அணுகுமுறையை மேற்குக் கைக்கொண்டது. இதன்படியே நோர்வேயின் மத்தியஸ்தத்தில் விடுலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுகள் நடைபெற்றன.
பேச்சில் அரசியற் தீர்வுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விடவும், இலங்கை அரசாங்கத்தை அரசியற் தீர்வை நோக்கி நகர்த்துவதற்கு எடுக்கப்பட்ட கவனத்தை விடவும் புலிகளின் சீருடையைக் களைவதிலும் அவர்களுடைய கையிலிருக்கும் ஆயுதத்தை இல்லாமற் செய்வதிலுமே மேற்கு அதிக கரிசனை எடுத்தது. அதாவது சர்வதேச சமூகம் என்ற மேற்கு இலங்கையில் ஆயுதமற்ற ஒரு அரசியலை, தன்னுடைய கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத ஒரு அரசியலை நீக்குவதற்கே அதிக அக்கறையைக் கொண்டு செயற்பட்டது. என்றபடியாற்தான் பேச்சுகள் குழம்பி, மீண்டும் போர் வெடித்தபோது இந்தச் சர்வதேச சமூகம் கேள்விக்கிடமின்றி இலங்கை அரசை மட்டும் ஆதரித்தது. இலங்கை அரசின் போரை ஆதரித்தது. அது போரின்போது மேற்கொண்ட எல்லை மீறல்களை எல்லாம் ஆதரித்தது. மக்களின் சாவைத் தடுப்பதற்குப் பதிலாக புலிகளின் வீழ்ச்சியிலேயே குறியாக இருந்தது அது.
இதன் நோக்கம் என்னவெனில், இலங்கையில் ஆயுதந்தாங்கிய போராட்டமும் ஆயுதந்தாங்கிய அரசியலும் முடிவுக்கு வரட்டும் என்பதே. (இப்போதும் இதுதான் நடக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் இராணுவத்தனத்தை நீக்கி, தனக்குச் ‘சலாம்’ போடவைக்கும் ஒரு வகையான அடக்குமுறை அரசியலையே மேற்கு முயற்சிக்கிறது. அதற்காக கருவிகளையே அது தேடிக்கொண்டிருக்கிறது. இதைப் பற்றி அடுத்தவாரம் பார்க்கலாம்).
இப்போது இந்தச் சர்வதேச சமூகத்தின் விருப்பப்படி – மேற்கின் விருப்பப்படி – தமிழர்களின் கைகள் வெறுமையாகி விட்டன.
தமிழர்களின் அரசியலில் இருந்த தீவிர நிலையும் இல்லாமற் போய்விட்டது.
எந்தப் பக்கமும் வளைந்து கொடுக்கக்கூடிய – அல்லது இலகுவிற் கையாளக்கூடிய ஒரு ‘கதம்ப அமைப்பு’ என்று வர்ணிக்கப்படும் தரப்பொன்று, தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளது.
ஆனால், இந்த அமைப்புக்கும் சில பிரச்சினைகள் இருக்கின்றன.
ஓன்று, உள்நாட்டில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும். அரசியல் உரிமைப் பிரச்சினைகளிலிருந்து, வாழ்வாதாரத் தேவைகள் வரையில்.
இரண்டாவது, இந்தியாவின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைக்கவேண்டும்.
மூன்றாவது, புலம் பெயர் மக்களின் அரசியல் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும்.
நான்காவது, சர்வதேச சமூகம் என்று கூறப்படும் மேற்கின் நலன்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைக்க வேண்டும். (இவை தொடர்பாக தனியாகவே எழுதவேண்டியுள்ளது)
ஆகவே இந்த நிலையில் மேற்கு இந்த அமைப்பையும் புலம் பெயர் சமூகத்தையும் மனித உரிமைகள் விவகாரத்தையும் இன்று பயன்படுத்த முற்பட்டுள்ளது.
அதாவது, மேற்கையும் இந்தியாவையும் விட்டு விலகிச் செல்லும் இலங்கையை மீண்டும் தன்னுடைய காந்தப் புலத்தினுள் கொண்டு வருவதற்கு மேற்கு விரும்புகிறது. இது பகிரங்கமானது. அதற்காக அது கையாளும் உபாயமே சர்வதேச சமூகம் என்ற அடையாளம். இத்தகைய உபாயத்தைக் கையாண்டே அது தன்னை விட்டு விலகிச் சென்ற நாடுகளையும் தன்னை எதிர்த்த நாடுகளையும் கட்டுப்படுத்தி வழிக்குக் கொண்டு வந்தது.
சர்வதேச சமூகம் என்ற மேற்கு கடந்த நூற்றாண்டுக்கு முன்னர்நேரடியாகவே படையெடுப்புகளை நடத்தி, நாடுகளைக் கைப்பற்றியது. அங்கே தன்னுடைய சட்டங்களைப் பரப்பி, அதற்கமைவான நீதி முறையை அறிமுகப்படுத்தி, தனக்கிசைவான கல்வி முறைகளை நடைமுறைப்படுத்தி, தனக்குச் சார்பான அரசை உருவாக்கி தன்னுடைய நலன்களைப் பெற்றுக்கொண்டது.
இன்றைய நிலைமை வேறு. இப்போது நேரடியாக முன்னரைப்போல படையெடுப்புகளை நடத்த முடியாது. அதற்கான வழிமுறைகளையும் உபாயங்களையும் கையாண்டே தனது நலன்களையும் தேவைகளையும் நிறைவேற்றிக் கொளள முடியும். அதற்காகவே அது தொண்டர் அமைப்புகள் தொடக்கம், நிதியூட்டல்கள், மற்றும் உள்ளுர் அரசியற் தரப்புகள் வரையில் எல்லாவற்றையும் கையாள்கிறது.
ஆகவே, சர்வதேச சமூகம் என்ற மேற்கின் நலன்களைப் பேணுவதற்கான ஒரு அசல் வடிவமே இது. இந்த நிலையில் இந்தப் பொறிக்குள் சிக்காமல், இந்தப் பொறிமுறையைப் பயன்படுத்தி, தங்களுடைய அரசியல் இலக்கினை எட்ட வேண்டும் ஒவ்வொருவரும். குறிப்பாகத் தமிழர்களும்.
கட்டுரையாளர் கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
0 கருத்துரைகள் :
Post a Comment