மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது, அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டின் செய்தியாளர் பகவான் சிங்கிற்கு அலரி மாளிகையில் வைத்து அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டில் இன்று வெளியாகியுள்ள இந்தச் செவ்வியின் முழு வடிவம் இது.
கேள்வி - சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரும் மேற்கு நாடுகளை எப்படி அணுகப் போகிறீர்கள்?
பதில் - மேற்கு நாடுகளில் எஞ்சியுள்ள புலிகள் தான், சிறிலங்காவுக்கு எதிராக அடிப்படையற்ற விவகாரங்கள் குறித்து, அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். மேற்கு நாடுகள் கஸ்மீர் தொடர்பாகவும் சிறிலங்கா தொடர்பாகவும் தமது நாடாளுமன்றங்களில் பேசுகின்றன. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், ஈராக்கிலும் தாம் என்ன செய்தன என்று மௌனம் காக்கின்றன.
சிறிலங்காவில் 1880 ஊவா கிளர்ச்சியின் பின்னர், 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரையும் பிரித்தானியர்கள் கொன்றனர். மக்களைப் பட்டினி போடுவதற்காக அங்குள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தையும் அழித்தனர். நிலத்தைக் கைப்பற்றினர்.
இந்தியாவிலும் அதையே செய்தனர். அவர்கள் தான் இப்போது மனிதஉரிமைகள் பற்றிப் பேசுகின்றனர். மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது. அதற்கு நான் தயாராக இல்லை.
கேள்வி- நீங்கள் சீனாவை நோக்கிச் சாய்வதாக ஒரு உணர்வு இந்தியாவில் உள்ளது. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பூகோள அரசியல் நிலையை அது காயப்படுத்தக் கூடும் அல்லவா?
என்னைப் பொறுத்தவரையில் இந்தியா தான் முதலாவது. மற்றெல்லோரும் இந்தியாவுக்குப் பின்னர் தான் வரமுடியும்.
நான் பதவிக்கு வந்தவுடன் இந்தியாவுக்குச் சென்று அதன் ஆதரவைப் பெற்றேன். அதற்குப் பிறகு, ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானியா பற்றி நான் கவலைப்படவில்லை.
உண்மையில், விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தொடர்பாக முக்கியமான தகவல்களை வழங்கி உதவியது அமெரிக்கா தான். அதன் மூலம் அவற்றைக் கடலில் வைத்து அழிப்பது சாத்தியமானது.
அதுபோல சீனாவும் உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற வந்துள்ளது. நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட சீனாவுக்கு நாம் வழங்கிய ஒவ்வொரு திட்டத்தையும் முதலில் இந்தியாவிடம் தான் வழங்கினோம்.
ஆனால் அங்கிருந்து பதில் வரவில்லை. கொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டம் குறித்தும் விளம்பரப்படுத்தினோம். சீனா மட்டுமே வந்தது.
கேள்வி - போர் முடிவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். ஆனாலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழர்கள் சுயநிர்ணய உரிமையைக் கோருவதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழர்களின் கவலைகளுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறீர்கள்?
பதில் - அந்தத் தேர்தல்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறைமையின் அடிப்படையில் நடைபெற்றன. கணிசமானளவு வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் விழுந்துள்ளன. வடக்கு,கிழக்கிற்கு வெளியே தான் 54 வீதமான தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் ஒரு நிலையான அரசியல் தீர்வில் கவனம் செலுத்துகிறோம். ஆனால் அது பரந்துபட்டளவில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சிறப்பாக போருக்குப் பிந்திய சூழலில் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
கேள்வி - அதிகாரப்பகிர்வை எப்படி முன்வைக்கப் போகிறீர்கள்?
பதில் - அதிகாரப்பகிர்வுக்காக நாங்கள் ஏற்கனவே வடக்கு தவிர ஏனைய மாகாணங்களில் மாகாணசபைகளை நிறுவியுள்ளோம். வடக்கிலும் கூட அதனை அமைக்கவுள்ளோம்.
மாகாண நிர்வாகத்தை எப்படி வலுப்படுத்துவது, மேம்படுத்துவது என்றும் பெரும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை பகிர்ந்து கொள்வது குறித்தும் அவர்கள் கலந்துரையாட வேண்டும்.
கேள்வி - நீங்கள் முன்வைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனை பயனற்றது என்றும், அதுபோன்ற பல குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட போதும், அரசியல் பிரச்சினைகள் இன்னமும் உள்ளதாக பலரும் கூறுகின்றனரே?
பதில் - சிக்கலான எந்தப் பிரச்சினைக்கும் ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்தின் மூலம் தீர்வு காண நாடாளுமன்றத் தெரிவுக்குழு நல்லதொரு அணுக்குமுறை.
துரதிஸ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளின் பெயரை முன்வைக்கவில்லை. அவர்கள் விடுதலைப் புலிகளின் அதே மனோபாவத்துடனேயே உள்ளனர். அவர்களின் கோரிக்கைகளான வடக்கு,கிழக்கு இணைப்பு, காவல்துறை மற்றும் காணி அதிகாரப்பகிர்வு என்பன நடைமுறைச் சாத்தியமற்றவை.
உங்களின் நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள், ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்துக்கு பயணம் செய்த போது மாயாவதி அவரைக் கைது செய்ய முனைந்தார்.
இவர்கள் என்னைக் கைது செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? (தமிழர்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களாலேயே இயக்கப்படுகிறது. அவர்களுக்கு அமைதியோ அரசியல்தீர்வோ தேவையில்லை.
நியாயமான அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பது முக்கியமானது. ஆனால் அவர்கள் தமது பிரதிநிதிகளின் பெயர்களை பரிந்துரைக்கவில்லை.
இரா.சம்பந்தன் சிலருக்குப் பயப்படுகிறார் போலத் தோன்றுகிறது. இப்போது அவர்கள் அமெரிக்காவுக்குப் போய் முறையிடுகிறார்கள். இதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. பிரபாகரன் காலத்தில் செயற்பட்டது போன்றே செயற்படுகின்றனர்.
சிறிலங்காவில் அரசியல்தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்று எந்தவொரு நாடாவது கவலைப்படுமானால், தமது நாடுகளில் தங்கியுள்ள புலம்பெயர் தமிழர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.
எம்மைக் குறை சொல்வது அர்த்தமற்றது. தமிழ்க் கட்சிகள் தான் அரசியல்தீர்வை தாமதப்படுத்துகின்றன.
கேள்வி - மோதல்கள் இடம்பெற்ற சூழலில் கூட வடக்கில் உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்றத் தேரதல்கள் நடத்தப்பட்டன. ஆனாலும் இப்போது அங்கு ஏன் மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தவில்லை?
பதில் - கூடிய விரைவில் அங்கு நிச்சயமாக தேர்தல் நடத்தப்படும். ஆனால் மாகாணசபைத் தேர்தலில் மக்கள் பங்கேற்க உண்மையான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
மோதல் சூழலில் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சுதந்திரமான முறையில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயக ரீதியில் மக்கள தமது கருத்தை வெளிப்படுத்துவதற்கு எதிராக விடுதலைப் புலிகள் செயற்பட்டனர்.
கேள்வி - வடக்கு இன்னமும் கூட அதிகளவில் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழர்கள் முறையிடுகிறார்கள். 3 இலட்சம் மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு இலட்சம் படையினர் நிலைகொண்டுள்ளனர். சனசமூக நிலைய கூட்டத்துக்கோ அல்லது பாடசாலை நிகழ்வுக்கோ கூட சிறிலங்கா இராணுவத்தின் அனுமதி தேவைப்படுகிறது. குடியியல் நிர்வாகத்தில் இருந்து இராணுவத்தை எப்போது நீக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில் - வடக்கில் 3இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். சனத்தொகைக்கேற்ப அங்கு படையினர் நிலைநிறுத்தப்படவில்லை. ஆனால் அந்தப் பிராந்த்தின் பாதுகாப்புக்கு அவர்கள் தேவைப்படுகின்றனர்.
சிறிலங்கா இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள அந்தப் பகுதி மூன்று பத்தாண்டுகளாக மோசசமான ஆயுதமோதல்கள் இடம்பெற்ற பிரதேசம். அங்கு சிறிலங்கா இராணுவம் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் முக்கியமான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
கேள்வி- இராணுவ முகாம்களை அமைப்பதற்காகவோ அல்லது சிங்கள வர்த்தகர்களுக்காகவோ தமது நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுவதாக தமிழர்கள் சந்தேகிக்கின்றனரே?
பதில் - இது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் கிளப்பி விடப்பட்டுள்ள புரளி. நாடெங்கும் ஆயுதப்படையினர் உள்ள்ளர், அவர்களின் அவர்களின் முகாம்கள் உள்ளன. சிறிலங்காவின் பிராந்திய எல்லைகளையும், இறைமையையும் பாதுகாக்க இது அவசியமானது.
விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் வசித்தனர். சிங்களவரோ, தமிழரோ முஸ்லிமோ அவர், யாராக இருந்தாலும் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அவர்களின் நிலத்தை கொடுக்க வேண்டும்.
வடக்கில் தமிழர்கள் வகித்து வரும் பெரும்பான்மையை சிறிலங்கா அரசின் எந்தவொரு செயற்பாடும் மாற்றியமைக்காது.
0 கருத்துரைகள் :
Post a Comment