தான் கண்ட தோல்விகளில் இருந்தும் நோர்வே பெற்றுக்கொண்ட தோல்விகளில்
இருந்தும் இந்தியா பாடங்களைக் கற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டினால்,
சிறிலங்காவை நோக்கி இந்தியா ஒருபோதும் உறுதியான, பயனுறுதி மிக்க வெளியுறவு
மற்றும் பாதுகாப்பு மூலோபாயக் கொள்கையை வகுத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு
eurasiareview இணையத் தளத்தில் அமைதி மற்றும் முரண்பாட்டுக் கற்கைகளுக்கான
நிலையத்தின் ஆய்வு அதிகாரியான ஜே. ஜெகநாதன் எழுதியுள்ள இந்த ஆய்வுக்
குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக் குறிப்பை ‘புதினப்பலகை‘காக மொழியாக்கம் செய்துள்ளார் ‘நித்தியபாரதி‘.
நோர்வே
வெளிவிவகார அமைச்சின் கீழ் இயங்குகின்ற அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கான
நோர்வே அமைப்பு NORAD, 1997-2003 காலப்பகுதியில் வரையில் சிறிலங்காவில்
நோர்வேயால் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் பற்றிய மீள்மதிப்பீட்டு
அறிக்கையை Pawns of Peace என்ற பெயரில் வெளியிட்டிருந்தது.
சிறிலங்காவில்
நோர்வேயால் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சி தோல்வியடைந்தமைக்கான காரணம்
என்ன?, சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகளின் எந்த நடவடிக்கைகள்
அங்கு நிலவிய முரண்பாட்டை தீர்ப்பதில் தோல்வியடைந்தன? ஆகிய இரு முக்கிய
வினாக்கள் தொடர்பாக இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
சிறிலங்காவில்
மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் மற்றும் இந்த சமரச முயற்சிகளுக்காக
நோர்வே இராஜதந்திர ரீதியாக இடைத்தரகராகச் செயற்பட்டமை, யுத்த நிறுத்த
உடன்படிக்கைக்கான நடுநிலையாளராகச் செயற்பட்டமை, 1997 -2003 வரை மனிதாபிமான
மற்றும் அபிவிருத்திக்கான நிதி வழங்குனராகச் செயற்பட்டமை போன்றன குறித்து
மிக விளக்கமாக இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த
அறிக்கையின் தொடக்கத்தில், சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சியில்
நோர்வேயின் பங்களிப்பானது இங்கு இடம்பெற்ற உள்நாட்டுப் போரை முடிவிற்குக்
கொண்டு வருவதில் பெருமளவில் தோல்வி அடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும்,
சிறிலங்காவில் இனப்பிரச்சினைத் தீர்வில் நோர்வேயின் பங்காளிப்பானது சற்று
சிக்கலானதாக இருந்துள்ளது என்பதை மிக இலகுவான எடுகோளாக எடுத்துக்
கொள்ளலாம்.
நடுநிலையாளராக செயற்படுமாறு சிறிலங்கா அரசாங்கம்
மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் நோர்வே அழைக்கப்பட்டதுடன்,
சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் வெளித் தரப்பினராலும்
ஒப்புக்கொள்ளப்பட்டும் பாராட்டுப்பட்டும் இருந்தபோதிலும் கூட, பரஸ்பரம்
தீர்வை எட்டுவதற்காக நோர்வேயால் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும்
உண்மையில் நாசமாக்கப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் தொடர்ந்த இன
மோதலானது அனைத்துலக மயப்படுத்தப்பட்டிருந்தமை மற்றும் இந்தியா போன்ற
பிராந்திய செல்வாக்கு மிக்க நாடுகளால் இம்முயற்சிகள் ஓரங்கட்டப்பட்டமை ஆகிய
இரு பிரதான காரணங்களை இங்கு கவனிக்கத் தவறக்கூடாது.
2003 ம் ஆண்டு வரை சிறிலங்காவில் நோர்வே மிகவும் வினைத்திறனுடன் சமரச முயற்சிகளைக் கையாண்டது.
கேணல்
கருணாவின் பிளவின் பின்னரே இந்தச் சமரச முயற்சிகள் படிப்படியாக ஆட்டம்
காணத் தொடங்கின. உண்மையில் இது நோர்வே அனுசரணையாளர்களால்
எதிர்பார்க்கப்படாத ஒன்றாகவே இருந்துள்ளது.
இதேவேளையில், சமரச
முயற்சியில் பங்குகொண்டிருந்த விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதில்
மிகப் பிரதான பங்காளியாக இந்தியா இருந்துள்ளது தொடர்பாக இந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமற்ற வகையில், பூகோள நில
அமைவு மற்றும் இன ரீதியாகவும் பெருமளவில் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள
இந்தியா, சிறிலங்காவின் இன மோதலில் பிரதான தலையீட்டாளராகச்
செயற்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, இந்தியாவை ஆட்சி செய்த இந்திரா
காந்தி தலைமையிலான அரசாங்கம் தனது பிராந்தியத்தில் அமெரிக்க அதிகாரத்தை
எதிர்ப்பதற்கான மூலோபாயத் தடையாக விடுதலைப் புலிகள் அமைப்பைப்
பயன்படுத்திக் கொண்டது. இது இந்தியாவின் பூகோள அரசியல் நலன் சார்
செயற்பாடாக அமைந்திருந்தது.
இதேபோன்றே 2009 இல் சிறிலங்காவில்
இடம்பெற்ற யுத்தம் நிறைவிற்கு வந்து அதன் பெறுபேறுகள் வெளிவந்த போதும்,
சீனா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் தந்திரோபாய ரீதியான இணக்கப்பாடுகளை
மேற்கொண்ட போதும், இந்தியா தனது நலன் சார் செயற்பாட்டையே மேற்கொண்டது.
இதற்கப்பால்,
நோர்வே நாடு சிறிலங்காவில் சமரச முயற்சிகளை ஆரம்பித்த போது அதில் பெரிதும்
ஈடுபாடு காட்டாததுடன், சிறிலங்காவுடனான உடன்படிக்கைக்கு அப்பால்
செல்வதிலும் இந்தியா தயக்கம் காட்டியது.
2004 இல் UPA அரசாங்கம்
ஆட்சிக்கு வந்தபோது மீண்டும் இந்தியாவின் இந்த நிலைப்பாடு
வலுப்படுத்தப்பட்டது. சிறிலங்காவின் இனப் பிரச்சனையில் இந்தியாவின்
தனிப்பட்ட அரசியற் கோட்பாடுகள் மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்தியுள்ளன
என்பதையே இது காட்டுகின்றது.
சிறிலங்கா மீதான சீனா மற்றும்
பாகிஸ்தானின் மூலோபாயப் பங்களிப்புக்களை தனக்குள் உள்ளடக்குவதில் இந்தியா
தவறியுள்ளதாக பிரதான மூலோபாய விமர்சகரான பிரமா சலேனி
உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கும் மேலாக, 2004 இல் இந்திய தேசிய
காங்கிரஸ் மீளவும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தமை மற்றும் தமிழ்நாட்டு
அரசியல் மீது சிறிலங்காவின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தமை தொடர்பாகவும்
நோர்வேயின் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா
தற்போதும் சிறிலங்காவில் வாழும் தமிழ்மக்களின் அரசியல் அவாக்கள் தொடர்பாகத்
தனது ஆதரவை வழங்குகின்ற போதிலும், இது தொடர்பாக ராஜபக்ச அரசாங்கத்தால்
எடுக்கப்பட்ட இராணுவ வழித் தீர்விற்கு எதிராக இந்தியா ஒருபோதும் தனது
அழுத்தத்தைப் பிரயோகிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த அறிக்கையில் சமரச
முயற்சி தொடர்பான நோர்வே பெற்றுக் கொண்ட அனுபவங்கள் தொடர்பாக ஐந்து பிரதான
தலைப்புக்களாக வகுக்கப்பட்டுள்ளது.
அதாவது சமரச முயற்சியினால்
ஏற்படுத்தப்பட்ட எதிர்பார்க்காத மற்றும் தற்செயலான விளைவுகள், வன் மற்றும்
மென் முறை அதிகார சக்திகளுக்கிடையில் பேணப்பட்ட சமநிலைகள், உரிமை
அணுகுமுறை, அரசியலுக்காகப் பயன்படுத்தப்பட முடியாதிருந்த உதவி, மோதல்
பரிந்துரைக்கான 'ஆசிய மாதிரி' பேன்றவையே அந்தப் பிரதான ஐந்து வகைகளாகும்.
இந்த
அறிக்கையின் பிரகாரம், Westphalian கருத்து முறைமையின் கீழ் தலையீடற்ற
இறையாண்மை உருவாக்கப்பட்டிருந்தமை, மிகப் பலம் பொருந்திய
அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இருந்தமை, 'தீவிரவாதத்தை' ஒழிப்பதற்கு
இராணுவ வழித் தீர்வை நாடியமை போன்றவற்றின் அடிப்படையில் மோதல்
தவிர்ப்பிற்கான ஆசிய மாதிரிப் பரிந்துரைகள் உருவாக்கப்பட்டமையே இந்தச் சமரச
முயற்சிகள் தோல்வியடையக் காரணமாக அமைந்துள்ளது.
போரால் நேரடியாகப்
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளின் பூகோள
அரசியஸ் மூலோபாயத்திற்கிடையில் அகப்பட்டதாகவும், ராஜபக்ச அரசாங்கம் இந்த
நிலைப்பாட்டை தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் நோர்வேயின்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக நோர்வே பெற்றுக் கொண்ட அனுபவத்திலிருந்து இந்தியா, எதனைக் கற்றுக் கொள்ள முடிந்துள்ளது?
சிறிலங்காவில்
பாரிய விலை கொடுக்கப்பட்டும்- இந்தியாவின் அமைதி காக்கும் படையினரால்
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியைச் சந்தித்த பின்னர், இந்தியா இது
போன்று எந்தவொரு மீள்மதிப்பீடுகளையும் மேற்கொள்ளவில்லை என்பது
துரதிஸ்டவசமானதே.
இந்தியா தனது வெளியுறவு மற்றும் பாதுகாப்புக்
கொள்கைகள் தோல்வியடைந்தமைக்கான காரணங்களை ஆராய்ந்து கற்றுக் கொள்ள வேண்டும்
என இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதாவது இந்திய
அமைதி காக்கும் படையினரால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
பற்றி மீளாய்வு செய்து கொள்வதுடன், இறுதியில் இடம்பெற்ற ஈழப்போராட்டம்
தொடர்பாகத் தன்னால் வரித்துக் கொள்ளப்பட்ட கொள்கை தொடர்பாகவும் இந்தியா
மீளாய்வொன்றைச் செய்து கொள்ள வேண்டும்.
எந்தவொரு சமரச முயற்சிகளில்
ஈடுபடும் போதும் அதனுடன் தொடர்புபட்ட வன் மற்றும் மென் முறைசார்
வளங்களிற்கிடையில் எவ்வாறானதொரு சமனிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
என்பது தொடர்பாக எண்ணிப் பார்ப்பதில் நோர்வேயின் அனுபவங்கள் இந்தியாவிற்கு
எச்சரிக்கையாக அமைந்துள்ளன.
இந்தியா தான் கண்ட தோல்விகளிலிருந்தும்
நோர்வே பெற்றுக்கொண்ட தோல்விகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வதில்
தயக்கம் காட்டினால், சிறிலங்காவை நோக்கி இந்தியா ஒருபோதும் உறுதிப்பாடான,
பயனுறுதி மிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு மூலோபாயக் கொள்கையை வகுத்துக்
கொள்ள முடியாது.
நன்றி - புதினப்பலகை
0 கருத்துரைகள் :
Post a Comment