அரசாங்கத் தரப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான “தேனிலவு பேச்சுவார்த்தை'' இந்த வருடத்துடன் முற்றுப் பெற்றுவிடும் நிலையில் உள்ளது போல் தெரிகிறது.
புதுவருடம் தொடங்கும் பொழுது இதுவரை பேச்சுவார்த்தை தேனிலவில் ஈடுபட்டிருந்த இரு தரப்பும் “மண முறிவு'' க்கு வந்துவிடுவர் போல் தெரிகிறது.
இரு பகுதியி னரும் ஒருவர் மீது மற்றொருவர் விட்டுக் கொடுக்காது, சளைக்காது சொற்கணைகளை மாறி மாறி ஏவிக் கொண்டிருக்கின்றனர்.
போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 13 ஐ தருவோம், இதற்கு மேல் 13 பிளஸ் ஆகவும் தருவோம் என்று ஜனாதிபதி உட்பட அரச தரப்பினர் பேசி வந்தனர். போரினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் சர்வதேச நாடுகளின் காதுகளில் பூச்சுற்றுவதற்கும் இந்த கோஷங்கள் பாவனைக்கு வந்தன போலும்.
தற்போது போர் முடிவடைந்த நிலையில் இன விவகாரத்திற்கான தீர்வு காண வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு அரசாங்கம் வந்துள்ளது போலும், எனவே தான் பதின்மூன்றோ அல்லது பதின்மூன்று பிளஸ்ஸோ தேவையில்லை என்ற நிலைப்பாட்டிற்கு அரசாங்கம் வந்துள்ளது.
அரச தரப்பைப் பொறுத்து சர்வதேசத்தின் கேள்விகளுக்கான பதிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஊடாக வழங்க முனைகிறது. இதன் ஒரு அம்சம்தான் நாடாளுமன்றத் தெரிவுக் குழு.
கடந்த அறுபது வருட காலத்தில் பல ஒப்பந்தங்களையும் வாக்குறுதிகளையும் பேச்சுவார்த்தைகளையும் தமிழ் மக்கள் கண்டு வருகின்றனர். இன்றைய அரசாங்கம் தமிழர் விவகாரத்திற்கு தீர்வு காணவென அமைச்சரும், பேராசிரியருமான திஸ்ஸ வித்தாரன தலைமையிலான சர்வகட்சி ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை கிடப்பில் போட்டு விட்டே அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவித திட்டங்களும் இன்றி கடந்த ஒரு வருடமாக பேச்சுவார்த்தையை நடத்தி வந்துள்ளது.
அத்துடன் தற்போது நாடாளுமன்றத் தெரிவுக் குழு பற்றியும் பேசி வருகின்றது.
அத்துடன் தற்போது நாடாளுமன்றத் தெரிவுக் குழு பற்றியும் பேசி வருகின்றது.
தற்போது பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் வடக்கு கிழக்கு இணைப்பு என்பன கொடுக்கப்பட முடியாது என்பதை அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மறுபுறம் தெரிவுக் குழுவில் இடம்பெறுமாறு கூட்டமைப்புக்கு அரசாங்கம் அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக ஆரம்பத்திலிருந்து வெளிப்படையான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்குமாயின் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அதன் நம்பகத்தன்மையை உண்மைத் தன்மையை வெளிக் கொணர்ந்திருக்கலாம்.
ஆனால் கூட்டமைப்பும் அரசாங்கம் தத்தமது வசதிக்கேற்ப பேச்சுவார்த்தையை மூடுமந்திரமாக்கி வைத்திருந்தனர். இந்த மூடுமந்திர திரையையும் கிழித்துக் கொண்டு ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து செய்திகளாக வெளிவந்தன.
பிரதேச சபைகளுக்கு அப்பால் அதிகாரப் பகிர்வு என்பது சாத்தியமில்லை என்று கூட்டமைப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவே அந்த செய்திகள் தெரிவித்தன.
ஆனால் கூட்டமைப்பும் அரசாங்கத் தரப்பும் பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக நடைபெறுவதாக அறிக்கைகளை விடுத்தன. ஆனால் இன்று இரு பகுதியினருமே எதிரும் புதிருமாக நின்று கொண்டு பேசுவதைப் பார்க்கும் பொழுது தமிழ் மக்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது.
இந்த ஒரு வருட கால பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்கள் பெற்றதை விட இருந்ததையும் இழந்ததே அதிகம்.
1) யாழ். மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகை ஒன்பதாக இருந்தது ஐந்தாகக் குறைந்தது.
2) யாழ். மாவட்டத்தில் பெரும்பான்மை இனக் குடியேற்றம்
3) அநுராதபுரத்துடன் இருந்த ஒரு பகுதி முல்லைத்தீவு மாவட்டத்துடன் வர்த்தமானி அறிவித்தல் மூலம் இணைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 9 ஆயிரம் புதிய வாக்காளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகப் போகின்றனர். வவுனியா, முல்லைத்தீவிலிருந்து மேலும் இரு பெரும்பான்மையின உறுப்பினர்கள் தெரிவாவதற்கு இன்று வழிசமைக்கப்பட்டுள்ளது.
4) வட பகுதியில் சிங்கள அரச அதிபர்கள் நியமனம்
இவை வெளியில் தெரிந்தவை. தெரியாத பல விடயங்கள் இருக்கலாம் மொத்தத்தில் இருந்ததையும் தமிழ் மக்கள் இழந்துபோக இந்த ஒரு வருட கால பேச்சுவார்த்தையில் இருந்து கொண்டே அரசாங்கம் பேச்சுவார்தைக்கு அப்பால் பல விடயங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளது.
தமிழ் சிவில் சமூகம் புறப்பட்டிருக்காவிட்டால் கூட்டமைப்பு தனது கண்களைத் திறந்திருக்காது என்பது உண்மையாகும்.
இன்றைய நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மாத்திரம் தமிழ் மக்கள் நம்பியிருக்க முடியாது. ஒன்றில் கூட்டமைப்பு தன்னை அடிமட்ட மக்கள் வரை விஸ்தரித்து நிலைகொள்ள வேண்டும்.
தமிழ் மக்களை சகல மட்டத்திலும் தமிழர் குறித்த அரசியல் அபிலாஷை நோக்கிய பயணத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் மாற்று ஏற்பாட்டுக்குத் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மாற்று ஏற்பாடு வடக்கு கிழக்கிற்கு மாத்திரம் உரியதல்ல. ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் குறிப்பாக மலையகத்திற்கும் இது அவசர, அவசிய தேவையாக இன்றைய நிலையில் உள்ளது.
தென்னிலங்கை அரசியலில் பேரினவாதத்தை முதன்மைப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
விடுதலைப் புலிகள் இல்லாவிட்டாலும் கூட தென்னிலங்கையில் அரசாங்கம், ஏனைய அரசியல் வாதிகளும் தமது “இருப்பு''க்கு தமிழ்த் தேசியத்தையும், தமிழர் அபிலாஷைகளையும் ஈழ கருத்தியலுடன் முடிச்சுப் போட்டு அரசியலை நடத்துகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிநாடு கேட்கவில்லை. ஆயுதம் தூக்கவில்லை.
கூட்டமைப்பினன் குறைந்த பட்ச கோரிக்கைகளைக் கூட நிராகரிப்பதானது அரசாங்கம் தமிழ் மக்களுக்கு கூற விரும்பும் செய்தி என்னவென்பது தான் தமிழ் மக்களின் கேள்வியாகும்.
கடந்த அறுபது வருடகால அரசியல் வரலாற்றில் தமது அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கு பல்வேறு போராட்ட வடிவங்களைத் தோற்றுவித்தனர்.
போராட்ட வடிவங்கள் மாறினவே அன்றி தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை மாற்றிக் கொள்ளவில்லை. இந்த உண்மையை அராங்கம் தென்னிலங்கைச் சக்திகளும் உணர மறுப்பது ஏன்? என்றே தமிழ் மக்கள் வினவுகின்றனர்.
அது மாத்திரமல்ல அரசாங்கத்தையும், தென்னிலங்கையையும் பொறுத்து, தமிழ் மக்களை இவர்கள் போரில் வெற்றி கொண்டிருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் மனங்களை இதுவரை வெற்றிக்கொள்ள முடியாது போனமைக்கான காரணம், தமிழ் மக்கள் இந்த நாட்டில் சமத்துவத்துடன், சுயாதிபத்தியத்துடன், பாதுகாப்புடன் தமது இருப்பை உறுதி செய்து கொண்டு கௌரவத்துடன் வாழ விரும்புகின்றனர். இந்த விடயங்களில் விட்டுக்கொடுத்து சிங்கள ஆட்சியாளர்களுடனும், சிங்கள தலைமைத்துவங்களுடனும் எவ்வித சமரசத்திற்கும் செல்ல தயாராக இல்லை என்பதை பல சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
உண்மையில் அரசாங்கம், தென்னிலங்கைச் சக்திகளும் தமிழ் மக்களை மென்மேலும் தூர விலத்தி வைப்பதையே கொள்கையாகக் கொண்டு செயற்படுகின்றன.
அது மாத்திரமல்ல தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை இன ஒதுக்கல் ரீதியிலான அரச நிர்வாக கட்டமைப்பின் மூலம் சிதைத்து தகர்த்துவிட முடியும் என்ற கொள்கையில் தென்னிலங்கை ஆட்சியாளர்களும், அரசியல் சக்திகளும் மிக ஆழமாக ஊறிப் போய்க் கிடக்கின்றனர். அதனை நோக்காகக் கொண்டே வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல மலையகத்திலும் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
மலையக மக்களுக்கு அரசாங்கம் உரிமைகளை வழங்கவில்லை என்பது ஒரு புறமிருக்க சலுகைகளைக் கூட வழங்க மறுக்கின்றது.
எனினும் இந்த சலுகைகளை அரசாங்கம் வடக்குக் கிழக்கிலும், மலையகத்திலும் தமக்குத் “துதி'' பாடும் ஒரு கூட்டத்தினருக்கு வழங்கி தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்காமல் இருப்பதற்காக இந்த சக்திகளை பயன்படுத்திக் கொள்கின்றது.
ஜே.ஆர். வெள்ளிக்கிழமை தேநீர் விருந்துபார கலாசாரத்திற்குள் தமிழ்த் தலைமைகளை மூழ்க வைத்து தமிழ் மக்களுக்கு எதிராகவே தமிழ்த் தலைமைகளை வைத்துக் கொண்டும், அவர்கள் மூலமாகவும் காய்களை நகர்த்தி வெற்றி கொண்டமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
இதே பாணியிலேயே தென்னிலங்கையில் சிங்கள ஆட்சியாளர்கள் கோலோச்சி வருகின்றனர். இந்த சக்திகள் அரசாங்கம் வழங்குகின்ற சலுகைகளுக்குள் மூழ்கி சுகபோகத்தில் வாழ்ந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஒரு வாகனத்திற்காக பதினெட்டு வருடகால தமிழ் துணை மேயர் பதவியைக் கூட தாரை வார்க்கத் துணிந்தவர்கள் தமிழ்த் தலைவர்கள்.
கிடைக்கும் செய்திகளின்படி குருவுக்காகவும் தனிப்பட்ட நட்புக்காகவும் இன்னும் வேறு பல விடயங்களுக்காகவும் தமிழினத்தை தாரைவார்க்கக் கூட்டமைப்புக்குள்ளே ஒரு சிலர் புறப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
இத்தகைய போக்கு “தமிழினத் தலைமைகளுக்குள்'' வாய்த்துள்ளமை தமிழ் இனத்திற்கான சாபக்கேடா? அல்லது வெட்கக்கேடா? என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழ் மக்களைப் பொறுத்து அரசாங்கம் ஏதும் கொடுத்து விடுமென்று நினைக்கவில்லை. மூன்றாம் தரப்பின் ஊடாகவே தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதை ஓரளவாவது பெற்றுக் கொள்ளலாம் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச அரங்கிற்கு தமிழர் விவகாரத்தைக் கொண்டு சென்று பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தனர். அரசாங்கமோ இந்த ஒரு அந்தஸ்தை இல்லாதொழித்து இன விவகாரத்தை உள்நாட்டு விவகாரமாக்கி இன விவகாரத்தை உள்நாட்டு விவகாரமாக் தனது நிகழ்ச்சி நிரல்களுக்குள் முடக்கி விடுவதில் மிகத் தீவிரமாக இருக்கிறது. இன விவகாரத்திற்கான தீர்வைக் காண்பதில் எவ்வித அக்கறையும் இன்றி இருக்கும் அரசாங்கம் சர்வதேச மத்தியஸ்தத்தையும் முற்று முழுதாக நிராகத்து நிற்கின்றது.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் அவர்கள் சர்வதேச விசாரணை தேவை என்பதை அழுத்தி உரைத்து நிற்கின்றார். போர்க்குற்ற விடயத்தில் சர்வதேச விசாரணையை கூட்டமைப்பு கோரி நிற்க தமிழ் மக்களோ இன விவகாரத்திற்கான தீர்வு முயற்சிக்கும் சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என்பதையும் வலியுறுத்தி நிற்கின்றனர்.
இறுதியாகக் கூறுவதாயின் இன்றைய நிலையில் தமிழ் மக்களின் இருப்பை உறுதிசெய்து கொள்வதற்கு வடக்கு கிழக்கு இணைந் தற்காலிக நிர்வாக சபை ஒன்று ஐ.நா.வின் மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவுகளும் வந்த பிறகு வடக்கு கிழக்கு இணைந்த தற்காலிக நிர்வாக சபையில் பரிசீலித்து நடைமுறைக்குக் கொண்டு வரலாம்.
வி.தேவராஜ்
0 கருத்துரைகள் :
Post a Comment