போராட்டம் செய்யாதவன் ஜடம்! தலைவர் பிரபாகரன் பேட்டி


தமிழர்கள் பெருவாரியாக வாழும் யாழ்ப்​பாணம் மீது ஜெயவர்த்​தனாவின் விமானங்கள் வெறித்த​னமாகக் குண்டுகளை வீச... சிங்களவர் படை நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் கிளம்பிவிட்டது என்னும் செய்தி நம்மை பதைபதைக்கச் செய்தது.
இருப்பினும், தொடர்ந்து விடுதலைப்புலிகள் நிகழ்த்திய வீராவேசமான எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சிங்கள இராணுவம் திணறிப்போய் பின்வாங்குகிறது என்னும் செய்தி சற்று நிம்மதியைத் தருகிறது.
விடுதலைப்புலிகளால் சகல வசதி​களோடு இருக்கும் சிங்கள இராணுவத்தைத் தொடர்ந்து சமாளிக்க முடியுமா? சிங்கள ஓநாய்கள் ஒருவேளை உள்ளே புகுந்துவிட்டால், அப்பாவித் தமிழ் மக்களின் கதி என்னவாகும்? இது போன்ற கவலைகள் வேறு மனதை நெருடின.
உண்மையில் அங்கு தற்போது நிலைமை எப்படி இருக்கிறது? இதுபற்றி யார் நேரடியாக நமக்குத் தகவல் சொல்வார்கள்?
திடீரென்று, விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சென்னைக்கு வந்திருக்கும் தகவல் கிடைத்தது.
அவர் சென்னையில் இருக்கிறாரா, இலங்கையில் இருக்கிறாரா என்பதெல்லாம் இரகசியம் என்பதால், நினைத்ததும் சந்தித்துவிட முடியாத நிலை! தொடர்புகொண்டோம். மறுநாள் காலை சந்திக்கலாம் என்று தகவல் வந்தது. கூடவே, நாங்கள் வந்து அழைத்துப் போவோம் என்று சொல்லி அனுப்பினார்கள்.
மறுநாள் காலை 9 மணிக்கு இரும்பைப் போல் உடல்வாகுகொண்ட மூன்று இளைஞர்​களுடன் ஒரு வான் நம் அலுவலகத்துக்கு வந்து நிற்க, ஏறி அமர்ந்தோம். இளம் புலிகள் சென்னை வீதிகளில், படுலாவகமாக வானை ஓட்டுகிறார்கள்!
சென்னை இந்திரா நகரில் உள்ள தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலை​மையகம்... தேதி மே 21. காலை மணி 9.30. வீட்டைச் சுற்றி விடுதலைப் புலி இயக்கத்தின் இளைஞர்கள்... உள்ளே மாடி ஹாலில் 'தம்பி’ என்று செல்லமாக அழைக்கப்படும் அவர்கள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்!
சற்று பருமனான, ஆனால் வலுவான உடல்வாகு... ரொம்ப உயரம் இல்லை. வகிடு இல்லாமல் மொத்தமாகத் தூக்கி வாரப்பட்ட சீரான தலைமுடி... தீர்க்கமான விழிகள்... நேருக்கு நேர் நம் கண்களைப் பார்த்துப் பேசுகிறார். அடர்த்தியான கச்சிதமான மீசை பிரபாகரனுக்குத் தனி கம்பீரத்தைத் தருகிறது.
நாம் அங்கே சந்தித்தபோது, ஈழத்தில் இருந்து வந்துகொண்டு இருந்த செய்திகளை அவருடைய தோழர்கள் 'டைப்’ அடித்து அவரிடம் காட்டிக்கொண்டு இருந்தனர். பிரபாகரன் அவற்றைக் கூர்ந்து படித்துவிட்டுச் சில செய்திகளை 'ஓகே’ செய்தார். அவை வெளியுலகம் அறிய பத்திரிகைகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டன.
வல்வெட்டித்துறையில் இலங்கை இராணுவம் விமானம் மூலம் குண்டு வீசிய செய்தி அப்போது வந்தது. வீராவேசமாக எதிர்த் தாக்குதல் நடத்தியதில் எட்டு விடுதலைப் புலிகள் பலியானார்கள். இந்தச் செய்தியை பிரபாகரன் நம்மிடம் படித்து காட்டிவிட்டுச் சற்று மௌன​மானார்.
தமிழ் மக்களின் பாதுகாப்பு பற்றிக் கவலை​யோடு கேட்டோம்.
இலங்கை இராணுவம் நடத்தும் இந்த விமானத் தாக்குதலில் மக்கள் அதிகம் இறந்து விடவில்லை. காரணம், இம்மாதிரி விமானத் தாக்குதல்களை இலங்கை அரசு நடத்தப்போவதை சில வாரங்களுக்கு முன்பே தமிழ்ப் பகுதிகளில் எச்சரித்து விட்டோம்.
ஒவ்வொரு வீட்டிலும் பதுங்கு குழிகள் வெட்டப்பட்டுள்ளன. ஆண் துணை இல்லாத வீடுகளில் எங்கள் இயக்க வீரர்கள் பதுங்கு குழிகளை வெட்டி உதவினார்கள். விமான ஓசை கேட்டவுடனேயே குழிகளில் பதுங்க, இப்போது குழந்தைகள் கூடப் பயிற்சி பெற்றுவிட்டார்கள் என்றார் பிரபாகரன்.
இலங்கை இராணுவ விமானம் மூலம் வீசப்படும் குண்டுகள் பெரும்பாலும் 'வேஸ்ட்’ என்று வர்ணித்தார் பிரபாகரன். 'வேண்டுமானால் மக்களி​டையே பீதியைக் கிளப்ப அது உதவலாம்... மற்றபடி எங்கள் இலக்குகளை அவர்களால் தாக்க முடியாது!
அவர்களிடம் 'நேபாம்’ (விஷ கெமிக்கல்) குண்டுகள் வீசுவதற்குத் தயாராக இருக்கின்றன. இன்னமும் அந்த குண்டுகளை அவர்கள் பயன்படுத்தவில்லை. இரக்கம் இல்லாமல் 'நேபாம்’ குண்டுகள் வீசினால், அப்பாவிப் பொதுமக்கள் துன்பம் அடைய நேரிடும்.
யாழ்ப்பாணத்தில் மக்களின் முழு ஆதர​வோடு விடுதலைப்புலிகள் ஆட்சிதான் நடக்கிறது. ''வரி வசூலே நாங்கள்தான் செய்கிறோம் என்றால் பார்த்துக்​கொள்ளுங்​களேன்'' என்றார் புன்முறுவலுடன் பிரபாகரன்.
யாழ்ப்பாணத்துக்கு நீங்கள் எப்போது போய் வந்தீர்கள்? என்று கேட்டபோது, ஒரு கணம் தயங்கி சிறு புன்னகையுடன், இடையிடையே போய் வருவேன்... யுத்த முனையில் எதுவும் எனது உத்தரவுகள்படியே நடக்கும். அவசர முடிவுகள் எடுக்க அங்கே உள்ள எனது தளபதிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நான் எப்படிச் சிந்திப்பேனோ... அப்படிச் சிந்திக்கப் பயிற்சி பெற்றவர்கள்! என்றார்.
விடுதலைப் புலிகளுக்கு நவீன ஆயுதங்கள் அத்தனையும் அத்துப்படியாகி இருக்கிறது. மிலிட்​டரி சயின்ஸைப் புத்தக வடிவில் தமிழில் கொண்டுவந்து இருக்கிறார்கள் இவர்கள். 'போர்க் குரல்’ என்ற இந்தப் புத்தகம் தமிழில் முதல் முயற்சி. இத்தனை போராட்டத்துக்கு நடுவில் தமிழில் இராணுவத்தைப் பற்றியும், போர் முறைகளைப் பற்றியும் விஞ்ஞானரீதியில் பல வால்யூம்களாகத் தயாரித்திருக்​கிறார்கள்.
பொதுவாக, பிரபாகரனுக்குப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் அதிகம். உலக நாடுகள் முழுவதிலிருந்தும் 3 லட்சம் பெறுமான யுத்த நுணுக்கப் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு, 'போர்க் குரலில்’ அவற்றின் மொழிபெயர்ப்பு தரப்படுகிறது... போர்க் குரல் லே-அவுட் எல்லாம் பிரமாதம். இருப்பினும் பிரபாகரன் திருப்தி அடையவில்லை.
என்னைத் திருப்திபடுத்துவது எளிதான காரியம் அல்ல... இன்னும் சிறப்பாகத் தயாரித்திருக்க முடியும் என்று சிரித்தார் பிரபாகரன்.
அவரது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான 'புலி’ முத்திரைக்குச் சரியான புலித் தலையைத் தேர்ந்தெடுக்கப் பட்டபாடு சுவை​யானது. சிவகாசி பட்டாசில் இருக்கும் புலியின் படத்தில் இருந்து உலகம் முழுவதும் வெளியாகும் புலிப் படங்கள் வரை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எதிலும் அப்படி ஒரு 'பெர்ஃபெக்ஷன்’ எதிர்பார்க்கிறார் பிரபாகரன். நாளைக்கு ஒரு புலியின் படத்தைப் பார்த்துவிட்டு, 'அடடா, இதை உபயோகித்திருக்கலாமே!’ என்று வருத்தப்​படக் கூடாதல்லவா? என்று விளக்கம் தந்தார். இந்த அணுகுமுறை அவரது எல்லாச் செயல்களிலும் எதிரொலிக்கிறது.
எங்கள் இயக்கத்தில் சேருவதற்குக் கட்டுப்பாடுகள் உண்டு. வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் யாரும் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவது இல்லை. தோல்வி உணர்வுகொண்டவர்களுக்கு இதில் இடம் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்குத் தன்னம்பிக்கை இருக்காது. இந்தப் போராட்ட விஷயத்திலும் விரக்திதான் அடைவார்கள். தமிழ் ஈழம் உடனே கிடைத்துவிடும் என்ற கனவோடும் வரக் கூடாது. போராட்டத்துக்குக் கால வரம்பு கிடையாது. தனி ஈழம் கிடைக்க சர்வதேச சூழ்நிலைகள்கூட அனுசரணையாக இருக்க வேண்டிய நிலை உண்டு. என்ற பிரபாகரன் சற்று உணர்ச்சி வசப்பட்டார்.
இலங்கையில் தமிழனாகப் பிறந்ததால், வாழும் நிலம் பறிக்கப்பட்டது... கல்வி பறிக்கப்பட்டது... பொருளாதார வசதிகள் மறுக்கப்பட்டன. இதை எதிர்த்துப் போராடாவிட்டால், நாம் ஒரு ஜடம்தான். பிறகு, ஒரு மனிதனாக வாழ்வதில் அர்த்தம் ஏதும் இல்லை. நாங்கள் போராடுவதை எங்கள் சரித்திரக் கடமையாகக் கருதுகிறோம். பதவிகளையோ அல்லது வேறு எதையும் எதிர்பார்த்துப் போராட்டம் நடத்தவில்லை.
சில நிமிடங்கள் அந்த ஹாலில் அமைதி நிலவியது... பேட்டி - 'டெலோ’ - விடுதலைப் புலிகள் மோதலைப்பற்றி திரும்பியது. நாங்கள் கேட்டோம்: இந்த மோதல்... சிறீ சபாரத்​தினத்தின் மரணம் ஆகியவற்றால், தமிழ் மக்கள் கசப்படைந்து இருக்கிறார்கள். தமிழர்களிடையே ஒற்றுமை என்பதே இல்லையா? அந்தக் காலத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் என்று பிரிந்து மோதியதில் இருந்து இந்த நிலைமைதானா?
சேர, சோழ, பாண்டியர்கள் என்று பிரிந்து சண்டையிட்டதும் உண்மை. ஒரு கால கட்டத்தில் சோழர்கள்... சேர, பாண்டியர்களை அடக்கியதும் உண்மை என்றார் பிரபாகரன் சுருக்கமாக. பிறகு தொடர்ந்தார்.
எங்களிடம் வஞ்சகத்தன்மை இல்லை. இரண்டு எதிரிகளைச் சந்திக்க முடியாது. முதலில் கத்திக்கொண்டு இருந்தவர்களைக் கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நிரம்பத் தள்ளிப்போட்டு எடுத்த முடிவுதான் அந்த மோதல். சிறிய யுத்தமாகவே நடத்தித் தீர்வு காண வேண்டியதாயிற்று. நாட்டைக் காக்க யுத்தத்தில் இறங்கும்போது, மெத்தனமாக முடிவெடுக்க முடியாது. பகவத் கீதையும் அதைத்தான் சொல்கிறது. உற்றார், உடன்பிறப்பு, குரு, நண்பன் என்று யுத்த களத்தில் இரக்கம் பார்ப்பதற்கு இல்லை. சொந்த தந்தை, சகோதரன் போன்றவர்கள் துரோகியாக மாறினால், அவர்களை அழிக்கத் தயங்காதவர்கள் எங்கள் இயக்கத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் நிறையப் பொய்களை அவிழ்த்துவிட்டவாறு இருந்தார்கள்... உண்மை செருப்பை மாட்டிக்கொள்வதற்குள்... பொய், பாதி உலகம் உலா வந்திருக்கும் என்பதற்கு ஏற்ப, எங்களைப்பற்றிய பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. எனக்குப் பொதுவாகவே பிறரை விமரிசித்து அறிக்கைவிடுவது பிடிக்காது... அவர்களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தால்... குழாயடிச் சண்டைபோல, அவலங்கள் வெளிவரும்!
நாங்கள் அவர்கள் இயக்கத்தவரை உயிரோடு கொளுத்தியதாகச் சொல்கிறார்கள். அப்படி எதுவும் என் இயக்கத்தில் நடக்காது. அது நினைத்துப் பார்க்கவே இயலாத செயல். அப்படி யாராவது செய்தால், நான் பதிலுக்கு அவரை உயிரோடு கொளுத்துவேன். என் இயக்கத்தில் யாராவது தெரிந்து தவறு செய்தால், அவர்களை நான் மன்னிப்பதில்லை. ஆகவே இங்கே இருப்பவர்களுக்குத் தவறு செய்ய நிறையவே துணிச்சல் தேவைப்படும்!
தமிழ்நாட்டு அரசியலில் சிலர், சிலரை தியாகி ஆக்குகிறார்கள். நான் கலைஞரைச் சந்திப்பது இல்லை என்று குற்றச்சாட்டு போல சொல்லப்படுகிறது. உண்மையில் நான் யாரையுமே சந்திப்பது இல்லை. எம்.ஜி.ஆரையும் நான் சந்திக்கவில்லை. இலங்கைத் தமிழருக்காக எம்.ஜி.ஆர். உண்ணாவிரதம் இருந்தபோதுகூட நான் அங்கே போகவில்லை. எங்கும் நான் போவது இல்லை. எந்தப் பொது நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்வது இல்லை.
தமிழீழம் சுதந்திரம் அடையும் விழாதான் நான் கலந்துகொள்ளும் முதல் பொது விழாவாக இருக்கும். எங்களுக்கு என்று ஒரு நாடு கிடைத்த பிறகுதான், யாரையும் எங்கேயும் சந்திப்பேன்! என்கிறார் பிரபாகரன் அழுத்தம் திருத்தமாக.
யாழ்ப்பாண மக்களிடம் விசாரியுங்கள். விடுதலைப் புலிகள் தவறு செய்வதாகச் சொல்லட்டும்... மண்டியிடுகிறேன்... சொல்ல மாட்டார்கள்! மற்ற இயக்கத்தவர்கள் செய்யும் தவறுகளை மக்கள் வந்து சொன்னதாலேயே, தடி எடுத்தவன் தண்டல்காரனாக ஆகக் கூடாது என்பதாலேயே, 'டெலோ’ மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று.
பிரபாகரன் எதிரில் ஒரு மருந்து 'குப்பி’ இருந்தது. ''அது என்ன?'' என்று கேட்டோம்! இதில்தான் எனது இயக்கத்தவர்கள் சயனைட் நிரப்பி கழுத்தில் மாட்டிக்கொண்டு இருப்பார்கள். எதிரிகளிடம் சிக்கினால், சயனைட்டை வாயில் போட்டுக்கொண்டு உயிர்த் தியாகம் செய்வார்கள். பலர் செய்தும் இருக்கிறார்கள்...'' என்று சொல்லிவிட்டு ஏதோ நினைவுகளில் மூழ்கினார் பிரபாகரன்...
ஜூனியர் விகடன்

Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment