உலகின் புதிய ஒழுங்கில் மண் மீட்புப் போராட்டங்கள்


உலகின் புதிய ஒழுங்கில், நிலத்திற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.மூலவளச் சுரண்டலிற்காக, வர்த்தகச் சந்தைக்காக வல்லரசுகளும் முட்டி மோதிக் கொண்டிக்கின்றன.பெருந் தேசிய இனவாத ஆட்சியாளர்களும் தமது இறைமையை  நிலை நிறுத்திக் கொள்ள, பூர்வீக தேசிய இனங்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றார்கள்.

அகண்ட பார்வையில், உலகப் பொருளாதாரத்தின் எண்பது சத வீதத்தைக் கொண்ட முதலாளித்துவ முறைமை, நில ஆக்கிரமிப்பின் பின் புலத்தில் நின்று செயற்படுவது தெரிகிறது.
 தேசிய பாதுகாப்பிற்கும் மூலவளச் சுரண்டலிற்கும் தென் சீனக் கடலில் தீவுகளுக்கு உரிமை கோரும் சீனா, வியட்னாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளைக் காணலாம்.

மலை வாழ் மக்களை அவர்களது பிரதேசங்களிலிருந்து விரட்டி அடித்து கனிம வள சுரண்டிலிற்காக அரசோடு கைகோர்க்கும் பன்னாட்டு கம்பனிகளை இந்தியாவின் மத்திய பகுதியில் பார்க்கலாம்.திருமலைத் துறை முகத்தில் முதலீடு செய்யும் பல் தேசியக் கம்பனிகளின் நகர்வு, சம்பூர் மண்ணை ஆக்கிரமிக்கிறது என்கிற செய்தியை கடந்த வாரம் கண்டோம்.

முதலீட்டு ஆதிக்கம் நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் அதேவேளை, ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் தேசிய இனங்களின் நிலங்களையும் கபளீகரம் செய்கிறது.மனித உரிமை மீறல் குறித்துப் பேசும் வல்லரசாளர்கள், நில ஆக்கிரமிப்புக் குறித்து வாய் திறப்பதில்லை. 
 
முதலில் பிராந்தியங்களின்  ஆதிக்கம் ஊடாக, புதிய உலக ஒழுங்கினை தமக்கேற்றவாறு கட்டமைக்க முயலும், வல்லரசுச் சக்திகள் குறித்தான வரலாற்று ரீதியிலான படிமுறை வளர்ச்சியை அவதானிக்க வேண்டும்.

ஆரம்பத்தில் கைத்தொழில் புரட்சி மூலம் முதலாளித்துவத்தின் பண்புகள், உலகளாவிய ரீதியில் விரிவடையத் தொடங்கின.வங்கி முறைமையின் பரிணாம வளர்ச்சி, தகவல் தொழில் நுட்பம் ஊடாக நிதியியல் கட்டமைப்புக்களின் பரவலாக்கம், கைத்தொழில் வளர்ச்சி என்பன முதலாளித்துவத்தை அடுத்த கட்ட நிலைக்கு உயர்த்தியுள்ளன.அத்தோடு இயற்கை மூல வளச் சுரண்டலிற்கான தேவையை கைத் தொழில் புரட்சி ஏற்படுத்தியதெனலாம். கைத்தொழில் மயமாக்கல், புதிய தொழில் நுட்பத்தின் அவசியத்தை உருவாக்கி, முன்னெப்பொழுதும் இல்லாதவாறு உலகச் சந்தையின் கூட்டிணைவினை முன்னிறுத்தியது.

இதில் கொலனித்துவ சக்திகளின் பிராந்திய ஆதிக்கத்தை இரண்டாம் உலகப் போரிற்கு முன்பாகக் கண்டோம்.தற்போதைய உலக ஒழுங்கில் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்குமிடையே நிலவும் சந்தை மற்றும் பிராந்திய ஆதிக்கப் போட்டியே முதன்மை பெறுகிறது.

ஜீ  20 என்கின்ற கூட்டமைப்பில் இவை ஒரே மேடையில் அமர்ந்து பேசினாலும் பிரிக்ஸ், ஆசியான், சாங்காய் கூட்டிணைவு ஒன்றியம் (SCO) போன்ற  கூட்டணிகளும் உலக ஒழுங்கின் புதிய வரவாக இருக்கிறது. 

மத்திய கிழக்கில் மோதும் வல்லரசுகள், ஆசியாவிலும் முரண்பட ஆரம்பித்திருப்பதற்கு மேற்குலகப் பொருளாதாரத்தின் பின்னடைவு முக்கிய காரணியென்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.உலகச் சம நிலையில் ஏற்படும் இத்தகைய மாற்றத்தில், மேற்கின் தேய்வும் கிழக்கின் வளர்ச்சியும் கணிசமான பங்கினை வகிக்கின்றது.

ஆனாலும் நிதியியல் நிர்வாகத்தை ஆளுமை செலுத்தும் பாரிய நிறுவனங்கள் இன்னமும் மேற்கின் பிடிக்குள் இருப்பது தான் கிழக்கின் வளர்ச்சியுறும் வல்லரசுகளுக்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது.

இருப்பினும் மெக்ஸிக்கோவிலுள்ள லொஸ் கபோசில்(Los Cabos) நடைபெறும் ஜீ 20 மாநாட்டில் அனைத்துலக நாணய நிதியத்தினை பலப்படுத்தும் வகையில், 10 பில்லியன் டொலர்களை வழங்க இந்தியா முன்வந்துள்ள விடயம் மேற்குலகின் பலவீனத்தை வெளிப்டுத்துகிறது.

அதாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவைச் சந்தித்தாலும், ஐரோப்பாவின் வர்த்தக சந்தையை இழக்கக் கூடாது என்கிற வகையில் அதன் நிமிர்விற்காக, அனைத்துலக நாணய நிதியத்திற்கு இந்தியா உதவி செய்கிறது எனலாம்.

அதேவேளை, சர்வதேச கடன் மதிப்பீட்டு முகவர் அமைப்பான 'பிச்' (Fitch), இந்தியாவை தரமிறக்கி உள்ளதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகள், இவ்வாறு தரமிறக்கப்பட்டுள்ளன. இதனால் கடன் பெறும் தகைமையை இழந்து, பெறும் கடனிற்காக அதிகளவு செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை இந் நாடுகள் எதிர் நோக்குகின்றன.

விற்கப்படும் நீண்ட கால அரச முறிகளுக்கு செலுத்தப்படும் வட்டி, ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகளில் அதிகரிப்பதால் அதனைக் குறைக்கும் வகையில், அனைத்துலக நாணய நிதியத்தினூடாக உதவி வழங்கப்பட வேண்டுமென ஜீ 20 மா நாட்டில் பரவலாகப் பேசப்பட்டது. இதில் 43 பில்லியன் டொலர்களை வழங்க சீனா முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2009 இல் நடைபெற்ற ஜீ 20 லண்டன் மாநாட்டில் 50 பில்லியனை சீனா முதலீடு செய்தது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இந்தியாவோ அல்லது சீனாவோ ஐரோப்பியச் சந்தையை இழக்கத் தயாரில்லை என்பதாகும்.உலகப் பொருளாதார மீட்சிக்கு சீனாவின் உதவி எவ்வளவு அவசியமோ, அதேயளவு முக்கியத்துவம், யூரோ நாணயத்தின் ஸ்திரத் தன்மையிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார மீள் எழுச்சியிலும் தங்கியுள்ளது.
 
இவைதவிர, இம்மாநாட்டில் கலந்து கொண்ட 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் உறுப்புநாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா போன்றவற்றின் தலைவர்கள் தமக்குள் கூடிப் பேசியுள்ளனர்.அனைத்துலக நாணய நிதியத்தில் தமது முதலீடுகளை அதிகரிக்கும் அதேவேளை, உலகப் பொருளாதாரக் கட்டமைப்பில் நிதிச் சிக்கல் ஏற்படுவதால் ,தம்மிடையே வெளிநாட்டு நாணய சேமிப்பு நிதியத்தையும், சொந்த நாணயப் பரிவர்த்தனை ஏற்பாட்டினையும் மேற்கொள்ள வேண்டுமென இவை தீர்மானித்துள்ளன.
 
யூரோவலய நாடுகளில் உருவாகியுள்ள நிதிநெருக்கடி மேலும் பரவாமல் தடுப்பதற்கு, தத்தமது மத்திய வங்கிகள் ஊடாக இவ்வகையான ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்வது அவசியமானதொன்றாக 'பிரிக்ஸ்' கருதுகிறது.உலக நாணயமான அமெரிக்க டொலரிற்கு மாற்றீடாகவும், தனது யுவான் நாணயத்தை வர்த்தகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தவும்,இத்தகைய நகர்வினை சீனா முன்னெடுப்பதாக மேற்குலகில் விமர்சனங்கள் உண்டு. 

"பிரிக்ஸ்' கூட்டமைப்பானது உலக சனத்தொகையில் 42 விழுக்காட்டை கொண்டிக்கிறது. நாணய நிதியத்தின் கணிப்பீட்டில், இந்த 5 நாடுகளின் மொத்த உள்ளூர் உற்பத்தி 13. 6 ரில்லியன் டொலர்களாகும். இதை விட சீனாவின் வெளி நாட்டு நாணயக் கையிருப்பு 3 ரில்லியன் டொலர்களைத் தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சந்தைகளை இழக்கும் "பிரிக்ஸ்' இற்கும், பொருளாதாரப் பின்னடைவை அனுபவிக்கும் மேற்கிற்கும் பரஸ்பர உதவிகள்தேவைப்படுகிறது என்பதையே ஜி 20 மாநாட்டு புலப்புடுத்துகிறது.இதன் பின்னணியில், இந்த மாற்றங்களும் முரண்பட்ட சக்திகளின் இணக்கப்பாட்டு அரசியலும், இலங்கையிலும் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதுவே எமது பிரச்சினையாகும்.

அனைத்துலக நாணய நிதியம் சீனாவிடம் கையேந்த, அந்த நிதியத்தின் தயவை எதிர்பார்க்கிறது இலங்கை அரசு.விற்ற அரச பிணையங்கள் மற்றும் முறிகளுக்கான முதிர்ச்சி நிலை ஏற்படும்போது, அதனை எவ்வாறு திருப்பிக் கொடுப்பது என்பதில்தான் மத்தியவங்கி அதிக நேரத்தை செலவிடுகிறது.

கடன் வாங்கிக் கடனை அடைக்கும் சங்கிலித்தொடர் நிகழ்வுகளால் சலிப்படையும் அரசு, திறைசேரியும் மத்தியவங்கியும் என்னதான் நிபுணர் குழுக்களை அமைத்து பரப்புரை செய்தாலும், எதிர்பாத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் தொகையைப் பெற முடியவில்லையே என்கிற ஏமாற்றத்தால், மேற்குலகோடு சுமூகமான நிலையொன்றினை உருவாக்க வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டது.
 
அடுத்த மாத முதல் வாரத்தில், வெளிநாடுகளில் இருக்கும் தூதரக உயர் அதிகாரிகளை அழைத்து, தமது புதிய வெளியுறவுக் கொள்கையை அரசு அறிமுகம் செய்யுமென்று செய்திகள் கூறுகின்றன
அதில் நிச்சயமாக, மேற்குலகு சார்பாக எடுக்கவுள்ள நிலைப்பாடு, முக்கிய பேசுபொருளாக இருக்குமென எதிர்பார்ககப்படுகின்றது.

மனித உரிமை பேரவை வழங்கிய ஒரு வருட காலத் தவணைக்குள் வடக்கின் குடிசனப் பரம்பலை பெரும் தேசிய வாதத்திற்கு சார்பாக மாற்றிமையப்பதோடு, சில விட்டுக் கொடுப்புகளை முன் வைத்து, மனித உரிமை மீறல் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளும் மேற்குலகை திருப்திப் படுத்தி, தனது அரசியல் இருப்பினைத் தக்க வைக்கலாமென்று அரசு வியூகம் அமைப்பது போல் தெரிகிறது.

இந் நிலையில் படையினர் மேற்கொள்ளும் நிலஅபகரிப்பிற்கு எதிரான மக்கள் போராட்டங்கள், இலங்கை அரசிற்கு புதிய தலைவலியைக் கொடுப்பதையும் கவனிக்க வேண்டும். இலங்கை அரசால் தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது என்கிற செய்தி சர்வ தேசத்திற்கும் எட்டுகிறது.

 யாழ். நகரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டம், காவல்துறை மேற்கொண்ட முயற்சியினால் நீதிமன்றத்தால் இடை நிறுத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த தெல்லிப்பளைப் போராட்டம், காவல் துறையின் பலத்த எதிர்ப்புகளின் மத்தியில் நடந்தேறியது.

வருகிற 26 ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடக்கவிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.இதில் கருத்து வேறுபாடு இல்லாமல் சகல தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து கொள்வதைக் காணலாம்.

ஆகவே நிலமற்ற தேசிய இனங்கள் முன்னெடுக்கும் வாழ்வுரிமைப் போராட்டங்களை, முதலீடுகளில் தமது கவனத்தைக் குவிக்கும் வல்லரசாளர்கள் கருத்தில் கொள்வார்களாவென்று தெரியவில்லை.

சம்பூர் மக்கள் இலங்கை நீதிமன்றில் தமக்கான நீதியை எதிர்பார்க்கின்றனர். யாழ். குடாவில் ஆங்காங்கே இந்த நில அபகரிப்புக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியே புதிய பாதையை திறந்து விடும் என்பதுதான் உண்மை.

இதயச்சந்திரன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment