சம்பந்தன் அவர்களின் தலையாய கடமை


உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இலங்கைத் தமிழ் மக்கள் தங்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயமொன்றைக் கொண்டிருக்கவில்லை. தங்களது பிரச்சினைகள் தொடர்பில் பயனுறுதியுடைய முறையில் குரல்கொடுக்கவல்ல அரசியல் பிரதிநிதிகள் தங்கள் மத்தியில் இல்லையென்ற கவலை தமிழ் மக்களுக்கு இருந்தது. எஞ்சியிருக்கக் கூடிய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூட இதை ஏற்றுக்கொண்டவர்களாகவே காணப்பட்டனர்.


மீண்டும் ஜனநாயக ரீதியான செயன்முறைகளில் தமிழ் மக்களை ஈடுபட வைப்பதற்கு நம்பிக்கையூட்டக்கூடிய தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்பட வேண்டிய சவாலை தமிழ்க் கட்சிகள் எதிர்நோக்கி நின்றன. இந்தச் சவாலுக்கு தனித்தனியாக நின்று கட்சி அரசியல் குரோதங்களை வெளிக்காட்டுவதன் மூலமாக ஒருபோதுமே முகம் கொடுக்க முடியாது. அதனால் கடந்த கால உரிமைப் போராட்டங்களின் அனுபவங்களிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் கசப்பானதும் கனதியானதுமான பாடங்களை அடிப்படையாகக் கொண்டு சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கேற்ற முறையில் எதிர்காலத்திற்கான அரசியல் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் ஐக்கியப்பட்ட முறையில் வகுக்கத் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்றே தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயற்படக்கூடிய அரசியல் விவேகமும் தொலை நோக்கும் அத் தலைவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. 


போரின் முடிவுக்குப் பிறகு நடைபெற்றிருக்கக்கூடிய தேர்தல்களில் படிப்படியாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பங்கேற்கின்ற வீதம் அதிகரித்து வந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் அவலங்களிலிருந்து மீள முடியாமல் தவித்த தமிழ் மக்கள் தேர்தல்கள் போன்ற ஜனநாயக ரீதியான செயன்முறைகளில் மாத்திரம் ஈடுபடக்கூடியதாக இருக்கின்ற சூழ்நிலையை கூடுதல் பட்சம் பயன்படுத்த வேண்டுமென்று சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்ததன் விளைவாகவே அந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. என்றாலும் கூட திருப்தி தரக்கூடிய எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்புகளில் பங்கேற்கவில்லை என்பது உண்மையே. ஆனால், அதை அடிப்படையாகக்கொண்டு நம்பிக்கையிழக்காமல் செயற்படுவது தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு நடைமுறைச் சாத்தியமான மார்க்கமாகும். 


அந்த வகையில் நோக்குகையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் கூடுதல் எண்ணிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கே வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள். போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கும் பொறுப்புடைமை குறித்து சர்வதேச சமூகம் அக்கறைகாட்டத் தொடங்கியதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் உள்நாட்டிலும் சர்வதேச அரங்குகளிலும் முன்னரைக் காட்டிலும் துடிப்புடன் செயற்படக்கூடிய சூழ்நிலை தோன்றியது. இதையடுத்து தமிழ்மக்கள் மத்தியில் இருந்த அரசியல் வெற்றிடம் படிப்படியாக இல்லாமல் போகக் கூடிய சூழ்நிலை நாளடைவில் தோன்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. 


ஆனால், அந்த நம்பிக்கைக்கு மேலும் வலுச்சேர்க்கக்கூடியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நடந்துகொண்டதாகத் தெரியவில்லை.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பகத்தன்மையான ஒரு அரசியல் சக்தியாக மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கான தலைமைச் சக்தியாகவும் தலையெடுத்திருக்கிறது என்று சர்வதேச சமூகம் கருதியது. அதன் காரணத்தினாலேயே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கான செயன்முறைகளிலும் தேசிய நல்லிணக்கத்தைத் தோற்றுவிப்பதற்கான செயன்முறைகளிலும் அந்தக் கூட்டமைப்பை சம்பந்தப்படுத்தி பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச சமூகத்தின் முக்கிய பங்கீடுபாடு கொண்ட தரப்புகள் வலியுறுத்திவந்தன.

சர்வதேச சமூகத்தின் மத்தியில் கிடைத்திருக்கக்கூடிய இந்த இராஜதந்திர அங்கீகாரத்தை பயனுறுதியுடைய முறையில் பாவித்து  தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உருப்படியான நடவடிக்கைகளில் இறங்குவதைவிடுத்து அந்த அங்கீகாரத்திற்கு ஏகபோக உரிமை கோரும் தோரணையில் கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய சில தலைவர்கள் நடந்துகொள்ள முனைவதனால் தற்பொழுது தகராறுகள் மூளுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 

கடந்த வாரம் மட்டுநகரில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மகாநாட்டில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரையில் தமிழரசுக் கட்சி இதுவரையில் கடைப்பிடித்து வந்திருக்கக்கூடிய அணுகுமுறைகளின் காரணமாக அதிகூடிய சர்வதேச இராஜதந்திர அங்கீகாரம் அக்கட்சிக்கே வழங்கப்படுகிறது என்றும் அதன் வழியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அந்த இராஜதந்திர அங்கீகாரம் ஏற்புடையதாகவும் உரித்துடையதாகவும் கைவரப்பெற்றிருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.  இந்தக் கருத்து கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்கள் சகலருக்குமான தலைமைத்துவ சக்தியென்றும் அந்தத் தலைமைத்துவ சக்திக்கு தலைமைதாங்குவது தமிழரசுக் கட்சியே என்றும் சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இத்தகைய கருத்துகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஒரு கட்சி தன்னை கூடுதலாக முனைப்புறுத்திச் செயற்பட முன்வந்திருப்பதன் வெளிப்பாடாக நோக்க வேண்டியிருக்கிறது.  கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய வெவ்வேறு கட்சிகள் தங்களது அணிகளை அமைப்பு ரீதியாக, அரசியல் ரீதியாக வலுப்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், கூட்டமைப்பின் ஐக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடியதாக செயற்படுவதும் கருத்துகளை முன்வைப்பதும் எந்த வகையிலும் விவேகமானதல்ல என்பதே எமது அபிப்பிராயமாகும்.

தமிழரசுக் கட்சியின் “வீடு’ சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதியாக நடைபெற்ற இரு பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டியேற்பட்ட சூழ்நிலைகளைத் திரிபுபடுத்தக்கூடியதாக நிலைவரங்களைப் பற்றிய வியாக்கியானங்களை செய்வது கூட்டமைப்பின் ஐக்கியத்தைப் பேணுவதற்கு உகந்த செயலாக அமையாது. அத்துடன் தமிழ் மக்கள் இன்று இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் மத்தியில் பழைய பாணி குரோதத்தனமான கட்சி அரசியல் முன்னெடுப்புக்கள் ஆரம்பமாவதற்கு வழிவகுக்கக் கூடிய துரதிர்ஷ்டவசமான போக்குகளில் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய சில சக்திகள் செயற்படுவதை பல தசாப்த கால அரசியல் அனுபவமும் சமகால நிலைவரத்திற்கு ஏற்ப இராஜதந்திர விவேகத்துடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய பக்குவமும் கொண்டவராகக் காணப்படும் சம்பந்தன் அவர்கள் தொடர்ந்தும் அனுமதிக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இன்று தமிழ் மக்களுக்குத் தேவைப்படுவது வக்கிரத்தனமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கட்சி அரசியலேயல்ல. இயன்றவரை தமிழ்க் கட்சிகள் தங்கள் மத்தியில் ஐக்கியத்தை இறுக வளர்த்து தமிழ் மக்களினுடைய நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பயனுறுதியுடைய அரசியல் தீர்வைக் காண்பதற்கு தங்களை அர்ப்பணிப்பதே இன்றைய தேவையாகும்.  சம்பந்தன் அவர்கள் எப்பொழுதுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று உரிமை கோருபவர் அல்ல. கூட்டமைப்பு தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் அணி என்றே அவர் கூறி வந்திருக்கிறார். அந்த வகையில் அந்தக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஏனையவற்றைவிட ஒன்று மீதே தமிழ் மக்கள் கூடுதலான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்று உரிமைகோர முயற்சிக்கக்கூடிய அளவுக்கு சம்பந்தன் அவர்கள் அரசியல் முதிர்ச்சி இல்லாதவரல்ல. அவரின் அனுபவமும் அறிவும் பக்குவமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தை குலைய விடாமல் பாதுகாக்கும் என்று நம்புகிறோம். இந்தப் பணியை நிறைவேற்ற வேண்டியது அவரின் தலையாய கடமை என்பது எமது உறுதியான அபிப்பிராயம்.

தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment