போலியான ஏகாதிபத்திய எதிர்ப்பு


நம் வீட்டில் வளர்க்கும் நாய்கள் சிலவற்றுக்கு ஒரு விசேட குணம் உண்டு. வெளியிலிருந்து வேறு ஒரு நாய் வந்து எமது படலையில் எட்டிப்பார்த்து விட்டால் போதும். பெருங்குரலெடுத்துக் குரைத்துத் துரத்த ஆரம்பித்து விடும். எட்டிப்பார்த்த நாய் சிறிது தூரம் ஓடி விட்டு திருப்பிக் குரைக்க ஆரம்பித்தால், எமது விரட்டிய நாய் ஓடி வந்து வீட்டு எல்லைக்குள் புகுந்துநின்று கொண்டு, வேலிக்குள் நின்றே பெருங்குரலெடுத்துக் குரைக்க ஆரம்பித்துவிடும்.

ம் வீட்டில் வளர்க்கும் நாய்கள் சிலவற்றுக்கு ஒரு விசேட குணம் உண்டு. வெளியிலிருந்து வேறு ஒரு நாய் வந்து எமது படலையில் எட்டிப்பார்த்து விட்டால் போதும். பெருங்குரலெடுத்துக் குரைத்துத் துரத்த ஆரம்பித்து விடும். எட்டிப்பார்த்த நாய் சிறிது தூரம் ஓடி விட்டு திருப்பிக் குரைக்க ஆரம்பித்தால், எமது விரட்டிய நாய் ஓடி வந்து வீட்டு எல்லைக்குள் புகுந்துநின்று கொண்டு, வேலிக்குள் நின்றே பெருங்குரலெடுத்துக் குரைக்க ஆரம்பித்துவிடும்.

எஜமான் பக்கத்தில் நின்றுவிட்டால் அதன் குரைப்புக்கு அளவு கணக்கே இல்லை. வீட்டு நாயின் வீரமெல்லாம் வேலிக்கு உள்ளே மட்டும்தான். வெளியில் இல்லை.இப்போது இலங்கை அரசியலிலும் வீட்டுக்குள் நின்று குரைக்கும் வீரம் மேலோங்கி விட்டது.

இன்று பல அரசியல் வாதிகள் தம்மை ஈடிணையற்ற தேசபக்தர்களாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரர்களாகவும் காட்டுவதில் தங்கள் வீர சூரத்தனத்தைக் காட்டி வருகின்றனர். 

மேற்கு நாடுகளோ அல்லது இந்தியாவோ இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாகவோ, தமிழ் மக்கள் மீது இடம் பெறும் இன ஒடுக்குமுறை தொடர்பாகவோ ஏதாவது ஒரு நியாயமான கருத்தை வெளியிட்டு விட்டால் இவர்கள் கொதித்தெழுந்து விடுவார்கள்.

இலங்கையில் சுயாதிபத்தியத்தை மீறுவதாகவும், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும் அலறியடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் சுற்றுலாத்துறை வளர்ச்சி, துரித அபிவிருத்தி போன்ற போர்வையில் இந்த நாடு பல துண்டுகளாக்கப் பட்டு தொன்னூற்றொன்பது வருடக்குத்தகைக்கு ஏகாதிபத்திய பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்கப்படுவதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

ஏகாதிபத்தியங்களில் நலன்களுக்கு இசைவாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன போடும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு ஏற்படுத்தப்படும் விலை வாசி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு என்பன பற்றியோ சம்பளங்கள் போதியளவு அதிகரிக்கப்படாமை பற்றியோ, எரிபொருள் விலையுயர்வு பற்றியோ இவர்கள் வாய்திறப்பதில்லை. அந்நிய முதலீடுகள் என்ற பேரில் எமது நாட்டின் மூலவளங்களும், மனித உழைப்பும் ஏகாதிபத்திய சக்திகளால் கொள்ளையடிக்கப்படுவது பற்றி இவர்கள் அக்கறை கொள்வதில்லை.

பொருளாதார ரீதியாக ஆடை ஏற்றுமதி, சுற்றுலாத்துறை போன்ற பல துறைகளில் எமது பொருளாதாரம் ஏகாதிபத்தியத் தேர்ச் சில்லில் கட்டப்பட்டு விட்டதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.

இவற்றிலிருந்து நாம் இவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு சுலோகத்தினதும், தேசிய சுயாதிபத்தியம் பற்றிய கூக்குரல்களின் அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ள முடியும். அண்மையில் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜோன் ரக்கின், இலங்கையின் வடக்குக் கிழக்கில் போர் முடிந்து மூன்றாண்டுகள் கழிந்து விட்ட நிலையில் இராணுவம் அகற்றப்பட வேண்டும் எனவும், அங்கு சிவில் நிர்வாகம் நிலை நிறுத்தப்பட வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

இலங்கையின் அதிதீவிர தேசபக்த சக்திகளாகத் தம்மை காட்டிக் கொள்பவர்களுக்கு இந்தக்கருத்து பெரும் சினத்தை மூட்டிவிட்டது. பிரிட்டன் தூதுவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் எனக் கூறுமளவுக்கு அவர்களின் தேசபக்தி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

இது அப்படியொன்றும் ஆச்சரியப்படக் கூடிய நடைமுறையல்ல. தமிழ் மக்கள் தொடர்பாகவோ, தமிழ் மக்களுக்கு இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் அநீதிகள் தொடர்பாகவோ சர்வதேச அரங்கில் சில அக்கறைகள் காட்டப்படும் போது இவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

பிரிட்டன் தூதுவரின் கருத்துத் தொடர்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அவரை அழைத்துத் தனது அதிருப்தியைத் தெரிவித்தார். ஒரு நாடு வெளியிடும் கருத்து இன்னொரு நாட்டால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத நிலையில், தனது ஆட்சேபனையைத் தெரிவிப்பது வழமையான ராஜதந்திர நடைமுறை.அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் அதிருப்தி தெரிவிப்புடன் அதிதீவிர தேசபக்தர்கள் திருப்தியடைந்து விடவில்லை. 

வேலிக்குள் நின்று குரைக்கும் வீராவேசத்தை ஆரம்பித்து விட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் விமல் வீரவன்சவைத் தலையாகக் கொண்டதும், ஆளும் தரப்புக் கூட்டணியில் அங்கம் வகிப்பதுமான தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நிகழ்த்தியது. 

அதில் பிரிட்டன் தூதுவர் நாட்டுக்கு விரோதமான கருத்தை வெளியிட்டதாகவும், இது நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும், அதனால் அவரை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. அதே வேளையில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேகர பிரிட்டன் தூதுவர் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி விட்டு, அங்கு பிரிட்டன் படைகளைக் கொண்டு வந்து நிறுத்தும் நோக்குடன் செயற்படுகிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இவர்களின் கருத்துப்படி பிரிட்டன், இலங்கையைக் கைப்பற்ற நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கிறது எனச் சிங்கள மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது புரிகிறது. இதன் நோக்கம் அவ்வளவு மட்டமாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் இப்படியான அசிங்கமான, அரசியல், நாகரிகமற்ற, எவ்வித ஆதாரங்களுமே இல்லாத, சிறு பிள்ளைத் தனமான கருத்துக்களை பிரிட்டனோ அல்லது வேறு எந்த ஒரு நாடுமோ பொருட்படுத்தப் போவதில்லை.

இவர்கள் பிரிட்டன் தூதுவரை இலங்கையின் விரோதியாகச் சித்தரிக்க, ஜனாதிபதியோ பிரிட்டன் மகாராணி முடிசூடி 60ஆவது நினைவு விழாவில் கலந்து கொண்டார். அங்கு தமிழர்கள் நடத்திய எதிர்ப்புப் பேரணிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக பிரிட்டன் படைகளின் திரைக்குள் தான் ஒளிந்து கொள்ள வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டது.

இந்த அதிதீவிர தேசபக்தர்களால் எதிரிகளாகச் சித்திரிக்கப்பட்ட, இலங்கையை ஆக்கிரமிக்கப் போவதாகக் கூறப்பட்ட பிரிட்டன் படையினரே ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கினர். இது நகைப்புக்கிடமானதாக இவர்களுக்குப் படவில்லை. ஏனெனில் இவர்கள் காட்டும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பூச்சாண்டியில் ஒருபோதும் உண்மையிருப்பதில்லை.

இலங்கையில் போரின் இறுதி நாள்களில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஐ.நா செயலர் பான் கிமூன் ஒரு நிபுணர் குழுவை அமைத்தார்.

உடனே கொதித்து எழுந்த தேசிய சுதந்திர முன்னணி ஐ.நா செயலருக்கு எதிராகவும், ஐ.நா. சபைக்கு எதிராகவும் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. கொழும்பிலுள்ள ஐ.நா செயலகத்தின் மீது தாக்குதல் நடத்தி அதை ஒரு நாள் முடங்கச் செய்தது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஐ.நா நிபுணர் குழுவைக் கலைக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். மூன்றாம் நாள் ஜனாதிபதி கொடுத்த இளநீருடன் போராட்டம் முற்றுப் பெற்றது.

ஐ.நா. நிபுணர் குழு கலைக்கப்பட வில்லை என்பது மட்டுமல்ல, அது விசாரணைகளை நடத்தி அறிக்கையும் சமர்ப்பித்துவிட்டது. அதை இலங்கை அரசு பிடிவாதமாக ஏற்றுக் கொள்ள மறுத்த போதும், அது போர்க்குற்றவாளிகளின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி என்பதில் எந்தவித ஐயமுமில்லை. 

விமல் வீரவன்ஸ அவர்களின் போராட்டம் வேலிக்குள் நின்று குரைத்த கதையாகவே போய்விட்டது. அன்று போலவே இன்றும் இவர்கள் பிரிட்டன் தூதருக்கு எதிராகச் சீறி விழுந்து கொண்டிருக்கப் பாதுகாப்புச் செயலர் பிரிட்டன் தூதரைச் சமாதானப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதாவது வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும்படி தமிழ் மக்கள் கோரவில்லை எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே கேட்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி இராணுவ முகாமாக இருப்பதால் தமிழ் மக்களுக்கு பொருளாதார நன்மைகள் உண்டு எனவும் கூறியுள்ளார்.

இது உண்மைக்குப் புறம்பானது என்ற போதிலும் பிரிட்டன் தூதுவரை திருப்திப்படுத்தும் நோக்கம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.அதே வேளையில் இராணுவ பேச்சாளரோ 2007 இல் வடக்கில் 50000 படையினர் இருந்ததாகவும், 2010இல் 35000 பேர் இருந்ததாகவும், தற்சமயம் 15000 பேர் இருப்பதாகவும் பாதுகாப்பு நிலைமைகளின் அடிப்படையில் மேலும் குறைக் கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அடிப்படையில் இந்த அதிதீவிர தேசபக்தர்கள் எஜமானர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் வேலிக்குள் நின்று குரைத்துச் சிங்கள மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பது தான் உண்மை.

நன்றி - உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment