தமக்குத் தாமே தலையில் மண் அள்ளிப் போடும் தமிழ்த் "தலைமைகள்"


அண்மையில் மட்டக்களப்பில் நடந்த தமிழரசு கட்சியின் மாநாடு- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு வாதப்பிரதி வாதங்களைத் தோற்றுவித்துள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரை சிங்களத் தேசியவாதிகளால் அச்சத்துக்குரியதொன்றாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதம் பேசுவதாகவும், அவர்கள் இன்னமும் ஈழக்கோரிக்கையைக் கைவிடவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்னொரு பக்கத்தில் தம்மை யதார்த்தவாதிகளாக காட்டிக் கொள்ள முற்படுவோரும், இது சர்வதேச ஆதரவை இழக்கச் செய்து விடும் என்று பயங்காட்ட முற்படுகின்றனர். 

இந்தப் பத்தியின் நோக்கம் இரா.சம்பந்தனின் உரையின் மீதான நியாயத்தை ஆராய்வதல்ல. ஆனாலும் இந்தக் கட்டத்தில் சுட்டிக்காட்ட வேண்டியதொரு விடயமாக இருப்பதால், இதனை இங்கு கூறிக் கொள்வது பொருத்தமாக இருக்கும். 

இரா.சம்பந்தனோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இன்னமும் பிரிவினைவாத நிலைப்பாட்டிலேயே இருந்திருந்தால், அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வைத் தேடி அரசாங்கத்துடன் பேச்சுக்கு சென்றிருக்கமாட்டார்கள். அதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினையை முன்னிலைப்படுத்தி எதையுமே சாதிக்க முடியாது. புலிகளின் பிரிவினைவாதத்துக்கு ஆயுத பலம் துணையாக இருந்தது. இரா.சம்பந்தனிடம் அந்தப் பலம் கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால், புலிகளுக்கு ஆதரவாக நின்ற புலம்பெயர் தமிழர்களின் முழுமையான ஆதரவு கூட அவருக்கு இல்லை. அதுபோலவே பிரிவினைக்கு சர்வதேச ஆதரவு கிடைக்காது என்பதும் அவருக்குத் தெரியாத ஒன்றல்ல. பிரிவினைவாதத்தை முன்னிலைப்படுத்தி ஒன்றையுமே சாதிக்க முடியாத நிலையில், இரா.சம்பந்தன் மீதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் பிரிவினைவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது ஆச்சரியம் தான். 

பிரிவினைவாதம் பேசுகிறார்கள் என்ற பெயரில், தமிழரின் உரிமைக் கோரிக்கைகளை அடக்கும் முயற்சிகளே இப்போது நடக்கின்றன. சிங்களத் தேசியவாதிகள் மட்டுமன்றி, இப்படியொரு பூச்சாண்டியை தமிழர்கள் சிலரும் காட்ட முனைகின்றனர். இலங்கை அரசுடன் பேச்சுக்கள் மூலம் நியாயமானதொரு தீர்வுக்கு வரத் தயாரில்லை என்று இரா.சம்பந்தன் எந்தவொரு இடத்திலும் தனது உரையில் கூறவில்லை. அப்படியிருக்கும் போது, இதனைப் பிரிவினைவாதத்தைத் தூண்டும் உரையென்று குற்றம்சாட்டுவதும், சர்வதேச ஆதரவை இழக்கச் செய்யப் போகிறது என்று பூச்சாண்டி காட்டுவதும் பொருத்தமற்றது. 

இனி, பிரதான விவகாரத்துக்கு வருவோம். 

இரா. சம்பந்தனின் உரையில் தமிழரசுக் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும், தமிழரசுக் கட்சி தனியாக மாநாட்டை நடத்தியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கடும் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது. 

தமிழரசுக் கட்சியை, இரா.சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றோர் முன்னிலைப்படுத்தி வருவதாக சிலர் உள்ளிட்டோர் அடிக்கடி குற்றம் சுமத்துவதும் பின்னர் அடங்கிப் போவதும் வழக்கமானது தான். சில பிறமொழி ஊடகங்கள் இதனை ஊதிப் பெருக்க வைக்க வைத்து பிரச்சினையைக் கிளறிவிட முனைகின்றன. தமிழரசுக் கட்சியின் மாநாடு முடிந்ததும் அதுபற்றி தனது அதிருப்தியை சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளிப்படுத்தினார். ஆனால், இரா.சம்பந்தன் அதை 'சீரியசாகவே' எடுத்துக் கொள்ளவில்லை. தமது கட்சி ஜனநாயகக் கட்சி என்பதால் யாரும் தமது கருத்தை சொல்லும் உரிமை உள்ளதாக அவர் ஒரு போடு போட, அந்த விவகாரம் அத்தோடு அடங்கிப் போனது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமது கட்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். டெலொ போன்ற கட்சிகளைச் சேர்ந்தோர் கவலைப்படுவது உண்மையே.இப்படியே, போனால் தமது கட்சியும் அதன் அடையாளங்களும் இல்லாமல் போய் விடும் என்ற பயம் அவர்களுக்கு உள்ளது. இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமது பிடியை உறுதியாகப் பேணிக்கொள்ள அவர்கள் முனைகிறார்கள். தமிழரசுக் கட்சி தனியாகத் தலையெடுப்பதை அவர்கள் விரும்பாததற்கு இதுவே காரணம். 

ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் சித்தார்த்தனின் புளொட்டும்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குடிபுகுந்து விட்டன. இவர்களுக்கும் இதே வருத்தம் இருக்கவே செய்கிறது. ஆனால், இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்ததும் கூட, வேறு வழியின்றித் தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தாலும், தமிழரசுக் கட்சி மட்டும் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் தன்னைப் பலப்படுத்திக் கொள்வதிலேயே உன்னிப்பாக இருக்கிறது. இது ஏனைய கட்சிகள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதை வைத்துக் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையப் போகிறது என்று செய்தி வெளியிட்டு சில சிங்கள, ஆங்கில ஊடகங்கள் திருப்தி கொள்கின்றன. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்காகச் செயற்படாது போனால், மாற்றுத் தலைமையை மக்கள் தெரிவு செய்ய நேரிடும் ஒருதரப்பு தமிழ் ஊடகங்களும் எச்சரிக்கின்றன. ஆக மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து விட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும், எங்கே அது உடைந்து சிதறி விடுமோ என்று கலங்குவோரும் தான் அதிகம். ஆனால் என்ன நடந்தாலும் அதைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கவனத்தில் கொள்வதாக இல்லை. அதற்குக் காரணம் இத்தகைய உடைப்பு முயற்சிகள் பெரிதாக வெற்றிபெறாது என்ற அசட்டு நம்பிக்கை தான். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகையதொரு தவிர்க்க முடியாத கட்டத்தில் உருவானதோ- அதேபோன்று இனிமேல் ஒன்றிணைந்து இருப்பதும் தவிர்க்க முடியாததே. இன்றைய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எந்தவொரு கட்சியாலும், தனித்து நின்று தேர்தல்களில் போட்டியிடவோ வெற்றி பெறவோ முடியாது. வடக்கில், மாற்றுத் தலைமைக்கான போட்டியில் உள்ள ஈபிடிபியுடன் வலுவாக மோத வேண்டுமானால்- அரசாங்கச் செல்வாக்குடன் உள்ள அதனை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டுமானால் இந்தக் கூட்டமைப்பு அவசியம். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் உள்ள சிறியளவிலான ஆதரவு, நாடாளுமன்ற ஆசனங்களை தனித்துக் கைப்பற்றும் அளவுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான். ரெலோவுக்கு வவுனியா, மன்னார் தவிர வேறு இடங்களில் அதிக செல்வாக்கு கிடையாது. யாழ்ப்பாணத்தில் இருந்த சொற்ப செல்வாக்கும் கூட சிவாஜிலிங்கத்தின் செயற்பாடுகளால் பறிபோய் விட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வாக்கு வங்கியெல்லாம், ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து எப்போது தனித்துப் போட்டியிட்டாரோ அத்தோடு உடைந்து போய்விட்டது. புளொட் முன்னர் வவுனியா, மன்னாரில் பலமாக இருந்தாலும் இப்போது அங்கெல்லாம் அதன் செல்வாக்கு உடைந்து விட்டது. தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலையில் பலமாக இருந்தாலும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் அது பலவீனமாகவே உள்ளது. 

ஆக மொத்தத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எதனாலும் தனித்து நின்று அரசியல் நடத்த முடியாது. அப்படி நடத்த முனைவது ,தமக்குத் தாமே தலையில் மண் அள்ளிப் போடுவதற்குச் சமமானது. அத்தகைய விசப்பரீட்சையில் எந்தக் கட்சியும் இறங்கத் துணியாது.

2010 நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. முன்னர் யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிட்டு ஆசனத்தை வென்ற இந்தக் கட்சியால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மோதி ஒரு ஆசனத்தைக் கூட வெல்ல முடியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணியை உருவாக்கப் போவதாகக் கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கிய போதும், எந்த மாற்றத்தையும் அவர்களால் செய்ய முடியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றுத் தலைமையாக ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் இதுவரை வெற்றிபெறவும் இல்லை. இனிமேலும் பெறுமா என்பது சந்தேகம் தான். குறுகிய காலத்தில் மாற்றுத் தலைமையை உருவாக்கும் முயற்சிகளோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிதறி விடும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவோ இப்போதைக்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் எந்தளவுக்கு காலத்தின் கட்டாயமாக இருந்ததோ- அதுபோலவே அதிலுள்ள கட்சிகள் ஒன்றாகச் செயற்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயம் தான். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த விலகிச் செல்வதால் எந்தக் கட்சியாலும் அரசியல் ஆதாயங்களைப் பெற முடியாது. அந்தத் துணிச்சலில் தான், தமிழரசுக் கட்சி தனித்துவமாக நடைபோடப் பார்க்கிறது. கூட்டமைப்பை தனியான அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கும், ஒரே குரலாக ஒலிக்கச் செய்வதற்கும் முயற்சிகள் நடந்தாலும் அவையெல்லாம் இழுபறியில் தான் இருக்கின்றன. இருந்தாலும் , அதிலுள்ள கட்சிகள் விட்டுச் செல்ல முடியாத நிலையில் இருப்பது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலமும் - பலவீனமுமாக இருக்கிறது.

கட்டுரையாளர் கே. சஞ்சயன் இன்போ தமிழ் குழுமம்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment