இந்தியா கடைப்பிடித்துவந்த மௌன இராஜதந்திரம் இனியாவது கலையுமா?


குவயட் டிப்லோமசி என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் மௌன இராஜதந்திரத்தை இராணுவ வலிமை குறைந்த நாடுகள் மற்றும் அனைத்துத் தரப்பினருடனும் நல்லுறவரை பேண விரும்பும் நாடுகள் பரவலாக கடைப்பிடித்தே வருகின்றன. இராணுவ மற்றும் பொருளாதார போட்டியில் ஈடுபடும் நாடுகள் தமது குரலை அழுத்தமாக ஒலிக்கச் செய்வதன் மூலமாகவே தமது வளர்ச்சியைப் பெருக்கலாம் என்கிறதனால் மௌன இராஜதந்திரத்தை பேணுவதில்லை. சிறிலங்கா விடயத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக மௌன இராஜதந்திரத்தையே இந்தியா கடைப்பிடித்து வருகிறது. இக்கொள்கை இனியாவது மாறுமா என்பதே தற்போது எழும் கேள்வி.
தமிழ்நாட்டின் அழுத்தங்கள் அதிகரித்த காரணத்தினால் மறைமுகமாக சிறிலங்கா அரசுக்கு பலவழிகளிலும் உதவிய இந்திய நடுவன் அரசு, தற்போது பல கசப்பான சம்பவங்களை அனுபவித்துக்கொண்டுள்ளது. சிறிலங்கா அரசுக்கு இந்திய நடுவன் அரசு உதவியாக இருக்கிறது என்கிற மாயை இருந்தாலும், சீனாவின் ஆதிக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்துள்ளமை இந்திய அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய புத்திஜீவிகளினாலும் ஆச்சரியத்துடன் பேசப்படும் தினசரி செய்தியாகியுள்ளது.
சமீபத்தில் தினமணிப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையொன்று இந்திய மக்களின் தற்போதைய கண்ணோட்டம் எப்படியாக உள்ளது என்பதனை எடுத்துக்காட்டுகிறது.சிவசங்கர் மேனன் மற்றும் நாராயணன் போன்ற மலையாளிகள் சிங்களத்துக்கு துணையாக நின்று பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொல்ல பாதை அமைத்துக் கொடுத்தவர்கள் இன்று தமது நாடியில் கைவைத்து யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தினமணியில் வந்த கட்டுரையின் சாராம்ப்சம் கூறும் செய்தியென்னவென்றால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவுக்கு எல்லா வகையிலும் இந்தியா உதவிகளைச் செய்திருந்தாலும் சமீபகாலமாக இந்திய அரசையே அலட்சியப்படுத்துகிறது சிங்கள அரசு என்கிற வாதத்தை முன்வைத்துள்ளது.
வாக்குறுதிகளை மீறுவதே சிங்களத்துக்கு கைவந்த கலை
விடுதலைப்புலிகளை தோற்கடிக்க வேண்டுமென்கிற காரணத்தினால் பல்வேறு வாக்குறுதிகளை உலக நாடுகளுக்கு வழங்கி விடுதலைப்புலிகளை சிங்களம் தோற்கடித்தது.முன்னர் தமிழ்த் தலைமைகளுக்கு அளித்த வாக்குறுதிகளை கிழித்துப்போட்ட சிங்களம், தற்போது உலக நாடுகளுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் மீறும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறது.ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முன்வரும் நாடுகளுக்கு திருகோணமலையையே தருவதாக கூறி அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவைப் பெற்ற செய்தி வரலாறு. 
இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யவும்,கொடுத்த வாக்குறுதிகளைக் காலில் போட்டு மிதிக்கவும் தயாராகிவருகிறது சிங்களம் என்று கட்டுரையாளர் தினமணியில் எழுதியுள்ளார். சீனாவுடன் சிங்கள அரசு தற்போது கொஞ்சிக் குலாவத் தொடங்கிவிட்டதாக தினமணியில் வெளிவந்த கட்டுரை தெரிவித்துள்ளது. சீனாவுக்கும், சிறிலங்காவுக்கும் உள்ள தொடர்பு சில வருடங்களாக இருக்கவில்லை. பல காலங்களாகவே இருந்துவந்துள்ளது. இந்தியாவைச் சீண்டி சில முரண்பாடுகளை உண்டுபண்ணவே சீனாவைப் பாவிக்கிறது சிங்களம். இது இந்திய நடுவன் அரசுக்கு முன்பே தெரிந்திருந்தும் விடுதலைப்புலிகளை ஓரங்கட்ட சீனாவின் உதவியுடன் செய்வதே இந்தியாவின் விருப்பமாக இருந்தது.
இந்தியா சிறிலங்காவுக்கு நேரடியாக எவ்வித உதவிகளையும் செய்தாலும் தமிழகத்தின் எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டிவரும் என்று இந்திய அரசுக்கு நன்கே தெரியும். தனது எதிரி நாடுகள் மூலமாக கச்சிதமாக விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதையே இந்திய அரசு விரும்பியது. இதற்காகவே மௌன இராஜதந்திரத்தை இந்திய அரசு பேணியது. இன்று சூழ்நிலை தலைகீழாக மாறிவிட்டது. ஒரு எதிரியை அழிக்க பரம எதிரியை உள்ளே வர அனுமதி கொடுத்துவிட்டு இப்போது பரம எதிரியை தோற்கடிக்க சிங்கள அரசுடன் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது இந்திய நடுவன் அரசு.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இந்திய அரசு, சிறிலங்காவின் போக்கில் இத்தனை மாறுதல்கள் ஏனென்று நேரிலேயே விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக தினமணியின் கட்டுரை விபரித்துள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை இதற்காகவே ஜூன் 29-ஆம் தேதி கொழும்புக்கு அனுப்பி வைக்கிறது இந்திய மத்திய அரசு. இந்தத் தடவையாவது சிங்கள அரசுக்கு நல்லதொரு செய்தியை இந்தியா கொடுக்குமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இனியாவது சிங்கள அரசு வாக்குறுதிகளை கொடுப்பதென்பது மற்றவர்களை ஈமாற்றுவதற்கே என்பதனை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா என்பதனை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
தமிழீழத் தலைநகரின் மகிமையோ மகிமை
இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மிகப்பெரிய பெற்றோலியப் பண்டங்கள் சேமிப்புக்கான தொட்டிகளையும் எரிபொருட்களை விநியோகிக்கும் கட்டமைப்பையும் தமிழீழத் தலைநகரான திருகோணமலையில் பேச்சளவிலேயே பேணிவருகிறது. இந்த எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளை நவீனப்படுத்தவும் வலுப்படுத்தவும் இதுவரை சுமார் 66 கோடி ரூபாயை இந்தியா செலவிட்டுள்ளது. மேலும் 93.5 கோடி ரூபாய் செலவிட உத்தேசித்திருக்கிறது என்று இந்தியத் தரப்பினர் கூறுகிறனர்.
நூற்றுக்கும் அதிகமான சேமிப்புத் தொட்டிகள் இன்றோ நேற்றோ கட்டப்பட்டவை அல்ல. இரண்டாம் உலகப் போரின்போது இத் தொட்டிகளிலிருந்துதான் பிரித்தானிய மற்றும் அதனுடைய கூட்டு நாடுகளின் போர்க் கப்பல்கல்களுக்கும் மற்றும் வணிகக் கப்பல்களுக்கும் எரிபொருட்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாகவேதான் ஜப்பானியப் படைகள் இக் கிடங்குகள் மீது குண்டுகளை வீசினார்கள்.
ராஜீவ் காந்தி சிறிலங்காவுடன் ஒப்பந்தம் செய்து1987-ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தை தமிழீழத்துக்கு அனுப்ப காரணமாக இருந்ததும் திருகோணமலையும்,இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதன் அமைவிடமுமே. இந்தியாவின் அனுமதியின்றி திருகோணமலையை யாருடைய பாவனைக்கும் அனுமதிக்கக்கூடாது என்பதனை ஆணித்தரமாக இந்திய-சிறிலங்க ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. இதன் மூலமாக திருகோணமலையின் பெறுமதி என்னவென்பதனை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.
சேமிப்புத் தொட்டிகள் உள்ள நிலம் சிறிலங்காவின் பெற்றோலியத்துறைக்குச் சொந்தமானது அல்ல, திருகோணமலை மாவட்ட முகமைக்குச் சொந்தமானது என்பதால் எண்ணெய் கொள்கலன்களையே அரசுடைமையாக்குவது குறித்து சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்று “சிலோன் டுடேஎன்ற பத்திரிகை ஜூன் 9-இல் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்திக்கு ஆதாரமாக அரசின் உயர்நிலை வட்டாரங்களை அதுமேற்கோள் காட்டியிருந்தது. அது சாதாரணமான செய்தியல்ல. இந்திய அரசை ஆழம் பார்க்கக் கசியவிடப்பட்ட செய்தி என்று புரிகிறது என்று தினமணியில் வெளிவந்த கட்டுரை கூறுகிறது. சிறிலங்காவின் எந்தவொரு வளர்ச்சித் திட்டமாக இருந்தாலும் அது சீனாவுக்கே தரப்படுகிறதாக இந்தியத் தரப்பினர் தற்போது கதற ஆரம்பித்திருக்கின்றனர்.
தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான நிலை முன் எப்போதும் இல்லாதவகையில் வீறுபெற்றுள்ளது. கலைஞர் தலைமையில் ஆகஸ்ட் மாதத்தில் ரெசோ மாநாடு நடைபெற உள்ளது. உலகின் முன்னணி மனித உரிமையாளர்கள் உட்பட இந்தியாவின் சிரேஸ்ட தலைவர்கள் பங்குபற்றவிருக்கும் இம் மாநாடு தமிழீழ தனியரசு உருவாக வழி அமைத்துக்கொடுக்கும் என்று கூறுகிறார்கள் கலைஞர்,வீரமணி, திருமாவளவன், சுப வீரபாண்டியன் போன்றவர்கள். இது ஒருபுறம் இருக்க சிங்கள அமைச்சரின் சமீபத்தைய பேச்சு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே கிளம்பியௌச் செய்துள்ளது. அடுத்த வாரம் இது குறித்து விபரமாக அலசலாம். இந்திய அரசு இதுவரை காலமும் கடைப்பிடித்துவந்த மௌன இராஜதந்திரம் இனியாவது கலையுமா என்கிற வினாவுக்கு விடைதேட அடுத்த வாரம் வரை காத்திருப்போமாக.
அனலை நிதிஸ் ச. குமாரன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment