பிறந்த மண்ணை கேட்பது தப்பா...?


கலகமடக்கும் பொலிஸாரும் தயாராகவே இருந்தனர். இது போதாதென்று கண்ணீர்ப் புகைக் குண்டுகளை மக்கள் மீது ஏவத் தயாராகவும் இருந்தனர். எனினும் ஆர்பாட்டத்தைத் தடுக்கும் அவர்களது முயற்சி தோல்வியில்தான் முடிந்தது.

 வந்தவன் ஆள நினைக்கிறான் வாழ்ந்தவனை ஏறி மிதிக்கிறான்

"" எங்கட நிலத்தில எங்களை இருக்க விடுங்கோ. எங்கட பரம்பரை ஆண்ட நிலத்தில இருக்க விடுங்கோ எண்டுதானே கேக்கிறம். அது தப்பா? இண்டைக்கு நாங்கள் வேற இடத்தில இருந்து கொண்டு விடுகிற கண்ணீர் கொஞ்ச நஞ்சமில்ல. ஒரு வருசமா இரண்டு வருசமா இருபத்தி மூன்று வருசம் வெளியில இருக்கிறம்.

எங்கட பிள்ளைகளுக்கு எங்கட நிலத்தை தெரியாது. நாங்கள் உயிரோட இருக்கேக்கை அவங்களுக்கு அந்த நிலத்தை காட்ட வேணும். அடுத்தவேயின்ர காணியளுக்குள்ள இருந்து கொண்டு காலமெல்லாம் சீரழியேலாது. நாங்கள் அவ்வளவு துன்பத்தை அனுபவிச்சிட்டம். இனியாவது எங்கள இருக்க விடுங்கோ எண்டு கேட்டுத்தான் போனாங்கள்.

அதுக்கு இந்த அநியாயத்தை செஞ்சிட்டுப் போறாங்கள். தலையில முழுகிற மாதிரி ஊத்துறாங்கள் ஒயிலால. அண்டைக்கு ஊத்துப்பட்ட ஒயிலால வேட்டி, சீலை இனி ஒண்டுக்கும் உதவாது.''

வலி. வடக்கு மக்கள் நடத்திய வாழ்வுரிமைப் போராட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய வேளை கல்லெறி வாங்கி கழிவு ஒயிலால் ஊத்தப்பட்ட பின்னர் இவ்வாறு தனது ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார் ஒரு தாய்.

மயிலிட்டி, காங்கேசன்துறை, பலாலி போன்ற விளை நிலங்களில் வசித்த மக்கள் 1989 ஆம் ஆண்டு போர் காரணமாக இடம்பெயர்ந்திருந்தனர். 23 ஆண்டுகளை விழுங்கி விட்டது அவர்களது இடப்பெயர்வு. இன்னமும் சொந்த நிலத்துக்குள் செல்லாது அந்தரிக்கும் இந்த மக்களின் காணிகளை நிரந்தரமாக விழுங்கிவிடத் துடிக்கின்றனர் படையினர்.

இடம்பெயர்ந்து பருத்தித்துறையில் வசித்து வரும் இந்த மக்கள் இன்னொருவர் காணிகளில் இருந்து கொண்டு தினம் தினம் துன்பங்களைச் சுமந்து கொண்டிருக்கின்றனர்.

கடல்தொழிலை பிரதானமாகக் கொண்ட மக்கள், கடலில் இறங்குவதற்கே இடமில்லாமல் அவஸ்தைப்படுகின்றனர். இலங்கை அரசு வழங்கி வந்த அற்ப சொற்ப நிவாரணங்களும் நிறுத்தப்பட்ட நிலையில் அந்த மக்களின் வாழ்வு கேள்விக் குறியாகியுள்ளது.

தமது சொந்த நிலத்தை ஆள முடியாமல் தவிக்கும் நேரத்தில், இராணுவம் தான் ஆக்கிரமித்துள்ள நிலப்பரப்பை அப்படியே விழுங்குவதற்கு துடிக்கின்றது.

இந்த நிலையில்தான் வலி. வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் வலி. வடக்கு மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வலி. வடக்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து 23 வருடங்களாக மக்கள் பல்வேறு திக்குகளில் வாழ்ந்து வருகின்றனர். வலி. வடக்குப் பிரதேசத்தில் இன்னமும் 23 கிராம சேவகர் பிரிவுகளில் மக்களை மீளக் குடியமர்த்தப்பட வேண்டியுள்ளது. இந்தப் பகுதிகளில் மீளக்குடியமர்வுக்காக 26 ஆயிரம் மக்கள் வரையில் விண்ணப்பித்துள்ளனர். அத்துடன் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களும் இந்த ஆர்பாட்டப் பேரணியில் பங்கெடுக்கத் தயாராகி இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு முதல் நாள் நலன்புரி நிலையங்களுக்குச் சென்ற ஈ.பி.டி.பியின் வலி. வடக்குப் பிரதேசப் பொறுப்பாளர் "ஆர்ப்பாட்டத்துக்குச் சென்றால் என்ன விளைவு வரும் எண்டு தெரியும் தானே? '' என்று மிரட்டியிருந்தார். 

அவர்கள் எதுவும் செய்வார்கள் என்பதால் நலன்புரி நிலைய மக்கள், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மறுத்தனர். "எங்களுக்கும் எங்கட வீட்டுக்குப் போக விருப்பம்தான். ஆனா இவங்கள் வந்து இப்பிடி வெருட்டிப் போட்டாங்கள். வந்தா ஏதாவது செய்து போடுவாங்கள்'' என்று வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதிலும் பருத்தித்துறையில் வாழ்ந்து வரும் வலி. வடக்கு மக்கள் தற்துணிவோடு ஆர்ப்பாட்டத்துக்கு வந்தனர். இராணுவ அடக்கு முறைக்கு உட்பட்டிருந்தயாழ். மண்ணில் நீண்ட காலத்துக்குப் பின்னர் தமிழர் தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். 

தெல்லிப்பழை துர்க்கை அம்மனின் ஆசியுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பொலிஸார், ஆர்ப்பாட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர். மக்களை உளரீதியாக தாக்கும் விதமாக அதிகாலையிலிருந்தே ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதி முழுவதும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் கலகமடக்கும் பொலிஸாரும் தயாராகவே இருந்தனர்.

இது போதாதென்று கண்ணீர்ப் புகைக் குண்டுகளை மக்கள் மீது ஏவத் தயாராகவும் இருந்தனர். எனினும் ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கும் அவர்களது முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. 

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா விடாப்பிடியாக நின்று மனுவை, தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குச் சென்று கையளிக்கச் செய்தார். வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தனிடம் இந்த மனுக் கையளிக்கப்பட்டது. 

அதன் பின்னர் மக்கள் மத்தியில் அமைதியான முறையில் நாடாளுமன்ற உறுப்பினரின் உரை இடம்பெற்றது. ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.கலவரத்தைக் கட்டுப்படுத்த வந்த பொலிஸார் அசடு வழிந்து கொண்டு திரும்பிச் சென்றனர். ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறாமல் கட்டுப்படுத்தவே தாம் அங்கு வந்ததாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர், நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார்.

எல்லாம் முடிந்த பின்னர், இடம்பெயர்ந்து தங்கியுள்ள இருப்பிடங்களுக்கு திரும்பிக் கொண்டிருந்த மக்கள் மீது தமது கையாலாகத் தனத்தை "இனந்தெரியாதோர் '' காட்டினர். தமிழனின் எந்தவொரு போராட்டமும் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் சிங்கள அரசுக்கு சப்பாணி போடும் கூட்டம் தனது கடமையைச் செய்தது என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கு இடமில்லை.

யாழ்ப்பாணத்தில் தற்போது புதிதாக முளைக்கத் தொடங்கியிருக்கும் கழிவு ஒயில் கலாசாரத்தின் விண்ணர்கள் தங்களது வீரதீர செயல்களை அப்பாவி மக்கள் மீது காட்டினர். ஆர்ப்பாட்டம் முடிந்து திரும்பிய மக்கள் சுன்னாகம் சந்தியூடாக புத்தூர் வீதி வழியாக பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறித்த பஸ் பின் பக்க கண்ணாடியை கல்லால் எறிந்து உடைத்தனர்.

 தீடிரென கேட்ட சத்தத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த அதிர்ச்சியி லிருந்து மீள்வதற்கிடையில் ஜன்னல் கண்ணாடிகளுக்கு ஊடாக கழிவு ஒயிலை பஸ்ஸினுள் ஊற்றினர். பஸ் நிறுத்தப்படாமல் மோட்டார் சைக்கிள்களில் சென்ற வர்களை கலைக்கத் தொடங்க அவர்களது வேகங்கள் அதிகமாகி "எஸ்கேப்' ஆயினர். 

அந்த மக்கள் செய்த பிழைதான் என்ன ? அவர்களுடைய மண்ணை அவர்களது பரம்பரை வாழ்ந்த மண்ணில் அவர்கள் வாழக் கேட்பது பிழையா ? "அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமி இந்தப் பூமிதானடா, அப்புகாமியே ஆள இங்குமே விட்டதாரடா? '' எங்கோ கேட்ட பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றது

நன்றி - உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment