சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய முடியாது என்று பிடிவாதம் பிடிக்க முனைந்தால் அது சர்வதேச சமூகத்தின்............?


வட மாகாண சபைக்கான தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற அழுத்தம் அரசாங்கத்துக்கு அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளால் இந்த அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ இல்லையோ - சர்வதேச அளவில் இது இலங்கைக்குத் தலைவலி கொடுக்கின்ற விவகாரமாக மாறியுள்ளது. வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு அரசாங்கம் பல்வேறு பதில்களைக் கொடுத்தது. அந்தக் காலஎல்லைகள் எல்லாம் இப்போது முடிந்து விட்டன. இப்போதைய நிலையில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் சரியானதொரு காலஎல்லையைச் சொல்லவே தயாராக இல்லை. 

விடுதலைப் புலிகளை கிழக்கில் இருந்து அகற்றியவுடன் அங்கு அவசர அவசரமாக மாகாணசபைத் தேர்தலை நடத்தியது அரசாங்கம். போரினால் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, இப்போது ஒரு தேர்தல் தேவைதானா என்று எல்லோரும் கேள்வி எழுப்பிய போது, அதையெல்லாம் அரசாங்கம் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு தேர்தல் அவசியம் என்று கூறியது அரசாங்கம். ஆனால், அதே ஜனநாயகத்தை இன்னமும் வடக்கில் உருவாக்க அரசாங்கம் முனையவில்லை. வடக்கில் மட்டுமன்றி, நாட்டில் ஒட்டுமொத்தமாகவே போர் முடிந்து மூன்றாண்டுகள் முடிந்து விட்டன. கிழக்கில் இருந்து புலிகளைத் துரத்தியதும் ஒரு சில மாதங்கள் கூடக் காத்திருக்காமல் தேர்தலை நடத்திய அரசாங்கத்தினால், வடக்கில் மூன்றாண்டுகள் கழித்தும் தேர்தலை நடத்த முடியவில்லை. நொண்டிக் குதிரைக்கு சறுக்கிய சாட்டு என்பது போல, காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப ஒவ்வொரு காரணங்களைச் சொல்லி தேர்தலை நடத்த தயங்குகிறது அரசாங்கம். ஆண்டு இறுதி, அடுத்த ஆண்டுத் தொடக்கம் என்று அவ்வப்போது கூறப்பட்ட- வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. 

போர் முடிவுக்கு வந்ததும், சர்வதேச சமூகம் வலியுறுத்திய முக்கியமான விடயங்களில் ஒன்று வடக்கு மாகாணசபைத் தேர்தல். 

வடக்கில் தேர்தலை நடத்தி மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுத்தால் தான் ஜனநாயகத்தை உறுதி செய்ய முடியும், மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியும் என்று சர்வதேச சமூகம் பலமுறை வலியுறுத்தி விட்டது. அண்மையில் வொஷிங்டன் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனும் இதையே வலியுறுத்தியிருந்தார். அண்மையில் இலங்கை வந்திருந்த பிரிட்டனில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் இராஜதந்திரிகள் குழுவும் இதையே தான் வலியுறுத்தியது. ஆனால் யாருடைய பேச்சையும் அரசாங்கம் கேட்பதாக இல்லை. இப்போது முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்ட பின்னர் தேர்தலை நடத்தலாம் என்று சொல்கிறது. உண்மையில் மீள்குடியமர்வு நிறைவடைந்த பின்னர் தேர்தல் என்றால் அதை இப்போதைக்கு நடத்தவே முடியாது. ஏனென்றால் வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினையை- மீள்குடியமர்வை அரசாங்கத்தினால் குறுகிய காலத்தில் தீர்க்க முடியாது. மீளக்குடியேற்றப்பட வேண்டிய மக்கள், அதாவது இடம்பெயர்ந்த மக்கள் என்று அரசாங்கம் கொடுக்கின்ற புள்ளிவிபரங்கள் எல்லாம் தவறானவை. 

யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களால் - 20 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசின் புள்ளிவிபரங்களுக்குள் சேர்க்கப்படவில்லை. வடக்கில் இருந்து 1990இல் இடம்பெயர்ந்த முஸ்லிம்களும் இந்தக் கணக்கில் இல்லை. வன்னியில் இறுதிப்போரில் இடம்பெயர்ந்தவர்களை மட்டும் தான் அரசாங்கம் இடம்பெயர்ந்தவர்களாக கணக்கிட்டுள்ளது. இந்தவகையில், தற்போது மீளக்குடியேற்றப்பட வேண்டியவர்கள் வெறும் 6022 பேர் தான் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்தவாரம் அரசாங்கம் கூறியுள்ளது. இவர்களை மீளக்குடியேற்றிய பின்னர் தான் தேர்தல் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குத் தான் இந்த நிபந்தனை. ஜனாதிபதித் தேர்தலுக்கோ, நாடாளுமன்றத் தேர்தலுக்கோ இது பொருந்தாது. அவையெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நடத்தப்பட்டன. வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு கூறப்படும் காலக்கெடுக்கள் போலவே மீள்குடியமர்வு நிறைவடைவதற்கும் ஒவ்வொரு காலஎல்லை கூறப்பட்டது. அண்மையில் கூட, ஜுன் மாதத்துக்குள் மீள்குடியமர்வு நிறைவடையும் என்று கூறப்பட்டது- அதுவும் சாத்தியமாகும் அறிகுறிகள் இல்லை. எப்படியோ இந்த ஆண்டு இறுதிக்குள் வடக்கில் தேர்தலை நடத்தும் உத்தேசம் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. 

அரசாங்கத்தின் இப்போதைய கவனம் எல்லாம் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் தான் உள்ளது.  இவை எதுவுமே குறைந்தபட்ச பதவிக்காலத்தைக் கூட பூர்த்தி செய்யவில்லை. அதற்குள் அங்கு தேர்தலை நடத்த அரசாங்கம் அவசரப்படுகிறது. ஆனால் வடக்கிலோ நிலைமை வேறு. அங்கு மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுக்க அரசாங்கம் தயாராக இல்லை. இதனால் தான் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வருகிறது. எவ்வாறாயினும் அரசாங்கத்தினால் இன்னும் நீண்டகாலத்துக்கு வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இப்போது மீள்குடியமர்வு பற்றிய அழுத்தங்களைக் குறைத்துக் கொண்டுள்ள சர்வதேச சமூகம், வடக்கு மாகாணசபைத் தேர்தலைக் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளது. அதைவிட போர் முடிந்த சூழலில் முழுமையான ஜனநாயகம் உறுதி செய்யப்படுவதையே வெளிநாடுகள் எதிர்பார்க்கின்றன. வடக்கு தற்போது அரசின் நேரடி நிர்வாகத்தில் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இது வடக்கில் பெரும்பான்மையினராக உள்ள தமிழர்களை வெறுப்பேற்றும் என்பதை வெளிநாடுகள் உணர்ந்துள்ளன.ஆனால் அதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை. 

அழுகின்ற குழுந்தையை அடித்து அடக்குவது மட்டும் நிரந்தரத் தீர்வைத் தருவதாக இருக்க முடியாது. அதன் கையில் இன்னொரு பொருளைக் கொடுத்து திருப்திப்படுத்தினால் தான் மீண்டும் அழாது. அதுபோலத் தான் தனிநாடு கோரிய மக்களை மீண்டும் முழுமையான ஜனநாயக வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்றால்- அவர்கள் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றால், அதற்கு மாற்றான ஒன்றை அவர்களிடம் வழங்க வேண்டும். இது தான் மேற்குலகின் கருத்தாக உள்ளது. 

தேர்தல் மூலம் தமக்கான அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை அவர்கள் பெறும் போது அது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று இந்த நாடுகள் கருதுகின்றன. இந்தக் கருத்தில் நியாயம் அதிகம் உள்ளது. இந்த நிலை உருவாக்கப்படாதவரை வடக்கில் உள்ள தமிழர்களால் முழுமையான இயல்புநிலைக்குள் வரமுடியாது. இதையே வெளிநாடுகள் சுட்டிக்காட்டி தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்கின்றன. அதேவேளை, வடக்கில் தேர்தலை நடத்தினால், அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சென்றுவிடமே என்று அச்சம் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், இப்போது வடக்கில் அரசாங்கம் தான் விரும்பியவாறு செய்வது போல செய்ய முடியாது என்று கருதுகிறது. வடக்கில் தேர்தலை நடத்தி ஒரு ஆட்சி நிறுவப்பட்ட பின்னர், அரசினால் தன்னிச்சையாக செயற்பட முடியாது. அதற்கு மாகாண அரசாங்கம் இடமளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதுவும் கூட அரசுக்கு உள்ள ஒரு பிரச்சினையாகவே தெரிகிறது. இதனால் தான் அரசாங்கம் தேர்தலைத் தள்ளிப்போட்டு வருகிறதே தவிர, இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்பு அதற்கு ஒரு பிரச்சினையே இல்லை. 

அரசாங்கம் எந்தக் காரணத்தைக் கூறித் தட்டிக் கழிக்கப் பார்த்தாலும், சர்வதேச சமூகத்தினால், இதன் பின்னால் உள்ள சூட்சுமத்தைப் புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமானதாக இருக்காது. அதனால் தான் இப்பாது வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தும்படி அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. சர்வதேச அழுத்தங்களை அரசு எப்போதும் வெறுப்புடனேயே நோக்குவது வழக்கம். ஆனால், இந்த விடயத்தில், சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய முடியாது என்று பிடிவாதம் பிடிக்க முனைந்தால், அது சர்வதேச சமூகத்தின் கோபத்தை சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறதோ இல்லையோ ஜனநாயகக் கட்டமைப்பின் மீது தமிழர்கள் நம்பிக்கையிழந்து போவதற்கு வழிவகுத்து விடும்.

கட்டுரையாளர் கே.சஞ்சயன் இன்போ தமிழ் குழுமம்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment