இஸ்ரேலிய யூதர்களிடம் உள்ளதும் - ஈழத்தமிழரிடம் இல்லாததும் - III


இஸ்ரேலின் நடவடிக்கைகள் எத்தனையோ இடங்களில் அதி குரூரமானதாக இருந்திருக்கிறது. ஆனால் அனைத்தையும் தமது கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது இந்த கருத்தாதரவு குழுக்களினதும் அங்காங்கே உயர் பதவிகளில் இருக்கும் யூத அதிகாரிகளினதும் செயற்பாடே ஆகும். 

யூத சமூகத்தின் மத்தியிலே இஸ்ரேலின் பாதுகாப்பு அதன் நீண்டகால இருப்பு என்பன குறித்து மிக அவதானமான போக்கு உள்ளது என்பதை கடந்த கட்டுரைகளில் கண்டிருந்தோம். இதிலே சிந்தனைக் குழுக்களின் பங்கு மிக இன்றியமையாதனவாகும். 

இன்று அனைத்துலகமெங்கும் தாம் வாழும் நாடுகளிலே உயர் அரச பதவிகளில் இருந்த யூதர்களும், பொருளாதார நிலையிலே தமக்கென இடம் பிடித்த யூதர்களும், மற்றும் தமது தொழில்துறைகளில் பெயர் பெற்றவர்களும் இணைந்து பல இஸ்ரேலிய சார்பு சிந்தனை குழுக்களை உருவாக்கி உள்ளனர். அல்லது யூதர்கள் அல்லாத சிந்தனை குழுக்களிடையே கணிசமான அளவு செல்வாக்கை செலுத்தி வருகின்றனர். 

இந்த செல்வாக்கின் மூலம் இஸ்ரேல் சம்பந்தமான பொது விவாத மன்றங்கள் மத்தியிலே தமக்கு சாதகமாக அந்த மன்றங்களின் விவாத போக்கை தக்கவைத்து கொள்வது அத்துடன் இஸ்ரேல் சம்பந்தமான கொள்கைகளில் இஸ்ரேலின் நலன்களுக்கு எதிராக அவ்விவாதங்கள் செல்ல விடாது பாதுகாத்து கொள்வது என்பன பிரதான விடயமாக கருதப்படுகிறது. 

மேற்கு நாடுகளை பொறுத்தவரையிலே பொதுசன ஊடகங்கள் பெருமளவில் துறைசார் நிபுணர்களின் கருத்துகளுக்கு முதலிடம் கொடுப்பது பொதுவான விடயமாகும். இஸ்ரேலின் நடவடிக்கைகளை பொறுத்தவரையில்; ஒரு நிகழ்வின் பின்னால் அந்த நிகழ்வு குறித்து இஸ்ரேலிய அரச அதிகாரிகள் அறிக்கைகள் வெளியிடும் வரை பார்த்திருந்து தமது செய்திகளை வெளியிடும் அளவுக்கு அமெரிக்க ஊடகங்கள் பொறுமை உள்ளனவல்ல. 

இதனால் மத்தியகிழக்கு விவகாரங்களில் தேர்ச்சிபெற்ற மேலைத்தேய கல்விமான்கள் மிக முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். அத்துடன் பொதுசன விளம்பர நிறுவனங்கள் தம் வசமிருக்கும் கல்விமான்களை செய்திநிறுவனங்களின் ஊடாக தரமுயர்த்தி காட்டுவதன்மூலம் தமது நிறுவனங்களின் தனித்துவத்தை வெளியுலகுக்கு விளம்பரம் செய்து கொள்ள துடித்து கொண்டிருக்கும் இக்காலத்திலே இஸ்ரேலிய கருத்தாதரவு பிரிவினர் மிக கவனமாக செயலாற்றுகின்றனர். 

சுயலாபங்கள் கருதிய வேகமான செய்திப்பரப்புரைகளின் மத்தியில் கல்விமான்களால் இஸ்ரேலின் பெயருக்கு களங்கம் கற்பிக்க முடியாதவகையில், அவர்களையும்; தமது கைக்குள் வைத்து கொள்ள வேண்டிய தேவையையும் இஸ்ரேலிய கருத்தாதரவு களம் நன்கு அறிந்து கொண்டுள்ளது. 

இஸ்ரேலின் நடவடிக்கைகள் எத்தனையோ இடங்களில் அதி குரூரமானதாக இருந்திருக்கிறது. ஆனால் அனைத்தையும் தமது கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது இந்த கருத்தாதரவு குழுக்களினதும் அங்காங்கே உயர் பதவிகளில் இருக்கும் யூத அதிகாரிகளினதும் செயற்பாடே ஆகும். 

இத்தகைய பல செயற்பாடுகள் தன்னிச்சையாக செவ்வனே நடைபெறுவதற்கு முக்கிய காரணம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தனது இனம் தனது நாடு இந்த இரண்டுமே தம்மால் பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதை நன்கு தெளிவாக ஒவ்வொரு யூத இனத்தவராலும் உணர்ந்திருப்பதேயாகும். 

தமிழர்கள் மத்தியிலே எத்தனையோ ஆயிரம் உயர் அதிகாரிகளும் செல்வந்தர்களும் கல்விமான்களும் அனைத்துலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இவர்களில் பலருக்கு தமிழீழம் குறித்த பார்வையில் பாரிய வேறுபாடுகள் இருப்பது மிக வருந்த தக்க ஒன்றாகும். 

தமிழீழம் என்ற சொல்லை உச்சரித்தால் தம்மை பயங்கரவாதிகளின் நண்பன் என்று கூறிவிடுவார்களோ என்று சிலர் எண்ணத்துணிகின்றனர். சிறிலங்காஅரசும் தமிழீழ ஆதரவு குறித்து பேசுபவர்களுக்கு இன்னமும் பயங்கரவாதிகள் பட்டம் சூட்டுவதிலே மிகவும் கருத்துடன் செயற்பட்டு வருகிறது. 

உலகில் ஏதாவது ஒரு நாட்டில் ஏதோ ஒரு அதிகாரி தமிழீழம் குறித்து கரிசனை கொள்வாராக இருந்தால் அது தமிழீழத்தின் இறையாண்மைக்கான அனைத்துலகசட்ட அங்கீகாரத்திற்கு முதற்படி என்பது சிறிலங்காஅரச அதிகாரிகளின் பார்வையாகும். 

இஸ்ரேலியர்கள் தமது இனத்தின் எண்ணக்கருத்தை வேறு எவரும் உருவாக்கி விட கூடாது என்பதில் மிக கவனம் செலுத்துவதுபோல் தமிழ் மக்கள் மத்தியிலே தம்மீதான எண்ணகருத்தை [image] இன்னுமொருவர் உருவாக்கி விடகூடாது என்பதை மிக முக்கியமான கருப்பொருளாக கொண்டு செயற்படாதது இன்னமோர் கவலைதரும் விடயமாகும். 

தமிழர்களின் கடந்த கால ஆயுதப் போராட்ட காலத்திலே ஈழத்தில் இருந்த தலைமையின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தனர். ஆயுத பல நிலையில் போராட்ட பாதையிலிருந்து தவறாத போக்கும், அமைப்பிற்குள்ளான கடுமையான சட்ட திட்டங்களும், அமைப்பின் செயல் திறனும், இதற்கு சில முக்கிய காரணங்களாக கொள்ளலாம். அதேவேளை தமது இனத்திற்காக போராடும் தலைமையையும் அது சார்ந்த அமைப்பையும் குறித்த தகாத எண்ணகரு உலகலாவிய அளவில் உருவாகுவதை தடுக்க முடியாது கண்முன்னே கைநழுவவிட்டவர்களாக தமிழ்மக்கள் உள்ளார்கள். 

இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் மீது பாரிய கொடூர அட்டூழியங்களை செய்து முடித்த பின்பும் தமது நடவடிக்கைகள் யாவற்றையும் உலக அரசியல் காலநிலைக்கு ஏற்றவகையில் மென்மை படுத்தபட்ட செய்திகளாக கச்சிதமாக வெளிவிட்டு தமது பெயரை தக்க வைத்து கொள்கின்றனர். யூதர்கள் இந்த விடயத்தில் கல்விமான்கள் சிந்தனை குழுக்களின் உதவி கொண்டு பல்வேறு விடயங்களுக்கும் பரிகாரம் தேடிக்கொள்கிறனர். 

இதே போல சிறிலங்காஅரசும் காலப்போக்கில் உலகின் சில நாடுகளின் உதவியுடன் தனது தமிழினப் படுகொலைகள் யாவுக்கும்; பரிகாரம் தேடிக்கொள்ளும் என்பதில் எந்த ஐயமுமில்லை. இதனை தகுந்த வகையில் தமிழரின் நீண்டகால இருப்பை நினைவிற்கொண்டு கையாழும் பொறுப்பு தற்போதய அனைத்துலக தமிழர் அமைப்புகளிடமும் தலைவர்களிடமும் தான் உள்ளது. 

அமெரிக்காவிலே யூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிந்தனை குழுக்களான American Enterprise Institute, Brookings Institution என்பன புதிதாக தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க தலைவர்களுக்கு ஆலோசகர்களை வழங்குகின்றனர் அந்த ஆலோசகர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததும் அவர்களுக்கு மீளவும் தமது சிந்தனை குழுகளில் பதவிகளை வழங்கி பாதுகாப்புடன் வைத்து கொள்கின்றனர். 

பின்னர் இவர்கள் இஸ்ரேலிய நலன் காக்கும் விவாதங்களிலும் புதிய கொள்கைகளை வகுக்கும் கருத்தாடல்களிலும் அனுபவசாலிகளாக பங்கேற்கின்றனர். அதேவேளை வோஷிங்டனில் உள்ள பல முன்னணி சிந்தனை குழுக்களும் தாம் அமெரிக்க மக்கள் நலன் சார்ந்தவர்களாயும் பாலஸ்தீன இஸ்ரேலிய விடயங்களில் நடுநிலை வகிப்பவர்களாக காட்டிகொண்டாலும் அவற்றின் பின்னணியில் அதீத யூத இன ஆதரவாளர்களே முக்கிய பொறுப்புகளில் இருப்பதை காண கூடியதாக இருக்கும். 

அமெரிக்க அதிபரின் ஆலோசனைக் குழுக்களிலும் சிந்தனையாளர்கள் மத்தியிலும் எழுபதுகளின் பின்னால் அதீத பங்களிப்பு செய்பவர்கள் 'புதிய அடிப்படைவாதிகள்' [neoconservatives] ஆவார். காலப்போக்கில் குறிப்பாக செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னால் அமெரிக்க வெளியுறவு கொள்கையை வடிவமைப்பதில் இவர்களின் பங்கு மிக முக்கிய மானதாக அமைந்து வருகிறது. 

மேலைத்தேய பொருளாதாரத்தை ஈராக்கிய இரத்த வெள்ளத்தில் கரைத்து ஓட்டுமொத்த தோல்விக்கே வழிவகுத்த ஈராக் மீதான படைஎடுப்பு கூட இந்த புதிய அடிப்படைவாதிகளின் முடிவிலேயே தங்கியிருந்தது. 

புதிய அடிப்படை வாதம் என்ற கருத்துப்பாங்கு பெருமளவில் அமெரிக்க வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கும் செல்வாக்கு மிக்க கருவியாக கொள்ளப்படுகிறது. அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஏகாதிபத்தியம் என்பதே இதன் அடிப்படை போக்கு. அமெரிக்காவிற்கு போட்டியாக உருவாகும் எந்த சக்தியையும் முளையிலேயே நசுக்கிவிட வேண்டும் இதற்காக ஒட்டுமொத்த அமெரிக்க பலம் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பது புதிய அடிப்படை வாதிகளின் அரசியல். 

அமெரிக்காவின் உலகலாவிய பலமே அமைதிக்கான ஒரேவழி, சனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நிச்சயப்படுத்துவது அமெரிக்காவின் ஒட்டுமொத்த பலமே. என்பது பெரும்பாலான பதிய அடிப்படைவாதிகளின் நோக்கு. மிக முக்கியமாக இராணுவபலமே மிக பயனுள்ள கருவி என்பது இவர்களின் சந்தேகமில்லாத கருத்தாகும். 

இந்த புதிய அடிப்படைவாதிகள் பல்வேறு சிந்தனை குழுக்கள் மத்தியிலும் இதர முன்னணி நிறுவனங்கள் மத்தியிலும் முக்கிய செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கின்றனர். இதில் முன்னைநாள் அதிபர்களின் ஆலேசகர்கள் பலர் அடங்குவர். அவர்களில் பெரும்பாலானவர்கள் யூதர்கள். அத்துடன் இவர்கள் அமெரிக்காவின் நலனிலும் பார்க்க இஸ்ரேலின் நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள் என்பது பொதுவான கருத்தாகும். 

இராணுவத்தளபதிகள். உளவு நிறுவனங்களின் தலைவர்கள் முக்கிய செல்வந்தர்கள் என பல்வேறு தரப்பட்ட அறிஞர்களையும் உள்ளடக்கிய இந்த குழு அமெரிக்க பலத்தின் ஊடாக உலக ஒழுங்கை மாற்றும் பலத்தை கொண்டவர்களாக கருதப்படுகிண்றனர். 

இஸ்ரேலிய கருத்தாய்வு களத்தில் புதிய அடிப்படைவாதிகளின் பலம் அளப்பரிய பங்காற்றி வரும் அதேவேளை கிறீஸ்தவ சியோனிஸ்ட்டுகள் எனப்படும், அரசியலை மையமாக கொண்டு இயங்கும் கிறீஸ்தவ சமயவாதிகளின் பங்களிப்பும் இஸ்ரேலிய கருத்தாதரவு களத்தில மிக முக்கிய பங்காற்றுகின்றனர். 

திறந்த மனத்துடனான வாய்மொழி பரப்புரைகளில் இவர்கள் மதநம்பிக்கை கொண்ட அமெரிக்க மக்கள் மத்தியிலும் இதர மேலை நாடுகள் மத்தியிலும் மிகவும் காத்திரமான இஸ்ரேலிய அரசுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். 

கிறீஸ்தவ வேத நூலில் நம்பிக்கை கொண்டு இஸ்ரேலிய தேசத்தில் ஜெருசலேமில் புதிய அரசாட்சி செய்ய யேசுநாதர் ஒருநாள் திரும்பி வருவார் என்ற தமது சமய கோட்பாட்டுடன் மிக ஆழமான அரசியல் செல்வாக்கு கொண்ட இவர்கள் 1948ல் இஸ்ரேல் தேசம் உருவாக்கப்பட்டதன் பின்பு பத்துணர்வு பெற்று இஸ்ரேல் தேசத்தை காக்கப் பெரும் பணிபுரிகின்றனர். 

அமெரிக்க ஆய்வாளர்கள் சிலர் கிறீஸ்தவ சியோனிஸட்டுகளை இஸ்ரேலின் பாதுகாப்பு படைகளுக்கு அடுத்ததான போர்முறைத் தந்திர கொடையாக கருதுகின்றனர், முன்பு எப்பொழுதுமில்லாத அரசியல் செல்வாக்கும், தொடர்பும் பொருளாதார உதவிகளும் இவர்களை இவ்வாறு முன்னேற்றமடைய வைத்திருக்கிறது. 

தம்மத்தியிலே பல சிந்தனை குழுக்களை உருவாக்கி கொண்டுள்ள இவர்கள் இஸ்ரேல் பாலஸ்தீனம் என்ற இரு அரசு கோட்பாட்டை எதிர்ப்பவர்களாக காணப்படுகிண்றனர். உலகில் உள்ள ஏனைய நாடுகள் யாவும் மனிதனின் செயற்பாட்டால் உருவானது ஆனால் இஸ்ரேல் மட்டும் இறைவனால் உருவாக்கப்பட்டது. இறைவன் தனது நிலத்தை ஏனையவரிடம் கையளிப்பதை விரும்புவதில்லை என்பது இவர்கள் கருத்தாகும். 

ஓவ்வொரு இஸ்ரேலிய பாலஸ்தீன பேச்சுகளின் போதும் தீர்வு திட்டங்கள் வகுக்கப்படும் போதும் நிலைமையை கையாள்வதில் இவர்களின் பங்கு மிக முக்கிய மானதாகும். பல அமெரிக்க தலைவர்களின் நேரடி செல்வாக்கில் நிலை எடுத்து கொண்டுள்ள கிறீஸ்தவ சியோனிஸ்ட்டுகள் இஸ்ரேலிய கருத்தாதரவில் ஒரு பிரிவாக செயற்டுவது மட்டுமல்லாது, அனைத்துலகநாடுகளில் வசிக்கும் யூதர்களை இஸ்ரேலில் குடியேற்றுவதிலும் அவர்களின் பாதுகாப்பிலும் மிக கவனம் செலுத்துகின்றனர். 

ஆக இஸ்ரேலின் கருத்தாதரவு அதன் சமூக அரசியல் சமய சிந்தனை குழுக்களின் செயற்பாடுகளால் மிக ஆழமாக வேரூன்றி உள்ளது. இஸ்ரேலியர்களிடம் தமிழர்கள் கற்ற கொள்ள வேண்டியவை ஏராளம். 

பல்வேறு நாடுகளிலும் அரச கடைமைகளில் இருந்து ஓய்வு பெற்ற தமிழர்கள் ஏராளம் பேர் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றனர். இவர்களுடய செல்வாக்கும் அனுபவமும் ஈழத்தமிழர்களுக்கு அனைத்துலக அரசியல் சட்ட அந்தஸ்தை பெற்று கொள்வதற்கு மிகமுக்கியமான சொத்தாக கருதப்படலாம். 

உதாரணமாக சிங்கப்பூர் மலேசியா மொறீசியஸ் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுடன் மிக முக்கியமாக தமிழ்நாடு தமிழர்களில் பலர் ஈழக்கோட்பாட்டில் ஈடுபாடற்றவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் தாம் ஒரு தமிழர் என்பதில் பெருமையும் ஈழவிடுதலை போரில் அக்கறையும் அனுதாபமும் எப்பொழுதும் உண்டு. ஆனால் இவர்கள் யாராலும் அணுகப்படாத நிலையில் தமது காலத்தை கழித்து வருகின்றனர். 

ஈழத்தில் பிறந்தவர்கள் மட்டும் இந்த போராட்டத்தில் கடின பங்களிப்பு செய்வதால் ஈழம் என்பதை ஒரு அரசு நிலைக்கு இட்டு செல்வதில் சிக்கல்கள் தோன்றலாம். உதாரணமாக பெரிய பிரித்தானியாவுக்குள் வேல்ஸ் உரிமைவாதிகள், அயர்லந்து உரிமைவாதிகள் ஸ்கொட்லாந்து வாதிகள் என் வகைப்படுத்தி பார்ப்பது போல சிறிலங்காஎன்ற எல்லைக்குள் தமிழீழவாதிகள் ஆகிவிடுவதற்கு சாத்தியகூறுகள் உள்ளது. 

இதனால் சிறிலங்காஎல்லைகளுக்கு அப்பாற்பட்ட தமிழர்கள் ஈழமக்களின் நலனில் கரிசனை கொண்டு செயலாற்ற முனையும் போது ஈழ அரசிற்கான சட்ட அங்கீகாரம் அதன் இறைமை ஆகியவற்றிற்கான கேள்விகள் எழவாய்ப்பகள் அதிகம். 

இஸ்ரேலிய யூதர்களுக்கு இத்தகைய சிந்தனை குழுக்களை ஏற்படுத்தி ஆய்வுகள் செய்து தமது இராணுவ அரசியல் தந்திரங்களை வகுத்து கொள்வதற்கான தேவை 1967ம் ஆண்டு ஜூன் மாதம் இடம் பெற்ற அரபு நாடுகளுடனான ஆறுநாள் யுத்தத்தின் பின்னால் புதிய பரிமானத்துடன் தோற்றம் பெற ஆரம்பித்தது. 

ஏகிப்து சிறியா ஜோர்டான் ஆகிய நாடுகளின் தலைமையில் இஸ்ரேல் மீது இடம் பெற்ற இத்தாக்குதலை முறியடித்ததுடன் தமது எதிர்காலம் குறித்த பெரும் கேள்வி இஸ்ரேலியர்கள் மத்தியில் எழுந்தது. தம்மை பாதுகாத்து கொள்ள வேண்டிய பொறுப்பு தம்மிடமே இருப்பதை உணர்ந்த யூதர்கள் உலகளாவிய அளவில் வாழும் யூதர்களுக்கு அறைகூவல் விடுத்தனர். தம்மத்தியிலேயே கருத்தாதரவு களங்களை உருவாக்கினர். தம்மத்தியிலே இருந்த கல்விமான்களை ஒன்று திரட்டினர். செல்வந்தர்களிடம் பணம் கேட்டு அலைந்து திரிந்தனர். 

ஏற்கனவே அதீத வலதுசாரீ போக்கை கொண்ட யூதர்கள் அமெரிக்க தலைநகரிலே ஒன்று கூடினர் தமது திட்டங்களினை அமெரிக்க உலக அரசியல் காலநிலைக்கு ஏற்றவாறு வகுத்தனர். ஒட்டு மெத்த யூத சமூகத்தின் கடின உழைப்பின் பலனாகவே யூதர்கள் இன்று உலகின் ஒழுங்கை தீர்மானிக்கும் இனமாக திகழ்கிறது. 

தொடர்ந்து சிறிலங்காஅரசுடன் இணைந்து செயலாற்றும் தமிழர்களும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் யூதர்களையும் அடுத்த கட்டுரையில் ஒப்பு நோக்கலாம். 

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: 

லோகன் பரமசாமி. 
loganparamasamy@yahoo.co.uk
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment