தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்நோக்கும் சவால்கள்


பங்காளிக் கட்சியின் மத்தியில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்கிறார்.வராவிட்டால் தீர்வு இல்லை என்கிற விடயத்தையும் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு சுஸ்மா சுவராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்றக்குழுவினர் இலங்கை வந்தாலும் அரசின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுவது போல் தெரியவில்லை. 

நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் கூட்டமைப்பு வருவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணனும் அரசின் சார்பில் பேசுகின்றார்.

அதேவேளை, அதிகார பகிர்வின் நீட்சி, மலையக முகடுகளிலும் பரவ வேண்டுமென்கிற மனோ கணேசனின் நியாயபூர்வமான கோரிக்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தால்  இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். 
 
கூட்டமைப்பை  நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இழுப்பதற்கு  ஆட்சியாளர்கள் ஏன் அவசரப்படுகிறார்கள் என்பதன் சூத்திரத்தை பலர் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்.நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டவுடன், தெரிவுக் குழு விவகாரத்தை அரசு உயர்த்திப் பிடிப்பதைக் காணலாம்.ஐ.நா. வின் நல்லிணக்க அறிக்கை குறித்த தீர்மானமொன்று நிறைவேற்றப்படப் போகிறதென்கிற விடயம் பரவலாகப் பேசப்பட்டபோது, கூட்டமைப்பு உடனான பேச்சுவார்த்தையை கிடப்பில் போட்டு, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவே இனப்பிரச்சினைத் தீர்விற்கான  சகல ரோக நிவாரணி என்று அரசு பரப்புரை மேற்கொள்ளத் தொடங்கியது.

இருப்பினும் புவிசார் நலன் சார்ந்த வல்லரசுகளின் போக்கு வேறுவிதமாக அமைந்துவிட்டது. நீங்கள் உருவாக்கிய ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளை நீங்களே நடைமுறைப்படுத்துங்கள் என்கிற வகையில்  சிறிய பொறியொன்றை  முன்வைத்தது மேற்குலகம்.

ஆனாலும் உலக மகா சபையான ஐ.நா. வின்,  பொதுச் செயலாளர்  பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை குறித்து உரையாடுவதைத் தவிர்த்து, எதிரானது போன்ற தோற்றப்பாடு  கொண்ட ஆனால் எதிர்மறைவான  விளைவுகளை  இலங்கைக்கு ஏற்படுத்தாத தீர்மானமொன்றினை  அமெரிக்கா கொண்டு வந்தது.

இலங்கை அரசே, சுதந்திரமான  விசாரணைப் பொறிமுறையொன்றினை  உருவாக்க வேண்டுமென  அமெரிக்காவின்  போர்க் குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ராவ் அண்மையில் தெரிவித்த கருத்து இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஆகவே மனித உரிமைப் பேரவைத்  தீர்மானத்திற்கு அமெரிக்காவோடு  சேர்ந்து ஆதரவளித்த இந்தியா, தம்மோடு இருப்பதாக சுஸ்மாவின் விஜயத்தைக் கொண்டு காட்சிப்படுத்த அரசு முனைந்தாலும்,  இவ்விஜயம் ஐ.நா. வில்  ஏற்பட்ட முறுகல் நிலையைத் தணிக்க உதவுமென்று இந்தியா  நினைத்தாலும், அமெரிக்காவின் நிலைப்பாட்டில மாற்றம்  ஏற்படுவது போல் தெரியவில்லை.

ஆகவே இந்தப் பரிந்துரை விவகாரத்தை எவ்வாறு  திசை திருப்புவது என்பது தான் அரசின் முன்னுள்ள  பெரும் பிரச்சினையாக  இருக்கிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின்  பரிந்துரைகளை  நிறைவேற்றக் கூடாதென்று தேசபக்த இயக்கங்கள், ஹெல உறுமயக்கள், உறுமிக்  கொண்டிருக்கின்றன. 13+ ஐ பற்றிப் பேசினால் அரசுக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்போமென  தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர சவால் விடுகின்றார்.

இந்நிலையில் சர்வதேச அழுத்தத்தையும், பேரினவாத  சக்திகளின் அச்சுறுத்தலையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டிய நிர்ப்பந்தம் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் மீது பிரயோகிக்கப்படுவதைப் பார்க்கலாம்.

ஆகவே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான  பொறிமுறைகளை உருவாக்க முனைகிறோமென்று காலத்தை இழுத்தடிப்பதோடு, தேசிய இனப்பிரச்சினைக்கான  அரசியல் தீர்வு குறித்து இங்கு பேசுகிறோம் என தமிழ் மக்களை  ஏமாற்றவும் அரசு தந்திரோபாய நகர்வொன்றினை மேற்கொள்ள முயற்சிப்பது போலுள்ளது.

அடுத்துவரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர்களில் பரிந்துரைகளுக்கு என்ன நடக்கிறது என்கிற கேள்வி எழாமல் இருப்பதற்கு இந்த நாடாளுமன்ற தெரிவுக் குழு நாடகம் உதவுமென்று அரசு கணிப்பிடுகிறது.

கூட்டமைப்பானது  இறுக்கமான  நிலைப்பாட்டினைத் தளர்த்தி சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய  வேண்டுமென அரச மந்திரிகள் அறிவுரை சொல்வது நாடாளுமன்ற தெரிவுக் குழுவை மையப்படுத்தி அமைகிறது.

இவைதவிர ,இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவி  சுஷ்மா சுவராஜை  சந்தித்த கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை   தெளிவாக  முன் வைத்துள்ளாரென அறிகின்றோம்.

உதவிகளை விட அரசியல்தீர்வொன்றிற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதோடு  இந்திய மாநிலங்களுக்கு உள்ளது போன்று பொலிஸ், காணி அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டுமென  சம்பந்தன் கூறியுள்ளார்.

அதாவது இந்தியா விரும்பும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை, அவர்களின்  தீர்வு குறித்தான நிலைப்பாட்டின் அடிப்படையில், அதனை முழுமையாக நிறைவேற்றும்படி அழுத்தம் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டதாகவே இதனைக் கருதலாம்.

அத்தோடு நில அபகரிப்பு, பௌத்த விகாரை நிர்மாணிப்புக்கள், இராணுவ மயமாதல், தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், மந்த கதியில் நடைபெறும் மீள்குடியேற்றம் மற்றும் சம்பூர் பிரச்சினை குறித்தும் அவர் உரையாடியுள்ளார்.

இவையனைத்தும் சுஸ்மாவிற்கு புதிதான விடயங்களாக இருந்தாலும், சுதர்சன நாச்சியப்பனுக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கும் தெரியாத, புரியாத விடயமல்ல.

ஆனால், வீ. தேவராஜ் தனது கட்டுரைகளில் அடிக்கடி குறிப்பிடும் முக்கிய விவகாரம் ஒன்றினை இங்கு வலியுறுத்துவது பொருத்தமாகவிருக்கும்.அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு தீர்வுத் திட்டத்தினை முன் வைக்க வேண்டும் என்பதாகும்.

இத்தகைய தீர்வு வரைபில், தமிழ் சிவில் சமூகப்  பங்காளரும் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளருமாகிய  குமாரவடிவேல் குருபரனின் அண்மைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்த  பிறப்புரிமைக் கோட்பாடு குறித்தான கருத்து உள்வாங்கப்படுவது முக்கியமானது.
தேசியம், சுய நிர்ணயம் என்ற அடிப்படையில் ஒரு தீர்விற்கு  செல்லாவிட்டால், உண்மையான  சுயாட்சியை நாம் பெற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும் என்கிற குருபரனின் கருத்து அடிப்படையில் சரியானது.

இருப்பினும் இதில் தவிர்க்கப்பட்ட தாயகக் கோட்பாடு என்பது வடக்கு கிழக்கில் பூர்வீகமாக வாழும் தமிழ் பேசும்  மக்களின்  இறைமை சார்ந்த விடயமாகும்.இவை தவிர  வட கிழக்கு இணைப்பு என்கிற தாயகக் கோட்பாடு பற்றி, அரசியல் தீர்வு குறித்து பேசும் தமிழர் தரப்பு,  சுஸ்மாவிடம் முன் வைத்ததாவென்று தெரியவில்லை.

ஆயினும் சிங்களத்திற்கு பிடிக்காத சொற்களைப்  பேசக்கூடாது என்று முடிவெடுத்தால் மக்களின்  உரிமை பற்றி பேச முடியாத சூழலே இறுதியில் ஏற்படும்.

அதேவேளை,  மூன்றாம் தரப்பின் அனுசரணை பேச்சுவார்த்தை மேடையில் தேவையில்லை என்போர், மூன்றாம் தரப்பான இந்தியாவிடம்  தீர்விற்கான அழுத்தத்தை அரசின் மீது பிரயோகிக்கச் சொல்வது முரண்பாடாக  இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
அவர்கள் அனுசரணை வேறு  அழுத்தம் வேறென வியாக்கியானங்கள் பலவற்றைச் சொல்லலாம்.
ஆனால் மாகாண சபையை உருவாக்கிய 13 ஆவது திருத்தச் சட்டமும் மூன்றாம் தரப்பின் உள்நுழைவால் உருவான விடயமென்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

ஆகவே 13 ஆவதையும் மீறி இந்தியா செல்லாது என்பதால், இறைமையுள்ள தேசம் என்பதன் அடிப்படையில் தீர்வொன்று  எட்டப்பட வேண்டுமாயின் சர்வதேச சட்ட நியமங்களின்  கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட  மூன்றாம் தரப்பினரின் அனுசரணை இறுதி தீர்விற்கான பேச்சுவார்த்தைக்கு அவசியம் என்பதனை புரிந்து கொள்வது பொருத்தமானது.

தீர்வொன்று எட்டப்படாமல் மாகாண சபைகளுக்குள்ளோ அல்லது நாடாளுமன்ற தெரிவுக் குழு அரங்கிற்குள்ளோ நுழைந்தால் மீண்டு வருவது மிகுந்த கடினமாகவிருக்கும்.
அரசின் தந்திரோபாய வியூகங்களை புரிந்து கொள்வதும், அதற்கெதிரான மாற்று வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பதும் இன்றைய தேவையாகும்.

சர்வதேச சுயாதீன போர்க் குற்ற விசாரணையை தற்போதைய சூழலில் சர்வதேசம் ஏற்றுக் கொள்ளப் பின்னடித்தாலும் அதுவே இந்த இறுக்கமான நிலையினை உடைத்து விடிவிற்கான பாதையை நிர்ணயிக்கும்.

நன்றி - வீரகேசரி
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment