இந்திய நாடாளுமன்றக் குழு உண்மையை வெளிப்படுத்துமா?


மஹிந்தவை தனியே சுஷமா சந்திப்பு; தமிழகத்தில் சர்ச்சை

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்சவை தனிமையில் சந்தித்துப் பேசியது தொடர்பில் தமிழகத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. சுஷ்மா சுவராஜ் இவ்வாறு சந்தித்திருப்பதானது, குழுவில் உள்ள பிற உறுப்பினர்களை அவமதிக்கும் செயலாகும். என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் போன்ற பொறுப்புகளில் உள்ளவர்கள் இவ்வாறு தனிமையில் சந்திப்பதை ஏற்கலாம். ஆனால் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ராஜபக்சவை சுஷ்மா தனிமையில் சந்தித்தார் என்ற கேள்வி எழுகிறது. அத்துடன், செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒன்றுபட்ட இலங்கையைத்தான் இந்தியா ஆதரிக்கும் என்றும் சுஷ்மா சுவராஜ் கூறியிருக்கிறார். இதுவும் அவரது அதிகார வரம்பை மீறிய செயலாகும். என அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டித்துள்ளார். அவ்வாறு சுஷ்மா சுவராஜ் கருத்துச் சொல்வதற்கு, இந்தியாவின் பிரதமர் அல்லது குடியரசுத்தலைவர் அதிகாரம் வழங்கியிருக்கிறார்களா? எனக் கேள்வியெழுப்பியுள்ள திருமாவளவன், இது தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கை என்பது மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களிடையே பெரும் அய்யத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது’’ என்றார். அதேநேரம், இவ்விடயம் குறித்து, தமிழகத்தில் பல கட்சிகளிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது.
  • இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான 12 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழு கடந்தவாரம் இலங்கைக்கு உண்மைநிலை கண்டறியும் பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியுள்ளது. முன்னதாக, இந்தக் குழுவில் 15 பேர் இடம்பெறுவதாகவே இருந்தது. அதிமுக, திமுக, கடைசியாக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் என்று ஒவ்வொன்றாக விலகிக் கொண்ட பின்னர், 12 பேர் கொண்ட குழு தான் மிஞ்சியது. 
கடுமையான சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் இந்தக் குழு இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் முக்கியமான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் புறக்கணிப்பை மேற்கொண்டது, இந்திய அரசை மட்டுமன்றி இலங்கை அரசையும் கூடத் தான் அதிர்ச்சி கொள்ள வைத்தது. 

  • இலங்கை அரசாங்கம் அவர்கள் வராததைப் பற்றிக் கவலைபடவில்லை என்று கூறினாலும், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை அதிகம் எதிர்பார்த்திருந்தது உண்மை. 

    உண்மைநிலையை அறிய இலங்கை வருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே அழைப்பு விடுத்திருந்தார்.. அப்படியிருக்கும் போது, திமுக, அதிமுக உறுப்பினர்கள் வராததையிட்டு அரசாங்கம் எவ்வாறு கவலைப்படாதிருக்க முடியும். 

    வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் காண்பித்து, தமிழ்நாட்டில் தனக்கு எதிரான அலையை தோற்கடிக்கலாம் என்றே அரசாங்கம் கருதியது. ஆனால் முதலில் தயாரிக்கப்பட்ட பயண நிகழ்ச்சி நிரல் அந்தத் திட்டத்தைப் பாழடித்து விட்டது. முன்னதாக இலங்கை அரசின் வழிகாட்டுதலுடன் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல், மெனிக்பாம் செல்லும் திட்டத்தையோ, இடம்பெயர்ந்த மக்களைச் சந்திக்கும் திட்டத்தையோ கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் எங்கெங்கு மதிய விருந்து, இராப்போசன விருந்து என்பது பற்றிய குறிப்புகள் தான் அதிகமாக இருந்தன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து- இந்தப் பயணத்தினால் நன்மையில்லை என்று அதிமுகவும் திமுகவும் ஒதுங்கின. கடைசி நேரத்தில் மேலும் இரு கட்சிகள் விலகிக் கொண்டன. 

    எவ்வாறாயினும் 12 பேர் கொண்ட குழு தமது பயணத்தை முடித்துள்ளது. 

    இதில் இடம்பெற்றுள்ளவர்களில் நான்கு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள். கிருஸ்ணசாமி, மாணிக்தாகூர், சுதர்சன நாச்சியப்பன், சித்தன் ஆகிய நால்வருமே அவர்கள். ¨ 

    ஒருவர் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரி.கே.ரங்கராஜன். 

    ஏனையவர்கள் வட மாநிலத்தவர்கள். 

    இந்தக் குழுவினரின் பயண நிகழ்ச்சி நிரல் சுதந்திரமானதாக தயாரிக்கப்படவில்லை. 

    எல்லாவற்றையும் இலங்கை அரசாங்கமே வழிகாட்டியது. 

    அரசின் வழிகாட்டுதலுடன்- அமைச்சர்கள், அரச மற்றும் இராணுவ அதிகாரிகளின் வழித்துணையுடன் இடம்பெற்ற இந்தப் பயணத்துக்குப் பெயர் உண்மை கண்டறியும் பயணம் அல்ல. 

    வடக்கில் எங்கெங்கெல்லாம் இந்தியக் குழுவினர் கால் வைத்தனரோ, அங்கெல்லாம் அவர்களை வரவேற்கவும், விளக்கமளிக்கவும், இடங்களைக் காண்பிக்கவும் அமைச்சர்கள் தயாராக நின்றார்கள். மெனிக் பாமில் சென்று இறங்கியதும், அமைச்சர்கள் குணரட்ண வீரக்கோன், விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் தயாராக நின்றனர். முல்லைத்தீவுக்குச் சென்றபோது அமைச்சர்கள் பசில் ராஜபக்ஸவும், றிசாத் பதியுதீனும், ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் அந்தப் பொறுப்பை ஏற்றனர். யாழ்ப்பாணம் சென்ற போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தயாராக நின்றார். இவர்களை விட அந்தந்தப் பகுதிக்கான இராணுவத் தளபதிகளும் இருந்தனர். கூடவே இராணுவப் புலனாய்வாளர்களும் தராளமாகவே மக்களுடன் கலந்து நின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இந்தியக் குழுவினருக்கு உண்மைநிலையை மக்களால் எடுத்துரைக்க முடியாத நிலை காணப்பட்டது. 

    முன்னதாக, இந்தியக் குழுவினரை மெனிக் பாமுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் கூட அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. இந்திய அரசின் நெருக்கடிகள் அதிகரித்ததால் தான், அதற்கு அரசாங்கம் சம்மதித்தது. இந்தப் பயணத்தின் போது, இந்தியக் குழுவினருக்கு காண்பிக்கப்பட்டதெல்லாமே, அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட இடங்களைத் தான். இவர்கள் சென்ற இடங்களில் புதிய கட்டங்களை அல்லது புனரமைக்கப்பட்ட கட்டடங்களைத் தான் பார்த்தனரே தவிர, அழிந்து கிடக்கும் பகுதிகளையோ பாதிப்புக்குள்ளாகி நிர்க்கதி நிலையில் உள்ள மக்களையோ அவர்கள் சந்திக்கவில்லை. அதற்கேற்றவாறே அரசாங்கம் நிகழ்ச்சி நிரலை அமைத்துக் கொடுத்தது. கிளிநொச்சிக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்படவேயில்லை. அந்த வழியாகக் கூட செல்ல முடியாதவாறு, ஹெலிகொப்டரில் கூட்டிச் செல்லப்பட்டனர். 

    முல்லைத்தீவில் கூட முள்ளியவளை மற்றும் முல்லைத்தீவின் தெற்குப் பகுதிக்குத் தான் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இங்கு தீவிரமான போர் நடக்கவில்லை அல்லது போர் நடக்காமலேயே, அரசபடைகளின் கையில் வீழ்ந்த பகுதிகள் தான் இவை. புதுக்குடியிருப்பு அல்லது போர் தீவிரமாக நடந்த பகுதிகளை இவர்கள் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. 

    யாழ்ப்பாணத்திலும் அதே நிலை தான். 

    இப்படியான சூழலில், யாழ்ப்பாணம் போய் இறங்கியதும், எதையும் பார்க்காமலே, மத்திய கல்லூரி மைதானத்தில் நின்றவாறு யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார் சுஸ்மா சுவராஜ். அவர்களின் கண்களில் அழிவுகளையே காட்டாத போது, அதனுடன் அபிவிருத்தியை அவர்களால் எப்படித் தான் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? இதனை உண்மை கண்டறியும் பயணம் என்று கூறுவதை விட அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிடும் பயணம் என்று கூறுவதே பொருத்தம். அதற்கேற்றவாறே நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. அதன்படியே பயணம் இடம்பெற்றது. 

    இந்தியக் குழுவின் இந்தப் பயணம் தமிழரின் பிரச்சினைகளை, உண்மை நிலையை வெளியே கொண்டு செல்வதற்கு எந்தளவுக்கு உதவும் என்பது சந்தேகம் தான். 

    2009இல் ரி.ஆர்.பாலு தலைமையிலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பயணம் எப்படி அமைந்ததோ, அதைவிட இது வேறுபட்டதொன்றாக இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இந்தக் குழுவில் இடம்பெற்றவர்களில் தமிழர் பிரச்சினை பற்றி அதிக புரிதல் கொண்டவர்கள் யாருமில்லை என்றே கூறலாம். ஈழத்தமிழர் விவகாரத்தில் விரோதமான கருத்துகளைக் கூறிவந்த வந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே அதிகமாக இருந்தனர். மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கராஜன் கூட, அண்மையில் ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்து கருத்து வெளியிட்டவர் தான். இவரது கட்சியின் ஏனைய தலைவர்களெல்லாம் ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்க, ரங்கராஜன் மட்டும் இலங்கையின் இறைமைக்காக கவலைப்பட்டவர். இப்படிப் பார்த்தால், வந்தவர்களில் எவரும் ஈழத்தமிழர்களுக்காக வருத்தம் கொள்பவர்களாக, அனுதாபம் காட்டுபவர்களாக கருத முடியாது. எனவே, இவர்கள் கூறப்போகும் கருத்து அல்லது கொடுக்கப் போகும் அறிக்கை என்பது, தமிழர்கள் நலன்சார்ந்த ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை. 

    உண்மைநிலையை அது வெளிப்படுத்தவும் போவதில்லை. 

    அவ்வாறு தமிழருக்கு சாதகமானதொரு அறிக்கையைக் கொடுத்தாலும் கூட, அது முழுமையானதாக இருக்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு காட்டப்பட்ட உண்மைநிலை அவ்வளவு தான். அதற்கு அப்பால் மறைக்கப்பட்ட விடயங்கள் தான் அதிகம். மறைக்கப்பட்ட அந்த விடயங்களை கண்டறிய வேண்டுமானால், சுதந்திரமான பயணம் ஒன்றின் மூலமே சாத்தியமாகும்.அதுதான் உண்மை கண்டறியும் பயணமாக அமையும்.

கட்டுரையாளர் கபில் இன்போதமிழ் குழுமம்

Share on Google Plus

About அகிலன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment