போரின் வடுக்களை ஆற்றும் வாய்ப்பை சிறிலங்கா தவறவிடக் கூடும் - எச்சரிக்கிறார் சந்திரிகா


சிறிலங்காவில் 25 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டிலுள்ள இரு சமூகங்களுக்கும் இடையில் வடுக்களை ஆற்றி, மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான 'சிறந்த சந்தர்ப்பம்' தற்போது கிடைத்துள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நாட்டில் யுத்தத்தின் பின்னான மீள்கட்டுமானப் பணிகளை மிக மெதுவாகவே, மேற்கொண்டு வருவதாகவும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் இனி ஒருபோதும் கிடைக்கமாட்டாது என்றும் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார். 

புதுடில்லியில் நடைபெற்ற, சந்திரிகா குமாரதுங்கவுக்குச் சொந்தமான தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் South Asia Policy and Research Institute [SAPRI] முதலாவது ஆண்டு கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், Club of Madrid மற்றும் Clinton Global Initiative ஆகிய இரு அனைத்துலக நிறுவனங்களின் செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாகவும் சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். 

SAPRI அமைப்பு ஆசியத் துணைக்கண்டம் தொடர்பான விவகாரங்களை பூகோளத்தில் வாழும் கல்விமான்களைக் கொண்டு ஆராய்ந்து அவர்களால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களுடன் கலந்துரையாடப்பட்டு இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான வழிவகைகளை உருவாக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது. 

சிறிலங்காவில் தற்போது உள்நாட்டுப் போரின் பின்னான மீள்கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதால் இவ்வாறான கொள்கை மற்றும் ஆராய்ச்சிகளுக்கான தேவை அதிகம் உள்ளதாக குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற போது அதிகம் குருதி சிந்தப்பட்ட சில யுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் சிறிலங்காவின் தலைமைப் பொறுப்பை குமாரதுங்க ஏற்றிருந்தார். 

இன்று, சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் தமக்கான உரிமைகளைப் பெறுவதில் இடர்களை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், "சிறிலங்கா அரசாங்கம் நாட்டில் எதனைச் செய்யவேண்டும் என்பது தொடர்பில் சரியான தெரிவை எட்டவில்லை" என குமாரதுங்க கவலை கொண்டுள்ளார். 

சந்திரிகா குமாரதுங்க ஆட்சியிலிருக்கும் போது அவரது தலைமையின் கீழ் கட்சி உறுப்பினராக இருந்த ராஜபக்ச, அப்போது சந்திரிக்கா குமாரதுங்கவால் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்திருக்கவில்லை.
ஆனால் சந்திரிகா வழங்கிய வாக்குறுதியை ராஜபக்ச தான் ஆட்சிக்கு வந்தபோது நிறைவேற்றாததும், சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதித் தேர்தல்களில் ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க தான் மறுத்ததற்கான காரணங்களில் ஒன்று என் அவர் குறிப்பிட்டுள்ளார். 

"ராஜபக்ச தனக்கு ஆதரவு வழங்குமாறு எட்டு தடவைகள் என்னிடம் கேட்டார்" என சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஆனால் ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகவுக்கு தான் ஆதரவு அளிக்கவில்லை என்பதையும் அவர் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். 

"பொதுவாகப் பார்க்கில் நான் ராஜபக்சவுக்கே எனது ஆதரவை வழங்க வேண்டும். ஏனெனில் நான் தற்போதும் எனது கட்சியின் உறுப்பினராக உள்ளேன். ஆகவே எனது கட்சியைச் சேர்ந்த வேட்பாளாருக்கே நான் ஆதரவு வழங்க வேண்டும் என்பது பொதுவான விடயமாகும். ஆனால் ராஜபக்சவின் அரசியற் கோட்பாடுகள் சிலவற்றுக்கு என்னால் ஆதரவு வழங்க முடியவில்லை" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

"நான் ஆட்சியிலிருந்த போது உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதைக் குறிக்கோளாகக் கொண்டே எனது அரசாங்கம் செயற்பட்டது" எனவும் சந்திரிகா குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பல மேற்குலக நாடுகள், புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை தடை செய்தனர் மற்றும் சில நாடுகள் அவர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தின. 

ராஜபக்சவின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் சந்திரிகா குமாரதுங்க அதிருப்தி கொண்டுள்ளார். குறிப்பாக ராஜபக்ச தற்போது மேற்குலக நாடுகளுடன் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளதாகவும், சீனா, மியான்மார் மற்றும் ஈரான் போன்ற நாடுகளை தனது 'புதிய நண்பர்களாக' கொண்டுள்ளமை தொடர்பாகவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். 

"இந்தியாவுடனான உறவு மிகப் பிரதானமானதும், முக்கியத்துவம் மிக்கதுமாகும்" எனவும் அவர் அழுத்திக் கூறியுள்ளார். 

ராஜபக்ச இந்தியாவுடன் பகைமை பாராட்டத் தொடங்கியுள்ளதன் பெறுபேறாகவே தற்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா சிறிலங்காவை எதிர்த்து வாக்களித்ததாகவும், ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் இதே இந்தியா மனிதஉரிமைகள் கூட்டத் தொடரில் சிறிலங்காவை ஆதரித்திருந்ததாகவும் குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

"சிறிலங்காவின் கொள்கைகள் சிலவற்றில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் அவை எவ்வாறான மாற்றங்கள் என்பது தொடர்பாக எனக்குத் தெரியாது" எனவும் முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார். இதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, "முதலில் சிறிலங்காவில் வாழும் அனைத்து மக்களையும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்குள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்" எனவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment