சிறிலங்கா: தீர்வு எட்டப்படாத இனப்பிரச்சனை - இந்திய ஊடகம்


சுதந்திரமான தமிழீழம் என்ற கோரிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுகையுடன் ஏற்பட்ட ஒன்றல்ல. சிறிலங்கா சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. 

இவ்வாறு இந்தியாவை தளமாகக் கொண்ட The Pioneer ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் Priyadarshi Dutta தனது அண்மைய பத்தியில் குறிப்பிட்டுள்ளார். 

500 ஆண்டுகளின் பின்னரோ அல்லது 500 நாட்களின் பின்னரோ கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எதனைப் பெற்றுக் கொடுக்கும்? சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன் அரசியல் தீர்வெதனையும் பெறாது அந்த மக்கள் தொடர்ச்சியாக துன்பப்படுவதுடன், மேலும் வதைபடும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர். 

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு முதல் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரேயே சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் இடம்பெறுவதற்கு உடந்தையாக இருந்துள்ளது. 

1971ல், கிழக்கு பாகிஸ்தானில் செயற்பட்ட மிகக் கொடிய இராணுவ ஆட்சியாளர் ஒருவரின் தலைமையில் பாகிஸ்தானிய இராணுவம் படுகொலைகளை மேற்கொண்ட போது, இந்தியாவானது பாகிஸ்தான் விமானங்கள் தனது வான்வழியாகப் பறப்பதற்கான அனுமதியை நிராகரித்திருந்தது. 

இந்த நேரத்தில், அப்போது சிறிலங்காவை ஆட்சி செய்த சிறீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் பாகிஸ்தானிய விமானம் கொழும்பு விமானநிலையத்தில் தரையிறங்கி, எரிபொருளை நிரப்புவதற்கான வசதிகளை செய்து கொடுத்திருந்ததுடன் சிறிலங்காவுக்குச் சொந்தமான வான் வழியின் ஊடாக பாகிஸ்தானிய வான்கலம் பறப்பதற்கான அனுமதியையும் வழங்கியிருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் கொல்லப்பட்ட மக்களின் தொகை அதிகரித்த போது, சிறிமாவோ பண்டாரநாயக்க பாகிஸ்தானுக்கு வழங்கிய ஆதரவிலிருந்து பின்வாங்குவதில் விருப்பம் கொண்டிருக்கவில்லை. 
 
1971 மார்ச் தொடக்கம் நவம்பர் வரையான சில மாதங்களில் மூன்று மில்லியன் வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த கிழக்கு பாகிஸ்தானிய இராணுவ ஆட்சியாளரும் அதற்கு பொறுப்பாக இருந்தவர்கள் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. பல மில்லியன் மக்களின் படுகொலைக்கு காலாக இருந்த ஜெனரல் Tikka Khan 2002ல் இறக்கும் வரை மிகப் பாதுகாப்பாக தனது சொந்த இடமான Rawalpindi நகரில் வாழ்ந்து வந்தார். 

1971 ல் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தொகையில் 14 சதவீதமாக இருந்த இந்துக்கள் தமது நாட்டில் இடம்பெற்ற இந்த மாபெரும் படுகொலைகளின் விளைவுகளை அதன் சுமைகளைத் தாங்கி நின்றனர். 'பங்களாதேஸ்' தனிநாடாகப் பிரிந்த போது மகிழ்வடைந்த இந்துக்கள் பின்னர் அது இஸ்லாமிய குடியரசு நாடாக மாற்றமடைந்த போது அதன் பாதிப்புக்களை சந்தித்துக் கொண்டனர். 

கிழக்கு வங்காளத்தைச் அதாவது 'பங்களாதேஸ்' நாட்டைச் சேர்ந்த அகதிகளை அதிகம் கொண்டுள்ள இந்தியாவின் Tripura  மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பங்களாதேசத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்களாதேசத்திலுள்ள இந்துக்கள் பாதுகாப்பு ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்கள் கூடக் கூறுவதில்லை. 

பங்களாதேசத்து இந்துக்களின் பிரச்சினைகள், இறைமையுள்ள நாடொன்றின் 'உள்விவகாரம்' எனக் கருதப்படுகின்றது. உண்மையில் இது போன்ற ஒரு நிலைப்பாட்டையே பாகிஸ்தானிய சிறுபான்மையினரின் விடயத்திலும் நேரு ஆதரித்திருந்தார். கிழக்கு பாகிஸ்தானில் 1950ல் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட போது நேரு இந்நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணிவந்திருந்தார். இதன்விளைவாக 1950ல் நேரு-லியாகுவற் (Nehru-Liaquat)  ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்து 1959ல் நேரு-நூண் (Nehru-Noon) ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டன. 

இந்நிலையில், சிறிலங்கா விவகாரம் தொடர்பில் சரியான முடிவை எடுக்கவேண்டும் என இந்திய அத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை இரண்டாவது தடவையாக கரவொலி எழுப்பி வாழ்த்த வேண்டும். 

பத்மா ஆற்றுக்கு குறுக்கே வாழும் தமது உறவுகள் தொடர்பில் பங்களாதேசத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறையாண்மை என்ற விவகாரத்தை காரணங்காட்டி தலையீடு செய்வதில் தயக்கம் காட்டியது போன்று பாக்கு நீரிணைக்கு அருகில் வாழும் தமது தமிழ் உறவுகளின் விவகாரத்திலும் இறையாண்மையைக் காரணங்காட்டி தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அழுத்தத்தை வழங்காது விட்டிருந்தால் இந்தியாவானது தற்போது சரியான தீர்வை சிறிலங்கா தமிழர்கள் தொடர்பில் எடுத்திருக்கமாட்டாது. 

தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையானது ஒரு குறியீடாகக் காணப்படுகின்றது. இத்தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததன் மூலம், இந்தியாவானது போலியான, கையாலாகாத வல்லரசு நாடல்ல என்பதையும், சிறிலங்காவின் மிக நெருங்கிய அயல்நாடாக இந்தியா உள்ளதே தவிர பாகிஸ்தானோ அல்லது சீனாவோ அல்ல என்பதையும், சிறிலங்காத் தமிழர்கள் உண்மையில் அரசியல் ரீதியில் அநாதரவற்றவர்கள் இல்லை என்பதும் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளன. 

ஆனால் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் தக்க காலத்தில் செய்திருக்க வேண்டிய ஒரு விடயத்தை கவனத்திற் கொள்ள வேண்டும். அதாவது சிறிலங்கா அரசாங்கமானது விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்த போது இந்திய மத்திய அரசில் பிரதான அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியானது சிறிலங்காவுக்கு ஆதரவாக பாதுகாப்பு உதவிகளை வழங்கியது தொடர்பாக தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வழங்குவதை தவிர்த்து வந்துள்ளனர். 

இது தொடர்பாக NDTV யின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய விவகாரங்களுக்கான ஆசிரியர் நிற்றின் கோகல [Defence and Strategic Affairs Editor, NDTV] தான் எழுதிய 'சிறிலங்கா: யுத்தத்திலிருந்து சமாதானம் வரை' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்ப் பொதுமக்கள் அதிகம் கொன்று குவிக்கப்பட்ட நான்காம் கட்ட ஈழப்போரின் போது சிறிலங்கா அரசாங்கத் தரப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் அனைத்துலக சமூகம் பல முயற்சிகள் மேற்கொள்ள எத்தனித்த போது இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததாக மார்ச் 2011 அன்று அம்பலமான 'விக்கிலீக்சின்' தகவற்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்திய மத்திய அரசானது சிறிலங்காவில் அதன் உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்தபோது அதில் அகப்பட்டுக் கொண்ட தமிழ் மக்களுக்கு நேர்ந்த துன்பகரமான சம்பவத்திற்கான பொறுப்பை ஒட்டுமொத்தமாக தட்டிக் கழித்துவிட முடியாது. இந்நிலையில் தற்போது சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட தீர்மானமானது இது தொடர்பில் எடுக்கப்பட்ட பகுதியளவான முடிவாகப் பார்க்கப்படுகின்றது. 
 
சிறிலங்காத் தமிழர்களின் பிரச்சினைகள் எப்போதும் தமிழ்நாட்டு அரசியல் காரணிகளின் ஊடாகப் பார்ப்பதென்பது வேதனைக்குரிய விடயமாக உள்ளது. 'நாங்கள் தென்னிந்தியாவுக்கு நெருக்கமாக உள்ளபோதிலும், பாரத மாதாவுக்கு அருகில் உள்ளோம்' என 1927ல் சிறிலங்காவுக்கு காந்தி வருகைதந்திருந்த போது யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் அரங்கில் இவ்வாறு அறிவித்திருந்தார். 

மகாத்மா காந்தியை முதன் முதலில் தமது இடத்துக்கு அழைத்த பெருமை யாழ்ப்பாணத்து மாணவர்களையே சாரும். ஏனையவர்கள் இவ்வாறானதொரு தெரிவை எடுக்கும் முன்பு முதலில் யாழ்ப்பாணத்து மாணவர்கள் இவ்வாறானதொரு வரவேற்பை மகாத்மா காந்திக்கு அளித்திருந்தனர். சிறிலங்காவுக்கு காந்தி வருகைதந்திருந்த போது அவரது வருகையுடன் மகாதேவ் தேசாயின் வருகையும் உள்ளடங்கி இருந்தது. 

இதுமட்டுமல்ல சுவாமி விவேகானந்தாவை 1897 ஜனவரியில் முதன் முதலில்  இந்திய துணைகண்டத்தில் வரவேற்ற பெருமையும் சிறிலங்காத் தமிழர்களையே சாரும். அந்த வரவேற்பில் அவர் வழங்கிய செய்தியாக இந்தியாவை 'புனிதபூமி' என்று அழைத்தார்.  இது இந்திய தேசியத்திற்கான புதிய அணுகுமுறையாக இருந்தது. இந்த புதிய கருதுகோளை சிறிலங்கா தமிழர்களே முதலில் கேட்டனர். 

1877-1947 வரை வாழ்ந்த ஆனந்தக்குமாரசுவாமி இந்தியர்களை விட இந்திய மனம் கொண்டவராக திகழ்ந்தார். இவரே முதன்முதலில் அந்நியர் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் இந்திய சிந்தனையை வெளிப்படுத்தினார். அத்துடன் "இந்திய தேசியவாதம் அழியாது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் இன்னமும் 500 ஆண்டுகளில் இந்தியாவில் நல்ல பதவிகளில் பெருமளவான இந்தியர்கள் இருக்கலாம் அல்லது மும்பாயிலோ அல்லது லங்காசயரிலோ சில மில்லியன் கணக்கான ஆடை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படலாம். ஆனால் இது பெரிய விடயமல்ல. உண்மையில் இந்தியர்களின் கலாசாரம் அவர்களின் தேசியம் அழியாது பாதுகாக்கப்பட வேண்டும்." என ஆனந்தக்குமாரசுவாமி தான் எழுதிய 'போராட்டத்தின் ஆழமான கருத்தக்கள்' என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆகவே உண்மையில் சிறிலங்காத் தமிழர் ஒருவர் சுதந்திரத்தை நோக்கிய இந்தியப் போராட்டம் தொடர்பாக ஆழமான ஆய்வுக் கருத்துக்களை வெளியிட்டிருந்த போதிலும், சிறிலங்காத் தமிழர்களின் போராட்டம் தொடர்பாக எந்தவொரு இந்தியனும் ஏதாவது பயனுள்ள, ஆழமான கருத்துக்களைக் கூறியுள்ளார்களா? 

இன்றிலிருந்து 500 ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் வெற்றியடைந்ததா அல்லது ராஜபக்ச அவரது பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டாரா என்பது தொடர்பாக ஆராய்வதில் எந்தவொரு பயனும் இல்லை. இன்னும் ஐம்பது நாட்களின் பின் இது ஒரு விடயமாக கருதப்படாமல் மறக்கப்படலாம். ஆனால் நாங்கள் இந்த விடயத்தில் எவ்வளவு தூரம் நம்பிக்கையுடன் செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினையை அரசியல் ரீதியில் தீர்த்து வைப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம் என்பது முக்கியமானதாகும். 

இந்தப் பிரச்சினையை சிறிலங்கா அரசாங்கமானது இராணுவ வழியில் தீர்த்த வைக்க முற்படுகிறது. ஆனால் உண்மையில் தமிழர்களின் பிரச்சினை ஒரு அரசியல் வழிமுறைக்கு உட்பட்டதாகும். தனது சொந்த நாட்டு மக்கள் மீது வான்குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட உலக நாடுகளை விரல் விட்டு எண்ணலாம். சைப்பிரஸ், லெபனான், சூடான் போன்று யுத்தத்தின் பின்னான அபிவிருத்தி திட்டங்களை நாட்டில் அமுல்படுத்துவதில் ராஜபக்ச அரசாங்கம் தவறிவிட்டது. 

1959ல் உருவாக்கப்பட்ட சூரிச் - லண்டன் உடன்படிக்கையின் பிரகாரம், பிரிட்டன், கிரீஸ், துருக்கி போன்ற நாடுகளிலிருந்து ஆதரவைப் பெற்று நாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான சலுகையை சைப்பிரஸ் பெற்றுக் கொண்டுள்ளது. 

உண்மையில் சுதந்திரமான தமிழீழம் என்ற கோரிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுகையுடன் ஏற்பட்ட ஒன்றல்ல. சிறிலங்கா சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. 

அதாவது தமிழீழம் என்ற கோரிக்கையானது எந்தவொரு ஆயுதக் குழுக்களாலும் முதலில் முன்வைக்கப்படவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியால்தான் தமிழீழக் கோரிக்கையானது முதன் முதலில் மே 14,1976ல் முன்வைக்கப்பட்டது. சிறிலங்காவின் தமிழ் கட்சிகளின் முதன்மைக் குழுவாக செயற்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியால் யாழ் குடாநாட்டின் வட்டுக்கோட்டையில் முதன் முதலில் 'தமிழீழக்' கோரிக்கை பிரகடனப்படுத்தப்பட்டது. 

ஐக்கிய சிறிலங்காவுக்குள் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இறுதியாக 1977ல் மேற்கொள்ளப்பட்ட தேர்தலில் மக்கள் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்து தமது வாக்குகளை வழங்கினர். சமஸ்டி நிர்வாகத் திட்டத்தை நோக்கி 1956ம் ஆண்டிலிருந்து ஜனநாயக வழியில் செயற்பட்ட 'யாழ்ப்பாணத்தின் காந்தி' என அழைக்கப்படும் SJV செல்வநாயகம் அவர்களால் இறுதியாக எடுக்கப்பட்ட முயற்சியாக இவ்வட்டுக்கோட்டைத் தீர்மானமாக உள்ளது. 

பிரபாகரன் பிறப்பதற்கு 30 ஆண்டுகளின் முன்னரே சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் 1923 ல் 'தமிழீழம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த அருணாச்சலம் அக்கட்சியில் சிங்கள அதிகாரத்துவம் ஓங்கிக் காணப்பட்டதால் அதிலிருந்து விலகி 1923ல் இலங்கை தமிழர் சங்கத்தை உருவாக்கினார். 1924 இல் மதுரை நோக்கி பாதயாத்திரை சென்று கொண்டிருந்த வழியில் பொன்னம்பலம் அருணாச்சலம் இயற்கை எய்தினார். ஆகவே சிறிலங்காவில் நீடித்துச் செல்லும் இனப்பிரச்சினையானது இராணுவ வழியில் தீர்க்கப்பட முடியாத அடிப்படை இனப் பிரச்சினை என்பதை நாம் உணர்ந்து கொள்வதற்கான காலம் இதுவாகும்.

புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment