இந்தியாவிடம் இருந்து விலகி சீனாவை நெருங்கும் இலங்கை


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தது கடும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் தேசியப் பத்திரிகைகள்- முக்கியமாக, டெல்லியை மையமாகக் கொண்ட ஆங்கில ஊடகங்கள் மத்திய அரசின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மத்திய அரசு கூட்டணிக் கட்சிகளினதும், தமிழ்நாட்டினதும் நெருக்குதலுக்கு அடிபணிந்து, தேசிய நலனை விட்டுக் கொடுத்து விட்டதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தளவுக்கும் ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்தாலும், அதன் கடுமையைக் குறைத்து இலங்கையைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தது என்பதை மறந்து விடலாகாது. 

அமெரிக்கா வரைந்த தீர்மானத்தில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கம் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை உதவிகளைப் பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த வாசகத்தை நீக்குவது தொடர்பாக ஜெனிவாவில் இந்தியத் தூதுவர் திலிப் சின்ஹாவுக்கும், அமெரிக்கத் தூதுவர் எலீன் டோனஹேக்கும் இடையில் கடுமையான இழுபறி நிலை காணப்பட்டது. வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு சில நாட்கள் முன்னதாகவே, திலிப் சின்ஹாவை ஜெனிவாவுக்கு அனுப்பி வைத்திருந்தது புதுடெல்லி. அவர் அங்கு அமெரிக்காவுடன் கடுமையாகப் பேரம் பேசினார். இந்த வாசகத்தை நீக்காது போனால், தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்போம் என்று மிரட்டினார். விடாப்பிடியாக நின்ற அமெரிக்கா, இதனால் கொஞ்சம் படியிறங்கி வந்து திருத்தம் செய்ய சம்மதித்தது. அதன் பின்னரே தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது. 

தீர்மானத்தில் திருத்தம் செய்து, தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையுடன் போகக் காரணமாக இருந்த இந்தியாவை, இலங்கை நன்றியோடு பார்ப்பதாகத் தெரியவில்லை. 

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்தது ஏன் என்று விளக்கமளித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் அவர், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியா ஒரு சமநிலைப் போக்கை அறிமுகப்படுத்தியதாக குறிப்பிட்டிருந்தார். அவர் சுட்டிக்காட்டியது, தீர்மானத்தில் திருத்தம் செய்து இலங்கைக்கு பாதகமற்ற நிலையை ஏற்படுத்தியதையேயாகும். இதற்கு இலங்கை அரசாங்கம் பதிலைக் கூட அனுப்பி வைக்கவில்லை. இந்தியாவுக்குக் கடமைப்பட்டுள்ளதாக இலங்கை கூறினாலும், தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்ததை ஏற்கின்ற மனப்பக்குவம் அரசாங்கத்துக்கு இன்னமும் வரவில்லை. அதேவேளை, இந்தத் தீர்மான விடயத்தில் இந்தியாவை விமர்சிக்கும் இந்திய ஊடகங்கள், ஜெனிவாவில் இந்தியா என்ன செய்தது என்று பார்க்கவில்லை, எதற்காக செய்தது என்றும் நோக்கவில்லை. இந்தியா தவறு செய்து விட்டது என்றே விமர்சிக்கின்றன. 

முன்னாள் இராஜதந்திரிகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. 

தமிழர்கள் சார்பாக இந்தியா நடந்து கொண்டு விட்டதே என்ற பிரச்சினை அவர்களிடம் உள்ளதா அல்லது இலங்கையைக் கைவிட்டு விட்டதே என்ற கவலை உள்ளதா என்று தெரியவில்லை. 

ஆனால் இதனை சீனாவுடன் இணைத்துப் பார்த்து அச்சம் கொள்கின்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. 

இந்தியாவில் உள்ள இராஜதந்திரிகள் எல்லோருக்குமே, இப்போது கனவிலும் நனவிலும் மிரட்டும் ஒரே நாடு சீனா தான். 

ஜெனிவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தைத் தோற்கடிக்க இலங்கை அரசு கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தது. 

சீனாவும், ரஸ்யாவும், கியூபாவும் தான் இலங்கைக்கு வலுவான ஆதரவைத் தெரிவித்தன. 

எனினும் பிறநாடுகளை வளைத்துப் போடும் பிரசாரத்தை மேற்கொள்ள இந்த நாடுகளிடம் மேலதிக உதவியை இலங்கை கோரவில்லை. காரணம் இந்தியா பற்றிய நிச்சயமற்ற நிலை ஒன்று இருந்தது. சீனாவின் உதவியை நாடினால், இந்தியாவைப் பகைக்க நேரிடும் என்ற அச்சம் அரசுக்கு இருந்தது. இந்தியா அப்போது மதில்மேல் பூனையாக இருந்தது. 

ஒருகட்டத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஜெனிவா தீர்மானத்தின் போது, இந்தியா என்ன செய்யப் போகிறது என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதையடுத்து வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவுடன் தொடர்பு கொண்டு முடிவை மாற்றுமாறு கோரினார். ஆனால் அதற்கு இந்தியா உடன்படவில்லை. அதன்பின்னர், ஜெனிவாவில் இருந்தபடியே சீனாவின் காலைப் பிடித்தார் வெளிவிவகார அமைச்சர் பிரீஸ். சீன வெளிவிவகார அமைச்சரைத் தொடர்பு கொண்டு காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பின்னர், சீனா களமிறங்கி குட்டையைக் குழப்பியது. வாக்கெடுப்புக்கு முதல்நாள் மாலை வரை 7 நாடுகளின் உறுதியான ஆதரவையே இலங்கை பெற்றிருந்தது. சீனா களமிறங்கியதால், மறுநாள் காலை நிலைமை கொஞ்சம் மாறியது. சீனாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட சில நாடுகள் தமது முடிவை மாற்றிக் கொண்டு தீர்மானத்தை எதிர்த்தன அல்லது நடுநிலை வகிக்க முடிவு செய்தன. ஆனாலும் சீனா பிடித்துக் கொடுத்த நாடுகளைக் கொண்டு இலங்கையால் தீர்மானத்தைத் தோற்கடிக்க முடியவில்லை. இந்தநிலையில், தீர்மானத்தின் கடுமையைக் குறைத்து - சர்வதேச அழுத்தங்களில் சிக்கிக் கொள்ளாமல் காப்பாற்றிய இந்தியாவை விட, தீர்மானத்தைத் தோற்கடிக்கும் வெற்றிபெறாத முயற்சிக்குக் கைகொடுத்த சீனாவைத் தான் இலங்கை மதிப்போடு நோக்குகிறது. 

சீனாவை நண்பர் என்றும், இந்தியாவை உறவினர் என்றும் விழித்து இலங்கை மழுப்பி வந்தாலும், உண்மையில் அது சீனாவின் பக்கமே நின்று கொள்கிறது. இது அண்மைக்காலங்களில் பலமுறை கற்றுத்தந்த பாடம். இலங்கையிலும் பிற அண்டை நாடுகளிலும் சீனா செலுத்தி வரும் ஆதிக்கம் இந்தியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே புதுடெல்லியின் கருத்தாக உள்ளது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஊடகங்கள் தமிழர்கள் என்னவானாலும் பரவாயில்லை, சீனாவுக்காக இலங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையிலேயே இருக்கின்றன. அதனால் தான் இலங்கைக்கு எதிராக வாக்களித்ததும், கோபம் கொப்பளிக்கிறது. ஆனால் இந்த விடயத்தில் மத்திய அரசோ, அதன் கொள்கை வகுப்பாளர்களோ தெளிவான நிலையில் இருப்பதாகவே படுகிறது. இலங்கையை ஒரு தட்டு, தட்டி வைக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர். 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் போர்க்கலைத் துறையுடன் இணைந்து தென்பிராந்திய இராணுவத் தலைமையகம் கடந்தவாரம் ஒரு கருத்தரங்கை நடத்தியது. அந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய, இந்தியாவின் தேசிய பாதுகாப்புச் சபையின் இராணுவ ஆலோசகரான லெப்.ஜெனரல் பிரகாஸ் மேனன், இந்தியாவின் முடிவு நன்றாகக் கணிக்கப்பட்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதலுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு போலத் தோன்றினாலும், இது இலங்கையின் நிலையை அறிந்து- ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு என்று அவர் கூறியுள்ளார். “போரில் வென்றிருந்தாலும் , இலங்கை நிச்சயமாக நீண்டகால நோக்கில் அமைதியை இழந்து வருகிறது என்றே நாம் நம்புகிறோம். ஏனென்றால் அவர்கள் போதியளவில் செய்யவில்லை அல்லது அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஜெனிவா தீர்மானத்தின் போது நிச்சயமாக எமது குரல் அந்தக் கோணத்திலேயே இருந்தது. மத்திய அரசாங்கத்தில் கூட்டணிக் கட்சிகள் செல்வாக்குச் செலுத்தியதாக நிச்சயமாக உங்களால் கூறமுடியும். ஆனால் , முடிவு தேசிய விருப்பங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.“ இப்படிக் கூறியிருந்தார் லெப்.ஜெனரல் பிரகாஸ் மேனன். 

இவரது இந்தக் கருத்து இந்தியாவின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது. 

இலங்கை அரசு தமக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறியதற்கான தண்டனையாகவே இந்தியாவின் வாக்கு அளிக்கப்பட்டது என்றும் கூறமுடியும். 

இதுபோன்ற எத்தனை காரணங்களைச் சொன்னாலும், அதையெல்லாம் சீனா பற்றிய அச்சத்தில் ஆழ்ந்திருப்போரால் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். அதேவேளை, இலங்கை அரசு சீனாவின் பிடிக்குள் சிக்கிப் போய் நீண்டகாலமாகி விட்டது. அதிலிருந்து இலங்கையை வெளியே கொண்டு வருவதற்காக இந்தியா கையாளும் ஒரு தந்திரமாகவும் இந்த வாக்கை கருதலாம். இந்தியா என்ன செய்தாலும் இலங்கையை சீனாவின் செல்வாக்கில் இருந்து இலகுவில் பிரித்து விட முடியாது. இதனை புதுடெல்லியின் கொள்கைவகுப்பாளர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் என்பதை லெப்.ஜெனரல் பிரகாஸ் மேனனின் உரை நன்றாகவே உணர்த்துகிறது. அவர் கூறியது போன்று, இந்தியாவுடன் இலங்கை விளையாடுவது உண்மையே. 

இலங்கை மீதான சீனாவின் செல்வாக்கைக் குறைக்க இப்போது இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் உள்ள ஒரே வழி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவது தான். சீனாவின் நெருக்கத்தைக் குறைப்பதற்கு இந்தியா வைக்கப் போகும் செக் இதுவாகத் தான் இருக்கும். அதன் முதற்படியாகக் கூட ஜெனிவா வாக்கை கருதலாம். இதன் பின்னரும் சீனாவின் வாலில் தொங்கிக் கொள்ள அரசாங்கம் ஆசைப்படுமானால், மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்துடன் இந்தியா இனிமேல் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ள விரும்புமா என்பது சந்தேகம் தான். இந்தியா இப்படியொரு முடிவை எடுத்தால், அதற்குக் காரணம் இலங்கை அரசின் போக்காகவே இருக்கும்.

கட்டுரையாளர்தொல்காப்பியன்இன்போதமிழ் குழுமம்
Share on Google Plus

About அகிலன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment