அழுதங்களின் நெருக்கத்தில் சிக்கித் தவிக்கும் இலங்கை


ஐக்கிய நாடுகள் சபையினால் உலகில் மனித உமையைப் பேணுவதற்காக பல்வேறு குழுக்கள், பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் Treaty Bodies (ஒப்பந்த அமைப்பு) எனச் சொல்லப்படும் அமைப்பு பல குழுக்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இவ் அமைப்பின் கீழ் மனித உரிமைக் குழு, சித்திரவதைக்கான குழு, இனவேறுபாடுகளைக் களைவதற்கான குழு, பெண்கள் மீதான வேறுபாடுகளைக் களைவதற்கான குழு போன்று பல குழுக்கள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் கைச்சாத்திட்ட ஐ.நா. சாசனங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்தியுள்ளனவா, மதிக்கின்றனவா என்பதைப் பரிசிலிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.
இக் குழுக்கள் அவற்றின் தன்மைகளைப் பொறுத்து தனிப்பட்ட முறைப்பாடுகள் பொதுவாக நாடு மீதான முறைப்பாடுகளை தவணை முறைகளில் பரிசீலனை செய்வது வழக்கம். இங்கு ஒரு முக்கிய விடயத்தை நாம் கவனிக்கவேண்டும். ஐ.நா. மனித உரிமை சபையும், ஐ.நா. மனித உரிமை குழுவும் இரு வேறுபட்ட அமைப்புகள். ஐ.நா.மனித உரிமைச் சபை 193 அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கிய பொழுதும் 47 அங்கத்துவ நாடுகளின் வழி நடத்தலில் இயங்குகிறது. ஆனால் Treaty Bodies (ஒப்பந்த அமைப்பின்) கீழ் இயங்கும் மனித உரிமைக் குழு, சித்திரவதைக்கான குழுக்கள் பத்து சுதந்திரமான மனிதஉரிமை நிபுணர்களின் மேற்பார்வையின் வழிநடத்தலில் இயங்குகின்றன. ஐ.நா. வின் அங்கத்துவ நாடுகள் தவணை முறையில் தமது நாடு பற்றிய அறிக்கையைச் சமர்ப்பிக்கும் பொழுது குறிப்பிட்ட குழுவில் அங்கம் வகிக்கும் நிபுணர்கள், அந்த நாட்டின் உண்மை நிலைகளை ஆராய்வார்கள்.
இந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் சித்திரவதைக்கான 3ஆவது 4ஆவது தவணை அறிக்கை ஐ.நா. சித்திரவதைக்கான குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு இலங்கை பற்றிய விபரம் ஐ.நா.வில் ஆராயப்பட்டது. ஐ.நா. சித்திரவதைக்கான குழு (CAT)(Committee Against Torture) ஐ.நா. சித்திரவதைக்கான குழு முதல் முதலாக 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்பட்ட பொழுதிலும் 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதியே நடைமுறைக்கு வந்துள்ளது. இச் சித்திரவதைக்கான ஒப்பந்தத்தில் இன்று வரை 149 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் 78 நாடுகள் மட்டுமே கைச்சாத்திட்டுள்ளன. இக் குழுவினுடைய 47 ஆவது கூட்டத் தொடர் கடந்த ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி முதல் நவம்பர் 25 ஆம் திகதிவரை நடைபெற்றது.
இக்கூட்டத் தொடரில் பேலறுஸ், பல்கேரியா, டிபூத்தி, ஜேர்மனி, மடகஸ்கார், மொரோக்கோ, பாரகுவே, இலங்கை ஆகிய நாடுகளின் நிலைமைகள் பரிசிலிக் கப்பட்டன. இதில் இலங்கையின் சித்திரவதை பற்றிய விடயங்கள் நவம்பர் மாதம் 8 ஆம் 9 ஆம் திகதிகளில் ஆராயப்பட்டன. இலங்கை சார்பில் முன்னைய நாள் சட்டமா அதிபரும் அமைச்சரவையின் சிரேஷ்ட ஆலோசகருமான மோஹான் பீஸ் தலைமையில் சட்டமா அதிபர் காரியாலய உத்தியோகத்தர், இலங்கை காவல்துறையின் பிரதிநிதிகள், இலங்கைக்கான ஐ.நா. தூதுவராலயத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இலங்கையில் நடைபெற்ற சித்திரவதை பற்றிய நிலைப்பாடுகளை எடுத்துக் கூறியிருந்தனர்.
இதேவேளை, ஐ.நா. சித்திரவதைக்கான குழுவின் பத்து விசேட நிபுணர்கள் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், நோர்வே, சீனா, சைப்பிரஸ், சில்லி, செனகல், ஈகுவடோர், மொரோக்கோ நாடுகளைச் சேர்ந்தவராகியிருந்தனர். இதில் ஈகுவடோர் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதி தனது அங்கத்துவத்தை இராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் விளக்கம் பழையனவற்றை மறப்போம், புதிய ஒரு அத்தியாயத்தை ஆரம்பிப்போமென சர்வதேச ரிதியாக கூறிவரும் இலங்கை அரசு, உலகிலேயே மிக மோசமான பயங்கரவாதிகளின் 30 வருடகாலப் போரை வென்று புதியதோர் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளோமென மொஹான் பீரிஸ் தனது உரையை ஆரம்பித்து வைத்தார்.
இலங்கையில் நூறு வீதம் அல்ல நூற்றுக்கு பத்துவீதம் ஐ.நா. சித்திர வதைக்கான குழுவுடன் இணைந்து இவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பதாக கூறினார். கடந்த காலங்களில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. சித்திரவதைக்கான பிரதிநிதிகள் கூறிய அரச சார்பற்ற பிரதிநிதிகளினால் மேற்கொள்ளப்படும் சித்திரவதை பற்றி தாம் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் இலங்கை அரசு என்றும்  சித்திரவதைக்கு எதிரான கொள்கையையே கடைப்பிடித்து வருவதாகவும் கூறினார்.
இலங்கை சித்திரவதையை நியாயப்படுத்தும் வழக்கம் கொண்டதல்லவெனவும், தமது நாட்டில் தாம் அக்கறை கொண்டுள்ள இவ்விடயத்தில் விசாரணை, கண்காணிப்பு, பெண்கள் சிறுவர்களுக்கு விசேட பாதுகாப்பு போன்றவற்றுடன் நஷ்டஈடும் வழங்கப்படுவதாகவும் கூறினார். மொஹான் பீஸின் விளக்கத்தை தொடர்ந்து அமெரிக்கா, இத்தாலியை சேர்ந்த நிபுணர்களும், வேறு சில நிபுணர்களும் இலங்கை அரசின் பிரதிநிதிகளிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு இவர்களைத் திகிலடைய வைத்துள்ளனர்.
விசேட நிபுணர்கள் ஐ.நா. சித்திரவதைக்கான குழுவின் நிபுணர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த பேலிஸ்காயர் தனது உரை, கேள்வி நேரங்களின் பொழுது இக் குழு இலங்கையின் சித்திரவதைக்கான விடயத்தில் பெரும் தொகையான குற்றச்சாட்டுகளைப் பெற்றுள்ளதாகவும் ஆட்கள் காணாமல் போதல், மிகவும் மோசமான சித் திரவதைகளை இலங்கையின் பாதுகாப்புப் படைகள் மேற்கொள்வதாகவும் கூறினார். இலங்கையின் அறிக்கையின் புள்ளி விபரங்களில் பெரும் வித்தியாசங்கள் காணப்படுவதாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோன் உரிமை பற்றியும் 5000க்கு மேலானோர் காணாமல் போயுள்ளது பற்றியும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எந்தவித வழக்குகளும் தொடரப்படாது வெளியுலக தொடர்புகள் இல்லாது உள்ளோர் பற்றி கேள்விகளை எழுப்பினார்.
அத்துடன் மனித உரிமை வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது இறந்தோர் பற்றியும் கேள்விகளை திருமதி பேலிஸ் காயர் எழுப்பியிருந்தார். அவர் தனது கேள்வி நேரத்தில் மேலும் வினவியதாவது தமது குழு இலங்கை அரசிற்கு இருபத்தியொரு கேள்விகளில் புள்ளி விபரங்களைக் கேட்டிருந்த பொழுதும், இலங்கை அரசின் பதிலில் பன்னிரண்டு கேள்விகளுக்கு எந்தவித புள்ளி விபரங்களும் கொடுக்கப்படவில்லையெனவும் அதில் ஐந்து கேள்விகளுக்கு சாட்டு போக்கான புள்ளி விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று கேள்விகளுக்கு மட்டுமே கேட்கப்பட்ட புள்ளி விபரங்கள் கொடுக்கப்படடுள்ள போதிலும் தமது நடவடிக்கைகளின் விபரங்கள் அங்கு கொடுக்கப்படவில்லையெனவும் கூறினார்.
 உலகில் காணாமல் போனோர் விடயத்தில் இரண்டாவது இடத்தை வகிப்பதைச் சுட்டிக் காட்டிய பேலிஸ் காயர் அண்மையில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சு கொழும்பில் உள்ள இராஜதந்திகளுக்கு கூறும் பொழுது, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் பற்றிய புள்ளி விபரங்களும் தகவல்களும் தம்மிடம் உள்ளதாகவும் இவை அவர்களின் குடும்பங்களுக்குக் கொடுக்கப்படுமென கூறியிருந்த பொழுதும் பின்னர் அப்படியாக ஒரு தகவலும் தம்மிடம் இல்லையென்பதை இலங்கை அரசு ஒத்துக்கொண்டுள்ளது.
இவ்விடயம் பற்றி அரச பிரதிநிதிகள் இக் குழுவிற்கு பதில் தரவேண்டுமெனக் கூறினார். இவர் மேலும் கூறுகையில், எல்லாமாக எழு அங்கீகாரமற்ற தடுப்பு முகாம்கள்  பூந்தோட்டம் கல்வி நிலையம், 211 பிவின் தலைமைக் காரியாலயம், வவுனியா வெளிக்குளம் பாடசாலை, புளொட் தடுப்பு முகாம், தர்மபுரம் (மிக முக்கிய தமிழ் கைதிகள்), வெற்று வாய்க்கால், இரணைபலே ஆகிய இடங்களில் இவை இருந்தனவா இல்லையா என்பது பற்றி இலங்கை அரச பிரதிநிதிகள் பதில் தர வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், புகைப்படங்களுடன் ஐந்து மனித உரிமை வழக்கறிஞர்கள் தேசத்துரோகிகளாக இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசு என்ன பாதுகாப்புகளை வழங்கியுள்ளது என வினவிய பேலிஸ் காயர், தனக்கு இலங்கை பற்றிய விடயங்களை பரிசிலிப்பதற்கு ஐந்து அல்லது ஆறு நாள் தேவையெனக் கூறி தனது கேள்விகள் வாதங்களை முன்வைத்தார். பேலிஸ்காயரை தொடர்ந்து இத்தாலியைச் சேர்ந்த நிபுணர் அலிசா புரூனி தனது கேள்வி நேரத்தில் தமது குழுவின் முன்னைய சிபாரிசுகளில் ஒன்றாக இலங்கை சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் சாசனமாக ரோம் சாசனத்தில் சேர்ந்து கொள்ள வேண்டுமெனக் கூறியதை கவனத்தில் கொண்டுள்ளதா என வினவினார்.
அத்துடன் இலங்கை தாம் சித்திரவதைக்கு எதிரானவர்கள் எனக் கூறுமானால் நடைமுறை செய்ய என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என வினவினார். அரச சார்பற்ற நிறுவனங்களினால் 1998 ஆம் ஆண்டுக்கும் 2011 ஆம் ஆண்டுக்கும் இடையில் 1500 சித்திரவதைகள் ஆவணம் செய்யப்பட்ட பொழுதும் அரசியல் காரணங்களுக்காக யாவும்  அலட்சியம் செய்யப்பட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களை மேற்கோள் காட்டியிருந்தார்.
சிறைச்சாலைகளின் வசதிகள், பெரும் திரளாக சிறிய இடங்களில் தடுத்து வைத்தல், பாதுகாப்பு படையினர் கொலை, சித்திரவதை, பாலியல் வன்றை போன்ற விடயங்கள் பற்றியும் காலியில் உள்ள பூசா முகாமில் பலர் சித்திரவதைக்குள்ளாக்குவது பற்றியும், 2010 ஆம் ஆண்டு பத்துப் பேர் காவல் துறையினரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த பொழுது இறந்துள்ளதாகவும், எல்லாமாக ஐம்பத்து நான்கு பேர் தடுப்புக் காவலில் இறந்துள்ளதாக இங்கு கூறப்பட்டதுடன், மேலும் இலங்கை சித்திரவதை விடயத்தில் பல கேள்விகளுக்கு பதில் கூறவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி ச. வி. கிருபாகரன்பிரான்ஸ்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment